Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 ஜூலை 13 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.கே.அஷோக்பரன்
ஜனாதிபதி மைத்திரி தனக்கு வாக்களித்த மக்களை ஏமாற்றிவிட்டார்' - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்றத்தில் போட்டியிட நியமனம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வந்த நாள் முதல், சகல இடங்களிலும் இதுவே பரவலான பேச்சு.
பத்திரிகைகளிலும் இணையவெளியிலும் இதைப்பற்றியே நிறைய விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்தக் கட்டுரை எழுதப்படும் போது மஹிந்த ராஜபக்ஷ, குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடுவதற்கான நியமனப்பத்திரத்தில் தனது கையெழுத்தையிட்டிருந்தார்.
'நல்லாட்சி' என்ற பரந்துவிரிந்த
கோஷத்துடன் கடந்த ஜனவரி 8ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித்தேர்தலில் தனது முன்னைய தலைவரான மஹிந்த
ராஜபக்ஷவை எதிர்கொண்டிருந்தார் இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. ஊழல் மலிந்த வல்லாட்சி, குடும்ப ஆட்சி, குற்றங்களுக்கு துணைபோகும் ஆட்சி என ஜனாதிபதி மைத்திரியின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் ஒவ்வொரு கணையும் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியைத் துளைத்தெடுப்பதாக இருந்தது. தேர்தல் நியமனத்துக்கு ஒருசில நாட்கள் முன்பாகத்தான், தான் முக்கிய பாகம் வகித்த மஹிந்த
ராஜபக்ஷவின் ஆட்சியிலிருந்து பிரிந்து வந்து பொது எதிரணி வேட்பாளராகக் களமிறங்கினார் மைத்திரி.
ராஜபக்ஷ என்ற ஆழ வேர்விட்டிருந்த, பெரும்பான்மை சிங்கள-பௌத்த மக்களின் ஆதரவு பெற்றிருந்த அரசியல் சக்தியை, அநேகமாக சகல எதிர்க்கட்சிகளும் (ஏறத்தாழ 42 கட்சிகளும் அமைப்புக்களும்) ஒன்றிணைந்து மக்களின் வாக்கு எனும் சக்தி கொண்டு வீழ்த்தின. இதனை பலரும் 'ஜனநாயகத்தின் வெற்றி'யாகக் கொண்டாடினர். தான் இந்தத் தேர்தலில் தோற்றால் தன்னையும் தன் குடும்பத்தினரையும் மஹிந்த கொன்றொழித்திருப்பார் என்று ஜனாதிபதி மைத்திரி, தேர்தல் காலத்திலும், அதன் பின்னரும் கூட பல இடங்களில் குறிப்பிட்டுப் பேசியிருந்தார். 'நல்லாட்சி' எனும் கனவு கொண்டு மக்களின் பலத்தினால் உருவாக்கப்பட்ட 'நல்லாட்சி',
நூறு நாட்களிலும் அதற்குப் பின்பும் மக்களுக்கு எதனைக்கொடுத்ததோ இல்லையோ, முன்பிருந்திராத ஒரு ஜனநாயக வெளியை நிச்சயமாக வழங்கியது எனலாம். வெள்ளை வான்களுக்கும் சட்டவிரோதச் செயல்களுக்கும் ஒரு முடிவு வந்ததாக மக்கள் உணர்ந்தனர், முன்பைவிட அரசியல் சார்ந்து வெளிப்படையாக பொதுமகன்கள் பேசக்கூடிய ஒரு வெளி உருவானது.
இந்தநிலையில் தான், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. நிச்சயமாக தனக்காக இல்லாவிட்டாலும், தன்னைச் சூழவுள்ளவர்களுக்காகவாவது மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடவேண்டிவரும், போட்டியிடுவார் என்பது தெளிவாகத்தெரிந்த ஒன்றுதான். ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் தலைவராயுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் மஹிந்த
ராஜபக்ஷவுக்கு நியமனம் வழங்குவார் என்பதைப் பலரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். தன்னையும், தன் குடும்பத்தையும் கொன்றுவிடுவார் என்று கருதப்பட்ட ஒருவருக்கு தனது தலைமையில் போட்டியிட சந்தர்ப்பம் அளிப்பதை யார் எதிர்பார்த்திருப்பார்கள்?. யாருடைய ஆட்சியை விமர்சித்து, ஆட்சி மாற்றத்தை கொண்டுவந்தாரோ, அத்தகைய வல்லாட்சி நடத்தியவரை தனது தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட அனுமதிப்பது எவ்வகையில் ஏற்புடையது? போன்றவைதான் இன்று எம்மத்தியில் எழும் கேள்வி.
இதுபற்றி பல பார்வைகளுள்ளன. முதலாவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுடைய கடந்த அரையாண்டு கால ஆட்சியை பார்த்தோமானால், நல்லாட்சி என்ற அடிப்படையை பல வகையிலும் பின்பற்ற முயற்சித்த சம்பவங்களைக் காணலாம். உதாராணமாக, அதிகாரத்தைப் பயன்படுத்தி கைது செய்திருக்கக்கூடிய பல அரசியல் எதிரிகளாகக் கருதக்கூடியவர்களை கூட சட்டத்தின் கரங்களில் விட்டுவிட்டு, அவர்கள் சட்டவாட்சியின் கீழ் சட்டத்தின் பலனை அனுபவிக்க அனுமதித்த பல சம்பவங்களைக் காணலாம். அதிகாரத்தை வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தால், அது ஜனாதிபதி மைத்திரியினதும் பிரதமர் ரணிலினதும் அரசியல் ஆதரவை அதிகரித்திருக்கும். ஆனால், அதற்கு மாறாக அவர்கள் சட்டத்தினது கையில் அவற்றைவிட்டுவிட்டதானது, அவர்கள் மீது அதிக விமர்சனங்கள் எழுவதற்கே வழிவகுத்தது.
சட்டத்தின் ஆட்சி என்பது நல்லாட்சியின் அடிப்படைகளில் ஒன்றாகும். ஆனால், தண்டிக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டவர்கள் பலரும் அதிகாரபலம் கொண்டு அடக்கப்படாது, சட்டத்தின் கரங்களில் முழுமையாக விடப்பட்டமையானது பலராலும் ஏற்றுக்கொள்ளமுடியாததொன்றாக மாறியது. நல்லாட்சியை விரும்பியவர்கள் தொடர்பான முரண்நகையே! இதை சுருக்கமாக 'றொபின் ஹூட்' மனநிலை எனலாம். அதாவது நல்லதுக்காகத் திருடினால் தவறில்லை என்ற எடுகோள்.
ஆனால், சட்டரீதியாகவும் சரி, விழுமியங்களினடிப்படையிலும் சரி இது ஏற்புடையதொன்றல்ல. சட்டம் 'நான் நல்லது விளைவதற்காகக் குற்றம் புரிந்தேன்' என்பதை ஒரு நியாயமாக ஏற்பதில்லை.
அதுபோலவே மகாத்மா காந்தி, 'முடிவுகள், அது அடையப்பெற்ற வழிமுறையை நியாயப்படுத்தாது' என்று சொன்னார். ஆக நல்லாட்சி என்பது குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்பது மட்டுமல்ல, அவர்கள் உரிய நடைமுறையின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என்பதையும் உள்ளடக்கியதாகும்.
இதனை விவரிப்பதற்குக் காரணம் உண்டு. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் யாப்பை இங்கு கருத்திற்கொள்வது அவசியம். அதன்படி நியமனங்கள் தொடர்பான முடிவை அதன் தலைவரோ (ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன), பொதுச் செயலாளரோ (சுசில் பிரேமஜயந்த) எடுக்க முடியாது. மாறாக கூட்டமைப்பின் 72 உறுப்பினர்களைக்கொண்ட செயற்குழுவே அதனைத் தீர்மானிக்கும் வலிமைகொண்டது.
யாப்பின் படி, செயற்குழுவில் 37 முதல்49 அளவிலான உறுப்பினர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்வர்களாகவும் ஏனையவர்கள் ஏனைய கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பார்கள். ஆகக் குறைந்தபட்சம் 37 எனக்கொண்டால் கூட, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையேற்றுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு 51 சதவீத பெரும்பான்மை பலமுள்ளது. ஆனால், இது சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த சகல செயற்குழு உறுப்பினர்களும் ஒருமித்த கருத்துடையவர்களாக இருந்தால்தான் சாத்தியம்.
சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள் பலரும், கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் பலரும் மஹிந்த ராஜபக்ஷவின் நியமனத்துக்கு ஆதரவாக இருந்தால், அவரது நியமனத்தை இல்லாது செய்யும் அதிகாரம் ஜனாதிபதி மைத்திரிக்கோ, பொதுச் செயலாளர் சுசிலுக்கோ இல்லை. இதுதான் மஹிந்த ராஜபக்ஷவின் பலம்.
ஜனாதிபதித் தேர்தலின் போது, மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியிலிருந்து வெளிவந்து, எதிர்க் கட்சிகளுடன் சேர்ந்து, பொது வேட்பாளராகவே களமிறங்கினார். அத்தேர்தலின் போது சுதந்திரக் கட்சி உத்தியோகபூர்வமாக மஹிந்தவுக்கே ஆதரவளித்தது.
தேர்தல் வெற்றிபெற்று மைத்திரிபால ஜனாதிபதியான பின்பு, அவர் சுதந்திரக் கட்சியினதும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினதும் தலைவராக சிறிய கெடுபிடிகளின் பின்பு பதவியேற்றுக்கொண்டார்.
ஆனால், கடந்த அரையாண்டில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிக்கொள்ளும் எவ்வித நடவடிக்கைகளையும் ஜனாதிபதி மைத்திரி செய்யவில்லை. அதன் விளைவாக தன்னுடைய சொந்தக் கட்சியினரை கட்டுப்படுத்தும் வல்லமை ஜனாதிபதியிடம் இல்லையோ என்ற ஐய நிலை உருவாகியுள்ளது, இன்று அது வெளிப்படை உண்மையுமாகியுள்ளது.
அதிகார பலத்தைக் கொண்டு கட்சிக்குள்ளாகவும் கட்சிக்கு வெளியிலும் ஆட்சிப்பிடியை இறுக்கிக்கொள்தல் நல்லாட்சி அல்ல என்பது ஜனாதிபதி மைத்திரியின் நிலைப்பாடாக இருக்கலாம்.
ஆனால், அவர் விட்டுள்ள இந்தத் தவறானது அந்த நல்லாட்சியையே இல்லாதொழிக்குமாயின் அத்தகையதொரு நடவடிக்கையின் அர்த்தப்பாடு மற்றும் நியாயப்பாடு கேள்விக்குள்ளாகிறது என்பது மட்டுமல்லாது தோல்வியுமடைகிறது என்பதே நிதர்சனம்.
இன்னொரு கோணத்தில் சிந்தித்தால், ஜனவரி 8 ஜனாதிபதித் தேர்தலில் அமைந்தது பொது எதிரணி. அந்த பொது எதிரணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஜனாதிபதி மைத்திரி, அத்தோடு பொது எதிரணி இடைக்காலத்தில் ஒரு 'தேசிய அரசாங்கத்தையும்' உருவாக்கியது.
ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்ற இருநிலைப்பேதம் கலங்கிய ஒரு நிலையாகவே கடந்த 6 மாத கால ஆட்சி இருந்தது - சுருக்கமாக மஹிந்த
ராஜபக்ஷவும் அவரது ஆதரவாளர்களும் எதிரணியாகக் கருதப்பட்டனர். இப்போது பொதுத் தேர்தல் வந்துள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஐ.ம.சு.கூட்டமைப்பும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐ.தே.க-வும் (நல்லாட்சிக்கான ஐக்கிய முன்னணி) போட்டியிடும் சூழலில், நல்லாட்சியின் முதல்வர்கள் இருவர் ஒருவரையொருவர் எதிர்கொள்ளவேண்டிய சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. ஐ.ம.சு.கூவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையேற்றுள்ளதால், ஏதோவொரு சந்தர்ப்பத்தில் தாம் நல்லாட்சிக்கென கொண்டுவந்த ஜனாதிபதியை விமர்சிக்க வேண்டிய சூழல் ஐ.தே.கட்சிக்கும் பொது எதிரணியின் ஏனைய கட்சிகளுக்கும் ஏற்படலாம்.
மேலும் நேர்மறையான அரசியலைவிட, எதிர்மறையான அரசியல் இலகுவானது என்பதைத்தாண்டி அதுவே எமது அரசியலின் பொதுவான (கெட்ட)பழக்கம் ஆகிவிட்டது.
அதாவது, தமது கட்சி என்னவெல்லாம் சாதிக்கும், தமது கொள்கை என்ன என்பதை எடுத்துரைப்பதிலும் எதிர்த்து நிற்கும் கட்சியின் பிழைகளை, அவர்களின் ஆட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டி தேர்தலை எதிர்கொள்ளல் என்ற நிலையே இங்கு பொதுவாகக் காணப்படுகிறது.
இந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரியை விட, மஹிந்த ராஜபக்ஷவை விமர்சிப்பது சுலபம் என்பதுடன் அது வெற்றிபெற்ற சூத்திரமாகவும் பார்க்கப்படுகிறது. ஆகவே, ஐ.ம.சு.கூட்டமைப்பில் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுவதானது, ஐ.தே.க. உட்பட்ட ஏனைய எதிர்க் கட்சிகளுக்கே சாதகமாக அமைகிறது என்பதுடன், அது ஜனாதிபதி சிறிசேனவை விமர்சிக்க வேண்டிய தேவையை இல்லாதொழிக்கிறது. ஆனால், இத்தகைய ஒன்றுக்காக மஹிந்த
ராஜபக்ஷவின் அரசியல் மீள் பிரவேசத்துக்கு இடமளித்தல் ஆபத்தானதொன்றில்லையா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்கமுடியாது.
மஹிந்த ராஜபக்ஷவின் மீள்பிரவேசானது நாடாளுமன்றத் தேர்தலாக இருப்பினும், இது பெரும்பான்மை இன-மதவாத அரசியலின் நீட்சியாக, அல்லது ஜனவரி 8க்குப் பின்பான மறுமலர்ச்சியாகப் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகவே இருக்கிறது.
இது ஐ.தே.க உட்பட்ட எதிர்க் கட்சிகளுக்கு மட்டுமல்லாது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் கூட பெருஞ்சவாலாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நல்லெண்ணத்துடன், நல்லாட்சி கருதியோ, அல்லது தேர்தல் உபாயம் கருதியோ இதனை அனுமதித்திருந்தால் அவர் மிகப்பெரும் அபாயம் ஒன்றை ஏற்றிருக்கிறார், அது அவரை மட்டுமல்ல, முழு நாட்டையும் மீண்டும் காவுகொள்ளக்கூடிய அபாயம்.
மாறாக ஜனாதிபதி மைத்திரிபால, முழு விருப்பின் பேரில் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்திருப்பாரானால் அது அவர் ஜனவரி 8 அன்று தனக்கு வாக்களித்த மக்களுக்கும், 'நல்லாட்சி' பிறக்க உழைத்த அனைவருக்கும் செய்யும் மிகப்பெரிய துரோகமாகும். இந்த அபாயங்களையும் அரசியல் களநிலைவரங்களையும் புரிந்துகொண்டு இந்த அபாயத்தை தடுக்கும் திறன் வாக்காளர்கள் கையில்தான் இனி இருக்கிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
17 May 2025
17 May 2025