2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஆளுநர்கள் மத்தியின் அரசியல் கருவிகள்

Johnsan Bastiampillai   / 2023 மே 25 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

எம்.எஸ்.எம். ஐயூப்

 

 

 

நாட்டில் எது நடந்தாலும் அதனை தமது அரசியல் கண்ணோட்டத்தின் படி அல்லது தமது எதிரிக்கு எதிராக பாவிக்கும் நோக்குடன் வியாக்கியானம் செய்வதையே பலர் விரும்புகின்றனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் மூன்று மாகாண ஆளுநர்களை பதவி நீக்கம் செய்து அவர்களுக்கு பதிலாக வேறு மூன்று பேரை நியமித்த போதும் அதனையே அவதானிக்க முடிந்தது. 

உதாரணமாக எதிர்கட்சியைச் சேர்ந்த சிலரும் சில சட்ட வல்லுநர்களும் ஆளுநர் ஒருவரை பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதிக்கு சட்ட அதிகாரம் இல்லை என்றனர். முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவும் அவர்களில் ஒருவராக இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அதேவேளை ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த சிலர் ஜனாதிபதி ஒருவர் புதிதாக பதவியேற்றால் ஆளுநர்களை மாற்றுவது மரபு என்றனர். ஜனாதிபதியின் செயலை நியாயப்படுத்துவதே அவர்களது நோக்கமாகும். 

இந்த இரண்டும் அடிப்படையற்ற வாதங்களாகும். சரத் சில்வா நினைத்தால் எதனையும் சட்ட விரோதம் என்று நிரூபிப்பார் அல்லது அதனையே சட்டபூர்வமானது என்றும் நிரூபிப்பார். ஹெல்பிங் ஹம்பாந்தோட்ட வழக்கில் மஹிந்த ராஜபக்‌ஷவை தப்பிக்கச் செய்த அவர் பின்னர் அதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்டார். ஆனால் ஆளுநர் நியமனம் தொடர்பாக அவர் முன்வைத்த கருத்து விவாதத்துக்கே இடமில்லாமல் பிழை என்பதை அரசியலமைப்பு துல்லியமாக எடுத்துக் கூறுகிறது. 

அரசியலமைப்பில் 154 ஆ (2) வாசகம் ஆளுநர் ஜனாதிபதியால் நியமிக்கபப்டுவதோடு அவர் மீது ஜனாதிபதியின் திருப்தி இருக்கும் வரை அவர் பதவியில் இருப்பார் என்று கூறுகிறது. அதாவது ஜனாதிபதி ஆளுநர் ஒருவரை விரும்பாவிட்டால் அவரை பதவிநீக்கம் செய்ய ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்கிறது. அதன் படியே கடந்த 15 ஆம் திகதி ஜனாதிபதி வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் மற்றும் வடமேல் மாகாண ஆளுநர், முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோரை பதவி நீக்கம் செய்தார். 

சாதாரண தொழிலாளர்களைப் போல் உயர் பதவி வகிப்போர் பதவி நீக்கம் செய்யப்படுவதில்லை. அவர்கள் இராஜினாமாச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதே வழமையாகும். கரன்னகொட, யஹம்பத் மற்றும் தியாகராஜா ஆகியோருக்கும் அவ்வாறு இராஜினாமாச் செய்யுமாறு கூறப்பட்டதாம். ஆனால் அவர்கள் இராஜினாமாச் செய்யாதமையாலேயே பதவிநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த 17 ஆம் திகதி ஜனாதிபதி, வட மாகாணத்துக்கு இதற்கு முன்னரும் அம் மாகாணத்தில் ஆளுநராக கடமையாற்றிய மூத்த நிர்வாக அதிகாரியான பி.எஸ்.எம். சார்ள்ஸ்ஸையும் கிழக்கு மாகாணத்துக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளர் செந்தில் தொண்டமானையும் வடமேல் மாகாணத்துக்கு முன்னாள் அமைச்சரான  லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தனவையும் நியமித்தார். 

புதிதாக ஜனாதிபதி ஒருவர் பதவியேற்றதன் பின்னர் ஆளுநர்களை மாற்றுவது மரபு என்பது ஐ.தே.க காரர்களின் பலவீனமான வாதமாகும். மைத்திரிபால சிறிசேன தவிர்ந்த எந்தவொரு ஜனாதிபதியும் தாம் பதவியேற்வுடன் ஆளுநர்கள் அனைவரையும் பதவிநீக்கம் செய்யவில்லை.

2015 ஆம் ஜனவரி மாதம் ஜனாதிபதியாக பதவியேற்ற மைத்திரி மட்டும் அதேமாதத்தில் சகல ஆளுநர்களையும் வெளியேற்றி புதிய ஆளுநர்களை நியமித்தார். 

மாகாண ஆளுநர் பதவியானது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வாக கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறைமையின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட பதவியொன்றாகும். அதிகார பரவலாக்கல் என்ற எண்ணக்கருவை அமலாக்கும் போது ஆளுநர் மிக முக்கிய பங்கை ஆற்ற வேண்டியவராவார். மத்திய அரசாங்கத்துக்கும் அதிகார பரவலாக்கலுக்குரிய அலகான மாகாண சபைக்கும் இடையிலான இணைப்பாளராகவே அவர் செயற்பட வேண்டும். 

எப்போதும் போலவே இம்முறையும் மாகாண ஆளுநர்களை நீக்குவதிலும் புதிதாக நியமிப்பதிலும் கொள்கை என்ற விடயம் சம்பந்தப்பட்டதாக தெரியவில்லை. அதாவது அதிகார பகிர்வை சீர்படுத்துவதற்காக இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக, ஐ.தே.கவின் அரசியல் தேவைக்காகவே இம்மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவே தெரிகிறது.

கடந்த பொதுத் தேர்தலில் ஐ.தே.க மாவட்ட அடிப்படையில் ஓர் ஆசனத்தையாவது பெறாது படுதொல்வி அடைந்தது. இதனால் வெறுப்புற்ற கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சியை கலைத்துவிட நினைத்ததாக அக்கட்சியின் முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் நவின் திஸாநாயக்க அண்மையில் டெய்லி மிரருடனான நேர்காணல் ஒன்றின் போது கூறியிருந்தார். 

ஆனால், ரணில் கடந்த வருடம் மே மாதம் பிரதமராகவும் ஜூலை மாதம் ஜனாதிபதியாகவும் பதவியேற்றதன் பின்னர், அவருக்குள்ளும் அவரது கட்சிக்காரர்களுக்குள்ளும் மீண்டும் முழு அதிகாரத்துடன் பதவிக்கு வருவதற்கான புதிய எதிர்ப்பார்ப்புகள் மலர்ந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

சட்டப்படி உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களை நடத்தியிருந்தால் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் ஐ.தே.கவும் நிச்சயமாக படுதோல்வி அடைந்திருக்கும். எனவேதான் பணம் இல்லை என்று ஜனாதிபதி அத்தேர்தல்களை தடுத்தார். உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களையோ, மாகாண சபைத் தேர்தல்களையோ, நடத்தாமல் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்று உலகமெங்கும் இருந்து கடன்களை பெற்று மக்களுக்கு சலுகை வழங்கி, அடுத்த வருடம் நேரடியாக ஜனாதிபதி தேர்தலை நடத்தி வெற்றி பெறுவதே ஐ.தே.கவின் நோக்கமெனத் தெரிகிறது.

இதற்கான பிரசார வேலைகளை ஜனாதிபதி இப்போதே ஆரம்பித்துள்ளார். ஏற்கெனவே இருக்கும் கடனுக்கு மேல் நாணய நிதியத்திலிருந்து கிடைத்திருக்கும் புதிய கடன் தொகையின் காரணமாக நாட்டில் நெருக்கடி நிலை சற்று தளர்ந்துள்ளது. அது தமது சாமர்த்தியம் என்று அவர் காட்டிக் கொள்கிறார்.

கடந்த சனிக்கிழமை, கேகாலையில் நீர் விநியோக திட்டமொன்றை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதும் அவர் தாமே நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தை ஆரம்பித்ததாக கூறினார். அது உண்மையல்ல. கடந்த வருடம் மார்ச் மாதம் ஜனாதிபதி கோட்டாபயவே அதனை ஆரம்பித்தார்.  

அத்தோடு, ரணில் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிக்களை தம்மோடு சேர்த்துக் கொள்ளவும் முயல்கிறார். இதற்கிடையில் அரச இயந்திரத்தை தமது கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் அவர் நடவடிக்கை எடுத்து வருகிறார். தெரிவு செய்யப்பட்ட மாகாண சபைகள் இல்லாத நிலையில் மாகாண ஆளுநர்களே மாகாண நிர்வாகத்தை நடத்தி வருகிறார்கள். எனவே ஆளுநர்களாக தமக்கு வேண்டியவர்களை நியமிப்பதன் மூலம் மாகாண நிர்வாகத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அடுத்த ஜனாதிபதி தேர்தலின் போது பயனடைய அவர் முயல்வதாக தெரிகிறது. இவற்றோடு அவர் தமிழ் மக்களின் ஆதரவை பெறும் நோக்கில் வாரம் ஓர் எதிர்ப்பார்ப்பை வழங்கி, தமிழ் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். 

ஆளுநர்கள் விடயத்தில் வட மாகாண மக்களுக்கு சகப்பான அனுபவங்களே அதிகம் கிடைத்துள்ளன. 1988 முதல் 1990 ஆம் ஆண்டு ஓகஸ்ட் வரை இருந்த இணைந்த வட, கிழக்கு மாகாண சபை பதற்ற நிலை காரணமாக முறையாக இயங்கவில்லை. போர் காலத்தில் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபையொன்று வடக்கில் இருக்கவில்லை. அப்போது இருந்த ஆளுநர்கள் நேரடியாகவே இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்தனர். போர் முடிவடைந்ததன் பின்னரும் 2015 ஆண்டு வரை இராணுவ அதிகாரி ஒருவரே ஆளுநராக இருந்தார். அவருக்குப் பதிலாக சிவிலியன் ஆளுநர் ஒருவரை நிமிக்குமாறு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எவ்வளவோ கோரிக்கை விடுத்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அதற்கு இணங்கவில்லை. 

பின்னர் 2015 ஆம் ஆண்டு ‘நல்லாட்சி' அரசாங்கம் சிவிலியன் ஆளுநர் ஒருவரை நியமித்த போதிலும் பின்னர் வந்த ஆளுநர்களும் மாகாண சபையால் நிறைவேற்றப்பட்ட பல பிரேரணைகளுக்கு ஒப்புதல் வழங்கவில்லை என விக்னேஸ்வரன கூறியிருந்தார். ஏனெனில் ஆளுநர்கள் மத்திய அரசாங்கத்தின் அரசியல் கருவிகளாகவே செயற்படுகின்றனர். 

1993 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல்களின் போது தென் மற்றும் வடமேல் மாகாண சபைகளின் பெரும்பாலான ஆசனங்களை சந்திரிகாவின் பொதுஜன ஐக்கிய முன்னணியும் அதனோடு இணைந்து செயற்பட்ட ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியும் பெற்றுக் கொண்டன. ஆனால் தென் மாகாண ஆளுநர் பாக்கீர் மாக்காரும் வட மேல் மாகாண ஆளுநர் மொன்டேகு ஜயவிக்ரமவும் ஜனாதிபதி டி.பி விஜேதுங்கவின் ஆலோசனைப் படி ஐ.தே.கவைச் சேர்ந்த இருவரை முதலமைச்சர்களாக நியமித்தனர். இது அப்போது பெரும் அரசியல் நெருக்கடியை தோற்றுவித்தது. 

அதேபோல் 1994 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் பொதுஜன ஐக்கிய முன்னணிக்கும் ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு முதலமைச்சர் சந்திரிகா குமாரதுங்க மேல் மாகாண சபையில் தமது பெரும்பான்மை பலத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டது. அப்போது மாகாண சபையை கலைத்துவிடுமாறு ஆளுநர் எஸ். சர்வாநந்தாவுக்கு சந்திரிகா ஆலோசனை வழங்கலாம் என்று வதந்திகள் பரவின. எனவே ஜனாதிபதி விஜேதுங்க சர்வாநந்தாவை ஆளுநர் பதவியியலிருந்து நீக்கி, ஐ.தே.க.,வைச் சேர்ந்த டி.எம் சுவாமிநாதனை ஆளுநராக நியமித்தார். 

நல்லிணக்கம் ஏற்படும் வகையில் முறையாக அதிகார பகிர்வை அமலாக்க மத்திக்கும் மாகாண சபைக்கும் இடையிலான உறவை சீராக பேணி வருவதே ஆளுநரின் தார்மிக கடமையாக வேண்டும். ஆனால் இதுவரை அவர்கள் மத்தியின் அரசியல் கருவியாகவே செயற்பட்டுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .