2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

இது தீர்வா? நரகத்தின் இடைவேளையா?

Johnsan Bastiampillai   / 2023 ஜூன் 29 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

எம்.எஸ்.எம் ஐயூப்

 

 

 

இம்மாதம் 29ஆம் திகதி முதல், ஐந்து நாள்கள் வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 30ஆம் திகதி விசேட வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டதாலேயே தொடர்ச்சியாக, வங்கிகளுக்கு ஐந்து நாள் விடுமுறை கிடைத்துள்ளது. 

29ஆம் திகதி ஹஜ்ஜூப் பெருநாள்; 30ஆம் திகதி விசேட விடுமுறை; ஜூலை முதலாம், இரண்டாம் திகதிகள் சனி, ஞாயிறு விடுமுறை தினங்கள்; ஜூலை மூன்றாம் திகதி அதி போயா தின விடுமுறை என்று ஐந்து நாள்கள் விடுமுறையாகிறது.

இந்த ஐந்து நாள்களை, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான வேலைத்திட்டத்தின் கீழ், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு பணிகளை ஒழுங்குபடுத்துவதற்காக பயன்படுத்துவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. ஆனால், இந்த ஐந்து நாள்களில் வங்கிகளில் என்ன நடைபெறப்போகிறது என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. 

இலங்கை வங்குரோத்து அடைந்த நிலையிலேயே சர்வதேச நாணய நிதியம் தமது வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போகிறது. அத்திட்டத்தின் கீழ், இலங்கை அரசாங்கம் தமது நிதி நிலைமையை சீராக்கிக் கொள்வதற்காக, நாணய நிதியம் ஆலோசனைகளை வழங்கியுள்ளது. 

வருமான வரிகளை அதிகரிக்க வேண்டும். மின்சாரம் மற்றும் எண்ணெய் விலையை அதிகரிக்க வேண்டும்; இறக்குமதிகளைக் கட்டுப்படுத்த வேண்டும்; வட்டி வீதத்தை அதிகரிக்க வேண்டும் என நாணய நிதியம் அரசாங்கத்துக்கு வழங்கிய பல்வேறு ஆலோசனைகளை, அரசாங்கம் நிறைவேற்றி வருகிறது. அத்தோடு, அந்நிதியம் இலங்கை அரசாங்கத்துக்கு நான்கு வருடங்களுக்கு 2.9 பில்லியன் டொலர் கடனையும் வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. 

அத்தோடு அரசாங்கம், தமக்கு கடன் வழங்கிய நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களை அணுகி, தமக்கு வழங்கிய கடன்களை மறுசீரமைக்க அந்நாடுகள் மற்றும் நிறுவனங்களை இணங்கச் செய்ய வேண்டும். 

உண்மையிலேயே அந்நாடுகள் மற்றும் நிறுவனங்கள், அதற்கான உத்தரவாதத்தை கொள்கை ரீதியாக அளித்ததன் பின்னரே, நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை இலங்கைக்கான கடன் தொகையை அங்கிகரித்தது. 

ஆனால், கடன் மறுசீரமைப்பின் விவரங்கள் தொடர்பாக அதாவது, இலங்கைக்கு வழங்கிய கடனில் ஒரு தொகையை கைவிட்டுவிடுவதா? அவ்வாறாயின் அவ்வாறு கழித்துவிடும் வீதம் எவ்வளவு? வட்டியை கைவிட்டுவிடுவதா அல்லது வட்டியில் ஒரு பகுதியை விட்டுவிடுவதா, அவ்வாறாயின் எத்தனை வீதம் விட்டுவிடுவது? கடன் திருப்பிச் செலுத்தவதை ஒத்திப் போடுவதா, அவ்வாறாயின் எவ்வளவு காலத்துக்கு போன்றவை தொடர்பாக இன்னமும் அரசாங்கமும் அந்த நாடுகளும் நிறுவனங்களும் உடன்பாடுகளை செய்து கொள்ளவில்லை. 

இந்த விடயங்கள் தொடர்பாக, சகல கடன் உரிமையாளர்களும் இணங்க வேண்டும். எல்லாக் கடன்காரர்களையும் சமமாக மதித்து செயற்படுவதாக, அரசாங்கம் நாணய நிதியத்துக்கு உறுதியளித்துள்ளது. அதையே கடன்காரர்கள் விரும்புவர். 

கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில், இந்த விவரங்கள் தொடர்பான உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்துக்கு அறிவித்து இருந்தது. ஆனால், அந்த விடயம் இன்னமும் நடைபெறவில்லை. மேற்படி சகல விடயங்கள் தொடர்பாகவும் சகல கடன் வழங்குநர்களும் ஒரே நிலைப்பாட்டுக்கு வருவது கடினமான விடயம் என்பதாலேயே இந்த தாமதம் இடம்பெற்றுள்ளது. 

ஆயினும், இலங்கை அரசாங்கம் அதைக் கண்டிப்பாக செய்தே ஆக வேண்டும். நாணய நிதியம் இலங்கைக்கு வழங்குவதாக அறிவித்த கடன் தொகையான 2.9 பில்லியன் டொலரில் கடந்த மார்ச் மாதம் 330 மில்லியன் டொலர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மிகுதி தொகை எட்டு தவணைகளில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும், ஏற்கெனவே இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடன், கடன் மறுசீரமைப்பு தொடர்பாகச் செய்து கொள்ளும் உடன்பாட்டின் மீதே, அடுத்த தவணைகள் தங்கியிருக்கின்றன.

இலங்கை அரசாங்கம் உள்நாட்டில் வங்கிகள், சேமலாப நிதியம் போன்ற நிதியங்கள் போன்றவற்றிடம் இருந்து பெற்ற கடனையும் மறுசீரமைக்க வேண்டும் என்று நாணய நிதியம் கூறவில்லை. அந்நிதியம் இலங்கைக்கான கடனை மார்ச் 20ஆம் திகதி அங்கிகரித்து விட்டு, அதன் பிரதிநிதிகள் 21ஆம் திகதி நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இந்த விடயம் தொடர்பாக கேட்கப்பட்டது. உள்நாட்டு கடன்களை மறுசீரமைப்பதா இல்லையா என்பதை இலங்கை அரசாங்கம் தான் தீர்மானிக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர். ஆயினும், நாம் வழங்கிய கடனை மறுசீரமைப்பதாக இருந்தால், அரசாங்கம் உள்நாட்டில் பெற்ற கடனையும் மறுசீரமைக்க வேண்டும் என்று கடன் வழங்கிய நாடுகள் தான் கூறியுள்ளன. அதனை தட்டிக்கழிக்க அரசாங்கத்தால் முடியாது. அந்தப் பணியைப் பற்றிய விரிவான முடிவுகளை எடுப்பதற்கே, ஐந்து நாள் விடுமுறையை மத்திய வங்கி மற்றும் ஏனைய வங்கிகளின் அதிகாரிகள் பயன்படுத்தப் போகிறார்கள். 

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு இலங்கையின் வங்கித் துறையையும் சேமலாப நிதியம் போன்ற நிதியங்களையும் பாதிக்கலாம் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவும் நிதித்துறைக்கு பொறுப்பான அமைச்சர்களும், அது அவ்வாறு பாதிக்காது என்று கூறி வருகிறார்கள். 

ஆயினும், இறக்குமதிகள் குறைந்து, கைத்தொழில்கள் பாதிக்கப்பட்டு, பொருளாதாரம் சுருங்கி, வங்கிகளின் வருமானம் வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையிலேயே, அவற்றிடமிருந்து அரசாங்கம் பெற்ற கடன்கள் மறுசீரமைக்கப்படப் போகின்றன. இந்தக் கடன் மறுசீரமைப்பு விடயம், நாணய நிதியத்தின் வேலைத் திட்டம் எவ்வளவு கஷ்டமானது என்று எடுத்துக் காட்டுகிறது.

இந்த நிலையிலேயே, அரசாங்கம் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுத்தவிட்டது என்பதைப் போல், ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் தலைவர்கள் தற்போது கருத்து வெளியிட்டு வருகிறார்கள். கடந்த வருடத்தில் நிலவிய மிகவும் கஷ்டமான நிலைமை, தற்போது சற்று தளர்ந்து இருப்பதாலேயே அவர்கள் அவ்வாறு பிரசாரம் செய்து வருகிறார்கள். ஆனால், நாடு இன்னமும் நெருக்கடியில் இருந்து மீளவில்லை. 

இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது அடிப்படையில், வெளிநாட்டு செலாவணி நெருக்கடியாகும். எனவே, அரசாங்கம் கட்டடத் தொழில் போன்ற பல கைத்தொழில்கள் பாதிக்கப்படுவதையும் இறக்குமதியால் கிடைத்த சுங்க வரி குறைவதையும் பொருட்படுத்தாது, தொடர்ந்தும் வெளிநாட்டு செலாவணி வெளியேறுவதை தடுப்பதற்காக இறக்குமதிகளை தடைசெய்தது. 

அத்தோடு, வெளிநாட்டு கடன்களை திருப்பிச் செலுத்துவதையும் அரசாங்கம் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி நிறுத்தியது. இதற்கிடையே இவ்வருட ஆரம்பத்தில் இருந்து உல்லாசப் பிரயாணத்துறை, வெளிநாட்டுத் தொழில்கள் ஆகியவற்றின் மூலம் கிடைத்த வெளிநாட்டுச் செலாவணியும் சற்று அதிகரித்தது. 

இந்நிலையிலேயே, நாணய நிதியத்தின் கடன் அனுமதிக்கப்பட்டது. அதன் முதல் தொகையும் நாட்டை வந்தடைந்தது. அதற்கு முன்னர் உலக வங்கியின் முதலீட்டுப் பிரிவான சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் இலங்கையில் நான்கு வங்கிகளுக்கு 400 மில்லியன் டொலர் கடனை வழங்க தீர்மானித்தது. உலக வங்கி, எரிவாயு கொள்வனவுக்காக 70 மில்லியன் டொலரை வழங்கியது. 

இவ்வாறு, வெளிநாட்டு செலாவணி வெளியேறும் வழிகள் அடைக்கப்பட்டு, வெளிநாட்டுப் பணம் உள்ளே வரும் நிலை உருவாகவே, இலங்கையின் வெளிநாட்டு செலாவணி கையிருப்பு அதிகரித்து, ரூபாயின் பெறுமதி அதிகரிக்கத் தொடங்கியது. 

அதன் காரணமாக, எண்ணெய் போன்ற சில பொருட்களின் விலை குறைந்தது. எண்ணெய் விலை ஏனைய பல பொருட்களின் விலையை நிர்ணயிப்பதால், அப்பொருட்களின் விலையும் குறைந்தது. எரிபொருளுக்கும் எரிவாயுவுக்குமான வரிசைகள் இல்லாமல் போய்விட்டன. 

இது, நாடு அபிவிருத்தி அடைந்தோ, பொருளாதார நெருக்கடி தீர்ந்தோ ஏற்பட்ட நிலைமை அல்ல! இது, நாட்டில் பொருளாதார நடவடிக்கைகள் தடைப்பட்டதன் விளைவாக ஏற்பட்ட இடைக்கால நிலைமையாகும். 

நாணய நிதியத்தின் முதலாவது கடன் தொகைக்குப் பின்னர், மே மாதம் 29ஆம் திகதி ஆசிய அபிவிருத்தி வங்கியும் இலங்கைக்கு 350 மில்லியன் டொலர் கடனை வழங்கத் தீர்மானித்தது. இந்தியாவிடம் ஒரு பில்லியன் டொலர் கடன் பெறுவதற்கும் இலங்கை,  பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அத்தோடு, அரசாங்கம் உலக வங்கியிடம் மேலும் 500 மில்லியன் டொலர் கடனைப் பெறப் போகிறது. இதனாலும் மேலும் நாட்டின் பொருளாதார நிலை சீராகும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 

எனினும், கிடைக்கும் வெளிநாட்டுப் பணம் அனைத்தும் நாம் எப்போதோ திருப்பிச் செலுத்த வேண்டிய கடன்களாகும். நாணய நிதியத்திடம் இருந்து பெறும் பணத்தையும், ஏற்கெனவே கடந்த சில வருடங்களாக நிலுவையில் உள்ள அந்நிதியத்தின் கடன் தொகையையும் நாலரை ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் செலுத்த ஆரம்பிக்க வேண்டும். 

கடன் மறுசீரமைப்பு மூலம் வெளிநாட்டு கடன்களை திருப்பிச் செலுத்துவதை ஒத்திப் போட்டாலும், ஒரு நாள் அவற்றையும் திருப்பிச் செலுத்த வேண்டும். அத்தோடு, மேலும் கடன் பெறாத நிலையையும் உருவாக்க வேண்டும். அதற்கான திட்டம் ஏதும் இல்லாவிட்டால், தற்போதைய இலகு நிலை, சிலர் கூறுவதைப் போல் ‘நரகத்தின் இடைவேளை’ (interval in the hell) ஆகவே அமையும். 

உற்பத்தி மற்றும் சேவைப் பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதே, இந்தப் பிரச்சினைக்கான தீர்வாகும் என பொருளியல் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆயினும், அரசாங்கத்திடம் அதற்கான திட்டம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. அதுவே, நாடு எதிர்நோக்கி இருக்கும் மிகப் பெரும் பிரச்சினையாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X