2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இன்று உலக தாய்மொழி தினம்

Mayu   / 2024 பெப்ரவரி 21 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெரியசாமிப்பிள்ளை செல்வராஜ் - முன்னாள்  தூதுவர் மஸ்கெலியா

ஓர்  இனத்தின் அடையாளமாக விளங்குவது மொழி.  மொழியினது வளர்ச்சியினை சார்ந்தே அந்த இனத்தின் கலை,  கலாசார, சமூக, பண்பாட்டு அம்சங்கள் வளர்ச்சியுறுகின்றன.

ஒரு சமூகம் வாழ்ந்ததற்கான குறியீடாகக் காணப்படுகின்ற இந்த மொழியானது,  மக்கள் தமது கருத்துக்களை மற்றவர்களோடு பரிமாறிக் கொள்ள உதவுகின்ற ஒரு ஊடகமாகச் செயற்படத் தொடங்கியதிலிருந்து அந்த மொழியினைச் சார்ந்த சமூக கட்டமைப்புகளும் உருவாகத் தொடங்குகின்றன.

பாரம்பரியமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்ற பண்பாட்டு மரபுகள், நினைவுகள்,  ஞாபகச்சின்னங்கள், எண்ணங்கள், நூல்கள், ஆவணங்கள், கலைகள், புத்தாக்கங்கள், புராதனக் காலத்து அறிவுப் பொக்கிஷங்கள், மருத்துவக் குறிப்புகள்,  வெளிப்பாடுகள் போன்றனவே வளமான எதிர்காலத்தினை உறுதிப்படுத்தும். 

எமது முன்னோர்கள் கட்டிக் காத்து, பராமரித்து வந்த பாரம்பரிய அம்சங்களை, அதனுடைய தாற்பரியங்களை, எதிர்கால சமுதாயத்துக்குக் கடத்தும் ஒரு கருவியான தாய் மொழியினை தரணியில் மேலோங்கச் செய்வதில் நாம் என்றும் பின்னிற்கக் கூடாது.

இந்த உலகில் பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தைக்கும் அதனது முதலாவது ஆகாரமாக அமைவது தாய்ப்பால் தான். அதுபோல மனிதனுக்குத் தாய் மொழியும் அவசியமானது. உலகில் உள்ள ஒவ்வொரு தனிமகனும் , சமூகமும் அந்த இனத்திற்கே உரித்தான மொழிக்காக உரிமைக்குரல் கொடுத்துப் போராடுவதனை  இன்றும் கண்கூடாகக் காண்கின்றோம்.

அந்த வகையில், தாய்மொழிக்காக , போராடிய ஒரு மக்கள் கூட்டத்தினருக்காக உருவாக்கப்பட்ட ஒரு தினம் தான் ‘தாய்மொழி தினம்’. காலனித்துவ ஆட்சியில் இருந்து உலக நாடுகள் விடுதலை பெற்றுக் கொண்டிருந்த காலகட்டமது . அதனது தொடர்ச்சியாக 1947ஆம் ஆண்டு  இந்தியாவும், பாகிஸ்தானும்,  பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்து விடுதலை பெற்றன. சுதந்திர பாகிஸ்தான் என்ற கட்டமைப்புக்குள்  பாகிஸ்தானின் மேற்கு,  கிழக்கு ஆகிய இரண்டு பகுதிகள் உள்வாங்கப்பட்டிருந்தன. 

மத ரீதியாக இரு பகுதிகளிலும் வாழ்ந்த மக்கள் ஒன்றிணைந்தவர்களாகக் காணப்பட்டாலும், மொழி ரீதியாக வேறுபடுத்தப்பட்டவர்களாகவே இருந்தனர்.உருது மொழியே மேற்கு பாகிஸ்தானில் (இன்றைய பாகிஸ்தான்) அதிகமாகப் பேசப்படுகின்ற மொழியாகும். கிழக்கு பாகிஸ்தானில் (இன்றைய பங்களாதேஷ்)   அதிகளவு பேசப்படுகின்ற மொழி வங்க மொழியாகும். 

அன்றைய காலகட்டத்தில் இரு நாடுகளுக்குமான தேசிய மொழியாக இருந்தது உருது மொழியாகும்.வங்க மொழியினை அதிகமாகப் பேசுகின்ற கிழக்கு பாகிஸ்தானியர்கள் தம்மீது  உருது மொழி திணிக்கப்படுவதனை விரும்பாது, அதனை எதிர்க்கத் தலைப்பட்டனர்.

உரிமைகள் எங்கு மறுக்கப்படுகின்றனவோ அங்குப் போராட்டங்கள் உருவாவது தவிர்க்க முடியாத ஓர் அம்சம். அந்த வகையில் வங்க மொழியினை தமது தேசிய மொழியாகப் பிரகடனம் செய்ய வேண்டுமென்ற தீர்மானத்தில் கிழக்குப் பாகிஸ்தானியர்கள் 1952ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம்  இருபத்தோராம் திகதி  ‘வங்க மொழி இயக்கம்’’ என்றவொரு இயக்கத்தினை உருவாக்கினர்.

அந்த இயக்கத்தைச் சார்ந்த மாணவர்கள், அரசியல் தலைவர்கள், கல்விமான்கள், மக்களென பல்வேறுபட்ட தரப்பினரும் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அன்றைய ஆட்சியாளர்களது அடக்குமுறை நடவடிக்கைகள்,  தொடர்ச்சியான போராட்டங்கள், ஆகியவற்றின்  வெளிப்பாடாக 1956ஆம் ஆண்டு வங்க மொழி கிழக்கு பாகிஸ்தானின் தேசிய மொழியாக பிரகடனப்படுத்தப்பட்டது.

அந்த போராட்டத்தின் விளைவாக, உயிரிழந்தவர்களின்  நினைவு கூறும் முகமாக, ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி மாதம் இருபத்தோராம்  திகதியினை உலக தாய்மொழி தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்கின்ற தீர்மானத்தை வங்கதேச அறிஞர் ரபீக்குல் இஸ்லாம் அவர்கள் 1998ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோவில் முன்மொழிந்தார். 

அதற்கமைய, சர்வதேச தாய்மொழி தினமானது 1999ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான  யுனெஸ்கோ அமைப்பின்  பொது மகாநாட்டில்  பிரகடனப்படுத்தப்பட்டது. 

ஐக்கிய நாடுகள் சபையின்  பொதுச் சபை 2002இன் A/RES/56/262  தீர்மானமானது  இந்த பிரகடனத்தை வரவேற்றது. 2002ஆம் ஆண்டு  யுனெஸ்கோ அமைப்பானது  பெப்ரவரி மாதம் 21ஆம் திகதியினை தாய்மொழி தினமாக அங்கீகரித்தது.

உலகளாவிய ரீதியில் அமைதியை நிலைநாட்டுவதற்கும், பன்மொழி பயன்பாட்டை முன்னேற்றுவதற்கும், உலகில் உள்ள அனைத்துத் தாய்மொழிகளைப் பாதுகாப்பதற்காகவும் உலக தாய்மொழி நாள் ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. 

உலக மக்கள் தொகையில் 40 சதவீதம் பேருக்கு அவர்கள் பேசுகின்ற மொழி அல்லது அவர்களுக்குப் புரிகின்ற மொழியில் கல்வி கிடைப்பதில்லையென யுனெஸ்கோ குறிப்பிடுகின்றது. 
யுனெஸ்கோ நிறுவனத்தின் ஆய்வுகளின் படி , உலகில்  7,000 மொழிகள் பேசப்படுகின்றன. இந்த மொழிகளில் சில  சிறிது சிறிதாக அழிவடைந்து வருகின்றனவென  அறியும் பொழுது, அது வேதனையை அளிக்கின்றது.

பத்தாயிரம் மக்களுக்குக் குறைவான மக்களால் பேசப்படுகின்ற மொழிகள் அழிவடையும் ஆபத்தான நிலையில் உள்ளதாக அந்த ஆய்வு மேலும் கூறுகின்றது. எந்த மொழியும் பாட மொழியாகவும், பயிற்று மொழியாகவும் , மக்கள் பேசுகின்ற மொழியாகவும்,  இல்லாவிட்டால், அந்த மொழி எத்துணை சிறப்பு மிக்க மொழியாக இருந்தாலும் நாளடைவில் அழிந்து போய் விடும். 

புத்த பகவான் பேசிய ‘பாளி மொழி’  வழக்கிழந்து போனதற்கும்  இது தான் காரணம். இயேசுநாதர் பேசிய ‘ ஹீப்ரூ’  என்ற எபிரேய மொழியும் ஒரு காலத்தில் வழக்கிழந்த மொழி தான்.
1948ஆம் ஆண்டுக்கு முன்பதாக இஸ்ரேல் என்ற ஒரு தேசம் இருந்ததில்லை. பல நாடுகளில் பரவலாக வாழ்ந்து வந்த யூதர்கள் அந்தந்த நாட்டு மொழியைத் தான் கற்று வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு தங்களது மூதாதையர் மொழியான ஹீப்ரூ மொழி பற்றி எதுவும் தெரியாது. பாலஸ்தீனத்திலும் ஹீப்ரூ ஒரு வட்டார மொழியாகவே இருந்து வந்தது.

அதனால் அந்த மொழியில்  பாரியளவிலான வளர்ச்சி ஏற்பட்டிருக்கவில்லை.  ஆனால்,  இஸ்ரேல் என்ற தேசம் உருவாக்கப்பட்டதன் பிறகு அங்கு அரிச்சுவடி முதல் பட்டப்பின் படிப்பு வரை ஹீப்ரு மொழியில்  பயிற்றுவிக்கப்படுகிறது.

மொழி ஒன்று அழிவடைந்து வருகின்றது என்றால்,  அதற்கு காரணம் அந்த மொழியினை பேசுகின்ற மக்களும், சமூகமும் தான் எனலாம். 

ஒரு மொழி அழிவடைகின்றது என்றால், உலகைப் பார்க்கின்ற தனித்துவமான வழி ஒன்று மூடப்பட்டு விடுகின்றது என்பது தான் அதன் அர்த்தம் ஆகும்.  ஒரு மொழி அழியும் பொழுது நாம் அந்த மொழியை மட்டும் இழக்கவில்லை. அதனுடன் இணைந்த உன்னதமான அறிவினையும்,  ஆற்றலையும் சேர்த்தே இழந்து விடுகின்றோம்.

நாம் எமது தாய் மொழியினை அடுத்த தலைமுறைக்கு கற்றுக்கொடுக்காத பொழுது மொழிப் பயன்பாட்டினை இழக்கின்றோம். சமூக,  அரசியல், பொருளாதார காரணங்களால் 
இன்று  பெருமளவான மக்கள் தமது தாய் நாட்டிலிருந்து பிற நாடுகளுக்கு இடம்பெயர்ந்து செல்கின்றனர்.

அவ்வாறு புலம்பெயர்ந்து செல்கின்ற பொழுது, அவர்கள் தமது தொழில் நிமித்தம் அந்தந்த நாடுகளில்  இருக்கின்ற மொழிகளைக் கற்று, தாம் குடியேறிய நாடுகளிலுள்ள கலை,  கலாசார, பண்பாட்டு விழுமியங்களில் பங்கெடுத்துக் கொள்ளவேண்டிய சூழ்நிலையேற்பட்டு  விடுகின்றது. இதனால் படிப்படியாக தமது தாய் மொழியினை இழந்து விடக்கூடிய சூழ்நிலை ஏற்படுகின்றது.

கடந்த காலங்களில் ஆபிரிக்க கண்டத்திலிருந்து அமெரிக்காவிற்குச் சென்ற  கறுப்பின மக்கள் தமது பாரம்பரிய மொழிகளை மறக்கத் தொடங்கி விட்டது வரலாற்று நிகழ்வாகும்.
தாய் மொழிகள் வளர்த்தெடுக்கப்பட வேண்டியவை . அவைகள் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியவை. உலக அளவில் அதிக மக்களால் பேசப்படக்கூடிய மொழிகளில் ஒன்றாக எம் தாய் மொழியான தமிழ் மொழி பதினைந்தாவது இடத்தில் இருக்கின்றது.

ஸ்ரீலங்காவில் அரசகரும மொழியாகத் தமிழ் இருக்கின்றது. மலேசியா,  மொரிசியஸ் போன்ற நாடுகளில் அங்கீகாரம் பெற்ற மொழியாக திகழ்கின்றது. சிங்கப்பூரில் அது ஆட்சி மொழியாக விளங்குகிறது.

சொல் வளம் மிக்க மொழியாகத் தமிழ் மொழி காணப்படுகின்றது. அறிவியல்,  தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்று வருகின்ற இன்றைய காலகட்டத்தில் புதிய சொற்கள் அறிமுகப்படுத்தப்படல் வேண்டும்.  அதேவேளை, பழந்தமிழ் சொற்கள் பாதுகாக்கப்பட வேண்டியது காலத்தின் தேவை. வழக்கத்தில் பயன்படுத்தப்படுகின்ற தமிழ்ச் சொற்கள் ஆயிரமாக இருந்தாலும், அகராதியில் இருக்கும் சொற்கள் இலட்சத்தைக் கடந்தவை. 

மொழி வளர்ச்சியில் கலைச் சொல்லாக்கம் உருவாக்கப்படுதல் அவசியம். அந்த வகையில்,  அன்றைய காலகட்டங்களில் வாழ்ந்த இலங்கையையும், ஏனைய நாடுகளையும்  சேர்ந்த தமிழ் அறிஞர்கள் தமிழ் மொழி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகளைப் பாராட்டுவது அவசியமாகும். 

1832ஆம் ஆண்டு ரேனியஸ் பாதிரியார் எழுதிய ‘பூமி சாஸ்திரம்’ , 1849ஆம் ஆண்டு இலங்கையில் வெளியான ‘பால கணிதம்’, 1855ஆம் ஆண்டு டாக்டர். கரோல் எழுதிய ‘குறியீட்டுக் கணிதம்’, இலங்கையில் வாழ்ந்த அமெரிக்கரான டாக்டர். சாமுவேல் கின் என்பவரால்1850-1855 ஆண்டுக் காலப் பகுதியில் தமிழாக்கம் செய்யப்பட்ட மருத்துவத் துறைக்கான நூல்கள், போன்றவைகள் ஆரம்பக் காலப் பகுதியில் தமிழ் மொழி வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்ட சில முயற்சிகளாகும்.

வீரமாமுனிவரின் ‘சதுரகராதியைத்’ தொடர்ந்து ‘இலக்கியச் சொல்லகராதி;’ என்ற அகராதியை சுன்னாகம் குமாரசுவாமிப்பிள்ளை அவர்கள் தொகுத்து , தமிழுக்குப் பெருமை சேர்த்தார்.
‘மோகனாங்கி’ என்ற முதலாவது தமிழ் வரலாற்று நூலினை திருகோணமலையைச் சேர்ந்த தி.த. சரவணமுத்துப் பிள்ளை எழுதினார்.

இதுபோல, ‘அபிதான கோசம் ‘ என்ற  கலைக் களஞ்சியத்தினை  முதலாவது உருவாக்கியவர் மானிப்பாயைச் சேர்ந்த ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை அவர்களாவார். முதன்முதலாக ‘யாழ்’ என்னும் இசைக் கருவி குறித்து சுவாமி விபுலானந்த அடிகளார் அவர்கள் ஆய்வு நூல் ஒன்றினை எழுதினார். இந்த பட்டியலில்  தமிழ் நாட்டு அறிஞர்களது பங்களிப்பும் ஏராளமாக உள்ளது.

‘தேமதுர தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் ‘ என்ற மகா கவி பாரதியாரின் கவியினது வரிகளுக்கு உயிரோட்டம் தந்து கொண்டிருப்பவர்கள்  இன்று புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் எம்மவர்கள் தான். அவர்களால் தான் எமது கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்கள் உலகளாவிய ரீதியில்  பரவலாக மேம்படுத்தப்பட்டுச் செல்கின்றது. உலகத்தவர்கள் மத்தியில் தமிழ் என்ற  பண்டைய மொழியின் சிறப்பம்சங்களைப் பறைசாற்றிக் கொண்டிருப்பவர்களும் அவர்கள் தான்.

பிற நாடுகளில் வசிக்கின்ற மக்கள் தத்தமது குழந்தைகளுக்குத் தாய் மொழியின் அவசியத்தினை உணர்த்துவதன் மூலம் அந்த  மொழியானது படிப்படியாக எதிர்கால சந்ததியினருக்கு  வாழையடி வாழையாகக் கடத்தப்பட வேண்டுமென்பதே தாய் மொழியினை நேசிக்கும் அனைவரதும் எதிர்பார்ப்பு ஆகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .