Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Thipaan / 2016 நவம்பர் 17 , மு.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகலிங்கம் கோபிகிருஷ்ணா
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. ஆரம்பத்திலிருந்தே, கருத்துகளைப் பிளவுபடுத்தக்கூடிய ஒருவராக இருந்தார். ஒன்றில் அவரை முழுமையாக ஆதரிப்பவர்களாகவோ அல்லது அவரை முழுமையாக எதிர்ப்பவர்களாகவோ தான், இந்தியர்கள் காணப்பட்டனர். தற்போது அவரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நாணயத் தாள்களை ஒழிக்கும் செயற்பாடும், அவ்வாறான கருத்துகளையே பெற்றுள்ளன.
இந்தியாவில் கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கும் ஊழலைக் கட்டுப்படுத்துவதற்குமான நடவடிக்கையாக, 500, 1,000 ரூபாய்த் தாள்கள், அதிரடியாக இல்லாது செய்யப்பட்டன. இரவு விடுக்கப்பட்ட அறிவிப்பு, நள்ளிரவு முதலேயே அமுலுக்கு வந்தது. பழைய பணத்தை, புதிய நாணயத் தாள்களாக மாற்றிக் கொள்ள வேண்டும். சட்டத்துக்குப் புறம்பான வகையில் பணத்தைக் கொண்டோர், இவற்றை மாற்ற முடியாது. எனவே, கறுப்புப் பணத்தைக் கொண்டிருப்போர், பெறுமதியற்ற கடதாசிகளையே கொண்டிருப்பர் என்பது தான், இதன் எதிர்பார்ப்பு. இந்தியாவில் காணப்பட்ட அதிக பெறுமதியான நாணயத் தாள்களான இவை, திடீரெனப் பெறுமதியற்றன ஆக்கப்பட்டால், நாணயத் தாள்களாகக் காணப்படும் கறுப்புப் பணம் பாதிக்கப்படுமென்பது தான் எதிர்பார்க்கப்பட்டது.
கறுப்புப் பணத்தை ஒழிக்கப் போவதாகத் தெரிவித்து ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம், 2 ஆண்டுகள் கழிந்தும் அவ்விடயத்தில் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக் காணப்பட்ட நிலையிலேயே, இந்தத் திடீர் அறிவிப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இந்த அறிவிப்பு, இந்தியாவை இரண்டு பிரிவுகளாகப் பிரித்து வைத்துள்ளது என்பது தான் உண்மையானது.
முதலில், இந்த நடவடிக்கையின் சாதக, பாதகங்களைப் பார்ப்பது பொருத்தமானது. இந்தியாவில் கறுப்புப் பணமென்பது மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. அந்நாட்டின் வரிக் கட்டமைப்பும் அதனை அமுல்படுத்தும் நடவடிக்கைகளும், கடந்த காலங்களில் போதுமானளவு சிறப்பாகச் செயற்பட்டிருக்காமை காரணமாக, பல பில்லியன் இந்திய ரூபாய்கள் பெறுமதியிலான கறுப்புப் பணம் காணப்படுவதாக அனுமானிக்கப்படுகிறது. அதேபோல், சட்டத்துக்குப் புறம்பான முறையில் சம்பாதிக்கப்பட்ட பணமும் உள்ளது. போதைப்பொருள் கடத்தல், ஒப்பந்தக் கொலைகள், பயங்கரவாத நடவடிக்கைகள் ஆகியன மூலம், இந்தியாவிலுள்ள வர்த்தகர்களும் அரசியல்வாதிகளும், பணங்களை உழைத்துள்ளார்கள் எனக் கருதப்படுகிறது. ஆகவே, வரி செலுத்தப்பட வேண்டிய பணத்தை, எவ்வழியிலாவது பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை எடுப்பது, காலத்தின் கட்டாயமாகும். ஆகவே, ஏதாவது செய்ய வேண்டுமென்ற பிரதமர் மோடியின் நடவடிக்கை, பாராட்டப்பட வேண்டியது.
500, 1,000 ரூபாய்த் தாள்கள், பெறுமதியற்றன என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தங்களிடம் இருக்கின்ற பழைய பணங்கள் அனைத்தையும், வங்கிக்குக் கொண்டு சென்று, புதிய தாள்களை அல்லது 100 ரூபாய்த் தாள்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், இரண்டரை இலட்சத்துக்கும் அதிகமான பண வைப்பை, ஊழல் ஒழிப்பு அதிகாரிகளும் வங்கி அதிகாரிகளும் கண்காணிப்பர் என அறிவிக்கப்படுகிறது. ஆகவே, ஒருவரிடம் 10 மில்லியன் ரூபாய், கணக்கில் காட்டப்படாத பணம் காணப்பட்டால், அதை அவரால் வைப்பிலிட முடியாது. வைப்பிலிட்டால், கணக்குக் காட்டாத குற்றச்சாட்டு அவர் மீது விதிக்கப்படும். ஏற்கெனவே அவரிடம் வங்கியில் காணப்பட்டால் மாத்திரமே, அவர் அப்பணத்தைப் பயன்படுத்த முடியும்.
இதற்கு முன்னர் இந்தியாவில்,1946ஆம் ஆண்டிலும் 1978ஆம் ஆண்டிலும், பணத்தாள்கள் பெறுமதியற்றனவாக அறிவிக்கப்பட்டது. அந்த இரு சந்தர்ப்பங்களிலும், அந்த முயற்சி பெரிதான வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருக்கவில்லை. ஆகவே, தோல்வியடைந்த முறையை இம்முறையும் பின்பற்ற வேண்டுமா என்ற கேள்வி, நியாயபூர்வமானது. இதற்கு முன்னர் இரு தடவைகளிலும் பெறப்படாத வெற்றி, எவ்வாறு இம்முறை மாத்திரம் பெறப்பட முடியும்? ஆனால், அவ்விரண்டு தடவைகளும், எவ்வாறு அது நடைமுறைப்படுத்தப்பட்டது என்பது குறித்த ஆதாரங்கள் குறைவாகவே உள்ளன. ஆகவே, இந்தத் திட்டத்தைச் சரியான முறையில் அமுல்படுத்தினால், எவ்வளவு தூரத்துக்கு நன்மையைப் பெற முடியுமெனப் பார்க்க முடியும்.
ஆனால் மறுபக்கமாக, இந்தியாவில் காணப்படும் கறுப்புப் பணத்தில் எவ்வளவு சதவீதமான பணம், நாணயத்தாள்கள் வடிவில் காணப்படுகின்றன என்பது உறுதியில்லாமலேயே உள்ளது. கறுப்புப் பணங்களை, நகைகளாகவும் வீடுகளாகவும் காணிகளாகவும் மாற்றுவது, வரி ஏய்ப்புச் செய்வோரின் வழக்கமாகும். அத்தோடு, சுவிஸ் வங்கி போன்ற வெளிநாட்டு வங்கிகளில், வெளிநாட்டுப் பணங்களாக வைத்திருப்பவர்களும் ஏராளம். ஆகவே, பணத்தை, நாணயத் தாள்களாக வைத்திருப்பவர்கள் மாத்திரமே, இவ்வழியில் சிக்குவர். பொதுவான கணிப்பு என்னவெனில், அனேகமாக ‘புத்திசாலி’ மோசடியாளர்கள், கறுப்புப் பணத்தை, நாணயத் தாள்களாக வைத்திருப்பதில்லை என்பது தான். எனவே, மோசடி செய்பவர்களில் ஒரு பிரிவினர் தான் சிக்குவதற்கு வாய்ப்புகளுண்டு.
அத்தோடு, இந்த நடவடிக்கை திடீரென எடுக்கப்பட்டதால், சாதாரண மக்கள், தங்களுடைய நாணயத் தாள்களை மாற்றுவதும், வங்கியிலிருந்து பணத்தை மீளப்பெறுவதும் கட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே மேற்கொள்ளப்பட்டன. வங்கிகளில் பணம் காணப்பட்டாலும், ஒரு நாளைக்கு 2,000 ரூபாய் மாத்திரமே, தன்னியக்க வங்கிய இயந்திரங்களிலிருந்து மீளப்பெற அனுமதிக்கப்பட்டது. தற்போது அது, 2,500ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. வங்கிகளிலிருந்து, ஒரு வாரத்துக்கு 24,000 ரூபாயையே, அதிகபட்சமாக மீளப்பெற முடியும். ஒரு நாளைக்கு, 4,000 ரூபாயை மாற்றிக் கொள்ள முடியும். பணத்தை மீளப்பெறுவதற்காகவும் பணத்தை மாற்றிக் கொள்வதற்காகவும், மிக மிக நீண்ட வரிசைகளில், மக்கள் காத்திருக்க வேண்டியேற்பட்டுள்ளது.
பணத்தை மீளப்பெறுவதற்கு, அடையாள அட்டைகளைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு கடந்த சில நாட்களாக, தேர்தலில் வாக்களிக்கும் போது விரலில் பூசப்படும் மை போன்று, பணத்தை மீளப்பெற்றாலும் மை பூசப்படுகிறது. எனவே, பணத்தை யார் மீளப்பெற்றார்கள் என, வங்கிகளுக்கிடையில் ஒருங்கிணைப்பு இல்லை என்பது தெளிவாகிறது. “நான் உழைத்த பணத்தை, நான் மீளப் பெறுவதற்கு, எதற்காக என் விரலில் மை பூச வேண்டும்?” என்று, ஒரு பிரிவினர் கேள்வியெழுப்புகிறார்கள். ஆனால், தினக்கூலி செய்பவர்களை, 4,000 ரூபாய்க்கு 500 ரூபாய் என்ற அடிப்படையில், செல்வந்தர்கள் கூலிக்கமர்த்தி, பணத்தை மாற்றுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனவே தான், பணத்தை மாற்றியவர்களை அடையாளம் காண வேண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஓரளவு வசதி படைத்தவர்கள், நாளாந்தத் தேவைகளுக்காகப் பணத்தட்டுப்பாட்டை எதிர்கொள்ள வேண்டியேற்படாது. கடனட்டைகளும் ஏனைய இணைய வழிச் சேவைகளும், அவர்களுக்கு உதவ முடியும். வசதி குறைந்தவர்கள் தான், இந்நடவடிக்கையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மாற்றீடாக, PayTM என்ற நிறுவனத்துடன் இணைந்து, திறன்பேசி மூலமான கொடுப்பன நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் திறன்பேசி இல்லாதவர்கள்? அவசர தேவைகளான வைத்தியசாலைகள் போன்றவற்றில், பழைய நாணயத் தாள்கள் ஏற்கப்படுகின்ற போதிலும், அருகில் அரிசி வாங்கும் கடையில் அரிசி வாங்கினால் தானே, வீட்டில் அடுப்பு எரிய முடியும்?
ஆனாலும், இவற்றைக் குறுகிய காலப் பிரச்சினைகள் என்றே கருத வேண்டியுள்ளது. இன்னும் ஒரு மாத காலப்பகுதிக்குள், இப்பிரச்சினைகள் ஓரளவுக்குக் குறைவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, கறுப்புப் பணத்தை ஒழித்தல், அதன் மூலமாக நாட்டுக்கு நன்மை கிடைத்தல் என்ற நீண்டகாலத் தீர்வுக்காக, குறுகிய காலக் கஷ்டங்களை, மக்கள் தாங்கிக் கொள்ள வேண்டுமென்பது, இத்திட்டத்தை ஆதரிப்போரின் கருத்தாகும். சர்வதேச நாணய நிதியம், சுவீடன் நிதியமைச்சர், ஐரோப்பிய ஆணைக்குழுவின் உப தலைவர், வெளிநாட்டு ஊடகங்கள் சில என, இந்தத் திட்டத்தைப் பாராட்டுவதையும், அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மறுபக்கமாக, நரேந்திர மோடியை எதிர்ப்பவர்கள் என்ற பிரிவு காணப்படுகிறது. அவர்கள், இந்தத் திட்டத்தை முழுமையாக எதிர்ப்பவர்களாக இருப்பதோடு, இதனால் ஏற்படும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர், நோக்கம் சரியாக இருந்தாலும், அமுல்படுத்தலில் இன்னமும் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற நியாயமான விமர்சனத்தை முன்வைக்கிறார்கள். இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 7 நாட்களில், இது சம்பந்தமான 33 மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக, சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மாரடைப்பு, தற்கொலை, உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாமை, வரிசையில் நிற்கும் போது ஏற்பட்ட மரணங்கள் என, இவற்றை வரிசைப்படுத்தலாம். இவற்றில் சில, தவிர்க்கப்படக் கூடியன என்ற வகையில், அமுல்படுத்தலில் இன்னமும் முன்னேற்றம் தேவை என்ற விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். மறுபக்கமாக, இதை அதிர்ச்சியான செய்தியாக வெளியிடுவதன் மூலம், கறுப்புப் பணத்தை வைத்திருப்போர், முன்னேற்பாடுகளைச் செய்ய முடியாது போக வேண்டும் என்ற நோக்கம் காணப்பட்டால், முன்னரே அனைவருக்கும் அறிவித்து இதைச் செய்வதால், பயன் கிட்டியிருக்காது.
எது எவ்வாறாக இருந்தாலும், பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கையின் பயன் தொடர்பாக முழுமையாக அறிவதற்கு, இன்னும் சில மாதங்கள் செல்லுமென்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை, இத்திட்டத்துக்கு ஆதரிப்போரும் எதிர்ப்போரும், ஒருவரையொருவர் முட்டி மோதிக் கொண்டிருக்கத் தான் போகிறார்கள் என்பது தான் யதார்த்தம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago