2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர்: அ.தி.மு.க.வின் தலையெழுத்துக்கு விடைகூறுமா?

Thipaan   / 2015 ஜூலை 13 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக சட்டமன்றத்தைக் கூட்டவேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் தமிழ்நாட்டில் எழுந்திருக்கிறது. முதலில் இக்கோரிக்கையை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் எழுப்ப, பின்னர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பீமாராவ் இது குறித்து சட்டமன்ற செயலாளரிடம் மனு கொடுத்திருக்கிறார்.

முக்கிய நிகழ்வுகள் ஏதேனும் நடக்கும் போது, சட்டமன்றக் கூட்டத்தொடரை கூட்டி விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுவது வழமை. ஆனால், இந்த முறை வித்தியாசமான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் 2015-16க்கான நிதி நிலை அறிக்கை, கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டது.

இதன் மீதான விவாதம் நடைபெற்றவுடன் சம்பந்தப்பட்ட அரசு துறைகளின் 'கொள்கை விளக்க குறிப்புகள்' சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அதற்கான விவாதம் நடைபெற்ற பின்னர்தான் அரச வரவு-செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்குரிய நிதியை கருவூலத்தில் இருந்து எடுத்துச் செலவிட முடியும்.

இப்படி விவாதித்து வாக்கெடுப்புக்கு விட்டு நிறைவேற்றுவதைத்தான் 'மான்யக் கோரிக்கைகள் மீதான விவாதம்' என்று சட்டமன்ற மரபில் அறியப்பட்டுள்ள ஒன்றாகும்.

தமிழகத்தில் இப்போது எழுந்துள்ள பிரச்சினை வேறு விதமானது. நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. ஆனால், மானியக் கோரிக்கைகள் இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. இதற்கு முன்பு இது மாதிரி முன்னுதாரணங்கள் ஏதுமில்லை. தமிழகத்தில் மட்டுமல்ல- வேறு மாநிலங்களில் கூட, இது போன்ற சூழ்நிலை எழுந்ததில்லை.

ஆகவேதான், 'சட்டமன்றத்தைக் கூட்டுங்கள்', 'துறைகளின் மான்யக் கோரிக்கைகளை தக்கல் செய்யுங்கள்', 'அரச நிர்வாகம் இதனால் செயற்பட முடியாமல் இருக்கிறது' என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன.

ஆனால், சட்டமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகம் இக்கோரிக்கையை முன்வைக்கவில்லை.

எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர் விஜயகாந்த். இதுதொடர்பில், அவர் எந்த வேண்டுகோளையும் இதுவரை விடுக்கவில்லை. மாறாக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இல்லாத தி.மு.க.வும்

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுமே  இக்கோரிக்கையை முன்வைத்துள்ளன.

இந்தமுறை, அ.தி.மு.க. ஆட்சியின் ஐந்து ஆண்டுகளில் 2011இல் 33 நாட்களும் 2012இல் 42 நாட்களும், 2013இல் 47 நாட்களும் 2014இல் 33 நாட்களும் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுள்ளது. இந்த வருடம் இதுவரை 9 நாட்கள் மட்டுமே இக்கூட்டத்தொடர் நடைபெற்றுள்ளது.

வரவு- செலவுத்திட்டம் தாக்கல் செய்யப்பட்டவுடன் மானியக் கோரிக்கைகளும் தாக்கல் செய்யப்பட்டிருந்தால், இந்த வருடமும் இந்நேரம் 30 நாட்களுக்கு மேல் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று முடிந்திருக்கும்.

முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த செப்டெம்பர் மாதம் பதவி விலகியதால் புதிய முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி வகித்தார். பெங்களூர் சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டதால் மீண்டும் ஜெயலலிதா கடந்த மே 23ஆம் திகதி முதலமைச்சராக பதவியேற்றார்.

உடனடியாக ஆர்.கே நகர் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் முதலமைச்சரே வேட்பாளராக நிற்க வேண்டும் என்ற நிலையும் வந்ததால், தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் கூட்டப்படவில்லை.

இப்போது, ஆர்.கே நகர் இடைத் தேர்தலும் முடிவுபெற்று, முதல்வர் ஜெயலலிதா 1.50 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிட்டார். இப்போதும் ஏன் சட்டமன்றக் கூட்டத்தொடர் கூட்டப்படவில்லை என்பதுதான் எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்வி.

இதேபோல் முன்பு, ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோதும் 'தமிழக சட்டமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரை கூட்டவேண்டும்' என்று மு.க. ஸ்டாலின், கடந்த ஒக்டோபர் மாதம் கோரிக்கை வைத்தார். அதையே, எதிர்கட்சிகளும் வலியுறுத்தின. இப்போது மீண்டும் அதே கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா, பொது நிகழ்ச்சிகளில் நேரடியாக பங்கேற்பதை தவிர்த்து வருகிறார். முதல்வராக பதவியேற்ற பிறகு அவர் நேரடியாக சென்றது ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் வாக்கு கேட்க மட்டுமே. இது தவிர, பதவியேற்ற பிறகு அவர் முக்கியத் திட்டமான 'அம்மா உணவகங்களை' காணொலிக் காட்சி மூலம்தான் திறந்து வைத்தார். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தையும் காணொலி மூலமே  திறந்துவைத்தார்.

இப்தார் நிகழ்ச்சிகளுக்கும் வாழ்த்துச் செய்தியை மட்டுமே அனுப்பிவருகிறார். ஆனால், அந்த வாழ்த்துச் செய்தியில் அவர், 'தனக்கு உடல்நலம் சரியில்லாததால்' வரவில்லை என்றும் குறிப்பிடுகின்றார். தனக்கு உடல்நலம் சரியில்லை என்று ஏற்கெனவே  நீதிமன்றங்களில் கூறியிருக்கிறார். ஆனால், மக்கள் மன்றத்தில் கூறியது முதல் முறை.

இதை மனதில் வைத்துத்தான் எதிர்க்கட்சிகள் எல்லாம் 'சட்டமன்றத்தைக் கூட்டுங்கள்' என்று தீவிரமாக முழக்கமிடுகிறார்கள். ஆனால், உண்மையில், தமிழக நிர்வாகத்தின் வேகம் தடைப்படாமல் இருக்க இந்த மான்யக் கோரிக்கைகள் உடனடியாக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டியது அவசியம்.

அதேபோல், இவ்வருடத்தில் இனி ஒருமுறை கூட்டப்படும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கூட்டமும் இன்னமும் கூட்டப்படவில்லை. தாழ்த்தப்பட்ட மக்களின் நல்வாழ்வுத் திட்டங்கள் பற்றி கண்காணிக்கும் மாநில அளவிலான மேற்பார்வைக் குழு, முதல்வர் தலைமையில் கூடவே இல்லை என்று தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத் தலைவர் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

வரவு-செலவுத்திட்டம் தாக்கல் செய்யப்பட்டும் இன்னும் மான்யக் கோரிக்கைகள் தாக்கல் செய்யாத நிலையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்காக தி.மு.க நடத்திய பாராட்டு விழாவில், முதல்வரின் உடல்நலம் இரகசியமாக இருக்க முடியாது என்று புதிய குண்டைப் போட்டிருக்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி.

அதைத்தொடர்ந்து, ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்த செய்திகள் பத்திரிகைகளில் சிறகடித்துப் பறக்கத் தொடங்கியுள்ளன. இலவசத் திட்டங்களான மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குதல், கறவைமாடு, ஆடு வழங்குதல், மிக்ஸி, கிரைண்டர் வழங்குதல், தங்கத்துக்கு தாலி வழங்குதல் போன்ற திட்டங்களுக்கு செலவிட மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட வேண்டும். மொத்தத்தில் தேர்தலை சந்திக்கப்போகும் இறுதி ஆண்டில் அ.தி.மு.க திணறி நிற்கிறது.

கூட்டணி ஏதும் இல்லாமல் தேர்தலை சந்திக்கலாம் என்பது அ.தி.மு.க.வின் வியூகமாக இருந்தாலும், அரசின் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்கவேண்டும். இந்த இலவசத் திட்டங்கள் மக்களைச் சென்றடைந்தால்தான் அ.தி.மு.க.வுக்கு தேர்தலில் அனுகூலம் கிடைக்குமா என்பதை எடைபோட முடியும்.

ஏனென்றால், இப்படியொரு இடியப்பச் சிக்கலில் ஏற்கெனவே இருந்த தி.மு.க. அரசு 2011இல் தேர்தலைச் சந்தித்த போது சிக்கிக்கொண்டது. நான்கு வருடங்களுக்கு மேல் நல்லாட்சி என்ற இமேஜைக் கொடுத்த தி.மு.க அரசு, தேர்தல் வருடத்தில் 2-ஜி அலைக்கற்றை விவகாரத்தில் சிக்கியது.

 அதனால், ஏற்பட்ட இமேஜ் வீழ்ச்சி அக்கட்சிக்கு 2011 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைக் கொடுத்தது. அதேபோல், இப்போது அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்து வரும் அ.தி.மு.க.வுக்கு இப்போது நடக்கும் நிகழ்வுகள் நிச்சயமாக நல்ல செய்திகள் அல்ல. தமிழக அரசு நிர்வாகம் முற்றிலும் செயலலிழந்து வருகிறது என்று எதிர்கட்சிகள் செய்யும் பிரசாரம் வெகு வேகமாக மக்களைச் சென்றடைந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் சட்டமன்றம் கூட்டப்படாதது பெரும் சங்கடத்தை அக்கட்சிக்கு  கொடுக்கிறது.

இதை சமாளிக்க விரைவில் சட்டமன்றக் கூட்டத்தொடர் கூட்டப்படும் என்றே தெரிகிறது. ஜூலை மாதத்தின் இறுதி வாரத்தில் பத்து நாட்கள் இந்த கூட்டம் நடைபெறலாம்.

காலையும் மாலையும் கூட தொடர்ந்து சபை நடவடிக்கைகள் நடக்கலாம். அடுத்து 2016இல் நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவதற்கு வியூகம் அமைக்க வேண்டும் என்றால் தேர்தலுக்கு முன்பு இருக்கும் இன்னும் ஆறு அல்லது ஏழு மாதங்கள்தான் மிகமுக்கியம்.

இந்த மாதங்களில் ஆட்சியின் செயற்பாடு என்ன?, முதல்வர் எப்படி நிர்வகிக்கிறார்? என்பதுதான் அ.தி.மு.க.வுக்கு வாக்குகளை அள்ளிக்கொடுக்கும் காரணிகளாக இருக்கமுடியும்.

ஐந்தாண்டுகளில் இதுவரை 164 நாட்கள்  தமிழக சட்டமன்றக்கூட்டம் நடைபெற்றிருக்கிறது. இனி நடக்கப்போகும் சட்டமன்றக் கூட்டம்தான் அ.தி.மு.க.வின் 'வெற்றி, தோல்விக்கு' விடைகாணும் கூட்டத்தொடராக இருக்கும் என்பதே தமிழகத்தில் இப்போதைய பரபரப்பு.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .