Thipaan / 2015 ஜூலை 30 , மு.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ
எல்லா உறவுகளும் ஒரேமாதிரியானவையல்ல. சில முறிந்த உறவுகளைச் சரிசெய்வது சாத்தியமற்றது. 'அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை' என்பது புகழ்பெற்ற வாக்கியம். உலக அரசியலில் அவ்வாக்கியம் எப்போதும் பொருந்திவருவதல்ல. அமெரிக்க-கியூப உறவின் கதை மிக நீண்டது. உறவும் நெடியது, பகையும் கூடத்தான்.
ஐக்கிய அமெரிக்காவின் மூக்கு நுனியின் கீழ் அமைந்திருக்கும் தீவு நாடுதான் கியூபா. ஸ்பானிய கொலனித்துவத்தின் கீழும் அதன் பின் அமெரிக்க பொம்மை ஆட்சிகளின் கீழும் தொடர்ச்சியாக இருந்து வந்தது. 'வாழைப்பழக் குடியரசுகள்' என அழைக்கப்பட்ட பல்தேசிய வாழைப்பழக் கம்பனிகளின் ஆதிக்கத்தின் கீழிருந்த இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்று. 1959ஆம் ஆண்டு ஃபிடல் கஸ்ற்ரோ தலைமையிலான புரட்சிப்படைகள் கியூபாவின் சர்வாதிகாரியாக இருந்த பாடிஸ்டாவை விரட்டியடித்து ஆட்சியைக் கைப்பற்றினார்கள். இது அமெரிக்காவுக்கு உவப்பானதாக இருக்கவில்லை. அமெரிக்காவின் ஆசிர்வாதத்துடன் அமெரிக்க நலன்களைப் பேணிய ஒருவரின் வீழ்ச்சி அமெரிக்காவுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தது. உருவான புதிய ஆட்சியுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதன் மூலம் அமெரிக்க நலன்களையும் கியூபாவில் முதலிட்டுள்ள அமெரிக்க வாழைப்பழக் கம்பனிகளதும் விருப்பங்களையும் பாதுகாக்க அமெரிக்கா விரும்பியது. அது சாத்தியமாகாமல் போக ஆட்சிமாற்றத்தை உருவாக்குவதற்காக 1961இல் பன்றி வளைகுடா முற்றுகையை அமெரிக்கா நடாத்தியது. அதன் தோல்வி அமெரிக்க-கியூப உறவைப் புதிய தளத்துக்கு இட்டுச் சென்றது. கியூபா, எண்ணெய் வயல்களைக் தேசியமயமாக்கியதைத் தொடர்ந்து அதன் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. 1961இல் அமெரிக்காவில் உள்ள கியூபத் தூதரகமும், கியூபாவில் உள்ள அமெரிக்கத் தூதரகமும் மூடப்பட்டன. பயங்கரவாதத்துக்கு உதவும் நாடுகள் பட்டியலில் கியூபா, 1982இல் சேர்க்கப்பட்டது. ஈரான், சூடான், சிரியா ஆகியன அப்பட்டியலில் உள்ள ஏனைய நாடுகள்.
54 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் கியூபாவின் தூதரகமும், கியூபாவில் அமெரிக்காவின் தூதரகமும் கடந்த வாரம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இந்த முன்கதைச் சுருக்கத்துக்கான தேவை எழுந்த காரணம் இதுவே. கியூபா இவ்வளவு காலமும் மேற்குலகின் பொருளாதாரத் தடைகளையும் சர்வதேசத் தனிமைப்படுத்தல்களையும் ஆட்சி மாற்றத்துக்கான அமெரிக்காவின் தொடர்ச்சியான முயற்சிகளையும் தாண்டி நின்று நிலைத்து வளர்ந்திருக்கிறதென்றால் அதன் பின்புலத்தில் கியூபப் புரட்சியின் முக்கியத்துவத்தைக் கவனித்தல் தகும்.
உலக வரலாற்றிலில் மிகநீண்டகாலமான புரட்சியின் பின்னான ஆட்சியை புரட்சிகர நோக்கங்களுடன் தக்க வைத்துள்ள நாடுகளில் கியூபா முதன்மையானது. இதற்கான காரணங்கள் வலியன. கியூபப் புரட்சி கற்றுத்தந்த பாடங்களும் அவ்வகையன.
புரட்சியின் விளைவால் உருவாக்கப்பட்ட சமுதாயப் புரட்சியானது இறுக்கமாகக் கட்டி அமைக்கப்பட்ட, மிகவும் ஒழுக்கமான சித்தாந்த ரீதியாகத் தெளிவான தலைமையால் சாத்தியமானது. இவையே கியூபா 56 ஆண்டுகளாக, புரட்சியின் விளைவால் உருவாக்கப்பட்ட சமூகமாற்றத்தைப் பல்வேறு நெருக்குவாரங்கள், தடைகள் என்பவற்றைத் தாண்டி தக்கவைத்துள்ளமைக்கான காரணங்கள்.
இப்போது அமெரிக்கா நீட்டியுள்ள நேசக்கரத்தை அச்சத்துடனேயே நோக்க வேண்டியுள்ளது. இதுவரைகால கியூபா மீதான அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகள் எல்லாம் தோல்வி கண்டுள்ள நிலையில் கியூபாவுடன் பேசுவதனூடு அமெரிக்க நலன்களைக் காக்க முனைகிறோம் என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பகிரங்கமாகவே அறிவிக்கிறார்.
கியூபாவில் அமெரிக்கா விரும்புகிற ஆட்சிமாற்றத்தை இப்போது புதிய வழிகளில் செய்ய முனைகிறது. அமெரிக்கா, கியூபாவின் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குவதன் மூலம் அமெரிக்கப் பொருட்களும் அமெரிக்கப் பெருநிறுவனங்களும் கியூபாவுக்குள் நுழைவதற்கான வெளியை உருவாக்க முனைகின்றன.
அதனூடு உலகமயமாக்கலையும் தனியார்மயத்தையும் அறிமுகப்படுத்தி இன்னொரு வழியில் ஆட்சிமாற்றமொன்றை உருவாக்க அமெரிக்கா நிச்சயம் முயலும்.
இன்று அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் விளைவால் அமெரிக்கா, புதிய சந்தைகளைத் தேடுகிறது. அவ்வகையில் கியூபா மிகவும் இலாபந்தரக்கூடிய புதிய சந்தை. குறிப்பாக இரண்டு துறைகளில் அமெரிக்கா கூடிய கவனஞ் செலுத்துகிறது. ஒன்று விவசாயம். இரண்டாவது மருத்துவம்.
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் கியூபாவில் புற்றுநோய் போன்ற நோய்களின் தாக்குதல் கணிசமான அளவு குறைவாகவே உள்ளது. கியூபா- விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் இரசாயனங்களையும் பயன்படுத்த மறுப்பது அதற்கான பிரதானமான காரணிகளில் ஒன்று. சோஷலிச அமைப்பு முறை கியூபாவில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதனை அழித்தொழிக்கும் அமெரிக்கச் சதி முயற்சிகளுக்கும் பொருளாதாரத் தடைச் சவால்களுக்கும் மத்தியில் கியூபா தனது சுயத்தைப் பாதுகாத்து முன்னெடுத்து வருகின்றது.
அந் நாட்டின் சுகாதாரத்துறை மக்கள் நலன் நாட்டத்தில் உலகுக்கே முன் மாதிரியாக இருந்து வருகின்றது. கியூபாவின் சுகாதாரத்துறையின் விஞ்ஞான நிபுணர்கள், டொக்டர்கள், தாதிகள் மற்றும் பல நிலை ஊழியர்கள் உயர்ந்த அர்ப்பணிப்புடனும் தியாக சிந்தனையுடனும் மக்களின் சுகாதார நல்வாழ்வுக்கு சேவை புரிந்து வருகிறார்கள். உலகின் மிகவும் வறிய நாடுகளில் கியூப மருத்துவர்களும் தாதிகளும் பணியாற்றுகிறார்கள்.
இதனாலேயே கியூபாவின் வெளியுறவுக் கொள்கையை 'வைத்திய இராஜதந்திரம்' (Doctor Diplomacy) என்று ஒருபுறமும் கியூப மருத்துவ சர்வதேசியம் (Cuban Medical Internationalism) என்று இன்னொருபுறமும் அழைக்கப்படுகிறது. துற்போது உலகின் 107 நாடுகளில் கியூபாவைச் சேர்ந்து 87,000க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் கடமையாற்றுகிறார்கள். சர்வதேச அரங்கில் கியூபாவின் மிகப்பெரிய சாதனையாக இது கருதப்படுகிறது.
அமெரிக்கா, இன்னொரு நாட்டில் தான் விரும்பிய ஆட்சிமாற்றத்தை உருவாக்கப் பல்வேறு வழிகளில் முனைவது வழமை. அவ்வகையில் சமாதானம் பேசுவது, உறவுகளைப் புதுப்பிப்பது போன்ற தோறணைகளின் வழி தனது இலக்கை அமெரிக்கா எட்ட முயலும். இதனாலேயே கியூபாவுக்கு அமெரிக்கா நீட்டியுள்ள நேசக்கரத்தை விமர்சன நோக்கிலும் எச்சரிக்கை உணர்வுடனும் நோக்க வேண்டியுள்ளது.
கியூபா, அந்நிய வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தி ஒழுங்கமைப்பதன் மூலம் அந்நிய முதலீடு, உள்நாட்டு அலுவல்களில் தாக்கஞ் செலுத்தாதவாறு கவனித்து வந்துள்ளது. விவசாயத்தில் தன்னிறைவு அடைந்ததன் மூலம் இறக்குமதிப் பொருட்களில் தங்கியிரா நிலையை உருவாக்கியுள்ளது. இவைதான் அமெரிக்கப் பொருளாதாரத் தடைகள் கியூபாவை நெருக்கடிக்குள்ளாக்காமல் இருப்பதற்கான அடிப்படைகள்.
ஏனைய உலகநாடுகளுடன் உறவுகள் முக்கியமானவைதான். ஆனால், அவ்வாறு உருவாகின்ற உறவுகளுக்குக் கொடுக்கின்ற விலை என்ன என்பது அதைவிட முக்கியமானது. தற்போதைய நிலையில் கியூப வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்கள் தங்களுக்குள் கேட்டுக்கொள்ள வேண்டிய முக்கிய கேள்வியொன்றுள்ளது. அமெரிக்காவுடன் உறவைப் புதுப்பிப்பதால் கியூபாவுக்கு ஏற்படப் போகும் நன்மைகள் எவை? புதுப்பிக்காமல் விடுவதால் ஏற்படப் போகும் தீமைகள் என்ன? இவை அவசரமாகவும் அவசியமாகவும் பதில்களை வேண்டி நிற்கும் வினாவாகும். வெளியுறவுக் கொள்கைகள் நாட்டுநலன் சார்ந்து தீர்மானிக்கப்படுபவை. இன்னொரு நாட்டின் விருப்பினடிப்படையில் வெளியுறவுக் கொள்கைகள் அமைவதில்லை.
புதுப்பிக்கப்பட்ட உறவுக்கு அடிப்படையாக இரண்டு விடயங்களை கியூபா எதிர்பார்க்கிறது. முதலாவது கியூபா மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும். இரண்டாவது குவாண்டனாமோ குடாவை அமெரிக்கா மீள ஒப்படைக்க வேண்டும். இரண்டுமே அமெரிக்காவுக்குச் சிக்கலான விடயங்கள்.
கியூபா மீதான புதிய அணுகுமுறையை ஒபாமா மேற்கொள்ள விரும்பினாலும் பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கு அமெரிக்க நாடாளுமன்றின் மேலவையான செனட் சபையின் அங்கிகாரம் வேண்டும். செனட் சபையின் பெரும்பான்மையானது ஒபாமாவின் ஜனநாயக் கட்சியின் வசம் இல்லை. அது எதிர்க்கட்சியான குடியரசுக்கட்சி வசமே இருக்கிறது. குடியரசுக்கட்சிக்காரர்கள் அமெரிக்காவின் இந்தக் கொள்கை மாற்றத்தை எதிர்க்கிறார்கள். இதனால் கியூபா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குவது சுலபமல்ல. ஈரான் அணுசக்தி விடயத்திலும் இவ்வாறான நெருக்கடியையே ஒபாமா எதிர்நோக்குவார்.
குவாண்டனாமோ குடாவானது கியூபாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. 1903ஆம் ஆண்டு உடன்படிக்கையின் அடிப்படையில் அப்பகுதியை அமெரிக்கா பயன்படுத்த கியூபா அனுமதித்தது. ஆனால், அப்பகுதிக்கான இறைமை கியூபாவுக்குரியது. இன்றுவரை அமெரிக்கா அப்பகுதியில் தனது இராணுவத் தளங்களையும் சித்திரவதைக் கூடங்களையும் வைத்திருக்கிறது. பூகோளரீதியில் இத்தளம் மூலோபாய முக்கியத்துவம் உடையது. இதை மீண்டும் கியூபாவிடம் கையளிப்பது அமெரிக்க நலன்களுக்குச் சாத்தியமானதல்ல.
கியூபாவின் இரண்டு கோரிக்கைகளையும் அமெரிக்காவால் ஏற்கமுடியாத நிலையில் எதனடிப்படையில் இவ்வுறவு தொடரப்போகிறது என்பது கேள்வியாகிறது. இப்பின்னணியிலேயே மலர்ந்துள்ள அமெரிக்க-கியூப உறவை நோக்க வேண்டியுள்ளது. இருநாடுகளும்
தூதரகங்களைத் திறக்கலாம், கொடியேற்றலாம். அதற்கு மேல் என்ன செய்யலாம் என்ற கேள்விக்கு காலம் பதில் சொல்லும்.
1973இல் சர்வதேச ஊடகவியலாளர்கள்
ஃபிடல் காஸ்ட்ரோவிடம் அமெரிக்கா எப்போது கியூபாவுடன் உறவை ஏற்படுத்தும் என்று கேட்டபோது: 'எப்போது கறுப்பர் ஒருவர் அமெரிக்க ஜனாதிபதியாகவும் இலத்தீனமெரிக்கர் ஒருவர் பாப்பரசராகவும் வருகிறாரோ அப்போதே இது சாத்தியமாகும்' என்று கூறியிருந்தார். எதிர்வுகூறல் சரியாக அமைகிறபோதும் காஸ்ரோ என்ன அர்த்தத்தில் அதைச் சொன்னார் என்பது முக்கியமானது. காஸ்ரோவின் கணிப்பில் கறுப்பர் அமெரிக்க ஜனாதிபதியாவது என்பதும் இலத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஒருவர் பாப்பரசராகத் தெரிவாவது சமூக மாற்றத்தின் பயனாக உருவாவது என அவர் கணித்தார். அவ்வாறு ஏற்படுகிற மாற்றம் கியூபா-அமெரிக்க உறவை ஏற்படுத்தும் என நினைத்தார். ஆனால், சமூக மாற்றம் ஏற்படாமலே இது சாத்தியமாகியிருக்கிறது.
கியூபாவில் ஓர் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கா எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் இன்னொரு வழியை அமெரிக்கா தேடுகிறது. அதற்கு நல்லெண்ண நடவடிக்கை என்ற முகமூடியைச் சூடுகிறது. கியூபா அவதானமாகவில்லாதவிடத்து ஆட்சி மாற்றம் தவிர்க்கவியலாதது.
1995இல் ஐக்கிய நாடுகள் சபையின் பொன்விழா கொண்டாட்டத்தின் போது, மேற்குலகினதும் அமெரிக்காவினதும் எதிர்ப்பையும் மீறி புகழ்பெற்ற ஏழு நிமிட உரையை ஃபிடல் காஸ்ட்ரோ நிகழ்த்தியிருந்தார். அவ்வுரையை அவர் பின்வருமாறு தொடங்குகிறார்.
'தாராளவாதம் அனைத்து நாடுகளையும், குறிப்பாக நமது நாடுகள் அனைத்தையும் தனிச் சொத்தாக்கவே விரும்புகிறது. இதன்பின்னர் நமது வளங்களில்; என்னதான் மிச்சமாக இருக்கப் போகிறது?'
இக்கேள்வியை அமெரிக்காவுடனான புதிய நட்பு தொடர்பில் கியூபா தன்னைத்தானே கேட்டுக் கொள்ளலாம்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago