Thipaan / 2016 ஜனவரி 20 , பி.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகலிங்கம் கோபிகிருஷ்ணா
வெறுப்புப் பேச்சுக்கெதிரான சட்டங்களை உருவாக்குவதற்கு இலங்கை அரசாங்கம் அண்மையில் மேற்கொண்ட முயற்சி, சிவில் அமைப்புகளினதும் சிறுபான்மைக் கட்சிகளினதும் கடும்போக்குச் சிங்களக் கட்சிகளினதும் எதிர்ப்பின் காரணமாகக் கைவிடப்பட்டது அல்லது பிற்போடப்பட்டது. ஆனால், சிங்க இரத்தம் எனும் அர்த்தப்படும் சிங்க லே எனும் பிரசார இயக்கத்தின் எழுச்சியைத் தொடர்ந்து, வெறுப்புப் பேச்சுத் தொடர்பான கவனம், மீண்டும் எழுந்துள்ளது.
சிங்க லே பிரசார இயக்கத்தை ஆதரிப்போர், தங்களுடைய இன அடையாளத்தைக் கொண்டு கருத்துகளை வெளிப்படுத்துவது தங்களது உரிமை எனத் தெரிவிக்க, குறித்த இயக்கம், வெறுப்பூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, இனங்களுக்கிடையிலான முரண்பாட்டை ஏற்படுத்த முயல்வதாக, மறுதரப்பால் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இதேபோல் தான், ஐக்கிய அமெரிக்காவின் இவ்வாண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், குடியரசுக் கட்சி சார்பாகப் போட்டியிட எதிர்பார்த்துள்ள டொனால்ட் ட்ரம்ப், முஸ்லிம்கள் மீதும் மெக்ஸிக்கர்கள்
மீதும் கறுப்பினத்தவர்கள் மீதும் வெறுப்பூட்டும் வகையிலான கருத்துகளை முன்வைத்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இதனைத் தொடர்ந்து, ஐக்கிய இராச்சியத்துக்குள் அவர் வருவதைத் தடுக்க வேண்டுமென, ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றத்துக்கான இணைய மனுவொன்று தொடங்கப்பட்டு, போதுமான ஆதரவைப் பெற்றதன் காரணமாக, அது தொடர்பான விவாதமொன்றும் இடம்பெற்றது.
மேலே குறிப்பிடப்பட்ட இரண்டு சம்பவங்களும், ஒன்றோடொன்று தொடர்பில்லாதவை என்ற போதிலும், அடிப்படையில் ஒரே விடயத்தில் வந்து முடியக்கூடியதாக அமைந்துள்ளது. அது தான், கருத்துச் சுதந்திரமா அல்லது சட்டமும் ஒழுங்குமா என்ற முரண்பாட்டு நிலைமை.
இந்தக் குழப்பமும் முரண்பாடும், இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் மாத்திரம் தனித்த ஒன்றல்ல. மாறாக, சர்வதேசரீதியில் பல அறிஞர்கள், இவ்விடயத்தில் மாற்றுக்கருத்துகளைக் கொண்டுள்ளார். அவர்களுக்கிடையிலான கருத்தியல் முரண்பாடுகள், இவ்விடயத்தில் அதிகமாகவே இருக்கின்றன.
வெறுப்பூட்டும் பேச்சு என்பதற்கு, 'தனிநபர்களையோ அல்லது குழுக்களையோ, அவர்களது இனம், நிறம், மதம், பூர்வீகம், பாலியல் தெரிவு, பால்நிலை, அங்கீவனம், வேறு விடயங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு, வருத்தமூட்டுதல், அச்சுறுத்துதல் அல்லது அவமானப்படுத்துதல்' என, பொதுவான வரைவிலக்கணங்கள், அர்த்தம் தருகின்றன.
இதன்படி, வெறுப்பூட்டும் பேச்சுகளென்பவை பொதுவாக, வரவேற்கப்படக்கூடியன அன்று. அவ்வாறான வகையிலான பேச்சுகளை முன்வைப்போர், எந்தவகையிலும் ஊக்குவிக்கப்படக்கூடாது. அதில், மாற்றுக்கருத்துகளுக்கு இடமில்லை. மாறாக, இதில் இருக்கின்ற வினா என்னவெனில், வெறுப்பூட்டும் பேச்சுகளை அனுமதிக்க வேண்டுமா, இல்லையா என்பது தான். அத்தோடு, அவற்றை, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பதற்குள் உள்ளடக்குவதா, இல்லையா என்பது தான்.
சிங்க லே பிரசாரத்தை ஆராய்ந்தால், சிங்கம் அல்லது வீரத்தின் பரம்பரை என்பதை வெளிப்படுத்துவதாகவும், அதனால் தாங்கள் பலமிக்கவர்கள்ஃசிறந்தவர்கள் என்பதை வெளிப்படுத்துவதே, அதன் நோக்கமாகும்.
உலகில் பல்வேறுபட்ட இனக்குழுக்களும் பிரிவுகளும் இருக்கின்றன. ஒவ்வொன்றும் தனித்துவமானவை. ஆனால், ஒன்றைவிட ஒன்று, உயர்வானவை கிடையாது. பிரபல நகைச்சுவை நடிகரும் அரசியல் விமர்சகருமான ஜோர்ஜ் கார்லின், பிரஜாவுரிமை, இன அடையாளம் போன்றவற்றால் ஏற்படும் பெருமையைக் கடுமையாக விமர்சிக்குமொருவர். பிறப்பால் ஏற்படும் ஒவ்வோர் அடையாளமுமே, வெறுமனே விபத்து எனவும், அதில் பெருமையடைய எதுவுமில்லையெனவும், பெருமையென்பது, நாமாகச் சம்பாதித்தஃஅடைந்த விடயங்களுக்காக ஏற்பட வேண்டுமெனவும் தெரிவிப்பதுண்டு. அது தான் உண்மை. இனக்குழுமமொன்றில் அல்லது நாடொன்றில் பிறப்பதால் மாத்திரம், யாருமே உயர்வானவர்களாக மாறிவிடப் போவதில்லை. மாறாக, அவர்களின் தனிப்பட்ட நடத்தைகளும் செயற்பாடுகளும் தான், அவர்கள் உயர்வானவர்களாக, இல்லையா என்பதைத் தீர்மானிக்கிறது.
எனவே, 'சிங்கத்தின் பரம்பரையாக நான் இருப்பதால், நான் உயர்வானவன்' என்ற வகையிலான கருத்துடன் உருவாக்கப்பட்டுள்ள பிரசாரம், அடிப்படையிலேயே பொருத்தமற்றது ஆகிறது. ஆனால் அதில் முக்கியமானது, அதை முன்னெடுப்பதற்கான உரிமை, அவர்களுக்கு உள்ளது.
தமிழர்களில் பலர், 'தமிழனாக இருப்பதில் பெருமையடைகிறேன்' என்றோ, 'தமிழ் எங்கள் மூச்சு' என்றோ, முஸ்லிம்கள் 'முஸ்லிமாக இருப்பதில் பெருமையடைகிறேன்', 'அல்லாவைப் பின்பற்றுவதில் பெருமையடைகிறேன்' என்றோ சொல்கிறார்கள். அதைப் போலவே, சிங்கத்தின் இரத்தம் என்று சொல்லிக் கொள்ளவும் உரிமை இருக்கிறது.
சிங்க லே பிரசார இயக்கத்தை முன்னெடுப்பதற்கு அவர்களுக்கு முழுமையான உரிமை உள்ளதோ, அதேபோல், சிங்கள இனமே சிறந்த இனம் என்பதைச் சொல்லிக் கொள்ளவும் உரிமை இருக்கிறது. ஏற்கெனவே சொல்லப்பட்டதைப் போன்று, கருத்துச் சுதந்திரத்தில் அது உள்ளடங்குகிறது. இந்தக்கட்டம் வரை, வெறுப்பூட்டும் பேச்சு என்பதற்கும் சிங்க லே-ஐ உள்ளடக்க முடியாது.
மாறாக, 'சிங்கள இனமே உயர்ந்தது, தமிழ்ஃமுஸ்லிம் இனங்கள் தாழ்ந்தவை' என்ற கருத்தொன்று முன்வைக்கப்படுமாயின், அது வெறுப்பூட்டும் பேச்சு ஆகும். பரவலான கருத்துக்கு மாறாக, இவ்வகையான வெறுப்பூட்டும் பேச்சுகள், நிச்சயமாகவே இனவாதக் கருத்தே. ஆனால், இதை அடக்க முயல்வதென்பது, கருத்துச் சுதந்திரத்தை அடக்க முயல்வது போலாகாதா என்பது தான் இருக்கின்ற வினா.
இதற்கான விடையைத் தேடுவதற்கு, இப்பத்தியின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட, டொனால்ட் ட்ரம்ப் பற்றிய ஐக்கிய இராச்சிய நாடாளுமன்ற விவாதத்தின் தெரிவிக்கப்பட்ட கருத்துகளை ஆராய்தல் பொருத்தமானது. அந்த விவாதத்தில், டொனால்ட் ட்ரம்பின் கருத்துகள், இனத்துவேசமானவை எனவும் வெளிநாட்டவர்களுக்கு எதிரானவை எனவும் முட்டாள்தனமானவை என்றும் தவறானவை என்றும் கருத்தொற்றுமை காணப்பட்டது. ஆனால், டொனால்ட் ட்ரம்பைத் தடை செய்வது, கருத்து வெளிப்பாட்டை முடக்குதல் போன்றாகும் என்பதிலும் கருத்தொற்றுமை ஏற்பட்டது. அதனால், அவர் ஐக்கிய இராச்சியத்துக்குள் வரும்போதும், அவருக்கான எதிர்ப்பை வெளிப்படுத்தப் போவதாக, அவை அங்கத்தவர்கள் தெரிவித்தனர்.
சிங்க லே விடயத்திலும், இதைப் பிரயோகிக்க முடியுமா எனப் பார்த்தால், ஏனைய இனங்களை விடத் தங்களது இனம் உயர்வானது என அக்குழு கருதுமாயின், அதை வெளிப்படுத்துமாயின், அது தவறானதே. ஆனால், அதை வெளிப்படுத்துவதற்கான உரிமை, அக்குழுவுக்கு இருக்கிறது. எனவே, ஆரோக்கியமான சமூகமாக இலங்கை இருக்க வேண்டுமாயின், கருத்துகளை அடக்குவதை விடுத்து, அக்குழுவின் பிரசாரம் ஏன் தவறானது என்பதை வெளிப்படுத்துவதற்கான முயற்சிகளே இடம்பெற வேண்டும்.
சிங்க லே எப்போது தவறாகும் அல்லது சட்டத்தினால் எதிர்கொள்ளப்பட வேண்டுமெனில், 'முஸ்லிம்ஃதமிழ் மக்கள், எம்மை விடத் தாழ்வானவர்கள். அவர்களைத் தாக்குங்கள்ஃதரக்குறைவாக நடத்துங்கள்' என்று கருத்தொன்று முன்வைக்கப்படுமாயின், வன்முறையைத் தூண்டுவதற்கான முயற்சி என்ற அடிப்படையில், சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தில், வன்முறையைத் தூண்டுவது என்பது உள்ளடக்கப்படவில்லை.
எனவே, அவ்வாறான சூழ்நிலை ஏற்படுமாயின், சட்ட நடவடிக்கையென்பது அவசியமே. அத்தோடு, நுகேகொடயில் முஸ்லிம்களின் வீட்டு வாயில்கதவுகளில் 'சிங்க லே' என எழுதப்பட்டமை கூட, சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படக் கூடியது தான். ஒருவரின் சொத்தில், அவரின் அனுமதியின்றி, அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட முடியாது. சட்டத்தில், அதற்கு இடம் கிடையாது.
எதற்காக இவ்வாறு வெறுப்பூட்டும் பேச்சுகளை அனுமதிக்க வேண்டும் என்ற கேள்வி எழலாம். முதலாவதாக, வன்முறைகளைத் தூண்டாமலிருக்கும்வரை, அனைவரது கருத்துச் சுதந்திரங்களையும் மதிக்க வேண்டும். அடுத்ததாக, வெறுப்பூட்டும் பேச்சுக்கான சட்டமூலங்களைக் கொண்டுவந்தால், அவற்றைப் பயன்படுத்தி, மக்களின் சாதாரணமான கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரங்களே அடக்கப்படும். சீனா, வடகொரியா, சவூதி அரேபியா, தாய்லாந்து போன்ற நாடுகளிலெல்லாம் இருக்கின்ற சட்டங்கள், ஒன்றில் வெறுப்பூட்டும் நடவடிக்கைகளுக்கு எதிரானவை அல்லது அந்நாட்டினால் புனிதமாகக் கருதப்படும் விடயங்களை அவமானப்படுத்துபவற்று எதிரானவை தான்.
ஆனால், கைது செய்யப்பட்டுத் தண்டனை அனுபவிப்பதோ அல்லது மரண தண்டனை நிறைவேற்றப்படுவது என்னவோ, அரசாங்கத்துக்கெதிரான விமர்சனங்களை முன்வைத்தோரும், அடிப்படையான முன்னேற்றவாதக் கருத்துகளை முன்வைத்தோரும் தான். எங்களுடைய நாளாந்த வாழ்க்கையில், அரசாங்கங்களும் சட்டங்களும் அதிகளவு மூக்கை நுழைப்பதை, ஒரு சில சந்தர்ப்பங்களுக்கான ஆதரிப்பதென்பது, நீண்டகால நோக்கில் ஆபத்தாகவே முடியும். மாறாக, 'யாரும், யாரையும் பற்றியும் எவ்வாறான கருத்துகளை முன்வைக்கலாம். வன்முறையைத் தூண்டும்வரை அல்லது அதற்கான கோரிக்கையை நேரடியாக முன்வைக்கும் வரை, அக்கருத்தை முன்வைப்பதற்கான உரிமை உங்களுக்கு உண்டு' என்ற நிலை உருவாகும்போது, ஏற்படக்கூடிய ஜனநாயக இயல்பை எண்ணிப் பாருங்கள்.
'சிங்கள இனம் தான் சிறந்தது. உனது இனம் தாழ்வானது' என்ற கருத்து முன்வைக்கப்படும் போது, அதைச் சொன்னவரைத் தாக்க முயலாமல், 'அதைச் சொல்வதற்கான உங்கள் உரிமையை மதிக்கிறேன். அனைவரும் தனித்துவமானவர்கள். ஒருவர் உயர்வு, தாழ்வு என்ற கருத்தை நான் மறுக்கிறேன்' எனச் சொல்லிவிட்டு, அவ்விடத்தை விட்டு அகலும் காட்சியை எண்ணிப் பாருங்கள். அது தான் உண்மையான ஜனநாயகம் நிலவும் நாடு. அதை நோக்கியே எங்களது பயணம் அமைய வேண்டுமே தவிர, இன்னொரு சவூதி அரேபியாவாகவோ அல்லது (மனித உரிமைகள் விடயத்தில்) இன்னொரு சீனாவாகவோ உருவாகுவதில், உண்மையான மகிழ்ச்சி இல்லை என்பது தான் முக்கியமானது.
38 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago
2 hours ago