2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அள்ளிச் செல்லும் ஆர்ப்பாட்டங்கள்

S.Sekar   / 2021 ஜூலை 17 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழிற்சங்கங்கள் தமது உரிமைகளுக்காக குரல் கொடுப்பது, பகிஷ்கரிப்புகளில் ஈடுபடுவது, பதாதைகள் ஏந்தி வீதி ஊர்வலம் செல்வது போன்றன இலங்கையில் மாத்திரமன்றி, ஜனநாயகம் நிலவும் சகல நாடுகளிலும் காணக்கூடிய ஒரு உரிமையாகும்.

குறிப்பாக கடந்த ஒன்றரை வருட காலமாக நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொவிட்-19 தொற்றுப் பரவலுடன் சுகாதார தரப்பினரால் வழங்கப்பட்டுள்ள மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்கும் கட்டுப்பாடுகளுடன் கூடிய வழிகாட்டல்கள் காரணமாக, பெருமளவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் வகையில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடந்தவாரம் கொழும்பிலும், அதனை அண்மித்த பகுதிகளிலும் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் அடங்கலான குழுவினர் மற்றும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு அள்ளிச் செல்லப்படும் காட்சிகளை காண முடிந்தது. வயது முதிர்ந்த பெண்களைக் கூட இதில் அடங்கியிருந்தமை மக்கள் மத்தியில் ஒரு வித விசனத்தை தோற்றுவித்திருந்தது.

இந்நிலையில் இவர்கள் நீதிமன்றங்களால் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட போதும், அவர்களை பலவந்தமாக தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை பொலிசார் மேற்கொண்டிருந்தனர்.

இவ்வாறான நடத்தையை கண்டித்து அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. அமைதியான முறையில் கொவிட் விதிமுறைகளை மீறாத வகையில் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டும், அவ்வாறு அனுமதியளிக்க மறுப்பது அடிப்படை உரிமை மீறலாகும் மற்றும் எந்த அடிப்படையில் இவ்வாறு கைதாகி விடுதலையானவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு பலவந்தமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் போன்ற பல விடயங்களை உள்ளடக்கி இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தொற்றுப் பரவலுடன் எழுந்துள்ள சுகாதார கட்டுப்பாடுகள் காரணமாக, பொது மக்களுக்கு காணப்படும் எதிர்ப்புத் தெரிவிக்கும் உரிமையை அடக்கி கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசாங்கங்களுக்கு கிடைத்துள்ளதா என எண்ணத் தோன்றுகின்றது. குறிப்பாக சர்வதேச ரீதியில் இலங்கைக்கு எதிரான மனித உரிமைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் அண்மைக் காலத்தில் மீண்டும் வலுப்பெற்றுள்ள நிலையில், நாட்டுக்கு முக்கிய வருமானத்தை ஈட்டித்தரும் ஜி.எஸ்.பி ப்ளஸ் வரிச்சலுகை கூட இல்லாமல் போகும் நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில் இவ்வாறான ஒடுக்குமுறைகள் மேலும் அவ்வாறான தீர்மானங்களுக்கு உரமூட்டுவதாக அமைந்திருக்கும். நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பு போதியதாக இல்லை என்பது பற்றி பெருமளவில் பேசப்படுகின்றது. இவ்வாறு அந்நியச் செலாவணியை வருமானமாக பெற்றுக் கொள்ளக் காணப்படும் வழிமுறைகள் இல்லாமல் செய்யப்படுமானால் நாடு மேலும் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்படும். அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்குகூட நாட்டில் அந்நியச் செலாவணி இருப்பு காணப்படாத ஒரு நிலைக்கு தள்ளப்பட்டு, நாடு திவாலாகும் நிலைக்கு முகங்கொடுக்கும். இந்த பாரதூரமான விடயம் தொடர்பில் அதிகாரத்திலுள்ளவர்கள் ஏன் சிந்திப்பதில்லை என்பது அவர்களின் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதை உணர்த்துகின்றது.

உலகில் தொற்றுப் பரவல் ஆரம்பித்தவுடன், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் கருத்தின் பிரகாரம், இந்தத் தொற்றுப் பரவலைக் காரணம் காண்பித்து, அதிகாரத்திலுள்ளவர்கள் தமக்கு எதிராக குரல் எழுப்புவோரை அடக்குவதற்கும், அவர்களின் சுதந்திரத்தையும், அமைதியான சமூக இடைவெளிகளை பேணி ஆர்ப்பாட்டம் செய்வோரை அடக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் சுகாதார விதிமுறைகளை முறையற்ற வகையில் பயன்படுத்துவதாக ஐக்கிய நாடுகளின் தலைமை அதிகாரி குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையில் பொறுத்தமட்டில் சுகாதார விதிமுறைகளை எடுத்துக் கொண்டால் இரண்டு வகையான சட்டம் அமலில் உள்ளதாக என எண்ணத் தோன்றுகின்றது. குறிப்பாக இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று கைதுகள் இடம்பெற்ற அதே வாரத்தில், அரசின் முக்கிய பிரமுகர் ஒருவர் நாடாளுமன்றத்தில் அங்கத்துவத்தைப் பெற்றதுடன், நிதி அமைச்சுப் பதவியையும் பொறுப்பேற்றார். இதற்கு அவரினதும், அந்தக் கட்சியின் ஆதரவாளர்களும் பாற்சோறு பொங்கி, தானம் வழங்கி கொண்டாட்டங்களில் ஈடுபட்டதையும் இலங்கையின் பல பாகங்களில் காண முடிந்தது.

மக்கள் ஒன்றுகூடுவதற்கான தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறானதொரு அரச சார்ந்த நியமனத்துக்கு ஒன்றுகூடுவதற்கான அனுமதியை யார் வழங்கியது, அவர்களை ஏன் கைது செய்யவில்லை? ஏன் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அவர்களை அள்ளிச் செல்லவில்லை எனும் கேள்வி எழாமலுமில்லை. இவ்வாறு அரச சார்ந்த தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறை மீறப்படுவது இது முதன்முறையல்ல. கடந்த காலங்களில் மரணச் சடங்குகள் கூட அரச பிரச்சாரங்களுக்காக பயன்படுத்தப்பட்டதை காண முடிந்தது.

வரலாற்றை எடுத்துப்பார்த்தால், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் போன்றன நேர்த்தியான சமூக மாற்றங்களுக்கு வழிகோலியிருந்ததுடன், மனித உரிமைகளை உறுதி செய்து மேம்படுத்துவதற்கும் ஏதுவாக இருந்தன. உலகின் அனைத்து பாகங்களிலும் சிவில் சமூகத்தின் உரிமைகளை பாதுகாப்பதற்கு ஏதுவாகவும், உதவியாகவும் அமைந்துள்ளன. குறிப்பாக ஒடுக்குமுறையுடன் கூடிய ஆட்சிகள் இடம்பெறும் நாடுகளில் இவற்றை அதிகளவு காண முடிகின்றது. தகவல்கள் அறிந்த மக்களை ஈடுபடுத்தி அவற்றை வெளிப்படுத்துவதற்கு ஊக்குவிக்கும் வகையில் போராட்டங்கள் அமைந்துள்ளன. பொது விவகாரங்களில் நேரடி பங்கேற்பை உறுதி செய்வதுடன், ஜனநாயக பிரதிநிதித்துவத்தை வலிமைப்படுத்தவும் ஏதுவாக உள்ளன.

பொதுவாக அரசாங்கம் மற்றும் பொது மக்களை எடுத்துக் கொண்டால் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் என்பது அசௌகரியத்தை ஏற்படுத்துவது அல்லது ஆபத்தை ஏற்படுத்தும் விடயங்களாக பார்க்கப்படுகின்றன. ஆனாலும், இவ்வாறான ஆர்ப்பாட்டங்களினூடாக பல்வேறு மனித உரிமைசார் அடிப்படை அம்சங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. மனித உரிமைகளை உறுதி செய்து கொள்வதற்கு இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் அவசியமாக அமைந்துள்ளன.

இவ்வாறான ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்பதனூடாக தமது எதிர்ப்பையும் வெளிப்படுத்த வாய்ப்பளிப்பதுடன், அரசாங்கத்தின் கொள்கை வடிவமைப்பாளர்களுக்கு தமது தீர்மானங்களை மீட்டுப்பார்க்க தூண்டுவதாக அமைந்துள்ளன. இவ்வாறான போராட்டங்கள் சமூகங்களில் பாதுகாப்பான வகையில் இடம்பெறுதை உறுதி செய்யும் பொறுப்பு சிவில் சமூக அமைப்புகள், செயற்பாட்டாளர்கள், மனித உரிமை காவலர்கள், சட்டத்தரணிகள், நீதவான்கள், தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள், பொது அதிகாரிகள் மற்றும் இதர பங்காளர்களைச் சேரும்.

அரசாங்கத்துக்கு எதிரான இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் பலவந்தமாக ஒடுக்கப்படுவதன் மூலம், அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தும் சரியானது என்பதை உணர்த்திவிட முடியாது என்பதுடன், அரசுக்கு ஆதரவான கொண்டாட்டங்களை முன்னெடுப்பதை அனுமதிப்பது, அரசின் வெற்றியை குறிப்பதை உணர்த்தவும் முடியாது. இங்கு நடப்பது அனைத்தையும், அங்கிருப்பவர்கள் (உதவி வழங்கும் சர்வதேச அமைப்புகள்) பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மனித உரிமைகளுக்கு அவ்வாறான அமைப்புகள் அதிகளவு முக்கியத்துவம் வழங்குகின்றன. இந்நிலையில் நாளையை நாம் மறந்துவிடக்கூடாது. அவர்களின் தேவையை மறந்து இவ்வாறான அடக்கு முறைகளை கையாள்வதை பற்றி மீளச் சிந்திக்க வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .