2025 மே 16, வெள்ளிக்கிழமை

அடுத்த மின் செயலிழப்புக்கு வழிகோலப்படுகிறதா?

Thipaan   / 2016 மார்ச் 31 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

இந்த ஆண்டில் மாத்திரம், இரண்டு தடவைகள் மின் செயலிழப்பு ஏற்பட்டு, முழு நாடுமே இருளில் மூழ்கியிருந்தது. இந்த நிலைமையால், நாடு முழுவதுமே - குறிப்பாக கொழும்பு போன்ற நகரப்பகுதிகள் - ஸ்தம்பிக்குமளவுக்கு ஏற்பட்டிருந்தது. அந்த இரண்டு மின் செயலிழப்புகளுமே, அரசாங்கத்தினுடையதோ அல்லது மின்சார சபையினுடையதோ நேரடியான தவறின் காரணமாக ஏற்பட்டவையன்று. மாறாக, பல்வேறுபட்ட இணைந்த காரணிகள் காரணமாகவே ஏற்பட்டிருந்தன.

இறுதியாக ஏற்பட்ட மின் செயலிழப்பு, பியகம உப மின்நிலையத்தில் ஏற்பட்ட உபகரணப் பழுது காரணமாகவே ஏற்பட்டிருந்தது. அந்த உப மின்நிலையத்தில் காணப்பட்ட மின்மாற்றி, சுமார் 39 ஆண்டுகள் பழைமையானது எனவும் அதை மாற்றுவதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்ததாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அங்கு காணப்பட்ட தாமதமென்பது, இந்த அரசாங்கத்தின் மீதான முற்றுமுழுதான தவறு கிடையாது. இவ்வாறான தாமதங்களை நிறுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதைத் தாண்டி, இந்த அரசாங்கம் வேண்டுமென்றே செய்த தவறொன்றின் காரணமாகத் தான் அந்த மின்வெட்டு ஏற்பட்டது என்றில்லை.

கூட்டு எதிரணித் தரப்பு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் இவ்வாறான மின் செயலிழப்புகள் ஏற்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, அரசியல் இலாபம் தேட முயன்ற போது, இந்த அரசாங்கம், பழியை, முன்னைய அரசாங்கத்தின் மீது போட முயன்றது. ஒரு கட்டத்தில் சில அமைச்சர்கள், இந்த அரசாங்கத்தின் நற்பெயரைக் கெடுப்பதற்கு எதிரணி செய்யும் நாசகார வேலைகளின் காரணமாகத் தான் இந்த நிலை ஏற்பட்டது என்றும் கூறினர்.

இரு தரப்பும் மாறி மாறி மேற்கொண்ட இந்தக் குற்றச்சாட்டுகள், நேரடியான அரசியல் கலப்பற்ற ஒரு விடயத்தை அரசியல் கலப்பாக்குவதற்கான முயற்சியே தவிர, வேறொன்றுமில்லை. எதிரணியென்பது, எப்போதுமே அரசாங்கத்தைக் குறைகூறும் ஒன்றாகவே இருந்து வந்த நிலையில், அரசாங்கமாவது, இவ்விடயத்தில் நேர்மையைக் கடைப்பிடித்திருக்கலாம்.

இவையெல்லாம் வரலாறுகளாக இருக்க, மின்வெட்டை அமுல்படுத்தப் போவதாகத் தெரிவித்து, அதற்கான நேர அட்டவணையொன்றை, இலங்கை மின்சார சபை சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது. நாட்டில் அதிகரித்துள்ள மின்சாரக் கேள்விக்கு ஈடுகொடுக்கும் முகமாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக, அதில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அது வெளியிடப்பட்டு சிறிது நேரத்தில், அந்த அட்டவணை தவறாக வெளியிடப்பட்டு விட்டதாகவும் மின்வெட்டுகளை அமுல்படுத்தும் நோக்கத்தில் மின்சார சபை இல்லையெனவும் அறிவிக்கப்பட்டது.

மின்வெட்டை அமுல்படுத்துவதற்கான திட்டம் ஏற்படுத்தப்பட்டு, அதற்குரிய அட்டவணையும் தயாரிக்கப்பட்டு, பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டமையை, 'தவறாக வெளியிடப்பட்டது' என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. மாறாக, அது வெளியிடப்பட்ட பின்னர், அதை மீளப்பெற்றுக் கொள்வதற்கான முடிவு எடுக்கப்பட்டது என்பது தான் சரியாகும், உண்மையாகும்.

இச்சம்பவம் இடம்பெற்ற பின்னரே, இங்கு என்ன நடந்தது என்பதை ஊகிக்கக்கூடியதாக இருந்தது. பல்வேறு காரணங்களுக்காக, மின்வெட்டொன்றை அமுல்படுத்துவதற்காக மின்சார சபை முடிவெடுத்து, நேர அட்டவணையொன்றை வெளியிட, அது அரசாங்கத்துக்கு எதிரானதாக மாறிவிடும் என அஞ்சிய உயர்மட்ட அரசியல் தலைவர்கள், அதை மீளப்பெற்றுக் கொள்ளுமாறு பணிப்புரை விடுத்தனர். மின்சார சக்தி போன்ற அத்தியாவசியத் துறையில், எதற்காக அரசாங்கத் தலையீடு காணப்படுகிறது என்பது முதலாவதாக எழும் கேள்வியாக இருந்தாலும், இந்நிலைமை தொடர்பாக அரசாங்கத் தரப்பு அளித்துள்ள பதில், இன்னமும் கேள்விகளை எழுப்புகிறது.

கருத்துத் தெரிவித்துள்ள மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா, 'நாட்டில், மின்வெட்டு என்ற பேச்சுக்கு இடமில்லை. 24 மணிநேரமும் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்கப்படும். மின்சாரத்தைத் தொடர்ச்சியாக வழங்க முடியாது, மின்வெட்டை அமுல்படுத்த வேண்டுமென அதிகாரிகளும் பொறியியலாளர்களும் ஆலோசனைகளை வழங்கினர். இதில் உண்மையுள்ளது, மறுப்பதற்கில்லை. ஆனால், மக்களுக்கான மின்சாரத்தைத் தடையின்றி வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்' எனத் தெரிவித்துள்ளார்.

அவரது இந்தக் கருத்து, மின்சார சபையினால் வெளியிடப்பட்ட மின்வெட்டு நேர அட்டவணையில், அரசாங்கம் தலையிட்டது என்பதை உறுதிப்படுத்துவது மாத்திரமன்றி, நிபுணர்களின் கருத்தையும் மீறி, இது தொடர்பான அரசியல் முடிவொன்று எடுக்கப்பட்டுள்ளதையும் உறுதிப்படுத்தியுள்ளது.

மக்களைப் பொறுத்தவரை, உடனடியாக மின்வெட்டு ஏற்படாது என்பது மகிழ்ச்சிகரமான செய்தியாக இருந்தாலும், இதற்குள் காணப்படும் ஆபத்தென்பது, யோசிக்க வேண்டியதொன்றாகும்.

இவ்விடயத்தை இலகுவாக விளங்கிக்கொள்ள, நீங்கள் பசுவொன்றை உரிமைப்படுத்தியிருப்பதாக எண்ணுங்கள். அந்தப் பசுவிலிருந்து பாலைப் பெற்றுக் கொள்ளவும் அதைப் பராமரிக்கவும், அனுபவமிக்க பராமரிப்பாளர் ஒருவரைப் பணிக்கமர்த்தியிருக்கிறீர்கள். தினமும் காலையும் மாலையும், உங்களுக்குப் பால் கிடைக்கிறது. ஆனால், சில காரணங்களைக் கருத்திற்கொண்ட அந்தப் பராமரிப்பாளர், பசு தரும் பாலின் அளவு குறைந்து வருகிறது. இனிமேல் அதிலிருந்து எடுக்கப்படும் பாலின் அளவைக் குறைக்க வேண்டுமென முடிவெடுக்கிறார். ஆனால், பசுவின் உரிமையாளர் என்ற வகையில், அந்த முடிவை மாற்றி, பால் எடுக்கப்படுவதில் மாற்றங்களெவையும் ஏற்படுத்தப்படக்கூடாது எனப் பணிக்கிறீர்கள். வேறு வழியின்றி, உங்கள் உத்தரவையே அவர் பின்பற்றுகிறார்.

நீங்கள் நினைத்தபடி, சிறிது காலத்துக்கு, தடையேதுமின்றி, உங்களுக்குப் பால் கிடைக்கும். ஆனால், எவ்வளவு காலத்துக்கு இது நடக்கக்கூடும்? பசுவின் உடலாரோக்கியம் சிறப்பாக இருக்குமா?

இதே தர்க்கத்தை, இப்போது மின்சார விடயத்திலும் பொருத்திப் பார்க்க வேண்டும்.

நாட்டில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள வறள் நிலை காரணமாக, நீர்நிலைகள் வற்றிப் போயுள்ளன. நீர்வீழ்ச்சிகளும் போதியளவு நீரைக் கொண்டு காணப்படவில்லை. எனவே, நீர் மூலமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் அளவு, குறைந்து கொண்டே செல்கிறது. இலங்கையின் அனல் மின்நிலையங்களில் (நிலக்கரி உட்பட) அண்மைக்காலமாக பழுதுகள் ஏற்பட்ட நிலையில், அவற்றை முழுவதுமாகத் திருத்த வேண்டிய தேவையுள்ளது. தவிர, மின்நிலையங்களில் ஏற்பட்ட தீ, மின்நிலையங்களைப் பராமரிப்பதில் ஏற்பட்டுள்ள சில சிக்கல் என்பன, தெளிவாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் காரணமாக, நாட்டின் நுகர்வுக்குத் தேவையானளவு மின்சாரத்தை, இலங்கை மின்சார சபையால் வழங்க முடியுமா என்ற கேள்வி காணப்படுகிறது. எனவே தான், மின்வெட்டை சில காலத்துக்கு அமுல்படுத்துவதன் ஊடாக, நுகர்வுக்கும் உற்பத்திக்குமிடையிலான சமநிலையை ஏற்படுத்துவதற்கு, மின்சார சபையிலுள்ள நிபுணர்கள் முடிவெடுத்தனர். இந்த முடிவு, பசுவின் பால் தொடர்பாக, அந்தப் பராமரிப்பாளர் எடுத்த முடிவு போன்றது.

ஏற்கெனவே பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அழுத்தத்தைச் சந்தித்துவரும் அரசாங்கம், அவ்வாறு மின்வெட்டு ஏற்பட்டால், மேலும் அழுத்தத்தைiயும் எதிர்ப்பையும் சந்திக்க வேண்டியேற்படும் என எண்ணிய அரசாங்கம், அந்த முடிவை நிறுத்தியிருக்கிறது. இது, பசுவின் உரிமையாளர் எடுத்த முடிவு போன்றது. தொடர்ந்தும் பால் கிடைப்பதைப் போல, மின்சாரமும் 24 மணிநேரம் கிடைக்கவுள்ளது. ஆனால், எவ்வளவு ஆரோக்கியமானது இது?

வறட்சியானதும் அதிக வெப்பநிலை அதிகரித்ததுமான சூழல் அதிகரிக்க, இலங்கையின் மின் நுகர்வு அதிகரிக்கும். இலங்கையில் பண்டிகைக்காலம் நெருங்கிவருவதன் காரணமாக, அலங்கார விளக்குகளால், மின் பாவனை மேலும் அதிகரிக்கவுள்ளது. உண்மையில், இம்மாதம் மின் செயலிழப்பு ஏற்பட்ட போது காணப்பட்ட மின் நுகர்வை விட, ஏப்ரல் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் காணப்படவுள்ள மின் நுகர்வு, மிக அதிகமாகக் காணப்படுமென்பது, வெளிப்படையானது. சிந்திக்கும் திறனையுடைய எவராலும், அதைப் புரிந்துகொள்ள முடியும். ஆகவே தான், இலங்கையின் மின்சாரக் கட்டமைப்புகள் சரியாக்கப்படும் வரை, அவ்வாறான மின்வெட்டொன்று தேவையானது என, மின்சார சபை முடிவெடுத்தது.

தற்போது, அரசியல் காரணங்களுக்காக அந்த முடிவு மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில், மாற்று வழிகளைச் செய்ய வேண்டிய நிலைக்கு, அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது. புதிதாக ஜெனரேட்டர்களை இறக்குமதி செய்யவுள்ளதாகவும் அதற்கான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. ஆனால், எவ்வளவு விரைவாக இது நடைபெறுமென்பது ஒரு கேள்வியாக இருக்கிறது. அதிவிரைவாக நடைபெறுமாயின், உரிய நடைமுறைகளைப் பயன்படுத்தி, குறித்த ஜெனரேட்டர்களின் கொள்வனவு இடம்பெறுமா என்பது, அடுத்த கேள்வியாக இருக்கிறது.

ஆனால், இவையெல்லாவற்றையும் தாண்டி, குறித்த நேரத்தில், மின்வெட்டுக்கு மாற்றான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லையென்றால், மற்றொரு மின் செயலிழப்புக்கே நாடு தள்ளப்படுமென்பது திண்ணம்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .