2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

அதிகாரத்தின் பலப்பரீட்சை

Editorial   / 2023 ஒக்டோபர் 26 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

லக்ஸ்மன்

இஸ்ரேல் - பலஸ்தீன யுத்தத்தினை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை உலகளவில் வலுத்துவரும் நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இலங்கையின் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட போர் செய்து கொண்டிருக்கும் அந்த இரு நாடுகளிடமும் உலக நாடுகளிடமும் யுத்தத்தினை நிறுத்தும்படியான கோரிக்கை முன்வைக்கும் முகமான விசேட ஒத்திவைப்புப் பிரேரணை கேள்விக்குட்படுத்தப்பட்டது.

பாராளுமன்றத்துக்கு வெளியே இப்போதும் கேள்விக்குட்படுத்தப்பட்டு வருகிறது. சொந்த நாட்டு மக்கள் மீதே யுத்தம் தொடுத்து இன அழிப்பைச் செய்த இலங்கைக்கு இதற்கு அருகதை இருக்கிறதா என்பதே அக்கேள்வியாகும்.

அதிகாரத்துவத்துக்கானதாக, மத்திய கிழக்கிலே இஸ்‌ரேல் - பாலஸ்தீனத்துக்கிடையில் கடந்த ஒரு வாரத்தித்திற்கும் மேலாகக் கடுமையான யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த யுத்தமானது இரு நாடுகளுக்கிடையில் நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகிக்கொண்டிருக்கின்றன என்பது நோக்கப்படவேண்டியது.

மட்டக்களப்பில் ஊடக சந்திப்பொன்றை கடந்த வாரத்தில் நடத்திய பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் 2009இல் முள்ளிவாய்க்காலில் சொந்த நாட்டு மக்களையே கொத்துக் குண்டுகள், பொஸ்பரஸ் குண்டுகள், வான்வழித் தாக்குதல்கள் மூலம் பலியெடுத்த இலங்கை அரசு இஸ்‌ரேல்-பாலத்தீனம் ஆகிய இரண்டு நாடுகள் போர் புரிகையில் மக்களின் உயிர்கள் மீது அக்கறை கொள்வதற்கு அருகதையற்றது. தார்ப்பரியம் மற்றும் யோக்கியதைகளுக்குத் தகுதியற்றது.

அன்று முள்ளிவாய்க்காலில் நடைபெறாத விடயமா இன்று மத்திய கிழக்கிலே நடைபெறுகின்றது எனக் கேள்வியெழுப்பியிருந்தார்.

இது இவ்வாறிருக்க, இலங்கை மீதான குற்றச்சாட்டுக்களை சனல் 4 ஆராயப்படுவதற்காக விவாதங்கள் நடைபெறுகின்றன. எதிர்க்கட்சி தன் பங்கிற்கு அனைத்து விடயங்களிலும் குற்றச்சாட்டுக்களைக் குவித்துக் கொண்டிருக்கிறது.

அவர்களுடைய குற்றச்சாட்டுக்களில் முக்கியமாக தேர்தல் போட்டியின் மூலம் அல்லாமல் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ நாட்டைவிட்டுத் தப்பிச் சென்றதையடுத்து பாராளுமன்றத்தின் மூலமாகப் பதவிக்கு வந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது ஆட்சிக்காலத்தினை தேர்தல் மூலமாக அல்லாமல், பாராளுமன்றத்தின் மூலம் தேர்தல் முறை மாற்றம் ஊடாக நீட்டித்துக் கொள்ள முயல்கிறார்.

சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற  ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய மகாநாட்டில் பேசிய ஜனாதிபதி, அடுத்த வருடத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும், அதனைத் தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தல், சாத்தியப்படுமானால் 2025ஆம் ஆண்டின் முற்பகுதியில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

அந்த வகையில், எதிர்க்கட்சியின் தேர்தல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் வலுவற்றதாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் ஜனாதிபதி குறிப்பிட்டபடி தேர்தல்கள் நடைபெறுமா என்பது கேள்விக்கானதே.

கடந்த 14 வருடங்களுக்கு முன்னர் 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி விடுதலைப் புலிகளுடனான யுத்தம் மௌனிக்கப்பட்டாலும் இன்னமும் இனப் பிரச்சினைக்கான தீர்வை இலங்கை அரசாங்கம் முன்வைக்கவில்லை.

ஐக்கிய நாடுகள் சபையிலும், அதன் மனித உரிமைப் பேரவையிலும் கொண்டுவரப்படும் பிரேரணைகள் இலங்கை அரசாங்கத்தால் மறுதலிக்கப்படுவதும் அனுசரணை வழங்கிவிட்டு அதிலிருந்து வெளியேறுவதும் நடைபெறுகின்றன.

தமிழர் தரப்பு அரசியல்வாதிகள் நாட்டுக்கு விஜயம் செய்கின்ற வெளிநாட்டுத் தலைவர்களிடம், நாட்டிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களிடமும் முன்வைப்புக்களையும் விளக்கங்களையும் கொடுத்துக் கொண்டிருந்தாலும், இந்தியாவின் 13ஆவது திருதத்தினை முழுமையாக அமுல்படுத்துதல் தொடர்பில் கொடுக்கப்படும் அழுத்தங்கள் கணக்கிலெடுக்கப்படவுமில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் இஸ்‌ரேல் - பலஸ்தீன போர் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென வலியுறுத்தி நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாகத்தில் பேசுகையில்,  வன்னியில் நடைபெற்ற போருடன் பலஸ்த்தீனத்தின் காசாவில் நடைபெற்றுவரும் போரை ஒப்பிடுவது தவறு.

ஹமாஸ் அமைப்பை எதிர்க்கும் அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இலங்கை போரில் புலிகள் பக்கமே நின்றன.  ஐ.நா.வில் அந்த யோசனை ஏற்கப்படவில்லை. இஸ்‌ரேல் பக்கம் நிற்கும் மேற்குலகமே இலங்கை மீது போர்க்குற்றங்களை சுமத்திவருகின்றன என்று கூறியிருக்கிறார்.

தமிழர்கள் ஒற்றை ஆட்சியை எதிர்த்து வருகின்ற நிலையில், இலங்கை 2,500 ஆண்டுகளாக ஒற்றாட்சி நாடாகவே இருந்து வருகின்றது. இதற்காக எமது மூதாதையர்கள் உயிர்த் தியாகம் கூடச் செய்துள்ளனர். எமது நாட்டை இரண்டாக்குவதற்காகவே புலிகள் போரிட்டனர்.

அந்த போரை நாம் முடிவுக்குக் கொண்டுவந்தோம் என்ற கருத்தையும் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வெளியிட்டிருக்கிறார். அவருக்கு இலங்கையின் இராட்சிய, இராசதானி ஆட்சிமுறைகள் பற்றித் தெரியாமலிருக்க வாய்ப்பிருக்கிறது என்று பதில் கூற முடியும்.

மிகத் தீவிரமான பௌத்த மதவாதத்துடனும். சிங்கள இனவாதத்துடனும் செயற்பட்டு வருகின்ற அடிப்படைவாதிகள் தமிழர்களது பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் வகையிலான முன் முயற்சிகள், குடியேற்ற எண்ணத்துடனான செயற்பாடுகளிலும் வடக்கு கிழக்கில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்குக் கிழக்கின் மட்டக்களப்பு- மயிலத்தமடு, மாதவணை பிரதேசங்களில் வடக்கு, கிழக்கில் யுத்தம் மௌனிக்கப்பட்ட 2009ஆம் ஆண்டு முதல் நடைபெறுகின்ற நெருக்குதல்களை ஒரு நீண்ட கால முயற்சியாகக் குறிப்பிட முடியும்.

மயிலத்தமடு, மாதவணை பிரதேசங்களில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுவருகின்ற பண்ணையாளர்கள்  கடந்த 37 நாட்களாக மட்டக்களப்பு- சித்தாண்டியில் சுழற்சி முறையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 8ஆம் திகதி மட்டக்களப்புக்கு வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பண்ணையாளர்களைச் சந்தித்ததுடன், அதற்கு சில தினங்களின் பின்னர் அது தொடர்பான கூட்டமொன்றை ஜனாதிபதி செயலகத்தில் நடத்தியிருந்தார்.

அக் கூட்டத்தில் அம்பாறை, பொலன்னறுவை மாவட்டங்களிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் மேய்ச்சல்தரைப் பிரதேசங்களில் சேனைப் பயிச்செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு, அவர்களுடைய மாவட்டங்களிலேயே நிலங்களை ஒதுக்க நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்திருந்தார்.

அனால், அது நடைபெற்ற மறுநாள் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அனுராதா ஜகம்பத், மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் அடங்கிய குழுவினர் மதச் சடங்கு சம்பிரதாயங்களுடன் புத்தர் சிலையை குறிப்பிட்ட பிரதேசத்தில் நிறுவி விகாரையை அங்குரார்ப்பணம் செய்திருந்தனர்.

அச்சிலை மறுநாள் அடையாளம் தெரியாதோரால் அகற்றப்பட்டிருந்ததும் அதன் பின்னர் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் அங்கு சென்று பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினருடன் முரண்பட்டதும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியா மீது குற்றம்சாட்டியதும் வேறு ஒரு கதை.

(மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் மயிலத்தமடு, மாதவணை மேய்ச்சல்தரையில் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடைபெற்ற அத்துமீறல் பிரச்சினைகளில் இதுவரை சம்பந்தப்பட்டதில்லை.

ஆனால், தற்போதைய நிலையில் அவர் ஏன் இதற்குள் மூக்கை நுழைக்கிறார் என்று ஆராய்ந்து பார்க்கின்றவேளையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவருக்கு ஏற்பட்ட அவமானகரமான பிரச்சினைகளை மறைப்பதற்காக இதற்குள் உள் நுழைகிறாரோ என்று சந்தேகிக்கவும் தோன்றுகிறது.)

இச்செயற்பாடானது தம்முடைய மாவட்டங்களில் தேவைக்கு அதிகமாக நிலம் இருக்கின்ற நிலையில், ஏன் தமிழர்களது பகுதிகளுக்குள் சிங்களவர்கள் அத்துமீறி அடாவடிகளைச் செய்ய முயற்சிக்கிறார்கள் என்பதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாகும்.

தொடர்ச்சியாகத் தமிழர் தரப்பால் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் வெறுமனே எதுவும் நடைபெறாமல் வெளிவரவில்லை என்பதற்கு வீணான பிரச்சினைகளைத் தமிழர்கள் உருவாக்க முயலவில்லை என்பதற்கும் கூட இது நல்ல உதாரணமாகும். 

இது ஜனாதிபதிக்கும் அவருடைய வாக்குறுதிக்கும் இருக்கின்ற அதிகாரத்தினைக் கேள்விக்குட்படுத்தியிருக்கிறது. அத்துடன் கடந்த காலங்களிலும் ஆட்சியிலிருந்த தலைவர்களது வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றமைக்கும் இதனைச் சுட்டிக்காட்டமுடியும்.
அந்த வகையில் தமிழர்கள் இலங்கை நாட்டில் இல்லாத ஒன்றையோ சிங்கள மக்களுடைய உரிமைகளையோ, அதிகாரங்களையோ கேட்டு நிற்கவில்லை.

தமிழர்களுடைய விடுதலைப் போராட்டமானது இனப்பிரச்சினைக்கான தீர்வுக் கோரிக்கை தோற்றம் பெற்றவுடனேயே உருவெடுத்ததுபோன்று தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தினை ஆரம்பம் முதலே கையிலெடுத்துக் கொண்டதாகவும் காண்பிக்கவே பெரும்பான்மை அடிப்படைவாதிகள் முயற்சித்துவருகின்றனர்.

இருக்கின்ற ஒன்றை இல்லையென்று சொல்வதும் இல்லாத ஒன்றை இருப்பதாகக் காண்பிக்க முயல்வதும் ஏன் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் அதிகாரத்துவத்தின் அடிப்படைத்தன்மை அதுவே. ஆனாலும் அதிகாரம் என்பது பங்குபற்றலும், பங்கிடுதலும் எனப் பல விடயங்களை உள்ளடக்கியது என்பதனை எல்லோரும் மறந்து விடுகின்றனர் என்பதே கவலைக்குரியது.

2023.10.23


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X