2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

861: வலி தரும் எண்கள்!

A.P.Mathan   / 2011 மே 11 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

•    மப்றூக்

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை - மார்ச் 12, 2011. லிபியாவின் பெங்காசி நகரத்தின் தென்மேற்குப் பகுதி சுலுக்கில் இருந்து கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருக்கிறது. உள்ளே அல்-ஜெஸீரா தொலைக்காட்சியின் பணியாளர்கள்! சுலுக் பகுதியில் கடாபி ஆதரவுப் படையினருக்கும் புரட்சியாளர்களுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் மோதலை படம் பிடித்துக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்தனர் காரிலிருந்த அல்-ஜெஸீரா குழுவினர். கார் இப்போது பெங்காசியின் கிழக்குப் பகுதிக்கு வந்து கொண்டிருக்கிறது. அப்போது திடீரென துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தம் கேட்க ஆரம்பிக்கின்றது. அங்கு பதுங்கியிருந்த துப்பாக்கிதாரிகள் அல்-ஜஸீரா வாகனத்தை நோக்கி சரமாரியாகச் சுடுகின்றார்கள். காரினுள் இருந்த அலி ஹசன் அல் ஜபரின் உடலில் மூன்று குண்டுகள் பாய்கின்றன. பின்னர் அவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படுகிறார். ஆயினும், ஜபரின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை!  

லிபியாவில் இடம்பெற்று வரும் ஆயுத மோதலில் உயிரிழந்த முதலாவது ஊடகவியலாளர் எனும் குறிப்புடன் அலி ஹசன் அல் ஜபரின் மரணம் வரலாற்றில் பதிவு செய்யப்படுகிறது.

அலி ஹசன் அல் ஜபர் - கட்டார் நாட்டைச் சேர்ந்தவர். மரணிக்கும் போது அவருக்கு 55 வயதுதான் ஆகியிருந்தது. கெய்ரோ கலைக்கழத்தில் திரைப்படக்கலையிலே முதுநிலைப் பட்டதாரியான அவர், அல்-ஜஸீரா தொலைக்காட்சியில் கமெரா இயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஏற்கனவே கட்டார் தொலைக்காட்சியின் ஒளிப்படப் பிரிவின் தலைமையதிகாரியாகவும் 20 வருடங்கள் கடமையாற்றினார்.

அலி ஹசன் கொல்லப்பட்ட சம்பவத்தில், அவருடன் காரில் பயணித்த அல்-ஜஸீரா செய்தியாளர் நஸர் அல் ஹதர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்தார்.  

உலகம் முழுவதும் இந்த வருடம் (2011) இக்கட்டுரை எழுதும் வரை (10 மே, 2011) 22 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இவர்களில் 16 பேரின் கொலைக்கான காரணம் அல்லது நோக்கங்கள் அறியப்பட்டுள்ளன. ஏனைய 06 பேர் பலியெடுக்கப்பட்டதற்கான நோக்கம் குறித்துத் தெரியவில்லை. கொல்லப்பட்டதற்கான காரணம் அறியப்பட்ட 16 ஊடவியலாளர்களில் அதிகமானோர் (04 பேர்) லிபியாவிலேயே உயிரிழந்துள்ளனர். அதற்கடுத்து அதிகமான இழப்பு (03 பேர்) ஈராக்கில் நிகழ்ந்துள்ளன.

1992ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை (10 மே, 2011) உலகம் முழுவதும் 861 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான அமைப்பு தெரிவிக்கின்றது. இதில் 2007ஆம் ஆண்டிலேயே அதிகமானோர் பலியாகியிருந்தனர். மொத்தம் 110 பேர். இவர்களில் 69 பேரின் இறப்புக்கான நோக்கங்கள் உறுதி செய்யப்பட்டன. 21 பேருடைய மரணத்துக்கான காரணம் என்னவென்று அறியப்படவில்லை. இவர்களில் 20 ஊடகப் பணியாளர்களும் அடங்குகின்றனர். மேற்படி தரவுகளுக்கமைய, ஆகக்குறைந்த இழப்பு 1996ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ஆண்டில் மொத்தமாக 34 ஊடகவியலாளர்கள் பலியாகியிருந்தனர். இவர்களில் 06 பேரின் மரணத்துக்கான காரணம் அறியப்படவில்லை!

கொலைக் கரங்களுக்கு ஆண் - பெண் பாகுபாடுகளில்லை. பலிகொள்ளப்பட்ட மேற்படி 861 ஊடகவியலாளர்களில் 58 பேர் (07 வீதம்) பெண்கள். இவர்களில் நேபாளத்தைச் சேர்ந்த 27 வயதுடைய உமாசிங் எனும் இளம் பெண் ஊடகவியலாளர் - அடித்தும், கத்தியால் குத்தப்பட்டும் கொல்லப்பட்டார் என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆனால், அப்படித்தான் நடந்தது. 15 பேரைக் கொண்ட கும்பலொன்று உமாசிங்கை அவரின் வீட்டில் வைத்து மிக மோசமாகத் தாக்கியது. வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் உமாசிங் இறந்து விட்டார். 2009 ஜனவரி 11இல் இந்தக் கொடூரம் நடந்தது!

1992ஆம் ஆண்டு முதல் இதுவரை பலியான மொத்த ஊடகவியலாளர்களில் 613பேர் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். 150பேர் ஆயுத மோதல் அல்லது போரின் இடையில் சிக்கிப் பலியாகியுள்ளனர். மிகுதி 96 ஊடகவியலாளர்களும் ஆபத்தான கடமைகளின் போது உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதிகமான ஊடகவியலாளர்களை 2011ஆம் ஆண்டில் பலிகொண்டுள்ள லிபியாவானது ஊடக சுதத்திரத்தில் எப்போதும் பின்நிலையிலுள்ளதொரு நாடாகும். உதாரணமாக, எல்லையற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு, ஊடக சுதத்திரத்தின் அடிப்படையில் உலக நாடுகளை வரிசைப்படுத்தி வருகின்றது. அதனடிப்படையில் கடந்த வருடம் ஊடக சுநத்திரம் நிலவும் நாடுகளில் லிபியாவுக்கு 160ஆவது இடம் வழங்கப்பட்டிருந்தது. இதே வருடம் இலங்கை அந்தப் பட்டியலில் 158ஆவது இடத்தில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையைப் பொறுத்தவரை ஊடக சுதந்திரமுள்ள நாடுகளின் வரிசையில் கடந்த வருடம் சற்று முன்னேற்றம் கண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதாவது 2009ஆம் ஆண்டு 162 ஆவது இடத்தில் இருந்த இலங்கை – 2010இல் 158ஆவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. அந்தவகையில் முன்னேற்றம் - அவ்வளவுதான்! ஆனால், 2002ஆம் ஆண்டில் 51ஆவது இடத்தில் இருந்த நமது நாடுதான் இப்படி 158ஆவது இடத்துக்கு வீழ்ந்துள்ளது என்பதையும் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது!

மேற்படி தரப்படுத்தலின் அடிப்படையில் பின்லாந்து – உலகில் மிகவும் ஊடக சுதந்திரமுள்ள நாடாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.  

இந்த ஆண்டில் முதலாவதாகக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் பாகிஸ்தானைச் சேர்ந்த இல்யாஸ் நஸார். கடந்த ஜனவரி 03ஆம் திகதி பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பிதாரக் எனும் இடத்திலுள்ள ஓர் அழுக்கடைந்த வீதியோரத்தில் ஏராளமான துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் நஸாரின் உயிரிழந்த உடல் கண்டெடுக்கப்பட்டது. நஸார் பிரேதமாகக் கண்டெடுக்கப்படுவதற்கு ஆறு நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்தார்! இவரின் கொலைக்கான நோக்கம் என்ன என்று இதுவரை உறுதி செய்யப்படவில்லை என ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான அமைப்பு கூறுகின்றது.

இலங்கையைப் பொறுத்தவரை 1999ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டு வரை 24 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதில் 06 பேரின் கொலைக்கான நோக்கம் குறித்துக் கண்டறியப்படவில்லை.

உலகம் முழுவதும் 1992ஆம் ஆண்டு முதல் பலியான 861 ஊடகவியலாளர்களில் இலங்கையில் முதலாவதாக உயிர்ப் பலியெடுக்கப்பட்ட ஊடகவியலாளராக ரோஹண குமார பதிவாகிறார். இவர் 'சட்டன' எனும் சிங்கள செய்திப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர். 1999ஆம் ஆண்டின் செப்டெம்பர் 07ஆம் திகதி இரவு தனது வீட்டுக்குப் பயணித்துக் கொண்டிருந்த போது, இனந்தெரியாக துப்பாக்கிதாரியொருவரால் ரோஹன சுட்டுக் கொல்லப்பட்டார்.

இலங்கையில் இறுதியாகப் பலியானவர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி! ராணுவத்தினருக்கும் புலிகளுக்கும் இடையில் நடந்த இறுதிச் சண்டையின் போதான ஆட்லறி தாக்குதலொன்றில் இவர் சிக்கிப் பலியானதாக ஊடகவிலயலாளர்களைப் பாதுகாப்பதற்கான அமைப்பு தெரிவிக்கின்றது. சத்தியமூர்த்தி 1972ஆம் ஆண்டு பிறந்தவர். திருமணமானவர். ஒரேயொரு பெண் பிள்ளை. அவர் இறக்கும் போது அந்தப் பிள்ளைக்கு 06 வயது நிரம்பியிருந்தது!

இங்கு ஆச்சரியப்படத்தக்க ஒரு தகவல் உள்ளது. அதாவது, உலகம் முழுவதும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களில் அதிகமானோர் (39 வீதம்) அரசியல் தொடர்பான செய்தியாளர்கள். 34 வீதமானோர் போர் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டவர்கள். 21 வீதமானோர் லஞ்சம் தொடர்பான செய்திகளை வெளியிட்டவர்கள்.

நாம் நாளாந்தம் நுகரும் பெறுமானமுள்ள ஒவ்வொரு செய்திகளுக்குப் பின்னாலும் - ஆயிரம் வலி தரும் கதைகள் உள்ளன. சில வேளைகளில் ஒரு செய்திக்காக ஊடகவியலாளர்கள் தங்கள் உயிரையே பலி கொடுக்கின்றார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக – செய்திகளைத் திரட்டித் தரும் ஊடகவியலாளர்களின் மரணங்களையும் நாம் வெறும் செய்திகளாகவே பார்த்துப் பழகிவிட்டோம்!

கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் தொகை இதுவாக இருக்க, 1984ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை உலகம் முழுவதும் 34 ஊடகவியலாளர்கள் காணாமல் போயுள்ளனர். இவர்களில் இலங்கை ஊடகவியலாளரும் ஒருவர்! லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளரான பிரதீப் எக்னெலிகொட கடந்த வருடம் ஜனவரி 24ஆம் திகதி காணாமல் போனமை பற்றி உங்களுக்குத் தெரியாமலிருக்க முடியாது!

இது தவிர, உலகம் முழுவதும் 2010ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு கணக்கெடுப்பின் படி, 145 ஊடகவியலாளர்கள் சிறையிலடைத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இதில் சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் மட்டும் தலா 34 ஊடகவியலாளர்கள் சிறை வைக்கப்பட்டிருக்கின்றனர்.

ஊடகவியலாளர்கள் உலகெங்கும் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல் குறித்து எழுத இன்னும் எவ்வளவோ இருக்கின்றன. ஆனாலும், இந்தக் கட்டுரையை மிக விரைவாக முடிக்க வேண்டும் போல் ஒரு பதற்றம் என்னிடம் தொற்றிக் கொள்கிறது. காரணம், இதை எழுதிக் கொண்டிருக்கும் போது – பாகிஸ்தானில் 38 வயதுடைய நஸ்ருல்லா அப்ரிடி எனும் ஊடகவியலாளர் ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார். கொலையாளிகளால் நஸ்ருல்லாவின் 'சுசுகி அல்டோ' ரக காரில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த குண்டொன்று வெடித்ததன் காரணமாகவே – அவரின் மரணம் நிகழ்ந்திருக்கிறது.

'சமூகத்தின் காவலர்கள்' எனச் சொல்லப்படும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று உங்கள் பங்குக்கும் குரல் கொடுங்கள்! வன்முறைத் தாக்குதலில் இனி எந்தவொரு ஊடகவியலாளரின் மரணமும் நிகழ்ந்து விடக் கூடாது என்று பிரார்த்தனை செய்யுங்கள்!


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .