2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சிறுபான்மையினரே அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தி

Thipaan   / 2015 ஜூலை 15 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று இந்த அரசியல் கட்சியில் இருந்து மற்றொரு கட்சியை துரோகிகளின் கட்சி  என்று சாடுபவர், நாளை எவ்வித வெட்கமுமின்றி அந்த இரண்டாவது கட்சியில் சேர்ந்து கொண்டு தாம் முன்னர் இருந்த கட்சியைப் பார்த்து துரோகிகள் என்கிறார். இன்று ஒருவரைப் பார்த்து துரோகி என்பவருக்கு நாளை அந்த துரோகியோடே கூட்டு சேர்வதற்கு காரணமே தேவையில்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினதும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினதும் தலைவர் என்ற முறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐமசுகூவின் சார்பில் ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவிருக்கும் பொதுத் தேரதலில் போட்டியிட அனுமதி வழங்கியமை அண்மையில் இடம்பெற்ற அதுபோன்ற எதிர்பாராத ஒரு முக்கிய விடயமாகும்.

மைத்திரிபால சிறிசேன எவ்வாறு ஜனாதிபதியானார்? எவ்வாறான சூழலில் அவர் அந்த நிலைக்குத் தள்ளப்பட்டார்? என்பதை நினைக்கும்; போது அரசியலில் இப்படியும் நடக்க முடியுமா? என்று கேட்கத் தோன்றுகிறது. எட்டு மாதங்களுக்கு முன்னர் மைத்திரிபால - மஹிந்தவின் அரசாங்கத்தில் அமைச்சராகவும் மஹிந்த தலைவராகவிருந்த ஸ்ரீ.ல.சு.க.வின் பொதுச் செயலாளராகவும் இருந்தார். அரசாங்கத்திலும் கட்சியிலும் தமக்கு உரிய இடம் வழங்கப்படவில்லை என்றே அவர் மஹிந்தவின் அரசாங்கத்திலிருந்து வெளியேறி மஹிந்தவுக்கு எதிராகவே போட்டியிட்டு அவரைத் தோற்கடித்தார்.

அந்தத் தேர்தல் காலத்தில் மஹிந்தவின் ஆட்சியைப் பற்றி மைத்திரி கூறியவற்றை நினைக்கும் போது அதே  மைத்திரி அதே மஹிந்த அரசியலில் பலம் பெறும் வகையில் நடவடிக்கை எடுத்தமை மிகப் பாரதுரமானதாகும். அவரது செயல் நாட்டின் வரலாற்றில் மிகப் பெரும் காட்டிக் கொடுத்தலாகும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கூறியிருக்கிறார். 

மஹிந்தவின் அரசாங்கத்தில ; இருந்து   வெளியேறிய மைத்திரி, மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் பாரியளவில் போதைப் பொருட்கள் பரவியிருப்பதாக குற்றஞ்சாட்டினார். அதற்கு அரசியல்வாதிகளின் ஆதரவே முக்கிய காரணம் என்றும் கூறினார். 400 மருந்துக் கம்பனிகளிடம் 25 லட்சம் ரூபாய் வீதம் அதாவது மொத்தமாக 100 கோடி ரூபாய் லஞ்சம் பெற்று, மருந்து வகைகளின் விலையை அதிகரிக்க இடமளித்ததாக மஹிந்தவை பெயர் குறிப்பிடாமல் குற்றஞ்சாட்டினார்.

சிகரெட் பக்கெட்டில் புகைப் பிடிப்பதற்கு எதிரான எச்சரிக்கை படங்களை அச்சிடுவதிலும் தாம் அரசாங்கத்துக்குள்ளளேயே பெரும் எதிர்ப்புக்களை சந்தித்ததாகவும் அதிலும் ஊழல் சம்பந்தப்பட்டு இருந்ததாகவும் மைத்திரிபால கூறினார். மஹிந்தவின் காலத்தில் அரசாங்கத்துக்கு எதிரானவர்களுக்கு எதிராக வெள்ளை வான்கள் முடுக்கிவிடப்பட்டதாகவும் அவர் கூறினார். சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறைகளின் பின்னால் மஹிந்தவின் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களே இருந்ததாகவும் கூறப்பட்டது. மஹிந்தவின் நிர்வாகம் ஊடகவியலாளர்களை தாக்கி, ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைத்ததாகவும் மைத்திரிபால மேலும் குற்றஞ்சாட்டினார்.

ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவுக்கு எதிராக போட்டியிட்டு தாம் தோல்வியடைந்திருந்தால் தாம் ஆறடி நிலத்தடியில் தான் இருப்போம் என்று ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அவர் கூறினார். அதேவேளை மஹிந்தவை பிரதமராக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்ட போது, மஹிந்த பிரதமரானால் அவருக்கு மீண்டும்; ஜனாதிபதியாவதற்கு ஒரு ரவையின் வீச்சின் தூரம் மட்டுமே இருக்கும் என்று கூறியவரும் மைத்திரிபாலவே. அதாவது மஹிந்த பிரதமரானால் அவர் தம்மை கொலை செய்து ஜனாதிபதியாவார் என்றே மைத்திரிபால சூட்சுமமாக கூறினார்.

இத்தனையையும் கூறிவிட்டு மஹிந்த மீண்டும் ஆட்சிபீடமேறும் வகையில் அவருக்கு தேர்தலில் போட்டியிட மைத்திரிபால வாய்ப்பளித்துள்ளார். மைத்திரியை நம்பி 62 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் அவருக்கு ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களித்தனர். அவரை நம்பி உயிராபத்தையும் மதியாது பல அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் ஸ்ரீலசுகவை விட்டு வெளியேறினர். மஹிந்த மீண்டும் ஆட்சிபீடமேறும் வகையில் அவரை இம்முறை தேர்தலில் வேட்பாளராக ஏற்றுக் கொண்டமை அந்த வாக்காளர்களையும் அரசியல்வாதிகளையும் காட்டிக்கொடுத்தல் என்பது உண்மையே.

ஜனாதிபதியின் இந்த முடிவை அடுத்து அரசியல் களத்தில் பாரிய மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மைத்திரிபாலவின் வெற்றிக்காக உழைத்த கட்சிகள் மற்றும் சமூக அமைப்புக்கள், மைத்திரிபாலவை விட்டு ஒதுங்கி ஐதேகவின் யானைச் சின்னத்தில் போhட்டியிட ஒன்று சேர்ந்துள்ளமை அவற்றின் முக்;கிய நிகழ்வாகும்.

அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அலரி மாளிகையில் வைத்து கைச்சாத்திடப்பட்டது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க மற்றும் ரவூப் ஹக்கீம், புதிதாக உருவாக்கப்பட்ட தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஸ்ரீலசுகவிலிருந்து வெளியேறிய ராஜித்த சேனாரத்ன போன்ற அமைச்சர்கள் அதில் இணைந்து கொண்டனர்;.

நல்லாட்சிக்கான ஐக்கிய முன்னணி என்ற பெயரிலேயே அக்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. ஓரிரு தினங்களுக்கு முன்னர் ஹெல உறுமய, தமது பெயரை மாற்றிக் கொண்டிருந்தது. அதன் புதிய பெயரும் இதனை ஒத்ததாகவே இருக்கிறது.

ஹெல உறுமயவின் முன்னாள் பெயர் சிஹல உறுய என்பதாகும். ஆனால், அதன் புதிய பெயரில் சிங்கள மக்களை குறிக்கும் ஹெல, சிஹல என்ற பதங்கள் இல்லை. ஐக்கிய தேசிய நல்லாட்சி முன்னணி என்பதே ஹெல உறுமயவின் புதிய பெயராகும். ஞாயிற்றுக்கிழமை உருவாக்கப்பட்ட கூட்டமைப்பின் பெயர் நல்லாட்சிக்கான ஐக்கிய முன்னணி என்பதாகும்.

மைத்திரி-மஹிந்த கூட்டைப் போலவே இந்தக் கூட்டும் கடுமையாக முரண்பட்ட கருத்துக்களைக் கொண்ட அரசியல் கட்சிகளின் கூட்டாகவே இருக்கிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்தவின் ஆதரவாளர்கள் மைத்திரியைப் பார்த்து சர்வதேசச் சதிகாரன் என்றனர். தமிழர்களுக்கு நாட்டை தாரைவார்த்துக் கொடுக்க வந்தவர் என்றனர். மறுபுறத்தில் மைத்திரியின் ஆதரவாளர்கள் மஹிந்தவையும் அவரது ஆட்களையும் பார்த்து திருடர்கள், ஊழல் பேர்வழிகள் என்று கூறினர்.

இன்று, அவர்கள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் பேச்சைக் கேட்டு சண்டையிட்டுக் கொண்ட சாதாரண மக்கள் ஒருவரை ஒருவர் முகம் பார்க்க முடியாமல் இருக்கிறார்கள்.

அதேபோல் ஐதேக தலைமையிலான புதிய கூட்டில் உள்ளவர்களும் தமது ஆதரவாளர்களை கொள்கை ரீதியில் நட்டாற்றில் கைவிட்டுள்ளனர். தாம் ஒருபோதும் ரணிலின் தலைமையை ஏற்கப்போவதில்லை என கூறியவர் தான் ஐக்கிய தேசிய நல்லாட்சி முன்னணியின் (ஹெல உறுமயவின்) பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க. ஹெல உறுமய ஆரம்ப காலம் முதல் ஐதேகவை ஒரு தேசத்துரோக கட்சியாகவே பார்த்தது. ஆனால், ரணிலின் தலைமையில் தேர்தலில் சம்பிக்க போட்டியிட முன்வந்துள்ளார். தமது கட்சியின் புதிய பெயரையும் ஐதேகவின் பெயரை ஒத்ததாகவே அமைத்துக் கொண்டுள்ளார். இம்முறை தேர்தலில் தமது சின்னமாக யானையையும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

சம்பிக்க ரணவக்க உட்பட ஹெல உறுமய தலைவர்களை இனவாதிகள் என்று சாடியவர் தான் ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க. ஆனால், தேர்தலுக்காக சம்பிக்கவுடன் கூட்டுச்சேர ரணிலுக்கு அது தடையாக இருக்கவில்லை. தந்திரோபாயம் என்ற அடிப்படையில் சரியானது என்று வாதிட முடியுமாக இருந்த போதிலும் இந்த ஐக்கியத்துக்கு கொள்கை ரீதியான அடித்தளம் இல்லை என்பது தெளிவு.

இந்த புதிய கூட்டில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூம் இருக்கிறது. புதிய தேர்தல் கூட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கைச்சாத்திடும் போது அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பக்கத்தில் தான் அமைச்சர் சம்பிக்க ரணவக்க அமர்ந்திருந்தார். இருவரும் கைகுலுக்கிக் கொள்ளும் படங்களும் பத்திரிகைகளில் வெளியாகியிருந்தன.

ஓரிரு வாரங்களுக்கு முன்னர் இந்த இருவரும் கீரியும் பாம்பும் போல் தான் இருந்தனர். பொதுவாக ரணவக்கவுக்கு சிறுபான்மை தலைவர்கள் என்றால் பிடிக்காது. 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான அமைச்சரவை கலந்துரையாடல்களின் போது இவ்விருவரும் கடுமையாக மோதிக் கொண்டனர். சிறுபான்மையினர் பாதிக்கப்படக் கூடிய வகையில் சமர்ப்பிக்கப்பட்டு இருந்த அந்த அரசியலமைப்புத் திருத்த நகலை எவ்வகையிலாவது நிறைவேற்றிக் கொள்ள ரணவக்க, பெரு முயற்சி எடுத்தார்.

ஹக்கீம் அதனை கடுமையாக எதிர்த்தார். பின்னர் வெளியே வந்து சம்பிக்கவை சாடையாக குறிப்பிட்டு; ஓர் அமைச்சர் தமக்கு அமைச்சரவையில் வாய் திறக்க இடமளிப்பதில்லை என்றும் மஹிந்தவின் ஆட்சிக் காலத்திலாவது தாம் இந்த நிலையை எதிர்நோக்கவில்லை என்றும் கூறினார். இப்போது அரசியல் நிலைமை அவர்கள் இருவரும் கைகுலுக்கிக் கொண்டு ஓரணியில் நின்று போட்டியிடச் செய்துள்ளது.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியோடு மு.கா. இணைந்து மற்றொரு தேர்தல் கூட்டணியையும் அமைத்துக் கொண்டுள்ளது. இதுவும் கொள்கை அடிப்படையிலானதா? என்ற கேள்வி எழுகிறது. கடந்த காலத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியானது முகாவை கடுமையாக தாக்கியது. பிரபாகரனுடன் முகா தலைவர் செய்து கொண்ட ஒப்பந்தத்தையும் தாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தையும் ஒப்பிட்டு முகாவை சாடியது. ஆனால், அது இப்போது முகாவின் மரச் சின்னத்தின் கீழ் போட்டியிட முன்வந்துள்ளது.

கொள்கைகள் எவ்வாறானாலும் மஹிந்தவின் ஆட்சி மீண்டும் வரக் கூடாது என்று சிந்திப்போர் இவ்வாறு இந்தக் கட்சிகள் ஐதேக அணியில் கூட்டாகப் போட்டியிடுவதை விரும்புவர். கொள்கை என்று பிரிந்திருந்தால் மஹிந்த இலகுவாகவே மீண்டும் பதவிக்கு வருவது நிச்சயம். ஆனால், ஐதேக அணி வெற்றி பெற்றாலும் நாளை சம்பிக்க என்ன செய்யப் போகிறார் என்பதைப் பற்றியும் அவ்வணியினர் கவனமாக இருக்க வேண்டியிருக்கும். ஏனென்றால் அவரும் அடுத்த ஜனாதிபதியாக வர கனவு காண்பவர். சிறுபான்மை மக்களைப் பொறுத்தவரை அதுவும் மஹிந்த பதவிக்கு வருவதை விட வித்தியாசமாக இருக்காது.

இப்போது தேர்தலுக்காக இரண்டு பிரதான அரசியல் அணிகள் களத்தில் இறங்கியுள்ளன. இது ஏறத்தாழ ஜனாதிபதித் தேர்தலின் போது அணிகள் அமைந்ததற்கு சமமாகும். அப்போதும் மஹிந்த தலைமையில் ஐமசுகூவின் பின்னால் ஓர் அணி இருந்தது. இப்போதும் அது மாற்றம் இன்றி இருக்கிறது. அப்போது எதிரணியில் இருந்த மைத்திரி இப்போது ஐமசுகூ அணியில் இருப்பதைப் போல் காட்சியளித்த போதிலும் அவரால் வாக்காளர்கள் மீது எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது இன்னமும் தெளிவில்லை. அவரை நம்பி ஐமசுகூ அணியிலிருந்து வெளியேறிய வாக்காளர்கள் அனைவரும் மீண்டும் அதே அணியில் இணைந்ததாக கூற முடியாது.

மறுபுறத்தில் அன்று போலவே ஐதேக தலைமையிலான அணி இருக்கிறது. அதில் மக்கள் விடுதலை முன்னணி மட்டும் இல்லை. ஆனால், மவிமு ஆதரவாளர்கள் மஹிந்தவின் அணி ஆட்சி அமைப்பதை விட இந்த அணி ஆட்சி அமைப்பதையே விரும்புவர்.

தற்போதைய நிலையில் ஜனாதிபதித் தேர்தலின் போது மக்கள் வாக்களித்ததைப் போலவே வாக்களிப்பார்கள் போல் தான் தெரிகிறது. மஹிந்தவின் அணியிலிருந்து ஐதேக அணிக்கோ அல்லது ஐதேக அணியிலிருந்து மஹிந்தவின் அணிக்கோ வாக்காளர்கள் மாறியதாக இன்னமும் தெரியவில்லை.

அந்தவகையில் பார்த்தால் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே கூடுதலான மாவட்டங்களில் மஹிந்தவின் அணிக்கு சாதகமான நிலைமையே இருக்கிறது. ஆனால், அந்த அணிக்கு அந்த ஆதரவைக் கொண்டு நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை பலத்தை பெற முடியுமா என்பது சந்தேகமே. மஹிந்த போட்டியிடுவதால் அந்த அணி மலையக மக்களைத் தவிர்ந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழும் சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெறுமா என்பதும் சந்தேகமே.

எனவே, தற்போதைய நிலையில் வடக்கு, கிழக்கில் இயங்கும் சிறுபான்மை கட்சிகள் - தேர்தலுக்குப் பின்னர் அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாகும் சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .