2025 மே 16, வெள்ளிக்கிழமை

ஆயுத விற்பனை: மரணத்தை விலை பேசல்

Thipaan   / 2016 பெப்ரவரி 25 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

போர்கள் ஏன் நடக்கின்றன என்ற வினா முரண்நகையாகத் தோன்றுவதுமுண்டு. போர்கள் ஏன் தொடங்கின, அவை ஏன் நடக்கின்றன என்பதற்கான பதிலேதுமற்று ஆயிரக்கணக்கான போர்கள் உலகெங்கும் நடந்துள்ளன. இன்னமும் நடக்கின்றன. போர்கள்; யாருக்கும் நன்மை பயக்காததெனினும், உலகெங்கும் நடக்கும் போர்களிலேயே ஆயுத வியாபாரத்தின் இருப்பு தங்கியுள்ளது. ஆயுத விற்பனை அமோகமாக நடக்கின்றதென்றதால் போர்களில் பல்லாயிரக்கணக்கானோர் பலியாகிறார்கள் என்று பொருள் கொள்ளலாம்.

சில நாட்களுக்கு முன் உலகளாவிய ஆயுத ஏற்றுமதி இறக்குமதி தொடர்பிலான மிக விரிவான அறிக்கையொன்றை சுவீடனின் ஸ்டொக்ஹோம் நகரிலுள்ள ஆய்வு நிறுவனமான ஸ்டொக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனம் (SIPRI) வெளியிட்டுள்ளது. 2011ஆம் ஆண்டிலிருந்து 2015ஆம் ஆண்டுவரையான ஐந்து ஆண்டுகாலப்பகுதியில் இடம்பெற்ற ஆயுத ஏற்றுமதி இறக்குமதியை அதற்கு முந்தைய ஐந்து ஆண்டுகாலப் பகுதியுடன் ஒப்பிட்டு பல தகவல்களை இவ்வாய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

இவ்வறிக்கையின் தரவுகள் இன்றைய உலக அரசியலை விளங்கிக் கொள்வதற்கான ஓர் அடிப்படையை வழங்குகின்றன. இவை உலக அரசியல் நிகழ்வுகளின், நடத்தைகளின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைத் தருவன. எங்கு போர் நடக்கிறது. யார் போரை நடாத்துகிறார்கள் போன்ற கேள்விகளுக்காக மூலோபாய, தந்திரோபாயக் காரணிகளுக்கு அப்பால் ஒரு புதிய விளக்கத்தைப் பெற்றுக் கொள்ள இவை பயனுள்ளவை.

இதற்கு முந்தைய ஐந்தாண்டு காலப்பகுதியான 2006-2010 காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், 2011-2015 காலப்பகுதியில் ஆயுத விற்பனை 14 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. ஆயுத ஏற்றுமதி மேற்கொள்ளும் பிரதானமான ஐந்து நாடுகளாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகியன திகழ்கின்றன. உலகளாவிய ரீதியில் 58 நாடுகள் ஆயுத விற்பனையில் ஈடுபட்டுள்ளன. மொத்த ஏற்றுமதியில் 74 சதவீதம் இப்பிரதான ஐந்து நாடுகளாலும் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாயுத ஏற்றுமதியில் ஆறாவது இடத்தில் பிரித்தானியா இருக்கிறது. அவ்வகையில் பிரித்தானியாவையும் சேர்த்து உலகின் மொத்த ஆயுத விற்பனையில் முன்னிலை வகிப்பது ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமையுடைய நாடுகளே.

  உலகின் ஆயுத ஏற்றுமதியில் அமெரிக்கா தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது. இக்காலப்பகுதியில் மொத்த ஆயுத ஏற்றுமதியில் 33 சதவீதம் அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேவேளை, இவற்றுள் கனரக ஆயுதங்களின் விற்பனையில் அமெரிக்காவானது இதற்கு முந்தைய ஐந்தாண்டு காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது 27 சதவீத அதிகரிப்பை கொண்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்கா உலகில் உள்ள 96 நாடுகளுக்கு ஆயுத விற்பனை செய்துள்ளது. அதைவிட இப்போது அதிகளவான ஆயுத ஏற்றுமதிக் கேள்வியை உடைய நாடாகவும் அமெரிக்கா திகழ்கிறது.

அமெரிக்காவின் ஆயுத விற்பனையில் 41 சதவீதமானவை மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றடைந்துள்ளன. 40 சதவீதமானவை ஆசிய நாடுகளைச் சென்றடைந்துள்ளன.  இக்காலப்பகுதியில் ஆயுதக் கொள்வனவில் முன்னிலையில் உள்ள நாடுகள்: இந்தியா, சவூதி அரேபியா, சீனா, ஐக்கிய அரபு இராச்சியம், அவுஸ்ரேலியா. இவை மொத்த இறக்குமதியில் 34 சதவீத்துக்கு உரித்துடையவை. அடுத்து வருவது மத்திய கிழக்கு. இப்பிராந்தியத்தின் ஆயுதக் கொள்வனவு 26 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

பிராந்திய ரீதியில் மொத்த ஆயுதக் கொள்வனவில் 46 சதவீதமானவை ஆசியாவும் ஓசானியாவும் இணைந்த பிராந்தியத்துக்குரியது. இப்பிராந்தியத்தின் மொத்த ஆயுத இறக்குமதியில் 44 சதவீதமானவை இலங்கை உள்ளடங்கியிருக்கும் தென்னாசியப் பகுதிக்குரியது. இவை தென்னாசியாவில் அமைதியின்மை ஏற்படுவதற்கான வாய்ப்புக்களை அதிகப்படுத்தியுள்ளன.

ஆசியக் கண்டத்தின் அதிகளவான ஆயுத இறக்குமதி பல வழிகளில் ஆச்சரியமூட்டுவது. மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கப் பிராந்தியங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் அமைதியான பிராந்தியமாக ஆசியப் பிராந்தியம் அறியப்படுகிறது. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் இவ்வளவு ஆயுதங்களை இப்பிராந்தியம் ஏன் கொள்வனவு செய்திருக்கிறது என்ற வினா இயல்பானதே.

2012ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அமெரிக்கா, ஆசியாவுக்கான தனது புதிய திட்டத்தை முன்வைத்தது. முன்னெப்போதுமில்லாத அளவுக்குப் பொருளாதார, இராணுவ ரீதியில் ஆசியாவின் மீது அமெரிக்காவின் கவனம் செல்லும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் புதிய 'ஆசியாவுக்கான திட்டம்' அமைந்திருந்தது. குறிப்பாக ஆசிய நாடுகளுடனான உறவுகளைப் புதுப்பித்தல், பழைய உறவுகளைப் வலுப்படுத்தல், புதிய உறவுகளை ஏற்படுத்தல் என்பவற்றை அவற்றின் முக்கிய அம்சங்களாகக் கொண்ட இத் திட்டமானது 'ஆசியாவுடனான உறவை மீள்சமநிலைப்படுத்தல்' (Rebalancing towards Asia) என அழைக்கப்பட்டது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை ஆசிய நாடுகள், குறிப்பாக தென்கிழக்காசிய நாடுகள், மிக முக்கியமானவை. பொருளாதாரத்தில் விரைவாக முன்னேறி வரும் நாடுகளாகவும் பெரிய எதிர்காலச் சந்தை வாய்ப்புகளையும் இயற்கை வளங்களையும் கொண்டவையாகவும் அவை விளங்குகின்றன. இப் பிராந்தியத்தில் அதிகரித்துவரும் சீனாவின் ஆதிக்கத்துக்குத் தடையாகவும் இராணுவரீதியில் அமெரிக்க நலன்கட்குச் சாதகமாகவும் செயற்படக்கூடிய நாடுகளாகத் தென்கிழக்காசிய நாடுகளை அமெரிக்கா கருதுகிறது.

அமெரிக்க அயலுறவுக் கொள்கையைப் பொறுத்தவரை, ஆசியாவுடனான உறவை மீள்சமநிலைப்படுத்துவது என்பது, அரசியல், பொருளாதார, பாதுகாப்பு, இராணுவ, இராஜதந்திர நிலைகளில் தனது கட்டுப்பாட்டையும் செல்வாக்கையும் பேணுவதற்கான வழிவகையாகும். அவ்வகையில், இம் மீளசமநிலைப்படுத்தல், தம்மிடையே உறவுடைய இரண்டு விடயங்களை இணைக்கிறது. முதலாவது, புவியியல்சார் (geographical) மீளசமநிலைப்படுத்தல். இரண்டாவது ஆற்றல்சார் (capacity) மீளசமநிலைப்படுத்தல். முதலாவதினடிப்படையில் பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், வியட்னாம் ஆகிய நாடுகளில் கட்டுப்பாடற்ற அமெரிக்க இராணுவப் பிரசன்னத்துக்கும் இராணுவத் தளங்களை அமைப்பதற்கும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. ஆற்றல்சார் மீளசமநிலைப்படுத்தலைப் பொறுத்தவரை இப்போது அதிகளவிலான அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ளன. அங்கிருந்து வெளியேறும் படைகள், குறிப்பாக கடற்படையின் 60 சதவீதமானவை, ஏனைய தென்கிழக்காசிய நாடுகளின் தளங்களில் தங்களை மீளநிறுவிக்கொள்ளும். அதற்;கும் மேலாகச் சீனாவின் மிரட்டலுக்கு உள்ளாகும் நாடுகளின் பாதுகாவலானத் தன்னைக் காட்டிக்கொள்ள அமெரிக்கா முனைகிறது. உண்மையில் ஆசியப் பிராந்தியத்தில் தனது இருப்புக்கு ஒரு சாட்டாகச் சீன மிரட்டலைப் பயன்படுத்துகிறது.

கடந்த இருபது ஆண்டுகளாக அமைதியானதும் மோதல்களற்றதுமான பிராந்தியமாக இருந்துவந்த தென்கிழக்காசியா, இன்று, நாடுகட்கு இடையிலான நிலக், கடல் எல்லைத் தகராறுகள் முன்னிலைப்படுத்தப்பட்டு ஆயுதக் கொள்வனவுக்கு போட்டி போடுகின்ற பிராந்தியமாக மாறியிருக்கின்றது.

மத்திய கிழக்கு நாடுகளின் ஆயுதக் கொள்வனவு கடந்த ஐந்து ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 61 சதவீதம் அதிகரித்துள்ளது. இப்பிராந்தியத்தின் ஆயுதக் கொள்வனவில் 27 சதவீதம் சவூதி அரேபியாவுக்கும் 18 சதவீதம் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் 14 சதவீதம் துருக்கிக்கும் உரியது.

இவை இன்று மத்திய கிழக்கின் அமைதியின்மையை விளக்கப் போதுமானவை. குறிப்பாக கடந்தாண்டு யெமன் நெருக்கடியில் சவூதி அரேபியா நேரடியாகத் தலையிடத் தொடங்கியதன் விளைவால் சவூதியின் ஆயுத இறக்குமதி 275 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. அதேவேளை, யெமன் நெருக்கடியில் ஐக்கிய அரபு இராச்சியம், எகிப்து, கட்டார் ஆகிய நாடுகளும் நேரடியாகத் தலையிட்டுள்ளன. இதேபோலவே இன்று சிரியாவில் தொடரும் யுத்தததுக்கான காரணங்களையும் விளங்கல் சிரமமல்ல.

உலகில் ஆயுத வியாபாரம் மிகமுக்கியமான பணம் கொழிக்கும் வியாபாரமாகும். அதிலும் குறிப்பாக சிறு ஆயுத (small arms) வியாபாரம் கவனம் குவியாமல் போகின்ற இன்னொரு மிகப்பெரிய வியாபாரம் ஆகும். ஆண்டொன்றுக்கு 8 மில்லியன் சிறு ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆண்டொன்று 8.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சிறு ஆயுதங்கள், அதற்கான உதிரிப்பாகங்கள், அதற்கான வெடிபொருட்கள் ஆகியன  விற்பனை செய்யப்படுகின்றன.

தனியார் துறையின் கைகள் அனைத்துத் துறைகளிலும் வலுப்பெறுகின்ற நிலையில் இதுவரை காலமும் இராணுவமும்,

பொலிஸாரும் வழங்கி வந்த 'பாதுகாப்பு' இப்போது தனியார் பாதுகாப்புக் கம்பெனிகளின் வசம் சென்று விட்டன. இப்போது புதிதாகத் தோற்றம்பெற்றுள்ள தனியார் பாதுகாப்பு கம்பெனிகளின் (Private Security Companies)  கைகளில் 3.7 மில்லியன் சிறு ஆயுதங்கள் உள்ளன.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஆயுத விற்பனையில் முன்னிலை வகிப்பது ரஷ்யாவும் சீனாவுமே. ஆயுத விற்பனையில் இவற்றின் நிலை உலகளாவிய அரசியல் அரங்கில் இவர்களின் அதிகரித்து வரும் வகிபாகத்தையும் எடுத்துக் காட்டுகிறது.

ஆபிரிக்காவின் ஆயுத விற்பனையின் அளவு தொடர்பான குறிகாட்டிகள் அங்கு நடக்கின்ற உள்நாட்டு யுத்தங்களின் தன்மையைப் பற்றிய சித்திரத்தைத் தருகின்றன. ஆபிரிக்காவின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதி நாடுகளான அல்ஜீரியா (30 சதவீதம்), மொராக்கோ (26 சதவீதம்), மற்றும் உகாண்டா (6.5 சதவீதம்) ஆகியவை உள்நாட்டு யுத்தங்களுக்கு உட்படாதவை. உள்நாட்டு யுத்தங்களுக்கு உள்ளாகியுள்ள பல ஆபிரிக்க நாடுகள் ஆயுதங்களை மிகக் குறைவான அளவிலேயே கொள்வனவு செய்கின்றன. ஏனெனில் அங்கு நடக்கும் யுத்தங்கள் வளங்களுக்கான யுத்தங்களே. அங்கு மிகவும் வலுவற்ற நிலையில் அரசுகள் இருக்கின்றன. தேவையான ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்கான பொருளாதார பலம் அவர்களிடம் இல்லை.

மறுபுறம் ஆபிரிக்காவின் பயங்கரமான பயங்கரவாத இயக்கமாக அறியப்படுகின்ற போகோ ஹராம் அமைப்புக்கெதிராகப் போராடுவதாக அறிவித்துள்ள நாடுகளான கமரூன், சாட், நைஜீரியா, நைகர் ஆகிய நாடுகளின் ஆயுதக் கொள்வனவு வெறும் 0.6 சதவீதமும் மட்டுமே. அதிலும் கொள்வனவு செய்யப்பட்ட கப்பல்களைத் தவிர்த்தால் அதன் அளவு 0.35 சதவீதமாகக் குறைவடையும். இவை சொல்லுகின்ற செய்தி யாதெனில் இந்நாடுகள் உண்மையில் போகோ ஹராம் என்ற அமைப்பை அழிப்பதற்கான போரிடவில்லை. ஒரு சாட்டுக்காகப் போரிடுகின்றன. 

இவ்வாரம் வெளியிடப்பட்ட தகவல்கள் பயனுள்ள தொடக்கப்புள்ளிகள். உலக அமைதி பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். ஆனால் ஆயுத விற்பனையை நிறுத்துவதற்கான எந்தவொரு முயற்சியும் எடுக்கப்படுவதில்லை.

ஆயுத விற்பனையையும் பரிமாற்றத்தையும் கட்டுப்படுத்தவும் அது தொடர்பான சர்வதேச சட்டங்களையும் உருவாக்கும் திட்டம் இன்னும் நிறைவேறவில்லை. இப்போது ஆயுதப் பரிமாற்றத்தை விட வாழைப்பழ விற்பனையையும் விநியோகத்தினையும் கட்டடுப்படுத்தவும் ஒழுங்குபடுத்தவும் அதிகமான சர்வதேச சட்டங்கள் உள்ளன.

இன்று ஆயுத வியாபாரிகள் மரணத்தை விலைபேசுகிறார்கள். மரணத்தை விற்கிறார்கள். போர்களின் ஊடு மொத்தமாகவும் சில்லறையாகவும் மரணத்தை விநியோகிக்கிறார்கள். மரணங்களுக்கு மதிப்பற்ற உலகில் மனிதர்களை விட ஆயுதங்கள் பெறுமதி வாய்ந்தவையாகின்றன. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .