2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இனப்பிரச்சினைத் தீர்வு பற்றி மீண்டும் பேசிய ஜனாதிபதி ரணில்

Johnsan Bastiampillai   / 2023 மே 09 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

என்.கே அஷோக்பரன்

 

 

 

இலங்கையின் இனப்பிரச்சினையை இவ்வருட இறுதிக்குள் தீர்த்து வைப்பதில் ஆர்வமாக உள்ளதாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த திங்கட்கிழமை (01), தான் நிகழ்த்திய மே தின உரையில் மீண்டும்  தெரிவித்துள்ளார். 

“இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் நன்மை பயக்கும் கொள்கைகளுக்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டின் அடிப்படையில், நாட்டின் நீண்டகால இன மோதலைத் தீர்க்க, இந்த ஆண்டு இறுதிக்குள் ஓர் உடன்பாட்டை எட்ட எதிர்பார்க்கிறேன்” என்று குறிப்பிட்ட அவர், “இரண்டு நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே, நாடு சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்துடன் முன்னேற முடியும்” என்று தெரிவித்தார்.

அதில் ஒரு நிபந்தனையாக, இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதைக் குறிப்பிட்டிருந்தார். “இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக, தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்“ என்று தெரிவித்த ஜனாதிபதி ரணில், “இந்த வருட இறுதிக்குள் ஏதாவது ஓர் உடன்பாட்டுக்கு வரமுடியும் என்று நம்புகிறேன். எந்த ஒரு சமூகத்தையும் நாம் குறைமதிப்புக்கு உட்படுத்தக் கூடாது. சிங்களப் பெரும்பான்மை, தமிழ், முஸ்லிம், பறங்கியர் மற்றும் ஏனைய சிறுபான்மையினரைப் பாதுகாத்து முன்னேற வேண்டும். அதை அடைவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.

இதே ஜனாதிபதி ரணில் தானே, 2023 பெப்ரவரி நான்காம் திகதி, இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர், இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்றாரே; அது நடந்ததா என்ற கேள்வி, இங்கு எழுவது நியாயமானது. 

ஆனால், ‘ஒரு கை தட்டி மட்டும் ஓசை எழாது’ என்பதை நாம் இங்கு புரிந்துகொள்ள வேண்டும். ஏதோவொரு விசித்திர காரணத்துக்காகத் தீவிர தமிழ்த் தேசியம் பேசாத, சமரசத்துக்குத் தயாரான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கூட, ஜனாதிபதி ரணிலை எதிர்ப்பதை நோக்கமாகக் கொண்டு பயணிப்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

 2015-2019 ‘நல்லாட்சிக் காலத்தில்’ ரணில் விக்கிரமசிங்கவிடம் ‘ஜனாதிபதி’ என்ற நிறைவேற்று அதிகாரமுள்ள பதவி இல்லாதபோது, அவரோடு இணைந்து, தீர்வுக்காக முயன்றவர்கள், இன்று அவர்களுக்கு மட்டுமே தெரிந்த காரணத்துக்காக, சமரசமான தீர்வொன்றை சாத்தியப்படுத்தக்கூடிய நிறைவேற்றதிகாரமும், அரசியல் சூழமைவும் கூடி வந்துள்ள தருவாயில், ஜனாதிபதி ரணிலை எதிர்ப்பதை முன்னிலைப்படுத்தி, தமிழ் மக்களின் நலனையும், இந்தத் தீவின் நலனையும் பின்னிலைக்குத் தள்ளிப் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். 

இல்லை! ஜனாதிபதி ரணில் 13ஐ முழுமையாக அமல்படுத்துதல் என்றளவில்தான் இனப்பிரச்சினைக்கான தீர்வை அணுகுகிறார்; அது, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைத் திருப்தி செய்யாது. ஆகவே, தமிழ்த் தேசிய கட்சிகள் இந்த முயற்சியில் பங்குதாரராகத் தேவையில்லை என்று கருத்துரைப்போரும் உளர். 
சரி! 13 வேண்டாம்; 13ஐ முழுமையாக அமல்படுத்த முயற்சிக்கிறேன் என்றவரும் வேண்டாம்; அடுத்தது என்ன? இந்தக் கேள்விக்கு அவர்களிடம் பதில் கிடையாது என்பதுதான் உண்மை. 

காலம் முழுவதும், தமிழ் மக்களை உணர்வரசியலில் அழுத்திவைத்திருந்து, வடக்கு-கிழக்கு தமிழ் மக்களை இதே அவல நிலையில் தொடர்ந்து வைத்திருந்து, அவலத்தில் அரசியல் செய்வதுதான் திட்டமா? 

ஜனாதிபதி ரணில் போனால், அடுத்து வரப்போகும் எந்தத் தலைமை இனப்பிரச்சினை தீர்வு பற்றி, குறைந்த பட்சம், 13ஐ முழுமையாக அமல்படுத்துவதைப் பற்றி அக்கறை கொள்ளப் போகிறது என்று இவர்கள் நினைக்கிறார்கள்? 

ஐக்கிய மக்கள் சக்தியா? அவர்களும், அவர்களுடைய தலைவரும் இதுவரை இனப்பிரச்சினையொன்று இந்த நாட்டில் இருக்கிறது; அது தீர்க்கப்பட வேண்டும் என்றாவது பகிரங்கமாகச் சொல்லி இருக்கிறார்களா? இதைக் கூடச் சொல்லாதவர்கள், சமஷ்டி வழித் தீர்வா தரப்போகிறார்கள்?

ராஜபக்‌ஷர்களைப் பற்றி இந்த இடத்தில் பேசுவதே தேவையில்லாதது. 2009இன் பின்னர், இலங்கையில் இனப்பிரச்சினை இல்லை என்று சாதிப்பவர்கள் அவர்கள். ஒருவேளை ஜே.வி.பி இனப்பிரச்சினையைத் தீர்த்து, தமிழ் மக்களுக்கு சமஷ்டித் தீர்வை வழங்கும் என்று இந்தத் தமிழ்த் தேசிய தலைவர்கள் நினைக்கிறார்களா? 

ராஜபக்‌ஷர்களை விட மோசமான இனவாதிகள் அவர்கள். இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் படி இணைக்கப்பட்ட வடக்கு-கிழக்கை பிரிக்க, ஐக்கிய தேசிய கட்சியோ, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியோ கூட தீவிரமாக முயலவில்லை. உயர்நீதிமன்றத்துக்குச் சென்று, வடக்கு-கிழக்கு இணைப்பு சட்டவிரோதம் என்று வழக்குத் தாக்கல் செய்து, பகீரதப்பிரயத்தனம் கொண்டு, வடக்கு-கிழக்கைப் பிரித்தவர்கள் ஜே.வி.பியினர். 

மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாவதற்கு பின்னணியில், பிரசாரமாக இருந்தவர்கள்; ராஜபக்‌ஷர்களின் இனவாத அரசியலின் வழிகாட்டிகளாக இருந்தவர்களான இந்த ஜே.வி.பி, இனப்பிரச்சினைக்குத் தீர்வு தரும் என்று எப்படி நம்புகிறார்கள்.

“இலங்கையின் இனப்பிரச்சினை இன்றும் காணப்படுகிறது. அது தீர்க்கப்பட வேண்டும்” என்று பகிரங்கமாகச் சொல்கின்ற ஒரு ஜனாதிபதி இலங்கைக்கு இன்று கிடைத்திருக்கிறார். ரணில் விக்கிரமசிங்கவால் இதுவரை காலமும் பெரும்பான்மையின வாக்குகளைப் பெரும்பான்மையளவில் பெறமுடியவில்லை என்பதற்கு அவர் இனவாத அரசியலை முன்னெடுக்காதது முக்கிய காரணம். 
ஆனால், தமிழ;த் தேசிய அரசியல் கண்மூடித்தனமான நம்பிக்கைகளால் ‘நரி’ என்று பெயரிட்டு, அவரோடு பேச்சுவார்த்தை நடத்த விளையாததன் விளைவை, தமிழ்த் தேசிய அரசியல் இன்றுகூடப் புரிந்துகொள்ளவில்லையென்றால், தமிழ்த் தேசிய அரசியலுக்கு உய்வில்லை. 

ரணில் விக்கிரமசிங்க, சமஷ்டியைத் தரப்போவதில்லை; அது நிச்சயம். அடுத்த இரண்டு தசாப்த காலங்களுக்கு, இலங்கையில் அத்தகைய தீர்வொன்றை எந்தத் தலைமையும் தரப்போவதில்லை. அது நிச்சயம்! இலங்கையின் அரசியலும், அரசியலின் நாடித் துடிப்பும் தெரிந்த அனைவருக்கும், புரிந்த உண்மை இது.

இது, தமிழ்த் தேசியத்தின் தலைமைகளாக இருப்பவர்களுக்கும் தனித்த முறையில் நன்கே தெரிந்த விடயம். ஆனால், அவர்களது அரசியல், இதனை பகிரங்கமாகச் சொல்ல விடாது. அபிலாஷைகளை நோக்கிய பயணத்தில், இறுதி இலக்கை நோக்கிப் பயணிக்கலாம்; ஆனால், அடுத்த அடியில் இறுதி இலக்கு கிடைக்காவிட்டால், அடுத்த அடியையே நான், எடுத்து வைக்க மாட்டேன் என்பது அடி முட்டாள்தனமானது. 

அரசியல் என்பது சாத்தியமானவற்றின் கலை என்ற ஒட்டோ வொன் பிஸ்மார்க்கின் கருத்தை நாம் தொடர்ந்து ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுதல் அவசியம்.
இன்று மாகாணசபை கூட இல்லாமல் இருக்கிறது வடக்கும் கிழக்கும், 13ஆம் திருத்தம், முழுமையாக அமல்படுத்தல் என்பது வடக்குக்கும் கிழக்குக்கும்  இன்றைய நிலையை விட மேம்பட்டதொரு நிலைதான். அதை அடைவதில் எந்தத் தவறும் இல்லை. 

அரசியலில் தீர்வுகள் எதுவும் முடிந்த முடிபுகள் அல்ல. ஆகவே, படிப்படியாக பெறக்கூடியவற்றைப் பெற்று, அதை வினைத்திறனுள்ள முறையில் கையாண்டு, மக்களுக்கு நன்மைகளைப் பெற்றுக்கொடுத்து, தொடர்ந்து கொஞ்சம், கொஞ்சமாக கோரிக்கைகளை முன்வைத்து, அரசியல் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி அவற்றைச் சாத்தியமாக்கி, மேலும் அதிகாரப் பகிர்வுகளைப் பெற்றுக்கொண்டு, தொடர்ந்து பயணிப்பதுதான் சரியானதோர் அரசியல் பாதையாக அமையும். 
இதற்கு குறிப்பிடத்தக்க உதாரணம் ஸ்கொட்லாந்து. இதைச் சொன்னால், ஐக்கிய இராச்சியம் போல இங்கு அரசியல் இல்லை என்பார்கள். ஆனால், அது முழுமையான உண்மை இல்லை. 

ஐக்கிய இராச்சியம் போல அரசியல் நாகரிகம் இங்கு இல்லாமல் இருக்கலாம்; ஆனால், வெஸ்ட்மின்ஸ்டர் முழுமையான விருப்போடு அதிகாரப் பகிர்வை  ஸ்கொட்லாந்துக்கு வழங்கவில்லை. அதைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தமும், அரசியல் சூழ்நிலையும் ஏற்பட்டது. 

அந்த அதிகாரப் பகிர்வுகள், அரசியல் சூழ்நிலையினதும், அதனை ஸ்கொட்டிஷ் தேசியவாசிகள் கையாண்ட விதத்தினதும் குழந்தைகள்தான். ஆகவே, இலங்கையின் அரசியலில் ஏற்படும் சந்தர்ப்பங்களைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது, தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் கையில்தான் பிரதானமாக இருக்கிறது.

‘அடித்தால் மொட்டை, வளர்த்தால் ஹிப்பி’ என்ற ரீதியிலான கொள்கைப்பற்று பேச்சுக்கும், உணர்வெழுச்சிக்கும் பொருத்தமாக இருக்கலாம். ஆனால், நடைமுறை அரசியலுக்கு அது பொருத்தமானதல்ல.

‘மணந்தால் மகாதேவன்; இல்லையேல் மரணதேவன்’ என தமிழ்த் தேசிய அரசியல் பயணித்தால், மரணம் நிச்சயம்! இந்த ஜனாதிபதி 13ஐ முழுமையாக அமல்படுத்தல் என்றொரு முன்மொழிவை முன்வைக்கிறார். 

சரி! அதனைச் செய்யுங்கள் என்று செய்யவைத்து, இலக்கை நோக்கிய பயணத்தின் அடுத்த அடியை, தமிழ்த் தேசிய அரசியல் முன்வைக்காவிட்டால், இங்கு தோற்கப்போவது, தமிழ்த் தேசியத்தின்பால் நம்பிக்கை வைத்து வாக்களிக்கும் மக்கள்தான்!


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X