2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

அரசியல்வாதிகளுக்கான ஒழுக்கக் கோவைகள் நடைமுறைச் சாத்தியமற்றவை

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2020 ஜூன் 10 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல்களில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள், வேட்பாளர்களுக்கான நடத்தைக் கோவையொன்றை (Code of conduct) தேர்தல் ஆணைக்குழு, வர்த்தமானி மூலம் புதன்கிழமை (03) வெளியிட்டுள்ளது. இந்த நடத்தைக் கோவையைப் பின்பற்றக் கூடிய கட்சிகள், இலங்கையில் இருக்கின்றனவா என்பது, பெரும் கேள்விக் குறியாகும்.

வேறுவிதமாகக் கூறுவதாக இருந்தால், இந்த நடத்தைக் கோவை, அனேகமாக அரசியல் கட்சிகளாலும் சுயேட்சை அரசியல்வாதிகளாலும் புறக்கணிக்கப்படும் என்றே தெரிகிறது. ஆனால், எவரும் அதைப் பகிரங்கமாக நிராகரிக்க மாட்டார்கள். ஆயினும், அதில் உள்ள பெரும்பாலான வாசகங்கள், நடைமுறைக்கு வராது. 

இதுவரையும், இந்த நடத்தைக் கோவையில் இருக்கும் சில வாசகங்கள், சட்டங்களாக இருந்து வந்துள்ளன. வழிகாட்டல்களாகவும் தேர்தல் ஆனைக்குழு சிலவற்றை வெளியிட்டு வந்துள்ளது. அவற்றை, எந்தவோர் அரசியல் கட்சியோ, சுயேச்சைக் குழுவோ, எந்தவோர் அரசியல்வாதியோ எதிர்க்கவில்லை. அவர்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள்; ஆதரித்துக் கருத்தும் வெளியிட்டார்கள். ஆனால், நடைமுறையில் அவற்றில் பெரும்பாலானவை நிராகரிக்கப்பட்டன.

உதாரணமாக, வேட்பாளர்களுக்கான சமஉரிமையைப் பாதுகாக்க வேண்டும் எனப் புதிய நடத்தைக் கோவை கூறுகிறது. ஆனால், இது நடைமுறையில் இல்லை. 

அண்மையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, அரசாங்கம் நாடெங்கிலும் ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்தது. இதன் காரணமாக, அன்றாடம் தொழில் செய்பவர்கள், வெகுவாகப் பாதிக்கப்பட்டார்கள். எனவே, அரசாங்கம் அவர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபாய் வழங்கத் தீர்மானித்தது. 

இது, அரசாங்கம், ஏழை மக்களுக்கு வழங்கும் ஒரு நிவாரணமேயன்றி, ஓர் அரசியல் கட்சி வழங்கும் சலுகையல்ல. ஆனால், அனேகமாகப் பல பகுதிகளில், ஆளும் கட்சியான பொதுஜன பெரமுனவின் பிரதேச அமைப்பாளர்களே, நிவாரணம் வழங்கப்பட வேண்டியவர்களின் பட்டியல்களைத் தயாரித்தனர். அக்கட்சியின் அமைப்பாளர்கள், இது, தமது கட்சி வழங்கும் நிவாரணம் என்பதைப் போல் காட்டிக் கொண்டனர். 

நிச்சயமாக, படிப்பறிவு இல்லாத ஏழை மக்களில் சிலரையாவது இது, மானசீகமாகப் பாதித்திருக்கும். கஷ்டமான நேரத்தில், கை கொடுத்தவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று, ஒரு சிலராவது நினைத்திருப்பார்கள். 

மறுபுறத்தில், இது, அரசாங்கப் பணத்தில் அரசியல் இலாபம் தேடும் காரியம் என்று கூறி, எதிர்க்கட்சிகள், அரசியல்வாதிகள் நிவாரணப் பணத்தைக் கையாள்வதை எதிர்த்தனர். 
நிச்சயமாக, அவர்களுக்கு எதிராக மக்கள் மத்தியில், ஒரு தவறான அபிப்பிராயத்தைக் கட்டி எழுப்ப, பொதுஜன பெரமுனவுக்கு இது உதவியிருக்கும். இந்த விடயத்தில், வேட்பாளர்களுக்கிடையே சமத்துவம் பேணப்படவில்லை என்பதையே தெளிவுபடுத்துகின்றது.  

இந்த நிலைமையைத் தவிர்க்க, தேர்தல் ஆணைக்குழுவால் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க முடியவில்லை. ஏப்ரல், மே ஆகிய இரண்டு மாதங்களுக்காக, அரசாங்கம் இந்தப் பணத்தை வழங்கியது. மே மாத நடுப்பகுதியில், பகல் நேர ஊரடங்குச் சட்டம் பல பகுதிகளில் தளர்த்தப்பட்டது. இதைச் சுட்டிக் காட்டிய தேர்தல் ஆணைக்குழு, ஜூன் மாதமும் அப்பணம் வழங்க வேண்டுமா என, அரசாங்கத்திடம் கேட்டது. 

இந்தப் பணக் கொடுப்பனவு, சட்ட விரோதமாக இல்லாவிட்டால், முறைக்கேடாக இல்லாவிட்டால், அதை வழங்க வேண்டுமா, இல்லையா என்று கேட்க, ஆணைக்குழுவுக்கு என்ன உரிமை இருக்கிறது? இதில், முறைக்கேடு இருப்பதாலேயே, ஆணைக்குழு அவ்வாறு கேட்கிறது. ஆனால், முன்னைய இரு மாதங்களின் போது, இடம்பெற்றதாகக் கருதப்படும்  முறைகேடுகளை, ஆணைக்குழுவால் தடுத்துநிறுத்த முடியாமல் போயிற்று. 

ஆணைக்குழு இவ்வாறு கேள்வி எழுப்பும் போது, அரசாங்கமும் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியிருந்தது. எனவே, ஜனாதிபதியின் செயலாளர், மே மாதத்தின் சம்பளத்தை, அரசாங்கத்துக்கு நன்கொடையாக வழங்குமாறு, அரச ஊழியர்களிடம் கேட்டுக் கொண்டார். இந்த நிலையில், தேர்தல் ஆணைக்குழு எதிர்ப்பதாகக் கூறி, ஜூன் மாதத்துக்கான கொடுப்பனவை அரசாங்கம் நிறுத்தியது. 

'இலங்கைப் பிரஜைகளின் எதிர்கால மேம்பாட்டுக்காகத் தம்மை அர்ப்பணிக்கக் கூடியவர்களை, வேட்பாளர்களாகத் தெரிவு செய்ய வேண்டும்' எனத் தேர்தல் ஆணைக்குழு, இந்த நடத்தைக் கோவை முலம், அரசியல் கட்சிகளுக்கும் சுயேட்சைக் குழுக்களுக்கும் கூறுகிறது. இது, மிகவும் முக்கியமானதும் சிறப்பானதுமான ஆலோசனையாகும். 

இந்த ஆலோசனை, வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டு, இரண்டரை மாதங்களுக்குப் பின்னர், வழங்குவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? எந்தக் கட்சியாவது, இந்த ஆலோசனைப்படி நடந்து கொள்கிறதா? 

2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கி, மஹிந்த ராஜபக்ஷவை அந்தப் பதவிக்கு நியமித்தார். அதன் பின்னர், நாடாளுமன்றத்தைக் கலைத்தார். இது, சட்ட விரோதமானது என, உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

அந்நாள்களில், நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கலவரங்களின் போது, பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடே பார்த்துக் கொண்டு இருக்கும் போது, சபையின் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தனர். ஏனைய உறுப்பினர்கள் மீது, மிளகாய்த் தூள் கலந்த தண்ணீரைத் தெளித்தனர். இவர்கள் அனைவரும், இம் முறை தேர்தலில் போட்டியிடுகின்றனர். 

மறுபுறத்தில், மத்திய வங்கி பிணைமுறி மோசடி, அரசியல்வாதிகளின் ஒத்துழைப்புடனேயே இடம்பெற்றிருக்கிறது என்பது, இப்போது தெளிவாகியிருக்கிறது. அந்த மோசடிக்காரர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்தவர்கள் அனைவரும், ரணில் விக்கிரமசிங்க தலைமையில், ஐக்கிய தேசிய கட்சி சார்பிலும் சஜித் பிரேமதாஸ தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பிலும் வேட்பு மனுத் தாக்கல் செய்திருக்கின்றனர். 

இலங்கையில் பெரும்பாலான அரசியல்வாதிகள், பெரும் செல்வந்தர்களாகவே இருக்கின்றனர். ஆனால், அவர்களிலும் பெரும்பாலானவர்கள், முதன் முதலாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகும் போது, அவ்வாறு இருக்கவில்லை. ஆரம்பத்தில், மோட்டார் சைக்கிளில் நாடாளுமன்றத்துக்கு வந்தவர்களும், ஒரு காலத்தில் மற்றோர் அரசியல்வாதியின் சாரதியாக இருந்தவர்களும் அரசியலில் ஈடுபட்டு, பிற்காலத்தில் பெரும் கோடீஸ்வரர்களாக மாறியிருக்கின்றனர். இதுதான், இலங்கையில் பெரும்பாலான அரசியல்வாதிகளின் நோக்கமும் இலட்சியமுமாகும்.

2018ஆம் ஆண்டு இடம்பெற்ற அரசமைப்பு நெருக்கடியின் போது, மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில், தமக்குப் பெரும்பான்மை பலம் இருப்பதாகக் காட்டத் தவிறிவிட்டார். அதைப்பற்றி, அந்நாள்களிலேயே ஒரு பேட்டியின் போது குறிப்பிட்ட அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ''எம்.பிக்களின் விலை, 50 கோடி வரை உயர்ந்தமையாலேயே, மஹிந்தவால் பெரும்பான்மைப் பலத்தைக் காட்ட முடியாமல் போயிற்று" எனக் கூறியிருந்தார்.
அதாவது, மஹிந்த ராஜபக்ஷ, ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, தமக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறது என்று காட்ட முயற்சித்ததாகவும், ஆனால், ஐ.தே.க எம்.பிக்கள் அதற்காகப் பெருந்தொகை பணம் கேட்டதாகவுமே அவர் கூறியிருக்கிறார். அவ்வாறு விலை பேசியவர்களும் விலைபோக இருந்தவர்களும், இம்முறை போட்டியிடுகிறார்கள் என்றே தெரிகிறது. 'இலங்கைப் பிரஜைகளின் எதிர்கால மேம்பாட்டுக்காகத் தம்மை அர்ப்பணிக்கக் கூடியவர்களாக' இவர்களைக் கருத முடியுமா? 

வெறுப்புப் பேச்சு (Hate speech) தொடர்பாக, இந்த நடத்தைக் கோவையில் தனியானதொரு பகுதி இருக்கிறது. அந்தளவுக்குத் தேர்தல் ஆணைக்குழு, இந்த விடயத்துக்கு முக்கியத்துவம் வழங்கியிருக்கிறது. இது நல்ல விடயம்தான். ஆனால், இதை நடைமுறைப்படுத்துவது எவ்வாறு என்பதே, முக்கிய பிரச்சினையாகும்.

எந்தவொரு சமூகத்தையும் எந்தவொரு சமூகக் குழுவையும் அச்சுறுத்தும், பரிகசிக்கும் நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும், இனங்கள், சமயக் குழுக்கள் மத்தியிலான நல்லுறவு, பரஸ்பர நம்பிக்கையைப் பாதிக்கும் வகையிலான ஒரு கருத்தை வெளியிடுவதையோ, ஓர் உருவத்தைக் காண்பிப்பதையோ தவிர்க்க வேண்டும், இனம், சமயம் போன்ற குழுக்களின் நன்மதிப்புக்குப் பங்கம் விளைவிக்கும் அல்லது அதைப் பாதிக்கும் எந்தவொரு கருத்தையும் வெளியிடக் கூடாது, சமயம், இனம், மொழி, சாதி, பால் வேறுபாட்டின் அடிப்படையில், எந்தவொரு நபருக்கோ, குழுவுக்கோ வேற்றுமை காட்டும் வகையிலான கருத்தை வெளியிடுவதையும் நடந்து கொள்வதையும் தவிர்க்க வேண்டும் என, இந்தப் பிரிவு நீண்டு செல்கிறது.  

இது மிகவும் முக்கியமானதாகும். சில அரசியல் கட்சிகளிடம் மக்களைக் கவரும் விதமான எந்தவொரு வேலைத் திட்டமும் இல்லை. அவர்களிடம் வெறுமனே சில வார்த்தை ஜாலங்களும், தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் அல்லது, 1,500 ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என்பதைப் போன்ற, நடைமுறைப்படுத்தவே நினைக்காத சில வாக்குறுதிகள் மட்டுமே இருக்கின்றன. இவ்வாறான கட்சிகள், கடந்த காலத்தில் நடைபெற்ற சகல தேர்தல்களின் போதும் இனவாதத்தைத் தூண்டவே முயன்றன. 

இது நீண்ட காலமாக, நடைபெற்று வரும் விவகாரமாகும். ஒரு காலத்தில், சில பெரும்பான்மையினக் கட்சிகள், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான், மலையகத்தில் 'மலய நாடு' என்ற பெயரில், தனித் தமிழ் நாடொன்றை உருவாக்க, திட்டமிட்டுச் செயற்பட்டு வருவதாகப் பிரசாரம் செய்தனர். 

பின்னர் ஒரு காலத்தில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப், கிழக்கில் 'கிழக்கிஸ்தான்' என்ற பெயரில், தனி முஸ்லிம் நாடொன்றை உருவாக்கச் செயற்பட்டு வருவதாகப் பிரசாரம் செய்தனர். இது போன்ற பிரசாரங்கள், தேர்தல் காலங்களிலேயே அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன.

கடந்த வருடம், உயிர்த்த ஞாயிறு தினத்தில், முஸ்லிம் பயங்கரவாதிகள் சிலர், மூன்று கிறிஸ்தவ தேவாலங்களையும் நட்சத்திர ஹோட்டல்கள் மூன்றையும் தாக்கிய போது, வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலைக் கருத்தில் கொண்டு, பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் ஊடகங்களும் நாட்டில் ஏனைய முஸ்லிம்களுக்கு எதிராக, மிக மோசமான பிரசாரத்தில் ஈடுபட்டன. பின்னர் தேர்தல் காலத்தில், அவர்கள் மற்றொரு திட்டத்தை மனதில் வைத்து, அந்தப் பிரசாரத்தை நிறுத்தினர். அவர்கள் அந்தப் பிரசாரத்தைத் தேர்தல் காலத்தில் தொடர்ந்திருந்தாலும் தேர்தல் ஆணைக்குழுவால் அதைத் தடுத்திருக்க முடியாது. 

இந்த விடயத்தில், தேர்தல் ஆணைக்குழுவின் நோக்கத்தை, எவரும் சந்தேகிக்கத் தேவையில்லை. பிரச்சினை என்னவென்றால், இவற்றை நடைமுறைப்படுத்த ஆணைக்குழுவிடமோ, அரசாங்கத்தின் எந்தவோர் அமைப்பிடமோ, ஒரு பொறிமுறை இல்லாமையாகும். ஓழுக்கக் கோவைகள், நடத்தைக் கோவைகள் சம்பந்தப்பட்டவர்கள், மனம் வைத்து நிறைவேற்றினாலேயொழியச் சட்டத்தால் எதையும் செய்ய முடியாது. 

இதேபோல், 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை முன்னிட்டு, 'பெப்ரல்' எனப்படும் இலங்கையில் செயற்படும் மிகப் பழைய தேர்தல் கண்காணிப்புக் குழுவான, 'சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் இயக்கம், 'மார்ச் 12 இயக்கம்' என்றதோர் இயக்கத்தை ஆரம்பித்தது. அதன் பிரகாரம், தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள், கடைப்பிடிக்க வேண்டிய எட்டு அம்சத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டு, நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளினது தலைவர்களும் அதில் கையெழுத்திட்டனர். 

ஆனால், பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இரத்தினபுரி மாவட்டத்தில் மஹிந்த அணியைச் சேர்ந்த ஒருவர், ஐ.தே.க காரர் ஒருவரைக் கொலை செய்தார். அவ்வாறு இருக்க, அவரை மஹிந்த அணி, பொதுத் தேர்தலில் வேட்பாளராகச் சேர்த்துக் கொண்டது. 

2001ஆம் ஆண்டு முதல், 2004ஆம் ஆண்டு வரை இருந்த ஐ.தே.க ஆட்சிக் காலத்தில், பாரிய ஊழலில் ஈடுபட்ட ஒருவரும் ஐ.தே.க சார்பில் போட்டியிட்டார். 'மாரச் 12 இயக்கம்' அவற்றைத் தடுக்க முடியாமல் போயிற்று. 

அரசியல்வாதிகளுக்குத் தீர்வையின்றி வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி இருக்கிறது. ''அவர்களுக்கு அவ்வாறு, ஏன் வாகனம் வழங்க வேண்டும்'' எனக் கேட்டால், ''மக்களுக்குச் சேவை செய்வதற்காக, அவர்கள், நாட்டின் பல பாகங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது'' என்பார்கள். 
ஆனால், அந்த வாகன அனுமதிப் பத்திரங்களைப் பல கோடி ரூபாய்க்கு விற்றுவிடுகிறார்கள். இது சட்ட விரோதமானது; அநாகரிகமானது. 

விந்தை என்னவென்றல், ''இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க முடியாது'' என, இலஞ்சம் மற்றும் ஊழல்கள் தொடர்பாக விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி விக்கிரமசிங்க ஒரு முறை தெரிவித்திருந்தார். 

தற்போது தேர்தலில் போட்டியிடும் பெரும் எண்ணிக்கையிலான முன்னாள் எம்.பிக்கள், இவ்வாறு மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடித்தவர்களாவர். ஆனால், தேர்தல் ஆணைக்குழுவோ, 'மார்ச் 12 இயக்கமோ' அவர்களுக்கு எதிராக எதையும் செய்ய முடியாது என்பதுவே யதார்த்தம்.
  

 

 


 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .