Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 ஜூலை 20 , மு.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.கே. அஷோக்பரன்
தனது மிக நீண்ட மௌனத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஜூலை மாதம் 14ஆம் திகதி கலைத்தார். பொதுத்தேர்தலில் போட்டியிட மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி மைத்திரி, நியமனம் வழங்கிவிட்டார் என்ற குற்றச்சாட்டு சில வாரகாலமாக நீடித்த நிலையில், ஜனவரி 8இல் மாற்றத்தை கொண்டுவந்தவர்களை ஜனாதிபதி ஏமாற்றிவிட்டார்.
அவர், தனக்கு வாக்களித்த மக்களுக்குத் துரோகம் செய்துவிட்டார் என்ற கருத்துக்கள் வெகுவாக எழுந்திருந்த தருணத்திலெல்லாம் முழு அமைதிகாத்து, தான் பேசிய கூட்டங்களில்கூட இதுபற்றி வாய்திறக்காத ஜனாதிபதி மைத்திரி, 14ஆம் திகதி மாலை 5.30க்கு ஊடகங்கள் முன் நாட்டுமக்களுக்கு தனது பக்கக் கருத்தைச் சொல்லும் உரையொன்றை ஆற்றினார்.
ஏறத்தாழ ஒரு மணிநேரமளவுக்கு நீடித்த அவ்வுரை எந்த 'டெலிப்ரொம்டர்களுமின்றி', எழுதி வாசிக்கப்பட்டதொன்றாகவன்றி மிக இயல்பானதாகவும் எளிமையானதாகவும் அதேவேளை, தன்னுடைய நிலைப்பாட்டை வெகுதெளிவாக எடுத்துரைப்பதாகவும் அமைந்தது.
நீண்டுவிரிந்த அந்த உரையின் முக்கிய செய்திகளாவன:
கடந்த இருவாரங்களில் தன்மீது துரோகி என்றும் ஏமாற்றியவன் என்றும் எழுந்த விமர்சனங்களைப் போல இலங்கையின் எந்தவொரு ஜனாதிபதியும் பகிரங்கமாக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டதில்லை என்று குறிப்பிட்ட ஜனாதிபதி மைத்திரி, அத்தகையதோர் ஊடக சுதந்திரவெளியைத் தான் சாத்தியமாக்கியிருப்பதாகக் குறிப்பிட்டார். ஜனவரி 8க்;கு முன்னர், ஒரு ஜனாதிபதியை இப்படி ஊடகங்களால் விமர்சித்திருக்க முடியுமா? என்றும் அவர் கேள்வியெழுப்பிருந்தார்.
தான் தேர்தலுக்குமுன் கூறியதுபோல நாடாளுமன்றில் பெரும்பான்மையில்லாவிடினும், தனது வாக்குறுதியைக் காப்பாற்ற ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமித்ததாகவும், பெரும்பான்மைப் பலத்தைப் பெற்று 100 நாட்கள் திட்டத்தை சாத்தியமாக்கவே தான்,
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினதும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினதும்; தலைமைப் பதவியை ஏற்றதாகவும் குறிப்பிட்டார். மஹிந்த ராஜபக்ஷ, கட்சித் தலைமையை தன்னிடம் வழங்கியிருப்பினும், இருவாரங்களுக்குள்ளாகவே அவர். தனது கால்களை வாரிவிடும் செயற்பாடுகளில் ஈடுபடத்தொடங்கியதாக குறிப்பிட்ட ஜனாதிபதி மைத்திரி, மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்பாளர் நியமனம் வழங்குவதை தான் முற்றாக எதிர்த்ததாகவும், அவரை பிரதமர் வேட்பாளராக நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கையை தான் முற்றாக நிராகரித்ததாகவும் கூறினார்.
ஜனவரி 8க்;கு முன் தான் எடுத்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமுமில்லை என்று கூறியவர், தான் மஹிந்த ராஜபக்ஷவின் வேட்பாளர் நியமனத்தை எதிர்ப்பதாகவும், ஒருபோதும் மஹிந்த
ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார். பிரதமர் ரணில் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்றி, தேசியப் பட்டியலினூடாக மஹிந்த ராஜபக்ஷவை நாடாளுமன்றத்துள் கொண்டுவந்து பிரதமராக்கும் முயற்சியைத் தடுப்பதற்காகவே தான் நாடாளுமன்றைக் கலைத்ததாகவும் கூறிய ஜனாதிபதி மைத்திரி, அடுத்த 5 வருடங்களுக்கு தான் தன் கடமையை ஜனவரி 8க்கு முன் வழங்கிய வாக்குறுதிகளின் படி நிறைவேற்றுவேன் என உறுதிமொழியளித்ததுடன், தான் பேச்சுச் சுதந்திரத்தை இந்நாட்டில் மீள நிலைநாட்டியிருப்பதாகவும், அதனை அனுபவிக்கும் அதேவேளையில், பொறுப்புடன் செயற்படுமாறும் வேண்டுகோள் விடுத்து தனது உரையை நிறைவுசெய்தார்.
இவ்வுரையினூடு தன்னுடைய நியாயங்களை ஜனாதிபதி இலாவகமாக, இயல்பாக பதிவுசெய்திருக்கிறார். அரை நூற்றாண்டைத் தொடவிருக்கும் அவரின் அரசியல் அனுபவத்தின் முதிர்ச்சியை இவ்வுரையில் காணலாம். தான் எந்தப்பக்கமும் சாராத நடுவுநிலைமையை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எடுக்கவிருப்பதாகச் சொன்னவர், ஜனவரி 8இல் ஏற்பட்ட மாற்றம் தொடரவேண்டும் என்று கேட்டுக்கொண்டதனூடாக தன்னுடைய மறைமுக ஆதரவு யாருக்கு என்பதையும் சுட்டிக்காட்டிவிட்டார். சுருங்கக் கூறின், ஜனாதிபதி மைத்திரி தன்னுடைய கனவான் தன்மையைக் காப்பாற்றும் முயற்சியில் வென்றுவிட்டார் என்றே கூறவேண்டும்.
ஆனால், இந்த உரை, சில மறுதாக்கங்களையும் கொண்டிராமல் இல்லை. 15ஆம் திகதி கூடிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு, ஜனாதிபதி மைத்திரியை அதன் தலைவர் பதவியிலிருந்து நீக்குவது குறித்துப் பேசியிருந்தது. இதே நிலைப்பாடு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் காணப்பட்டது. ஆயினும், 15ஆம் திகதி சுதந்திரக் கட்சி மத்திய குழு உறுப்பினர் சோலங்கராச்சியின் மனுவின் பேரில், கொழும்பு மாவட்ட நீதிமன்று, தலைவரின் அனுமதியின்றி மத்திய குழு கூட்டம் நடத்தப்படுவதற்கு இடைக்காலத்தடை உத்தரவினை வழங்கியிருந்தது. ஆனால், இதுபற்றி பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்த சுசில் பிரேமஜயந்த, அன்றைய தினம் கூட்டம் கூட்டப்படவிருந்ததாகவும், பின்னர் அது கட்சித் தலைவரான ஜனாதிபதி மைத்திரியின் பணிப்புரையின் பேரில் பிற்போடப்பட்டதாகவும், ஆகவே -மத்திய குழுக்கூட்டம் கூட்டப்படவில்லையென்றும் தெரிவித்திருந்தார்.
ஆயினும், தொடர்ந்தும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் முறுகல் நிலை அதிகமாகியுள்ளதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் மஹிந்த ராஜபக்ஷவை பொதுத் தேர்தல் பிரசாரங்களுக்கான தலைமைப் பொறுப்பில் அமர்த்தினர்.
கூடவே அன்றும், அதற்கடுத்த நாட்களிலும் இடம்பெற்ற ஊடக சந்திப்புக்களில், ஜனாதிபதி மைத்திரி தமது கட்சிக்கும், கட்சித் தொண்டர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் துரோகமிழைத்துள்ளதாகவும், வெளிப்படையாக ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரித்ததை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும், அவர் கட்சியின் தலைமைப் பதவியிலிருக்க தகுதியற்றவர் என்றும் காரசாரமாகக் கருத்துக்களைக் கூறியிருந்தார்கள்.
சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே, லசந்த அழகியவன்ன, எரிக் வீரவர்த்தன ஆகிய பிரதி அமைச்சர்கள் மூவரும் ஜனாதிபதியின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமது பதவிகளை இராஜினாமாச் செய்தார்கள். மேலும் ஐ.ம.சு.கூ- வேட்பாளர்களின் குற்றச்சாட்டுக்களின் படி, தேர்தல் ஆணையாளர், ஜனாதிபதி மைத்திரியின் பேச்சை மீள ஒலி மற்றும் ஒளிபரப்புவதைத் தவிர்க்குமாறு இலத்திரனியல் ஊடக நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அவரது பேச்சு தமக்கு அநீதியானதாக இருக்கிறது என்பதே ஐ.ம.சு.கூ வேட்பாளர்களின் குற்றச்சாட்டு. இக்கட்டுரை எழுதப்படும் போது இந்த நிகழ்வுகளே இடம்பெற்றிருந்தன.
மேலும், தான் பிரதமராக மஹிந்த
ராஜபக்ஷவை நியமிக்க மாட்டேன் என்ற ஜனாதிபதி மைத்திரியின் கருத்து தொடர்பிலும் வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டன. யாரை பிரதமராக நியமிப்பது என்ற அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கிறதா? என்ற கேள்வி இங்கு முக்கியம் பெறுகிறது. 19ஆம் திருத்தத்தின்படி நாடாளுமன்றில் பெரும்பான்மை ஆதரவை யார் பெற்றுள்ளார் என்று ஜனாதிபதி கருதுகிறாரோ அவரை பிரதமராக நியமிக்கலாம். இது பற்றிய பொருள்கோடல் உயர் நீதிமன்றால் வழங்கப்படவேண்டிய சந்தர்ப்பம் இதுவரை எழாத நிலையில், ஜனாதிபதியிடமே பிரதமரை நியமிக்கும் அதிகாரம் இருக்கிறது எனக் கொள்ளலாம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் கருத்துக்கள் நிச்சயமாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் சாதகமானவை அல்ல. அதேவேளை, அது நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணிக்கு வலுச்சேர்ப்பதாகவே இருக்கிறது.
ஒரு கட்சியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரியின் கருத்துக்கள் முறையற்றது எனினும், நாட்டின் தலைவர் என்ற அடிப்படையிலும், நல்லாட்சியை உறுதிப்படுத்தவேண்டிய பொறுப்புடையவர் என்ற அடிப்படையிலும் அவருடைய கருத்துக்கள் அவரை ஜனவரி 8இல் ஜனாதிபதியாக தெரிவுசெய்த வாக்காளர்களைப் பொறுத்தவரையில் நல்ல செய்தியே!
யதார்த்தத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியோ, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்போ ஜனாதிபதி மைத்திரியின் ஆதரவினை எதிர்பார்ப்பது நியாயமல்ல. இவ்விரண்டு கட்சிகளும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவையே ஆதரித்திருந்தன. ஜனாதிபதி மைத்திரியும் அவருடைய சில ஆதரவாளர்களும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறி 47 கட்சிகள் மற்றும் அமைப்புக்களின் ஆதரவோடு பொது எதிரணி வேட்பாளராகவே ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொண்டு வெற்றியீட்டியிருந்தார்.
இந்நிலையில், ஜனாதிபதியாக மைத்திரி பதவியேற்றதன் பின்புதான், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைமைப்பதவி அவருக்கு வழங்கப்பட்டது. ஆகவே, சுதந்திரக் கட்சியோ, ஐ.ம.சு.கூ வோ மஹிந்தவை போட்டியிட அனுமதித்துவிட்டு, ஜனாதிபதி மைத்திரியின் ஆதரவையும் எதிர்பார்ப்பது நியாயமான ஒன்றல்ல. அதனை ஜனாதிபதி மைத்திரி எதிர்ப்பதும் அநியாயமானதல்ல.
தற்போதைய நிலையில் ஜனாதிபதி மைத்திரி, அரசியல் களத்தில் தனிமரமாகவே நிற்கிறார். அவருடைய ஆதரவாளர்கள் சிறு அளவில் இருப்பினும், ஒரு தனிக்கட்சியின் பலமோ, பின்புலமோ அவருக்கு தற்போதைய நிலையில் இல்லை. பொது எதிரணி என்பது, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் பல்வேறு தரப்பினரும் இணைந்திருக்கக்கூடிய ஒரு தேர்தல் கூட்டு.
ஒரு சுதந்திர ஜனாதிபதியாக, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது ஆதரவாளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தரப்பை விட கொள்கை அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரி - நல்லாட்சிக்கான ஐக்கிய தேசியக் கூட்டணியின் வெற்றியை விரும்புவதில் அர்த்தமிருக்கிறது. ஆனால், அவர் தொடர்ந்தும் எதிர்வரும் நான்கரை ஆண்டுகளுக்கும் கட்சிப்பலமற்ற ஜனாதிபதியாகவே இருக்க வேண்டி ஏற்படலாம். இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதி முறை வரலாற்றில் இது ஒரு புதிய நிலைமை. 2001இல் சந்திரிக்கா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தபோது, ஐ.தே.க., நாடாளுமன்றில் ஆட்சியமைத்தது,
ஆயினும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினதும் அதனது கூட்டணிக் கட்சியினதும் பலமும் பின்புலமும் அன்றைய ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு இருந்தது. ஆனால், ஜனாதிபதி மைத்திரியைப் பொறுத்தவரை இப்போதுள்ளநிலையில் எந்தக் கட்சிப் பலமுமின்றியே ஜனாதிபதியாகத் தொழிற்பட வேண்டிய நிலையிருக்கிறது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினதும் ஐ.ம.சு.கூ.வினதும் தலைமையில் இருந்து ஜனாதிபதி மைத்திரியை நீங்குவது அல்லது நீக்கப்படுவது ஒருவகையில் சாதகமற்றதாகத் தோன்றினும், பலவகைகளில் ஜனாதிபதிக்கு சாதகமானதொன்றாக இருக்கக்கூடும். கட்சி, அடுத்த தேர்தல், கட்சியின் நன்மை என்ற கட்டுக்களின்றி, நாட்டின் நன்மைக்காக செயற்படக்கூடிய வெளியை அவருக்கு அது ஏற்படுத்தித்தரும். சில வேளைகளில் நாடாளுமன்றப் பலம் என்ற அடிப்படையில் அவரது நடவடிக்கைகளை யாரும் தடை செய்ய முற்படலாமெனினும், அப்படி செய்பவர்களை மக்கள் முன் வெளிச்சமிட்டு காட்டி, தனது சுதந்திரத்தைப் பாதுகாத்துக்கொள்ளக்கூடிய ஏதுநிலை அவருக்கிருக்கிறது.
மேலும், கட்சி சாராத ஜனாதிபதியாக, மக்களின் ஜனாதிபதியான தொழிற்படக்கூடிய சந்தர்ப்பத்தையும், இலங்கை அரசியல் கலாசாரத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தத்தக்க வாய்ப்பையும் இன்று உருவாகியுள்ள சந்தர்ப்ப சூழ்நிலை ஜனாதிபதி மைத்திரிக்கு வழங்கியுள்ளது. மாறாக, இந்தத் தேர்தலுக்குப் பின், ஒருவேளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வாய்ப்பு ஜனாதிபதி மைத்திரிக்கு கிடைக்குமானால், அது கட்சிப் பலமுள்ள ஜனாதிபதியாக அவரை மாற்றுவதுடன், கட்சி நலன் சார்ந்து சிந்திக்க வேண்டிய தேவையையும் நிர்ப்பந்தத்தையும் ஏற்படுத்திவிடும்.
இது வழமையான நிலையின் தொடர்ச்சியாகவே இருக்கும் என்பதுடன் கொள்கை மற்றும் சேவை அரசியல் என்பதைத்தாண்டி தேர்தல் அரசியல் பற்றியும் சிந்திக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஜனாதிபதி மைத்திரிக்கு ஏற்படுத்தும்.
மக்களால் பொது வேட்பாளராகக் கட்சி பேதமின்றித் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திரி - சுதந்திரமாக, கட்சி பேதமின்றிச் செயற்படுவதுதான் அவருக்கும் மக்களுக்கும், நாட்டுக்கும் நன்மை பயப்பதாகவும், இலங்கை அரசியலில் ஓர் ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தவல்லதாகவும் அமையும். ஆனால், இது நடந்தால், இலங்கை அரசியலைப் பொறுத்தவரையில் அது நிச்சயம் அதிசயிக்கத்தக்க 'மாற்றம்' தான்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago