2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

அஷ்ரபை நினைவுகூர்வதால் மட்டும் அவரது கனவு நனவாகி விடுமா?

Editorial   / 2023 செப்டெம்பர் 27 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஷ்ரபை நினைவுகூர்வதால் மட்டும் அவரது கனவு நனவாகி விடுமா?

மொஹமட் பாதுஷா

குருவின் போதனைகளை மதிக்காத, அதன்படி நடக்காத சிஷ்யர்கள் அந்தக் குருவின் இறப்புக்குக் பிறகு அவரது வாழ்க்கையை நினைவுகூர்வதுண்டு. பாடசாலையில் ஆசிரியர்களை மதிக்காத மாணவர்களும் ஆசிரியர் தினத்தைக் கொண்டாடுவதும் உண்டு.

முஸ்லிம் அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்திய அரசியல் தலைவரான மறைந்த எம்.எச்.எம்.அஷ்ரப் விட்டுச் சென்ற பணியையோ, அவரது கொள்கைகளையோ முன்கொண்டு செல்லாமல், வெறுமனே அவரை நினைகூர்வதில் மட்டும் கவனம் செலுத்துகின்ற முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார்க்கின்ற போது, மேற்குறிப்பிட்ட உவமானங்கள்தான் ஞாபகத்திற்கு வருகின்றன.

இலங்கை முஸ்லிம் அரசியலில் மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரப் தனித்துவமானவர். அவருக்கென்று வரலாற்றில் தனியிடம் உள்ளது. தனித்துவ அடையாள அரசியலை மக்கள் மயப்படுத்தியது மட்டுமன்றி, குறிப்பாக கிழக்கு முஸ்லிம்களுக்கும் பொதுவாக நாட்டு முஸ்லிம்களுக்கும் குறிப்பிடத்தக்க சேவைகளைச் செய்து விட்டு மறைந்தார்.

தனியொரு முஸ்லிம் கட்சியை உருவாக்கி, இந்தளவுக்கு வளர்ச்சி காணச் செய்தவர்களும் இல்லை. அந்தக் கட்சியை வைத்துக் கொண்டு தேசிய அரசியலின் அச்சாணியை ஆட்டுவித்தவர்களும் இதுவரை இல்லை. மக்களை நேசித்த, மக்களால் இந்தளவுக்கு நேசிக்கப்பட்ட முஸ்லிம் தலைமை ஒருவர், வரலாற்றில் இதற்கு முன்னர் இருந்தார்களா என்பதும் சந்தேகமே.

அவர், முஸ்லிம்களின் அரசியல் தலைமையாக இருந்தபோதும், சிங்கள, தமிழ் மக்களுக்கும் கணிசமான சேவையை ஆற்றினார். அவையெல்லாம் பெரிதாகப் பேசப்படுவதில்லை. அதனாலேயே, முஸ்லிம்களுக்கான அரசியலை அஷ்ரபிற்கு முன் - பின் என நோக்க வேண்டியிருக்கின்றது.

இப்படிப்பட்ட பல காரணங்களுக்காக, மறைந்த தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப் நினைவுகூரப்பட வேண்டியவர்; கொண்டாடப்பட வேண்டியவர். அதில் அவரது எதிரிகளுக்குக் கூட மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், இங்குள்ள கேள்வியும் விமர்சனமும் அவரை நினைவுகூர்வது பற்றியதல்ல என்பதைக் கவனிக்க வேண்டும்.

மாறாக, குருவின் வழிகாட்டல்களை மறந்த சிஷ்யர்கள் போல, ஆசிரியர்களின் சொல்பேச்சு கேட்காத மாணவர்களைப் போல இருந்து கொண்டு, வெறுமனே மறைந்த தலைவரை நினைந்தழுதால் மட்டும் போதுமா? அதனால் அவரது கனவை நிறைவேற்றியதாக ஆகி விடுமா என்பதுதான் இங்குள்ள கேள்வியாகும்.

எம்.எச்.எம் அஷ்ரப், என்ற தனிமனிதனிலும் அரசியல்வாதியிலும் கூட சில குறைபாடுகளை காணலாம். ஆக, அவரும் விமர்சனத்திற்கு விதிவிலக்கானவர் அல்ல. ஆயினும் அதனையெல்லாம் விட, பன்மடங்கு நல்ல பண்புகளைக் கொண்டிருந்ததுடன், குறிப்பிடத்தக்க சேவைகளை ஆற்றியதன் மூலம், மக்கள் மனங்களில் ஒரு ராஜாவைப் போல இன்னும் வீற்றிருக்கின்றார்.

தனது அரசியல் சகாக்களுடன் சேர்ந்து முஸ்லிம் காங்கிரஸ் என்ற அரசியல் இயக்கத்தை உருவாக்கிய எம்.எச்.எம் அஷ்ரப், பேரம்பேசும் அரசியலை உச்சபட்சமாகப் பயன்படுத்தினார். மக்களுக்கு எது தேவை என்பதை உணர்ந்து செயற்பட்டார். மக்களுக்காக எந்தப் பெரிய சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக இருந்தார்.

முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவின்றி கிழக்கு மாகாண அரசியலை நடத்தவோ தேசிய ஆட்சியை நிறுவவோ முடியாத ஒரு நிலை வந்தது. அப்படியான வாய்ப்புகளைப் பயன்படுத்தி, இப்போதிருக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகளைப் போல ‘டீல்’ பேசி, தமது கல்லாப் பெட்டிகளை நிரப்பியவர் என்று அஷ்ரபை யாரும் கூற முடியாது. 

சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி தனது அறிவுக்கு எட்டியவரை சரியாக காய்நகர்த்தினார். எம்.பி தெரிவுக்கான மாவட்ட வெட்டுப்புள்ளியை குறைத்தமை, உரிமை அரசியலில் முக்கியமான சாதனையாகும். அதுபோல முஸ்லிம்களுக்கான கௌரவத்தையும் அரசியல் அடையாளத்தையும் பெற்றுத்தர அவர் போராடினார்.

அவருடைய அபிவிருத்தி அரசியல் என்பது தூரநோக்கை கொண்டிருந்தது. தொழிலின்றியும் மட்டுப்படுத்தப்பட்ட கல்வித் தகைமைகளுடனும் இருந்தவர்கள் உள்ளடங்கலாக பல நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு தொழிலை வழங்கினார். தமிழ், சிங்கள இளைஞர்களும் இதில் உள்ளடங்குகின்றனர். அஷ்ரப் இல்லாவிட்டால் இவர்களில் பெரும்பாலானவர்கள் தொழிலற்றவர்களாககவே இருந்திருக்கலாம்.

மிக முக்கியமாக, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை நிறுவினார். ஒலுவிலில் நெற்களஞ்சியசாலை அமைந்திருந்த ஒரு தென்னந்தோட்டத்தில், தேசிய பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பதற்கு கனவு காண்பதும், அதனை செயலுருப்படுத்துவதும் லேசுப்பட்ட காரியமல்ல.

தென்கிழக்கு பல்கலைக்கழகம் மறைந்த தலைவரின் கனவை முழுமையாக நிறைவேற்றி உள்ளதா என்பது ஆய்வுக்குரிய வினாவாகும். ஆயினும், அஷ்ரப் தான் கண்ட கனவை மெய்ப்பட வைப்பதற்கு உழைத்து வெற்றியும் கண்டார். அதேபோன்று, ஒலுவில் துறைமுகத்திற்கான அடித்தளத்தை இட்டது உட்பட பல அபிவிருத்திகளைச் செய்தார்.

அவரது பெருவளர்ச்சி பெருந்தேசிய அரசியல் தலைவர்களுக்கு மட்டுமன்றி, அப்போது தென்னிலங்கை அரசியலில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்த முஸ்லிம் அரசியல்வாதிகளுக்குக் கூட, ‘வயிற்றில் புளியைக் கரைப்பதாகவே’ இருந்தது. கிழக்கைச் சேர்ந்த ஒருவன், கொழும்பு அரசியலை ஆட்டுவிப்பதை அவர்கள் அடியோடு விரும்பவேயில்லை.

ஆனால், அஷ்ரபின் துணிச்சல் யாருக்கும் இருக்கவில்லை. அவர் பேச வேண்டிய இடத்தில் பேசினார்; மௌனமாகச் செய்ய வேண்டியதை அவ்விதமே செய்தார்.

தமிழ்த் தலைமைகளோடும் தமிழ் மக்களோடும் நல்லுறவைப் பேணிவந்தார். ஆனால், விடுதலைப் புலிகளும் ஏனைய தமிழ் ஆயுதக் குழுக்களும் வடக்கு, கிழக்கில் முஸ்லிம்களுக்கு செய்த அட்டூழியங்களை பகிரங்கமாக எதிர்த்து போராடினார். சிங்கள ஆட்சியாளர்களையும் அவர் எதிர்க்கத் தயங்கவில்லை என்பதற்கு சந்திரிகாவுக்கு எழுதிய கடைசி கடிதம் ஒரு சாட்சியமாகும்.

இந்தப் பின்னணியிலேயே 2000ஆம் ஆண்டு செப்டெம்பர் 16ஆம் திகதி ஒரு விமான விபத்தில் அவர் இறந்தார்; அல்லது, அந்த விபத்து நிகழ்த்தப்பட்டது. அவரது மரணத்திற்குப் பிறகு என்ன பிரளயங்கள் எல்லாம் நடந்தன என்பதை நாடே அறியும்.

தலைவரின் மரணத்திற்கான பின்னணியை சரிவர அறிந்து மக்களுக்கு கூறாமல், தலைமைத்துவச் சண்டை தொடங்கியது. அது இன்று பல கட்சிகளாக, பல தலைவர்களாக வந்து நிற்கின்றது. ஆனால், முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள், மறைந்த தலைவர் விட்டுச் சென்ற இடத்திலேயே இன்னும் நிற்கின்றன.

இப்போதெல்லாம் மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரப், பொதுவாக மூன்று தருணங்களில் நினைவுகூரப்படுகின்றார். அவரது பிறந்த தினத்தில், இறந்த தினத்தில், மற்றது தேர்தல் காலங்களில் எனலாம். அதைவிடுத்து அவரது சேவைகள் முன்கொண்டு செல்லப்படவும் இல்லை; அவரது வழியில் முஸ்லிம் தனித்துவ அடையாள அரசியல் பயணிக்கவும் இல்லை.

ஆகவே, மறைந்த தலைவரின் அரசியல் வாரிசுகள் எனச் சொல்லி மார்தட்டிக் கொள்வோர், அஷ்ரபிற்குப் பின்னர் முஸ்லிம் காங்கிரஸின் தலைவராகப் பொறுப்பேற்ற றவூப் ஹக்கீம் உள்ளடங்கலாக இன்று, ‘அஷ்ரப்’ என்ற அடையாளத்தை விற்றுப் பிழைக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் எல்லோரும் சமூகத்திற்கு கடந்த 23 வருடங்களில் என்ன செய்திருக்கின்றார்கள்?

அபிவிருத்தி அரசியலில் கிழக்கைச் சேர்ந்த ஹிஸ்புல்லாவும் அதாவுல்லாவும் கொஞ்சம் சோபித்தார்கள் என்றாலும், அதுவும் அவரவர் பிரதேசங்கள் சார்ந்தது என்ற கருத்தும் உள்ளது. அவர்களைத் தவிர பல காங்கிரஸ்களின் எம்.பிக்களாக இருந்தவர்கள், தற்போதைய எம்.பிக்கள் என்ன குறிப்பிடத்தக்க அபிவிருத்தி அரசியலைச் செய்துள்ளார்கள்?

தலைவரின் மரணத்திற்கு பின்னர், முஸ்லிம்களின் எந்த நீண்டகால பிரச்சினையை, குறுங்கால விவகாரத்தை முஸ்லிம் எம்.பிக்கள் தீர்த்து வைத்திருக்கின்றார்கள்? எந்த உரிமைக்காக அவரைப் போல பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் குரல் கொடுத்திருக்கின்றார்கள்? அதில் எந்த உரிமையை வென்று கொடுத்திருக்கின்றார்கள்?

அப்படி எதையுமே செய்யாமல், அதாவது மறைந்த தலைவரின் வழியில் செல்லாமல், வருடத்திற்கு இரண்டு தடவை நினைவுநிகழ்வுகளை கிழக்கு மாகாணத்தில் நடத்தினால் அஷ்ரபின் கனவு நனவாகி விடுமா? அவரது வழிமுறையை பின்பற்றியதாக ஆகிவிடுமா என்ற கேள்விக்கு மு.கா. தலைவர் உள்ளடங்கலாக அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளும் பதில் கூற வேண்டும்.

உண்மையில், மறைந்த தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப் போல, அதற்குப் பிறகு வந்த மு.கா. தலைவரான ஹக்கீமோ அல்லது வேறு முஸ்லிம் தலைவர்கள், எம். பிக்களோ இமாலய சேவைகளைச் செய்திருந்தால், மக்கள் மனங்களை வென்றிருந்தால், முஸ்லிம் மக்கள் இன்றும் அஷ்ரபின் வெற்றிடத்தை உணர்ந்து கொண்டிருக்க மாட்டார்கள்.

அதைவிடுத்து, அஷ்ரப் போல ஒருவர் நமக்கு இல்லாமல் போய்விட்டார்களே என்று முஸ்லிம்கள் குறிப்பாக வடக்கு, கிழக்கைச் சேர்ந்தவர்கள் மனதுக்குள் புலம்புகின்றார்கள் என்றால், அஷ்ரப் விட்டுச் சென்ற இடத்தை அவருக்குப் பின்னர் பிரதிநிதித்துவ அரசியலுக்குள் நுழைந்த கிட்டத்தட்ட 25 முஸ்லிம் அரசியல்வாதிகள் அவரது இடத்தை நிரப்பவில்லை என்பதுதான் அர்த்தமாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .