2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அடுத்து ஜனாதிபதித் தேர்தல்?

Editorial   / 2023 ஏப்ரல் 10 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

  அடுத்து ஜனாதிபதித் தேர்தல்?

என்.கே.அஷோக்பரன் Twitter: @nkashokbharan

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்து நடாத்து என்று கதறிக்கொண்டிருந்த எதிர்க்கட்சிகளெல்லாம், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான நீட்டிக்கப்பட்ட நிதி வசதியை அங்கீகரித்ததன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பற்றிப் பேசுவதைக் குறைத்துக்கொண்டன.

இலங்கையின் பெற்றோலியச் சந்தைக்குள் போட்டியை ஊக்குவிப்பதற்காக ஏனைய போட்டியாளர்களை உள்ளீர்க்க அமைச்சரவை எடுத்துக்கொண்ட தீர்மானத்தினை எதிர்த்து, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்கள் முன்னெடுத்த வேலைநிறுத்தமும் படுதோல்வியில் முடிந்திருக்கிறது.

எரிபொருள் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டது. எரிவாயு விலையும் ஆயிரம் ரூபாயால் குறைக்கப்பட்டது. தொடர்ந்தும் விலைவாசி கொஞ்சம் குறையும் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே உருவாகியுள்ளது. தான் ஏற்ற பணியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ குறிப்பிடத்தக்க அளவு நிறைவேற்றியுள்ளார் என்ற நம்பிக்கை பொதுமக்களிடம் துளிர்விடத் தொடங்கியிருக்கிறது. அதனாலோ என்னவோ ஒரு மாதம் முன்புவரை கூட, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்து நடாத்து என்று தலைகீழாக நின்ற எதிர்க்கட்சிகள் தற்போது கள்ள மௌனம் சாதிக்கின்றன.

அரசியல் யதார்த்தம் அவர்களுக்கும் விளங்கியிருக்கும். அதுபோல, ரணில் விக்ரமசிங்ஹ என்ற அரசியல் சாணக்கியன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்துவதில் அக்கறையற்றிருந்ததற்கும், ஐ.எம்.எஃப் உதவி கிடைத்தபின் களநிலவரங்கள் மாறும் என்ற கணிப்பும் முக்கியமானதாக இருந்திருக்கும். தற்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ பக்கமாகக் காற்றடிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், சஜித் பிரேமதாஸ பக்கத்திலுள்ள பலரும் ரணில் விக்ரமசிங்ஹ பக்கம் தாவுவதற்கு சமயம் பார்த்துக்கொண்டிருப்பதான கருத்துக்கள் பரவலாகப் பதியப்படுகின்றன.

இலங்கை அரசியலில் கட்சி தாவுதல் என்பது, குரங்கு கொப்பு விட்டு கொப்பு தாவுவதைப் போன்றது. ஆகவே சமகி ஜன பல வேகயவினர், சஜித் என்ற காய்ந்துபோன கொப்பிலிருந்து, ரணில் என்ற ஆலமரத்திற்கு தாவ விரும்புகிறார்கள் என்ற செய்தியில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. ஆனால் அந்தத் தாவலும், ஆதரவும் இந்த சந்தர்ப்பத்தில் ரணில் விக்ரமசிங்ஹவிற்குத் தேவையா என்பதுதான் முக்கிய கேள்வி.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹவைப் பொறுத்தவரையில், பொருளாதார மீட்சித் திட்டங்கள்தான் முன்னுரிமையுடைய தேவையாக இருக்கின்றன என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். அதன்படி, அந்தத் திட்டங்களுக்கு உயிர் கொடுப்பதற்கு தேவையான பாராளுமன்றப் பெரும்பான்மை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுணவின் ஆதரவில் ஜனாதிபதி ரணிலுக்கு உண்டு. ஆகவே அதற்காக சமகி ஜன பலவேகய ஆட்களை பதவிகொடுத்து கட்சிதாவச் செய்ய வேண்டிய அத்தியாவசிய நிலையில் அவர் இல்லை.

ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியை மீட்டெடுக்க வேண்டும் என்ற அவருடைய தனிப்பட்ட விருப்பத்திற்கு, ஐ.தே.க-விலிருந்து விலகியவர்களை மீண்டும் கொண்டு வருவது பற்றி அவர் யோசிக்க வேண்டியதாக இருக்கிறது. அவர் ஐ.தே.க-விலிருந்து தன்னை தற்போது சற்றே தூரமாக வைத்திருந்தாலும், அவர்தான் இன்னமும் ஐ.தே.க தலைவர்.

இந்த இடத்தில் தான் அடுத்த தேர்தல் பற்றிய கேள்வி எழுகிறது. ஜனாதிபதியால் தற்போது பாராளுமன்றத்தைக் கலைத்து பாராளுமன்றத் தேர்தலை நடத்த முடியும், அல்லது ஜனாதிபதித் தேர்தலுக்குப் போக முடியும். இதில் எதை ஜனாதிபதி ரணில் செய்யப்போகிறார் என்பதுதான் இப்போதுள்ள கேள்வி. ஜனாதிபதி ரணில் ஆதரவளிக்கும் கட்சி அல்லது தரப்பின் வேட்பாளர்கள் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறுவதைவிட, ஜனாதிபதித் தேர்தலொன்று தற்போது நடந்தால் ரணில் விக்ரமசிங்ஹ வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.

தற்போதைய சூழலின் கீழ், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுண ஜனாதிபதி ரணிலை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிக்கும் என்று தெரிகிறது. அப்படியானால் அவர்கள் ஒரு போட்டியாளரை நிறுத்தப் போவதில்லை. சஜித் பிரேமதாஸ, ரணில் விக்ரமசிங்ஹவை எதிர்த்து இன்றைய சூழலில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாரா என்பது கேள்விக்குறியே. ஓரளவேனும் தந்திரோபாயமாகச் சிந்தித்தால் அவர் அதனை தவிர்ப்பார். ஆனால் உணர்வுவசப்பட்டுச் சிந்தித்தால், அவர் போட்டியிடக் கூடும். மறுபுறத்தில், ஜே.வி.பி தனது தற்போதைய முகமூடியான என்.பி.பி-யின் கீழ் அநுரகுமார திசாநாயக்க போட்டியிடக் கூடும், அதுபோல “ஹெலிகொப்டரில்” மைத்திரி பாலவோ, டளஸோ போட்டியிடக்கூடும்.

இந்தக் களத்தில் எதிர்த்தரப்பு பிளவடைந்திருக்கிறது. அவர்களிடையே ஒற்றுமையை உருவாக்குவது என்பது மிகக்கடினமான காரியம். ரணில் விக்ரமசிங்ஹ என்ற அரசியல் சாணக்கியன் இருந்ததால் தான் 2015-ல் எதிர்க்கட்சியின் பிரதான வேட்பாளர் என்ற திரண்ட ஆதரவுத்தளத்தில் போட்டியிட்டு மைத்திரி பாலவினால், மஹிந்தவை எதிர்த்து வென்று ஜனாதிபதியாக முடிந்தது.

ஒருவேளை அந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பிரிந்து நின்றிருந்தால், அந்த வெற்றி சாத்தியமாகியிருக்காது. இதில் ஜே.வி.பி-கூட தன்னுடைய வேட்பாளரை இறக்காது, கூட்டணிக்கு வௌியில் நின்று மைத்திரி பாலவை ஆதரித்திருந்தது. இன்றைய சூழலில் இதுபோன்றதொரு பொதுவேட்பாளர் இறக்கப்பட்டு, அவரை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரிக்குமா என்பது கேள்விக்குறியே!

சஜித் போட்டியிட்டால், அவரை கூட ஆதரிக்குமா என்பதும் கேள்விக்குறியே. அல்லது வேறு ஒருவர் பொதுவேட்பாளராகும் போது, அவரை வெல்ல வைக்க சஜித் ஆதரிப்பாரா என்பதும் கேள்விக்குறியே! ஆகவே இந்தக் கணக்குகளைக் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹவைப் பொறுத்தவரையில் அடுத்து பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதைவிட, ஜனாதிபதித் தேர்தலுக்குச் செல்வதுதான் ஒப்பீட்டளவில் சாதகமானதான இருக்கும்.

இதைச் செல்வதால், ஜனாதிபதித் தேர்தலில் ரணிலின் வெற்றி உறுதி என்று சொல்வதாக அர்த்தமில்லை. ஒருவேளை எதிர்க்கட்சிகள் ஒன்றுதிரண்டு ஒரு பொதுவேட்பாளரை ஆதரித்தால் அது சாத்தியம். இன்றைய எதிர்க்கட்சிகளின் இயக்குகரமாக இருக்கும் வௌிநாட்டு தூதுவராலய சக்திகளின் அழுத்தத்தின் பெயரில் அப்படியொரு தேர்தல் கூட்டு சாத்தியமானாலும் அதிசயமில்லை. அப்படியொரு நிலையின் கீழ் ஒரு “தரமான” பொதுவேட்பாளர் இறக்கப்பட்டால், ரணில் விக்ரமசிங்ஹ கணிசமான சவாலை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

இந்த இடத்தில்தான் மறுபடியும், இலங்கையின் சிறுபான்மையினரின் வாக்குகள் முக்கியத்துவம் மிக்கனவாக மாறுகின்றன. சிறுபான்மையினர் ரணிலை ஆதரிப்பார்கள் என்ற எடுகோள், இம்முறை கொஞ்சம் சவாலுக்குட்படும்! ஏனென்றால் இம்முறை ரணிலை, ராஜபக்‌ஷக்கள் எதிர்க்கவில்லை, ஆதரிக்கிறார்கள். ராஜபக்‌ஷக்கள் எங்கு இருக்கிறார்களோ, அங்கு சிறுபான்மையினரின் வாக்குகள் இருப்பதில்லை என்பதுதான் இலங்கை தேர்தல் நியதி! ஆகவே இந்த விடயத்தில் சிறுபான்மையினருக்கு நம்பிக்கையளிக்க வேண்டிய கட்டாயத்தில் ஜனாதிபதி ரணில் இருக்கிறார்.

அது அவ்வளவு இலகுவானாதாக இருக்கப் போவதில்லை. 2023 பெப்ரவரி 4, சுதந்திர தினத்திற்கு முன் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கு என்று சொன்னவர் ரணில் விக்ரமசிங்ஹ, ஆனால் பெப்ரவரி போய், மார்ச் போய், ஏப்ரலும் வந்துவிட்டது, ஆனால் தீர்வு பற்றியோ, ஏன், குறைந்தபட்சம் 13ம் திருத்தத்தின் முழுமையான அமுல்ப்படுத்தல் பற்றியோ எந்தக் கதையுமே இல்லை. மறுபுறத்தில், தொல்பொருள்திணைக்களமென்ற பெயரில் பேரினவாத சக்திகளின் அட்டகாசம் வடக்கு-கிழக்கில் தமிழ் மக்களின் அடையாளங்களைச் சிதைத்துக்கொண்டிருப்பதை தமிழ் மக்கள் சினத்தோடும், கடும் விசனத்தோடும் எதிர்கொள்கிறார்கள். இதுவெல்லாம் சிறுபான்மையினர் வாக்குகளை அந்நியமாக்கும் என்பதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ விரைவில் புரிந்துகொள்வது நல்லது.

இல்லையென்றால், 2005 மீண்டும் நடக்கலாம். ஆகவே ஜனாதிபதி ரணில் இதுபற்றியும் கரிசனம் கொள்வது அவசியம். தமிழ் அரசியல் கட்சிகள், இந்த முறை பலமான பேரமொன்றில் ஜனாதிபதி ரணிலுடன் ஈடுபட வேண்டியது அவசியம். நூறு கோடி ரூபாய்க்கான பேரமல்ல. மாறாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பான பேரத்தில் ஈடுபட வேண்டும். ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பே சில உறுதிமொழிகளை மட்டுமல்ல, சில நிபந்தனைகளையும் நிறைவேற்றிக்கொண்டபின் ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

2024ன் இறுதிப்பகுதியில் நடக்க வேண்டிய ஜனாதிபதித் தேர்தல், 2024ன் ஆரம்பப் பகுதியில், அல்லது நடுப்பகுதியில் நடக்கலாம் என்பதுதான் இப்போதைய எதிர்பார்ப்பு. ஜனாதிபதித் தேர்தல் முடிந்த கையோடு அடுத்த சில மாதங்களில் பாராளுமன்றத் தேர்தலும் நடத்தப்படலாம். எது எவ்வாறாயினும், 2024-2025 தேர்தல் ஆண்டுகளாகவே இருக்கப் போகின்றன. அதற்கான முஸ்தீபுகள் ஆரம்பமாகிவிட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X