Thipaan / 2016 ஒக்டோபர் 30 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
முஸ்லிம் தனித்துவ அரசியலின் கதாநாயகனாக இருந்து காலனால் அன்றேல் வில்லன்களால் மரணிக்கச் செய்யப்பட்ட, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர்
எம்.எச்.எம். அஷ்ரப்பின் மரணம் குறித்த மர்மத்தைத் துலக்குவதற்கான மக்கள் மயப்படுத்தப்பட்ட கையெழுத்து வேட்டை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தகவல் அறியும் சட்டம் அடுத்த சுதந்திர தினத்தில் இருந்து அமுலுக்கு வரவுள்ள நிலையில், அஷ்ரப்பின் மரணத்தை விசாரித்த ஆணைக்குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்துமாறு ஜனாதிபதியை கோரும் மகஜரில் இரண்டு இலட்சம் பேரின் கையெழுத்துக்களைத் திரட்டும் பணி கிழக்கில் இருந்து முடுக்கிவிடப்பட்டுள்ளது.
சுதந்திரத்துக்குப் பிறகு, சிங்கள தேசியவாதம் சிறுபான்மை மக்களை எல்லா வழிகளிலும் அடக்க முற்பட்ட காலச்சூழலில் பல முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மைக் கட்சிகளில் அங்கம் வகித்தனர். ஆனால் நமக்கென்று ஒரு தனித்துவ அரசியல் இயக்கம் வேண்டுமென்ற திடசங்கற்பத்துடன் அவர்கள் இருக்கவில்லை. அவர்களது சிந்தனையின் மூக்கணாங்கயிறு தேசியக் கட்சிகளின் கரங்களிலேயே இருந்தது. அவ்வேளையில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து அரசியல் செய்து கொண்டிருந்த அஷ்ரப் அதிலிருந்து விலகி தனியொரு வழியில் பயணிக்க வேண்டியதாயிற்று.
ஆயுதப் போராட்டத்தின் காந்தப்புலனை நோக்கி முஸ்லிம் இளைஞர்கள் செல்வதைத் தடுத்து, அவர்களை ஏதோ ஓர் அடிப்படையில் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என அஷ்ரப் போன்றோர் நினைத்தனர். அத்தோடு 1978 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பில் இருந்த சிறுபான்மையினருக்குச் சார்பான வரப்பிரசாதங்களைப் பயன்படுத்தும் வாய்ப்பும் அப்போதிருந்தது. இவ்வாறான பின்புலங்களுடனேயே முஸ்லிம் காங்கிரஸ் உருவானது; வளர்ந்தது; ஜொலித்தது. அஷ்ரப் முஸ்லிம்களின் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்ந்தார்.
முஸ்லிம்களின் அரசியலை மட்டுமன்றி தேசிய அரசியலையே தலைகீழாகப் புரட்டிப் போட்டார் அஷ்ரப் என்றுதான் சொல்ல வேண்டும். தெற்கைத் தளமாகக் கொண்டிருந்த முஸ்லிம்களின் தலைமைத்துவத்தைக் கிழக்குக்குத் திருப்பி விட்டார். சந்திரிகா அம்மையாரின் ஆட்சியில் அஷ்ரப்பை விடுத்து எந்தத் தீர்மானத்தையும் அரசாங்கத்தால் எடுக்க முடியாதளவுக்குப் பலம்பொருந்திய சக்தியாக அவர் இருந்தார். இது, பிரதான அரசியல் கட்சிகளில் இணைந்து கொண்டு, மேட்டுக்குடி அரசியல் செய்துகொண்டிருந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலருக்கு ‘வயிற்றைக் கலக்கியது’. இந்த மாற்றத்தை ஜீரணிக்க முடியாமல் திணறினார்கள். சமயம் பார்த்து அஷ்ரப்பை அரசாங்கத்தின் அதிகாரத் தரப்பினரிடம் ‘போட்டு’க் கொடுப்பதில் சில முஸ்லிம் அரசியல்வாதிகளே ஈடுபட்டனர் எனச் சொல்லப்படுகின்றது. அந்தளவுக்கு பொறாமைப்படத்தக்க ஓர் உயர்ந்த அந்தஸ்த்தில் அஷ்ரப்பை இருந்தி அழகு பார்த்தது ‘காலம்’.
இவ்வாறான நிலையிலேயே 2000 ஆம் ஆண்டு செப்டெம்பர் 16 ஆம் திகதி முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் உள்ளிட்ட குழுவினர் பம்பலப்பிட்டியில் இருந்து அம்பாறை மாவட்டத்தை நோக்கிப் பயணம் செய்த ஹெலிகொப்டர் அரநாயக்க, ஊரகந்தை மலையுச்சியில் மோதி விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் தலைவர் அஷ்ரப் உட்பட 13 பேர் பரிதாபகரமாக உயிரிழந்தனர். முஸ்லிம் சமூகமே பெரும் அதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளானது. தம்முடைய அரசியல் தந்தையின் இழப்பின் வெற்றிடத்தை அவர்கள் இன்று வரையும் உணர்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். அது யாராலும் இன்னும் நிரப்பப்படவும் இல்லை.
இந்த விபத்து இடம்பெற்ற சில நாட்களுக்குள் அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார், இது பற்றி விசாரிப்பதற்காக ஓய்வுநிலை உயர்நீதிமன்ற நீதியரசர் எல்.எச்.கே. வீரகேசரவைக் கொண்டு தனிநபர் ஆணைக்குழுவை நியமித்து மூன்று மாதங்களுக்குள் விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு பணித்திருந்தார். குறித்தொதுக்கப்பட்ட காலப்பகுதிக்குள் வீரகேசர தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். ஆனால் அந்த அறிக்கையில் என்ன உள்ளடங்கி இருந்தது என்ற விபரத்தை அரசாங்கம் வெளியிடவில்லை. விசாரணைகள் இடம்பெறுவது நீதியின் நிலைநாட்டுதலை மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்காகவே தவிர, ஆட்சியாளர்கள் இரகசியமாகப் பார்த்துவிட்டு பரணில் அடுக்கி வைப்பதற்காக அல்ல என்ற அடிப்படையில், அஷ்ரப்பின் மரண விசாரணை அறிக்கை மக்களுக்குக் குறிப்பாக முஸ்லிம்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அஷ்ரபுடன் மிக நெருக்கமாக இருந்த ஜனாதிபதி சந்திரிக்காவோ, அதற்குப் பின் முஸ்லிம்களை தங்களுடைய அரசியலுக்காக காலத்துக்குக் காலம் பயன்படுத்திக் கொண்டு, முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட முஸ்லிம் கட்சிகளுடன் தேனிலவு கொண்டாடிய, கொண்டாடிக் கொண்டிருக்கும் மற்றைய இரு ஜனாதிபதிகளோ அதை வெளியிடவும் இல்லை.இவ்விசாரணை அறிக்கையை வெளியில் கொண்டு வந்து மக்களுக்கு அதிலுள்ளவற்றைக் காண்பிப்பதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது அஷ்ரப்புக்குப் பின்னரான அரசியலில் நிகழ்ந்த மிகப் பெரிய வெட்கக் கேடாகும். முஸ்லிம் காங்கிரஸ் இதில் மிகப் பெரும் தவறைச் செய்திருக்கின்றது. கட்சியை உருவாக்கிய தலைவனின் மரணத்தின் காரணத்தைக் கூடக் கண்டறிந்து மக்களுக்கு கூற முடியாத ஒரு கட்சியின் கையாலாகாத்தனத்தை என்னவென்று வர்ணிப்பது? முஸ்லிம் காங்கிரஸுக்கு மட்டுமன்றி அஷ்ரப்பின் அரசியல் பள்ளிக்கூடத்தில் அரசியல் கற்க வந்த ‘மாணவர்கள்’ எல்லோருமே அந்தக் கடமையைச் செய்யத் தவறியிருக்கின்றார்கள். இதுபற்றிக் கேட்டால் “மரணம் இறைவனின் நாட்டப்படி இடம்பெறுகின்றது” என்று ஆன்மீகம் பேசுவார்கள். அப்படியென்றால் நஞ்சருந்தி தற்கொலை செய்கின்றவனின் சடலத்தை, ஊரே பார்த்திருக்க விபத்தில் பலியாகின்றவனின் சடலத்தை ஏன் பிரேத பரிசோதனை செய்கின்றீர்கள் என்ற கேள்விக்கு அவர்களிடம் பதிலில்லை.
ஒரு பெரிய கட்சியின் தலைமைத்துவப் பதவி தனக்குக் கிடைக்க வழிவகுத்தவர் என்பதற்காக ரவூப் ஹக்கீம், இந்த அறிக்கையை வெளியிடக் கோரி ஒற்றைக் காலில் நின்றிருக்க வேண்டும்; தமக்கு அரசியல் முகவரி தந்த கட்சியின் தலைவர் என்பதற்காக ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும்; இணைப்பாளராக இருந்த தனக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தந்து அழகுபார்த்தவர் என்பதற்காக அதாவுல்லா இந்த மர்மத்தைத் துலக்க முன்னின்றிருக்க வேண்டும்; தனது அரசியல் சகா என்பதற்காக சேகு இஸ்ஸதீன் இந்த விசாரணைக்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும்; தனக்கும் தலைவருக்கும் இடையிலான இறுக்கமான அரசியல் உறவுக்கு சான்றாக இதிலுள்ள மர்மத்தை ஹசன்அலி வெளிப்படுத்தியிருக்க வேண்டும்; போராட்ட வாழ்க்கையில் இருந்து அரசியலுக்கு வந்த தன்னை கட்சிக்குள் ஓர் இராஜதந்திரப் பார்வையாளனாக, கருத்துருவாக்குனராக உட்கார வைத்தமைக்காக பஷீர் சேகுதாவூத் அதை முன்னமே செய்திருக்க வேண்டும்; எல்லாவற்றையும் விட மிக முக்கியமாக, தலைவரின் மரணத்தின் பின்னர் அமைச்சுப் பதவியை எடுத்துக் கொண்ட அவரது துணைவியார் பேரியல் அதைச் செய்திருக்க வேண்டும்; இவர்கள் மட்டுமன்றி நீங்களும் நாங்களும் கூட அதைச் செய்யக் கடமைப்பட்டவர்களே. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது இந்த 16 வருடங்களாக நிகழவேயில்லை.
அஷ்ரப் குழுவினர் ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கினர் என்பதே உண்மையாக இருந்தாலும் கூட, வீரசேகர விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை விரிவாகவோ சுருக்கமாகவோ மக்களுக்கு ஒப்புவிக்கப்படாமை, முஸ்லிம்களிடையே பாரிய சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. இதில் ஏதோ ஒரு மர்மம் உள்ளதாக முஸ்லிம்கள் கருதுவதற்கு காரணங்களும் உள்ளன. பிரஸ்தாப ஹெலியில் அஷ்ரப்புடன் பயணித்து உயிரிழந்த கதிர்காமத்தம்பி மீது ஒரு சந்தேகப்பார்வை ஏற்பட்டது. புலிகள் அவரைத் தற்கொலைக் குண்டுதாரியாக அனுப்பினார்களா என்று அப்போது ஒரு சந்தேகம் நிலவியது. கிழக்கில் இருந்து ஒரு முஸ்லிம் தலைமை உருவாகுவதை பொறுக்கமாட்டாதவர்களின் சதித்திட்டமா என்ற விதத்திலும் இவ்விபத்து பார்க்கப்பட்டது. மரணிப்பதற்குச் சில நாட்கள் முன்னதாக அஷ்ரப் காட்டமான அறிக்கைகளைப் பத்திரிகைகளுக்கு வழங்கியிருந்தார். அதற்கும் இவ்விபத்துக்கும் இடையில் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ என்ற சந்தேகங்களும் உள்ளன.
சோம தேரருடன் அஷ்ரப் நடாத்திய விவாதத்தால் மூக்குடைபட்டிருந்த இனவாதிகளும் அவர்களது ஆதரவாளர்களும் செயற்கையான தொழில்நுட்பக் கோளாறு ஒன்றை ஏற்படுத்தியிருக்கலாமோ என்று ஆழமாக சிந்திப்பவர்களும் முஸ்லிம் அரசியலில் இருக்கின்றனர். இது இவ்வாறிருக்க, அஷ்ரப்புக்கு மிக நெருக்கமான ஒரு முக்கிய அரசியல் நோக்குனர், “இதன் பின்னால் ஒரு சர்வதேச நிகழ்ச்சி நிரல் இருந்தது” என்று அண்மையில் சொல்லியிருக்கின்றார். இது எமது சந்தேகங்களை எல்லாம் இன்னுமின்னும் அதிகரிக்கின்றது என்றாலும், அஷ்ரப்பின் மரணத்தின் மர்மத்தை நாம் வெளிக் கொணரவில்லை.
இவ்வாறு, மேற்சொன்ன எல்லாத் தரப்பினரும் 16 வருடங்களாக விட்ட வரலாற்றுத் தவறைத் திருத்திக் கொள்வதற்காகவே அஷ்ரப்பின் மரணம் குறித்த விசாரணை அறிக்கையை வெளியிடுமாறு அரசாங்கத்தைக் கோரும் ஆவணத்தில் இரண்டு இலட்சம் பேரின் கையொப்பங்களைத் திரட்டும் நடவடிக்கை இப்போது ஆரம்பமாகியுள்ளது. ஏறாவூரில் கடந்த 23 ஆம் திகதி, அதாவது மறைந்த தலைவரின் பிறந்த நாளன்று, இந்த நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர்சேகுதாவூத் இந்த வேலைத்திட்டத்தை முன்னின்று மேற்கொள்கின்றார். ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் திரண்டுவந்து தமது கையொப்பங்களையும் பெருவிரல் அடையாளங்களையும் பதிவு செய்திருக்கின்றனர். இந்த மகஜரில் ஒப்பமிட்டுக் கொண்டிருக்கின்ற கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் வயதான பெண்களுக்கும் நடக்கக் கூட முடியாத முதியவர்களுக்கும் இருக்கின்ற இந்த அக்கறை, தமது தலைவரின் மரணத்தின் காரணத்தை தாம் உயிரோடு இருக்கும் காலத்திலேயே அறிந்துவிட வேண்டுமென்ற உறுதிப்பாடு, ஏன் இந்தத் தேசியத் தலைமைகளுக்கும் அமைச்சர்களுக்கும் எம்.பிக்களுக்கும் இல்லாமல் போயிற்று? தகவல் அறியும் சட்டத்தை அமுலுக்கு கொண்டு வருவதற்கு நாட்குறித்துள்ள அரசாங்கத்திடம், வீரகேசர விசாரணை ஆணைக்குழுவின் புழுதிபடிந்த அறிக்கையை வெளியிடக் கோருவதற்காக இரண்டு இலட்சம் கையொப்பங்களைத் திரட்டும் மேற்படி நடவடிக்கை முஸ்லிம் அரசியலில் மிக முக்கியமானதாகும். முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீமுடன் முரண்பட்டுக் கொண்டுள்ள பஷீர் சேகுதாவூத் தன்னுடைய சொந்த அரசியல் இலாபத்துக்காக இதைச் செய்கின்றார் என்ற ஒரு கருத்தும் நிலவுகின்றது. உண்மைதான்! ஹக்கீமோடு நெருக்கமாக இருந்து, அவரது பிழைகளில் எல்லாம் பஷீர் சேகுதாவூத் சரி கண்ட முன்னைய 15 வருட காலப்பகுதியில் இவ்வாறான ஒரு பாரிய முயற்சியை அவர் மேற்கொள்ளவில்லை என்றே கூறவேண்டும். எல்லா விடயங்களிலும் தலைவரின் இராஜதந்திரியாக இருந்தது தானே என்று பஷீரினால் மார்தட்டிக் கொள்ள முடியுமென்றால்... ஏன் ஹக்கீமின் மூலம் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பாக ஓர் அழுத்தமாக அதை முன்வைக்கச் செய்ய முடியாமல் போனது? என்ற கேள்வி நியாயமானதும் கூட. அதற்கான பதிலை பஷீர், ஹசன்அலி போன்றவர்கள் முன்வைக்கவும் வேண்டும்.
ஆனால், இங்கு மக்கள் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், 16 வருடங்களுக்குப் பின்னராவது மக்கள்மயப்படுத்தப்பட்ட ஒரு வெகுஜன கோரிக்கையை முன்வைப்பதற்கு பஷீர் முன்வந்துள்ளார் என்பதாகும். இதில் அவருக்கு அரசியல் இலாபம் இருக்கலாம்; இல்லாமல் போகலாம். ஆனால், இந்த ஆவணத்தில் ஒப்பமிடுவதால் முஸ்லிம்களுக்கு எந்த நட்டமும் ஏற்படப் போவதில்லை. எனவே, இந்தச் சந்தர்ப்பத்தில் பஷீர் தொடங்கியுள்ள இந்தக் கையெழுத்து வேட்டையைப் பயன்படுத்தி, நமது மறைந்த தலைவரின் மரணத்தில் புதைந்துள்ள மர்மத்தை வெளிக்கொண்டு வர எல்லா முஸ்லிம்களும் அரசியல், கொள்கை பேதங்களை மறந்து முன்வர வேண்டும். அஷ்ரப்பின் மரணம் இயற்கையானதாகவே இருந்திருந்தால், அரசாங்கம் விசாரணை அறிக்கையை எந்தத் தயக்கமும் இன்றி அடுத்த நாளே அறிவித்து, முஸ்லிம்களைச் சாந்தப்படுத்தி இருக்கும். இந்த அடிப்படையில் நோக்குகையில், இதில் ஏதோ ஒரு மர்மம் இருப்பதாகவே இப்போதும் எண்ணத் தோன்றுகின்றது.
இலங்கையில் புதியதொரு அரசியல் யாப்பு உருவாகி, இனப் பிரச்சினைக்கான தீர்வுப் பொதியும் முன்வைக்கப்படப் போகின்றது. அதுமட்டுமன்றி, சிறுபான்மையினரின் பிரச்சினைகளை ஆராய்வதற்கான ஆணைக்குழு ஒன்றை நிறுவுவதற்கும் ஐ.நா சபை பரிந்துரை செய்திருக்கின்றது. அதேநேரத்தில், அஷ்ரப்பின் மரணம் செயற்கையானதாக இருக்குமிடத்து, அது தேசிய இன முரண்பாட்டுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புபட்டது என்றும், உள்நாட்டு அல்லது வெளிநாட்டுச் சதியாக இருக்கலாம் என்றும் பலமான சந்தேகங்களும் தொடர்ச்சியாக எழுந்தவண்ணமுள்ளன. எனவே, இந்த மரணத்தில் மர்மம் உள்ளதா என்பதை இப்போதே அறிந்து கொண்ட பின்னரே, முஸ்லிம் அரசியல் தனது அடுத்த காலடியை எடுத்து வைக்க வேண்டும்.
கடந்தகால வரலாற்றின் பெருங் கொடுமை ஒன்றின் உண்மையைக் கண்டறிவது எதிர்கால வரலாற்றை செம்மையாக்குவதற்கு இன்றியமையாதது ஆகும். இதற்காக ஒப்பமிடுவதும், பாடுபடுவதும் அனைத்து முஸ்லிம்களின் மீதான வரலாற்றுக் கடமையாகும். அந்தக் கூட்டுப் பொறுப்பை செய்வதற்கு தவறுவோமாயின், முஸ்லிம் தனித்துவ அரசியலும் சிலவேளை அதன் தலைமைகளும் தேசிய கட்சிகளுக்குள் நல்லடக்கம் செய்யப்படலாம்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago