2025 ஒக்டோபர் 20, திங்கட்கிழமை

40 வருடங்களாக உரிமை மறுக்கப்படும் பிரதேச செயலகம்

Mayu   / 2024 ஏப்ரல் 29 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

லக்ஸ்மன்

கிழக்கு மாகாணத்தில் சுமார் நான்கு தசாப்தங்களாக இயங்கி வரும் உப பிரதேச செயலகத்தை முழுமையான பிரதேச செயலகமாக மாற்றி அப்பகுதியில் பரம்பரையாக வாழும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளில் இருந்து விடுவிக்குமாறு கோரி போராட்டம் ஒன்று  மார்ச் 25ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படுகின்றது.

இதற்கு முன்னரும் பல தடவைகளில் போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. அதனால் இதுவொன்றும் புதிதல்ல.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம், முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்படாத காரணத்தினால், அப்பிரதேசத்தில் வாழும் தமிழர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். 

கல்முனை வடக்கு (தமிழ் பிரிவு) பிரதேச செயலக பிரிவு சுமார் 39,000 சனத்தொகையையும் 29 கிராம சேவகர்  பிரிவுகளையும் 06 பாரம்பரிய தமிழ் கிராமங்களையும் உள்ளடக்கியதான ஒரு பிரதேச செயலகம்.

இந்நிர்வாக அலகானது 1989ஆம் ஆண்டு உதவி அரசாங்க அதிபர் பிரிவாக ஸ்தாபிக்கப்பட்டது. பின்னர் 93/600/034 இலக்க 93.03.17 திகதிய, 93/600/034(1) இலக்க 93.03.31 திகதிய அமைச்சரவை மசோதாக்கள் மற்றும் 93.07.09ஆம் திகதிய அமைச்சரவை உப குழுவின் அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் 93.07.28ஆம் திகதி அமைச்சரவையின் அனுமதியுடன் பிரதேச செயலகமாக மாற்றப்பட்டது.

அதனடிப்படையில், தனியானதொரு பிரதேச செயலக பிரிவாக 30 வருடங்களுக்கு மேலாக பொது மக்களுக்கான சேவைகளை வழங்கி வருகின்றது.

கல்முனை வடக்கு (தமிழ் பிரிவு) பிரதேச செயலகத்தை கல்முனை தெற்கு பிரதேச செயலக பிரிவின் உப அலுவலகமாக தரமிறக்குவதற்கான தீர்மானங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என உள்நாட்டலுவல்கள் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. 

தற்போது கல்முனை வடக்கு (தமிழ் பிரிவு) பிரதேச செயலகத்தை கல்முனை தெற்கு பிரதேச செயலக பிரிவின் உப அலுவலகமாக தரமிறக்குவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாகத் தகவல்கள் கசிகின்றன.

அந்தவகையில்தான்  கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் இனப் பாகுபாடு இடம்பெறுவது உகந்ததல்ல.  

2002இல் உருவாக்கப்பட்ட சாய்ந்தமருது பிரதேச செயலகம் 2006இல் முழுமையான பிரதேச செயலகமாக இயங்க முடியுமாயின், 34 வருடங்களாக இயங்கும் கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் மாத்திரம் ஏன் தரமுயர்த்தப்பட முடியாது என்ற நாடாளுமன்ற உறுப்பினர்களது கருத்தும் வெளிவருகிறது. 

உண்ணா விரதங்களையும், போராட்டங்களையும் நடத்தியதுடன், பல்வேறு நிருவாக ரீதியான முயற்சிகளையும் அரசியல்வாதிகள், கல்முனை சிவில் சமூகத்தினர் மேற்கொண்டிருந்தபோதும், இதுவரையில் எதுவுமே நடைபெறவில்லை.

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக புளொட் அமைப்பின் உறுப்பினராக இருந்த பொழுது உண்ணாவிரதங்களையும், போராட்டங்களையும் நடத்தினார்.

கோட்டபாய அரசாங்கத்தில் அவரினால் கல்முனை பிரதேச செயலகத்தினைத் தரமுயர்த்திக் கொடுக்க முடியவில்லை. 2019இல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றபொழுது ஜனாதிபதி தெரிவாகி ஒருவாரத்தில் கல்முனை தமிழ்ப் பிரிவு தரம் உயரும் என்று முழக்கமிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ போய்  இப்போது ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருக்கிறார். வியாழேந்திரன் அமைச்சராக இப்போதும் இருக்கிறார்.

அடுத்தவர், விடுதலைப் புலிகளின் கிழக்குத் தளபதியாக இருந்து அந்த அமைப்பிலிருந்து பிரிந்து அரசுடன் இணைந்து பிரதி அமைச்சரான கருணா எனும் வி.முரளிதரன் கல்முனை விடயத்தில் பல உறுதிப்பாடுகளைக் கூறியிருந்தார். ஒன்றும் நடைபெறவில்லை.

கடந்த தேர்தலில் கல்முனை தமிழ்ப் பிரிவினைத் தரமுயர்த்துவேன் என்ற தேர்தல் அறைகூவலுடனேயே போட்டியிட்டார். அவரது இந்த உறுதியை நம்பி வாக்களித்த மக்களுக்கு அம்பாறைக்கு தமிழ்ப் பிரதிநிதித்துவமே இல்லாமல் போனது.

கல்முனை தமிழ்ப் பிரிவுக்கான துருப்புச் சீட்டை முஸ்லிம் அரசியல்வாதிகள் ஏதோ ஒரு வகையில் வைத்துக் கொண்டே இருக்கிறார்கள். தமிழர் அரசியலில் அரசுடன் தமிழ்ப் பிரதிநிதிகள் இணைவதும், தமிழர்கள் இணைந்து அமைச்சர்களாக இருப்பதும் ஒன்றும் வரலாற்றில் நடக்காத ஒன்றல்ல. இதுவும் கடந்தே போனதுதான் வரலாறு. இருக்கும் வரைக்கும் இருப்போம் முடிந்தவரைக்கும் உழைப்போம். ஏதோ காலம் கடத்துவோம் என்று வாழும் அரசியல் வாழ்க்கைக்குப் பெயர் ஆளும் கட்சியென்று மகிழ்ச்சி கொள்வோம். தம்மால் முடியாமல் போனதற்குத் தமிழ்த் தேசியத் தரப்பு மீது குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்களே தவிர வேறு ஒன்றும் நடைபெறவில்லை.

கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் பழம்பெரும் கிராமங்களை உள்ளடக்கிய பிரதேசங்களாகும். அவ்வாறிருக்கின்ற அந்த எல்லைகளை கல்முனை தெற்குப் பிரதேச செயலகத்தோடு நில அளவை செய்து கல்முனை வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றார்கள்.  கிராமங்களின் வீதிகளின் பெயர்கள் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன. 

தமிழ் மக்களும் சிங்கள மக்களும் வாழ்ந்த பிரதேசம் தற்போது இஸ்லாமாபாத் என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் கல்முனையில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்ற விடயமாக இருக்கின்றன. நாட்டில் இருக்கின்ற நிருவாக நடைமுறைக்கு மாறாக இப் பிரதேச செயலகப் பிரிவில் மாத்திரம் மோசடி நடைபெறுவதாகவே குற்றம்சாட்டப்படுகிறது

மிகக் குறைவான கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கியதாகப் பிரதேச செயலாளர் பிரிவுகள் காணப்படுகின்ற போதும், 29 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டுள்ள கல்முனை வடக்கு உப பிரதேச செயலகமாகவே இருந்துவருகிறது. இது.  அம்பாறை மாவட்ட தமிழ் மக்களை மட்டுமல்ல, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் அனைவரையும் கவலைக்குள்ளாகும் செயலாகும்.
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் 1989இல் சுற்றுலா உதவி அரசாங்க அதிபர் பிரிவாக இயங்கி 1993 முதல் இற்றை வரை உப பிரதேச செயலகமாக இயங்குகிறது. காணி, நிதி வளம் அற்றதாக இயங்கும் இந்த பிரதேச செயலகத்திற்குக் கணக்காளர் நியமிப்பு இதுவரையில் நடைபெறவில்லை. சாண் ஏற முழம் சறுக்கும் தமிழர் அரசியலில் சாத்தியங்கள் கடந்த நல்லாட்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன் வலுப்பெற்ற வேளை நாட்டில் ஏற்பட்ட ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையிலான முரண்பாடு, ஈஸ்டர் தாக்குதல், பிரதமர் மாற்றம், ஆட்சிக் குழப்பம் உள்ளிட்ட பல அதனைக் குழப்பியடித்தது.

ஏற்கெனவே 1993இல் அமைச்சரவை ஒப்புதல் கிடைத்து அவ்வேளையில் நாட்டில் ஏனைய பகுதிகளில் இருந்த உப பிரதேச செயலகங்கள் பிரதேச செயலகங்களாகத் தரம் உயர்த்தப்பட்டன. அதற்குப் பின்னர் பல பிரதேச செயலகங்கள் புதிதாக உருவாக்கப்பட்டும் இருக்கின்றன. இவ்வாறான நிலையில் கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகமே நிறைவுபெறாத ஒன்று.

கல்முனை தமிழ்ப் பிரிவு 34 வருடங்களைத் தாண்டியும் நிறைவேறாத கனவாகவே இருந்து கொண்டிருக்கிறது. இதனை வைத்தே முஸ்லிம் அரசியல்வாதிகளும், சில தமிழ் அரசியல்வாதிகளும் தேர்தல்களில் போட்டியிடுகிறார்கள். காலத்தையும் கடத்துகிறார்கள். மக்களையும் ஏமாற்றுகிறார்கள். ஆனால், யதார்த்தத்தினைச் சொல்வதற்கும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும்தான் ஆட்களில்லை. அந்தவகையில்,   கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தொடர்பில் அரசியல் தலைவர்களது நடவடிக்கைகள் தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையைக் குலைப்பதாகவே அமைந்திருக்கிறது. இன விரோதம் வலுத்தேவிட்டது.

அதன் தொடர்ச்சியாகத்தான் கல்முனையில் உருவாகியிருக்கின்ற பிரச்சினைகள் காணப்படுகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான அதிகாரங்கள் வழங்கப்படாமல் திட்டமிட்டுத் தடுக்கப்படுவது கவலையானதே. இவ்வாறான சம்பவங்களும் இன முறுகல் நிலைகளும் உருவாகாமல் தடுக்க கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான அதிகாரங்களை வழங்கி மக்கள் தங்கள் சேவைகளை வினைத்திறனாகவும் பாதிப்பின்றியும் பெறுவதற்கு அரசாங்கம் தீர்வைக்காண வேண்டும். 

அடிக்கடி ஒரு பொரி விழுவதும், அது பெருந்தீயாகப் பற்றி எரிவதும் பின்னர் தானாக அணைவதுபோன்று ஆகிவிடுவதும்தான் தமிழ் மக்களின் நிலைப்பாடு. ‘பிட்டும் தேங்காய்ப்பூவும் போல’ என்று   பொது வெளியில் பேசிக்கொண்டு உள்ளே வேறுவிதமாகச் செயற்படும் பாங்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம்களுக்கிடையில் இருக்கிறது என்பது வெளிப்படை. இந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படவேண்டும் என்பதே அனைவருடையதும் கனவு நிலைப்பாடாகும்.

இலங்கையில் இனப் பிரச்சினை உருவான வேளை, சிறுபான்மை, தமிழ் என்றிருந்த தமிழ் முஸ்லிம் மக்கள் காலப்போக்கில் பிரிந்து இரு துருவங்களானார்கள். அதன் பின்னர் தமிழ் பேசும் என்று மாற்றம் பெற்றது. அதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் இப்போதும் தமிழர் தரப்பு அவற்றையெல்லாம் மறந்து சகோதரர்களாக வாழ்வோம் என்றே சொல்கிறார்கள். முயற்சி செய்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீராத நம்பிக்கையாக இருக்கின்ற முஸ்லிம்களின் இணக்கப்பாட்டுடன் கல்முனைத் தமிழ்ப் பிரிவு பற்றிய பிரச்சினை முடிவுக்கு வர வேண்டும்.

01.04.2024


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .