Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எஸ்.எம். ஐயூப் / 2020 ஓகஸ்ட் 23 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த ஐந்தாம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகள் பெற்ற ஆசன எண்ணிக்கையைப் பற்றியும் அது எதைக் காட்டுகிறது, அதன் விளைவுகள் எவ்வாறு அமையும் என்பவற்றைப் பற்றி, ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதில் பிரதானமாக, தமிழ்க் கட்சிகளின் பிரதான கூட்டணியாகக் கருதப்பட்டு வந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிலைமையைப் பற்றியே, பிரதானமாக ஆராயப்பட்டு இருந்தன.
2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில், 16 ஆசனங்களைக் கூட்டமைப்பு பெற்றிருந்தது. இம்முறை அந்த எண்ணிக்கை, 10 ஆகக் குறைந்துள்ளது.
நாட்டில் இரண்டு குழுக்கள், இதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்திருப்பதாகத் தெரிகிறது. ஒரு சாரார், தெற்கே இருக்கிறார்கள்; மற்றைய சாரார், வடக்கில் இருக்கிறார்கள்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, கடந்த முறை வடக்கு-கிழக்கில், தமிழ் மக்களிடம் பெற்ற வாக்குகளில் ஒரு பகுதியை, அதாவது ஐந்தில் ஒரு பகுதியை, கூட்டமைப்பை விடத் தமிழ்த் தேசியத்தைப் பற்றிப் பேசும் இரண்டு கட்சிகள், இம்முறை பெற்றுள்ளன.
சி.வி. விக்னேஸ்வரன் தலைமை தாங்கும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமை தாங்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸூம் இந்த வாக்குகளைப் பெற்றுள்ளன. அதேவேளை, மற்றொரு பகுதி வாக்குகளை டக்ளஸ் தேவாநந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் பெற்றுள்ளன.
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸூம் பெற்ற வாக்குகளைப் பார்த்து, தமிழர்கள் சிலர் மகிழ்சியடையும் அதேவேளை, ஈ.பி.டி.பியும் ஸ்ரீ ல.சு.கவும் பெற்ற வாக்குகளைப் பார்த்து, தெற்கில் சிலர் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
ஸ்ரீ ல.சு.க என்பது, பெரும்பான்மையினத் தலைமையுள்ள, பிராந்திய அல்லது, இனத்துவ ரீதியான அரசியலுக்குப் பதிலாக, தேசிய அரசியலை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாகும்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியாகிய ஈ.பி.டி.பி யின் பெயரில், ‘ஈழம்’ என்ற பதம் இருந்த போதிலும் தமிழ்த் தலைமைத்துவம் இருந்த போதிலும் தமிழர்களே கட்சி உறுப்பினர்களாக இருந்த போதிலும், தமிழ்த் தேசியம் பேசும் கட்சியல்ல! 1987ஆம் ஆண்டு, தனி நாட்டுப் பிரிவினைக் கொள்கையைக் கைவிட்டதிலிருந்து, அக்கட்சி தேசிய கட்சிகளுடன் இணைந்தே செயற்பட்டு வந்துள்ளது. எனவே, அக்கட்சியும் தேசிய அரசியலைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவே கருத வேண்டியுள்ளது.
அந்தவகையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பை விட்டுச் சென்ற வாக்காளர்கள், இரண்டு திசைகளை நோக்கிச் சென்றிருக்கிறார்கள் எனத் தெரிகிறது. ஒரு சாரார், தமிழ் கடும்போக்குவாதத்தை நோக்கியும் மற்றவர்கள், தேசிய அரசியலை நோக்கியும் சென்றிருக்கிறார்கள்.
கிழக்கில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன், இம்முறை மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவின் சார்பில், மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.
அதேவேளை, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான ‘பிள்ளையான்’ எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனும் வெற்றி பெற்றிருக்கிறார். இவரும் பொதுஜன பெரமுனவின் தீவிர ஆதரவாளர் ஆவார்.
ஸ்ரீ ல.சு.கவும் ஈ.பி.டி.பியும் வியாழேந்திரனும் பிள்ளையானும் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை ஆதரிக்கப் போகிறார்கள் என்பதை அறிந்தே, அக் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர் என்பது, முக்கியமான விடயமாகும்.
பொதுஜன பெரமுன, தமிழ் அரசியல்வாதிகள் நீண்ட காலமாக முன்வைத்து வரும் அரசியல் கோரிக்கைகளை, நிராகரிக்கும் கட்சி என்பது இரகசியம் அல்ல! அவர்கள், அதனை மறைக்க முற்படுவதும் இல்லை.
உதாரணமாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதவிக்கு வந்தவுடன், மேற்கொண்ட இந்திய விஜயத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 13ஆவது அரசமைப்புத் திருத்தம் உள்ளிட்ட அதிகாரப் பரவலாக்கல் முறைமையைப் பலப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், இந்தியாவிலிருந்தே அதைப் பகிரங்கமாக நிராகரித்த ஜனாதிபதி கோட்டாபய, “அதிகாரப் பரவலாக்கல் முறைமைக்குப் பதிலாக, பொருளாதார அபிவிருத்தியின் மூலமே, தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்” எனக் கூறியிருந்தார்.
நடந்து முடிந்த, பொதுத் தேர்தல் பிரசாரக் காலப்பகுதியில், பொதுஜன பெரமுனவின் பல தலைவர்கள், அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தோடு, அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தையும் இரத்துச் செய்ய வேண்டும் எனக் கூறிவந்தனர். இவ்வாறு இருக்கத்தக்கதாகத்தான், பொதுஜன பெரமுனவை ஆதரிக்கும் பிள்ளையான், டக்ளஸ், அங்கஜன் போன்றோருக்குத் தமிழ் மக்கள் வாக்குகளை அள்ளி வழங்கி இருக்கிறார்கள்.
இது எதைக் காட்டுகிறது? இவ்வாறு வாக்களித்தவர்கள், தமிழ்த் தலைவர்களின் மரபு ரீதியான அரசியல் சுலோகங்களையும் கோரிக்கைகளையும் நிராகரித்துள்ளனரா? அல்லது, அச்சுலோகங்களையும் கோரிக்கைகளையும் நிறைவேற்றிக் கொள்ள, கடந்த தேர்தல்களில் வாக்களித்ததைப் போலல்லாது இம்முறை, தமது அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வது முக்கியம் எனக் கருதி, அவர்கள் இக்கட்சிகளுக்கு வாக்களித்துள்ளனரா?
எவ்வாறு இருந்தாலும், இம்மக்களை அரவணைத்து, அவர்களைத் தேசிய அரசியல் நீரோட்டத்தில் நிரந்தரமாகச் சேர்த்துக் கொள்ள, அரசாங்கத்திடமும் ஆளும் கட்சியிடமும் திட்டம் இருக்கிறதா என்பதே, அடுத்த கேள்வியாகும்.
கடந்த வாரம், தனியார் தொலைக்காட்சி பேட்டியொன்றில், நீதி அமைச்சர் அலி சப்ரியும் இந்தப் பிரச்சினையைப் பற்றி, தமது கருத்துகளைத் தெரிவித்திருந்தார். “தமிழ் மக்கள், இன ரீதியான அரசியலை நிராகரித்து, தேசிய அரசியலில் கலந்து கொள்ள வரும் போது, அவர்களை அரவணைத்துக் கொள்ளும் பக்குவம், அரசாங்கத்திடமும் பெரும்பான்மையின சமூகத்திடமும் இருக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
அந்தப் பக்குவம் இருக்கிறதா என்ற கேள்வி, அமைச்சரவையை ஜனாதிபதி கோட்டாபய, புதன்கிழமை (12) நியமித்த போதும் எழுந்தது. அந்த நியமனங்களின் போது, முன்னாள் கடற்படை அதிகாரியும் சிவில் பாதுகாப்புப் படையின் முதலாவது பணிப்பாளர் நாயகமுமான சரத் வீரசேகரவுக்கு, மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இது, 2010ஆம் ஆண்டு, மேர்வின் சில்வாவுக்கு ஊடகத்துறை பிரதி அமைச்சர் பதவியை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கியமையை நினைவூட்டியது.
சில ஊடக நிறுவனங்களையும் ஊடகவியலாளர்களையும் தாக்கியதாக மேர்வின் சில்வாவுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இருந்த நிலையிலேயே, அவருக்கு ஊடகத்துறை பிரதி அமைச்சர் பதவியை, மஹிந்த வழங்கினார். அதேபோல், மாகாண சபைகளை வெறுக்கும் ஒருவருக்கே, மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பதவியை, கோட்டாபய ராஜபக்ஷ வழங்கியிருக்கிறார்.
பொதுவாக, “இலங்கையில் இனப்பிரச்சினை என்று, ஒன்றும் இல்லை” என்றே, கடும்போக்குக் கொண்ட பெரும்பான்மை இனத்தவர்கள் கூறி வருகின்றனர். எனவே, அவர்களது கண்ணோட்டத்தில், அதிகாரப் பரவலாக்கமோ, அதன் ஒரு வடிவமான மாகாண சபை முறைமையோ அவசியமில்லை. சரத் வீரசேகரவும் இந்த நிலைப்பாட்டிலேயே இருக்கிறார். அவரது பதவிப் பிரமாணத்தின் போது தெரிவித்த கருத்துகளும் இதையே காட்டுகின்றன.
இது, நீதி அமைச்சர் அலி சப்ரியின் நிலைப்பாட்டுக்கு எதிரானதாகும். மேற்படி பேட்டியின் போது, மாகாண சபைகளின் எதிர்காலத்தைப் பற்றி, சப்ரியிடம் கேட்கப்பட்ட போது, “மாகாண சபைகள், இலங்கையின் ஆட்சி இயந்திரத்தில் நன்றாக வேரூன்றிவிட்ட அமைப்பாகும். இலங்கை-இந்திய உடன்படிக்கையின் கீழ், அவை உருவாக்கப்பட்டதால், அவை தொடர்பாக, அரசாங்கத்துக்கு சர்வதேச கடப்பாடொன்று இருப்பதால், அவற்றை ஒழிக்க முடியாது. அதேவேளை, இனப் பிரச்சினையைத் தீர்க்கவே, மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. அவை தொடர்பாகத் தமிழ் மக்கள் திருப்தியடையாத நிலையில், அவற்றை ஒழிப்பதால், அரசாங்கம், தம்மைப் புறக்கணிப்பதாக அவர்கள் உணரக்கூடும். அதன் மூலம், மற்றொரு தமிழ்க் கிளர்ச்சியைத் தோற்றுவிக்கும் அவசியமில்லை” என்றும் அவர் கூறினார்.
இதுபோன்ற விடயங்களில், அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு, தெளிவாக இருக்க வேண்டும். தமிழ் மக்களில் ஒரு சாரார், தேசிய அரசியலின் பக்கம் சாய்வதாகத் தெரிந்த போதிலும், அம்மக்களை அரவணைத்து, நிலையாகவே தேசிய அரசியல் நீரோட்டத்தில் சேர்த்துக் கொள்ள, அரசாங்கம் உணர்வுபூர்வமாக நடவடிக்கை எடுக்காவிட்டால், அம்மக்கள் பழைய நிலைக்கே சென்றுவிட முடியும். அதற்காக அம்மக்களை குறைகூறுவதில் அர்த்தம் இல்லை.
22 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago