Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
George / 2016 மே 23 , மு.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஜே.ஏ.ஜோர்ஜ்
சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு..
கொஸ்லாந்தை மீரியபெத்தையில் சுமார் 37 உயிர்கள் காவு கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, 12 சடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டு, நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்ட சோக காட்சிகள்... பல வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டு... அனைத்தையும் இழந்து நிர்கதியான மக்கள்...
இந்தக் காட்சிகள் மனதைவிட்டு அகலும் முன்னே மற்றுமொரு சோகத்தைத் தாங்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு இலங்கை மக்கள் தள்ளப்பட்டுவிட்டனர்...
புதன்கிழமை(18) மாலை 4 மணி...
வெறும் சேறு நிறைந்து மண்ணால் மூடிப்பட்டிருந்த ஒரு பெரும் நிலப்பரப்பில் மக்கள் அங்கும் இங்கும் சென்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, ஓர் இடத்தையே நாயொன்று சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. அவ்வப்போது தரையில் எதையோ தேடியதுடன், அருகில் யாரும் சென்றால் கத்திக்கொண்டு சென்றது. அங்கு வந்திருந்தவர்கள் நாயை படமெடுத்து சென்றனரே தவிர, அதனுடைய வேதனையை எத்தனை பேர் உணர்ந்தார்கள் என்று தெரியவில்லை. அந்த நாய் தன் உரிமையாளரைத் தேடிக்கொண்டிருப்பதாகவே எமக்குத் தோன்றியது. முன்னேறிச் சென்று பார்த்த போது, அங்கு ஒரு கிராமம் இருந்ததா என்பதே கேள்விக்குரிய ஒன்றாகத் தோன்றியது. அந்தளவுக்கு இயற்கையின் சீற்றத்தால் அந்த இடம் சின்னா பின்னமாகியிருந்தது.
நேற்று இந்நேரத்தில் இந்தக் கிராமம் எவ்வளவு அழகாக அமைதியாக இருந்திருக்கும் என்ற நினைவுடன் முன்னோக்கி நகர்ந்தோம்...
செவ்வாய்க்கிழமை (17) மாலை 4.30
'கடும் மழை பெய்தது, நாங்கள் வழமை போலவே குளிருக்கு அஞ்சி வீட்டுக்குள் முடங்கியிருந்தோம். திடீரென்று பெரும் சத்தம் கேட்டது, வீட்டுக்கு பின்புறத்தில் உள்ள மாபெரும் மலை சரிந்து விழுந்தது போலக் கேட்டது. நான் அருகிலிருந்த வீட்டினரிடம் விசாரிப்பதற்காகச் சென்றேன். 5 நிமிடங்கள் கடந்திருக்கும். திருப்பிப் பார்த்த போது எனது வீட்டின் பாதியைக் காணவில்லை. என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்வதற்குள் எல்லாமே முடிந்துவிட்டது...'
இவ்வாறு இயற்கையின் கோர தாண்டவத்தை விவரிக்கின்றார் அரநாயக்க மண்சரிவில் பாதிக்கப்பட்ட ரஞ்சனி (வயது 37) என்ற நான்கு பிள்ளைகளின் தாய்.
கேகாலை மாவட்டத்தின் மாவனெல்ல, அரநாயக்க பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் பாதிக்கப்பட்டு அரநாயக்க ராஜகிரிய மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்களைப் பார்வையிடுவதற்கு நாம் புதன்கிழமை சென்றிருந்தோம். மாலை 7.30 மணியிருக்கும், குறித்த பாடசாலையில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள் உணவருந்திக்கொண்டிருந்தனர்.
சாப்பிட்டு முடியும் வரை காத்திருந்து ரஞ்சனி என்ற அம்மாவிடம் மெதுவாக பேச்சுக்கொடுத்தோம்.
'முதல் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் மாலை 5.40 மணியளவில் மீண்டும் அது வந்தேவிட்டது. நான் எனது மூன்று பெண் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு உயிர்பிழைக்க ஓடிவந்தேன். பாதிதூரம் வரும் போது எனது மகன் அலைபேசியில் கூறினான். நானும் அப்பாவும் பாதிதூரம் வந்துவிட்டோம் நீங்கள் விரைவாக போங்க அம்மா... அதுதான் அவனிடமிருந்து கேட்ட கடைசி வார்த்தை. ஒரு நாள் கடந்துவிட்டது இதுவரை எந்தத் தகவலும் இல்லை' அதற்குமேல் பேச முடியாமல் அந்தத் தாயிடம் இருந்து கண்ணீர் மட்டுமே வெளிப்பட்டது...
மண்சரிவில் சிக்கிக் காணாமல் போன கணவன் (வயது 41), மகன் (16) ஆகிய இருவரும் எங்காவது ஓரிடத்தில் உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் அந்த அம்மா தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு அப்பா, அண்ணன் வருவார்கள் என்று ஆவலுடன் காத்திருக்கும் 5 மற்றும் 8 வயதான தனது பெண் குழந்தைகளை அணைத்துக்கொள்கிறார்.
நாம் சென்றிருந்த போது, ராஜகிரிய மகா வித்தியாலயத்தில் எலங்கப்பிட்டிய ஜனபதய, தெபத்தேகம ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 69 குடும்பங்களைச் சேர்ந்த 259 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்கள் தடையின்றிக் கிடைத்திருப்பதாகவும் அந்த நிலையத்துக்குப் பொறுப்பாக இருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேவேளை, ரத்னஜோதிபிரிய விகாரையில் 127 குடும்பங்களைச் சேரந்த 350க்கும் மேற்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அப்பிரதேச அபிவிருத்தி அதிகாரி தெரிவித்தார். அதுமட்டுமின்றி மேலும் இரண்டு தற்காலிக முகாம்களில் பிரதேசவாசிகள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
'எனக்கு அலைபேசி அழைப்பு வந்தது, அந்த அழைப்பு அத்தனை அதிர்ச்சியான செய்தியைத் தாங்கி வந்திருக்கும் என்று எனக்கு அப்போது தெரியாது... அதனையடுத்து எனது ஊருக்கு வந்து வீட்டைப் பார்த்த போது அது இருந்த இடத்தில் சேறு மட்டுமே இருந்தது. எனது தங்கையின் வீடு முற்றாக இல்லாமல் போய்விட்டது. அருகில் இருந்த வீடுகள் புதையுண்டுவிட்டன. அம்மா, அப்பா, பெரியம்மா, பெரியப்பா, தங்கை, தங்கையின் குடும்பம் என 9 பேரை காணவில்லை. அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்று தனது சோகத்தை சொன்னார் விமானபடையில் கடைமையாற்றும் ஜே.ஐ.ஜே.முனசிங்க (வயது32).
விமானப் படையில் இருப்பதால் என்னவோ முனசிங்கவுக்கு நிச்சமாக நிறைய தைரியம் இருக்கிறது. 9 பேரை இழந்துவிட்ட சோகத்தை அழாமல் தைரியமாகச் சொல்லிவிட்டார் மனிதர்.
'4.35 மணியளவில் முதலாவது மண்சரிவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து 5.30 மணியளவில் அடுத்த மண்சரிவு ஏற்பட்டு எல்லாவற்றையும் நாசம் செய்து விட்டது. நாங்கள் ஓடி வந்தோம், வழியில் காயத்துடன் இருந்த 4 சிறுவர்களைக் காப்பாற்றி எம்முடன் அழைத்துவந்துவிட்டோம்' என்கிறார் இந்த மண்சரிவில் இருந்து தப்பிய என்.பி.நிமால் என்பவர்.
'முதலில் பாரிய சத்தம் கேட்டது, ஒரு விமானம் செல்வது போலவே அந்தச் சத்தம் இருந்து. தொடர்ந்து ரயில் பயணிப்பது போன்ற சத்தமும் கேட்டது... என்னவென்று பார்க்க வெளியில் ஓடி வந்தேன்... அவ்வளவுதான்...' என்று அந்தப் பயங்கரத்தை மேலும் விவரித்தார்.
இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட, உறவுகளை இழந்த மற்றவர்களும் இதையே சொல்கின்றனர். கடும் மழை, அதன்பின்னர் சிறிய அமைதி, தொடர்ந்து பெரும் சத்தம் அவ்வளவுதான் சரிந்து விழுந்த மலையானது மூன்று கிராமங்களை விழுங்கித் தனது பசியைத் தீர்த்துக்கொண்டது.
நீர், நிலம், காற்று, ஆகாயம், தீ - இந்த பஞ்ச பூதங்கள் இல்லாமல் மனிதன் இல்லை. ஆனால், சில நேரங்களின் இவை தமது கோர முகத்தை காட்டியும் விடுகின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை(15) தொடக்கம் நாட்டையே உலுக்கிய தாழமுக்கம், இந்தியாவின் தமிழ்நாட்டை நோக்கி நகர்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியிருந்த நிலையில், அரநாயக்கவில் உள்ள சாமசர மலை, மூன்று கிராமங்களுக்குள் செவ்வாய்க்கிழமை (17) மாலை சரிந்து விழுந்தது.
அரநாயக்க, எலஹபிட்டியவில் உள்ள சாமசர என்ற மலையின் ஒரு பகுதி, மலைக்குக் கீழுள்ள சிறிபுர, எலஹபிட்டிய மற்றும் பல்லேபாகய ஆகிய மூன்று கிராமங்களில் ஆங்காங்கே, சரிந்து கொண்டது.
மூன்று கிராமங்களுக்குள்ளும், 100க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்த நிலையில், அந்த மண்படுக்கையில் சுமார் 150க்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டதாகவும் அதில், 80 பேர் அன்றைய தினம் மாலை வரையிலும் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
முப்படையினரும் இணைந்து மேற்கொண்ட இந்த விசேட மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
தொடர்ந்து சீரற்ற வானிலை நிலவினாலும் மீட்புப் பணிகள் தடங்கலின்றித் தொடர்ந்தன. புதன்கிழமை மாலை வரையில் 17 சடலங்கள் மீட்கப்பட்டனவெனக் கூறப்பட்டது. 'நேற்று ஞாயிற்றுக்கிழமை(22) நண்பகல் வரை 8 சடலங்கள் மீட்கப்பட்டதுடன் மொத்தமாக 24 சடலங்களும் 14 உடற்பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன' என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர, தமிழ்மிரருக்குத் தெரிவித்தார்.
நாட்டில் தொடர்ந்து நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) நண்பகல்வரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 84ஆக அதிகரித்துள்ளது. இயற்கை அனர்த்தங்களின் சிக்குண்டு காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 29ஆகவும், மேலும் 116 பேர் காணாமல் போயுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதேவேளை, அதிக மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு, மண்சரிவு காரணமாக 3,793 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் 55,956 குடும்பங்களைச் சேர்ந்த 237,240 பேர் நிர்க்கதியாகியுள்ளதாகவும் இவர்களுக்காக 376 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நிலையம் கூறியது.
இயற்கைப் பேரழிவு என்பது இயற்கையாக நிகழும் இடையூறுகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறிப்பதாகும். இந்த அனர்த்தங்களால் சொத்துகள் மற்றும் சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதுடன் விலைமதிக்க முடியாத உயிர்கள் காவு வாங்கப்பட்டு, அதன் சுவடுகள் வாழ்நாள் முழுதும் பாதிப்படைந்தவர்களைத் துன்பத்திலும் துயரத்திலும் ஆழ்த்தும் தன்மை கொண்டவை.
எவ்வாறாயினும் இவ்வாறான இழப்புகளை சந்திக்கும் போது அதிலிருந்து மீண்டு வரக்கூடிய கால அளவைப் பொறுத்துத்தான் அந்த சமூகத்தின் நிலையில் மாற்றங்கள் ஏற்படும். வெறுமனே இவ்வாறான அனர்த்தங்கள் நிகழ்ந்தவுடன் நிவாரணப் பொருட்களைக் கொடுப்பதோடு மட்டுமே கடமை முடிந்து விடுகின்றது என்று நினைத்தால் அது மிகப்பெரும் தவறாகும்.
தலைநகரம் உட்பட நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் கொஞ்சநஞ்சமல்ல. பல இலட்சக்கணக்கான ஏக்கர் விவசாயக் காணிகள், பயிர்ச்செய்கைகள் அழிவடைந்துவிட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டில் இருந்தும் பல்வேறு உதவிகள் கிடைக்கப்பெற்று வந்தாலும் மழை விட்ட பின்னர் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை என்னவென்பது கேள்விக்குறியே.
பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தேவையான உதவிகளை உடனடியாக வழங்குமாறு பணித்துள்ளமையும் அது உடனடியாக செயற்படுத்தப்பட்டமையும் பாதிக்கப்பட்ட மக்களிடையே சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யலாம், இருந்தாலும் நாடு முழுவதும் இயற்கையின் தாண்டவத்தில் ஆடிப்போயுள்ள நிலையில், பேரழிவில் இருந்து மீண்டும் எழுவதற்கும், அதைத் துணிந்து போராடுவதற்கும், மக்கள் தன்னம்பிக்கையுடன் துணிந்து செயல்படுவது மிகவும் முக்கியமாகும்.
விரைவாகவும் ஆக்கபூர்வமான முறையில் துணிந்து எடுக்கும் முடிவுகள் மற்றும் நேரம் - காலம் பாராது செயற்படும் உணர்வு என்பவற்றால் இந்த நிலைமையை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தலாம். நாணல் புற்களை தாலாட்டும் காற்று, சீற்றமடைந்தால் ஆலமரத்தை அடியோடு சாய்ப்பது போல ஒன்றுக்கு மேற்பட்ட பாரிய இடர்பாடுகள் ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக நிகழும்போது, அதுவே பேரழிவுகளுக்கு வித்திடுகிறது என்பதுதான் இயற்கையின் நியதி.
அரநாயக்க போன்ற பிரதேசங்களில் மண்சரிவு ஏற்பட்டமை மனித சக்திக்கு அப்பாற்பட்;டு இயற்கையின் விளையாட்டு என்பதால் அதிலிருந்து மீண்டு வருவதற்கும் அந்த மக்களை மீண்டும் பாதுகாப்பான இடங்களில் குடியேற்றி எதிர்கால முன்னேற்றத்துக்கு ஏதாவது செய்வதே இப்போதைக்கு அவர்களுக்கான பெரிய உதவியாகும்.
இதேவேளை, கொழும்பு உட்பட்ட பல பிரதேசங்களில் ஏற்பட்ட வெள்ள நிலைக்கு சீரற்ற வடிகான்கள் மற்றும் இயற்கை நீர்வழித்தடங்களை மறைத்து மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட தடைகளே காரணம் எனலாம். இதற்கு ஒருவரையோ ஒரு சிலரையோ கைகாட்டி நாம் தப்பித்துக்கொள்ள முடியாது. இதற்கு அனைவரும் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
இந்த இடத்தில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், விஞ்ஞானத்தில் மனிதர்கள்; எவ்வளவுதான் ஜாம்பவான்கள் என்றாலும் இயற்கையின் சீற்றத்துக்கு இன்னும் விடை கண்டு பிடிக்காமல் தான் உள்ளோம்.
ஏனெனில், மக்கள் இல்லாத இடங்களில் கடுமையான நில நடுக்கங்களோ அழிவுகளோ அவ்வளவு சீக்கிரத்தில் ஏற்படுவதில்லை. அழிவுச் சம்பவங்கள் அனைத்துமே மனிதர்களுடன் தொடர்புடையதாக இருப்பதால் இந்த அழிவுகளுக்கு நாமும் ஒருவிதத்தில் காரணமாக இருக்கலாம் அல்லவா?
சரி, இனி விடயத்துக்கு வருவோம். ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் மீரியபெத்தையில் இடம்பெற்ற அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் அன்றைய காலங்களில் நாடு முழுவதும் பேசப்பட்டதுடன் ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக பல வாரங்கள் இடம்பிடித்திருந்தன. நிவாரணங்களை வழங்குகின்றோம் என்று அங்கு படையெடுத்தவர்கள் இன்று இந்த மக்களின் நிலை என்ன என்பது தொடர்பில் தெரிந்துகொள்ள ஆர்வம் கொள்வதில்லை. அரநாயக்க வடிவில் அடுத்த தலைப்புச்செய்தி தயாராகிவிட்டது.
அரசியல் தலைமைகளும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை உடனே அமைத்துத் தருகின்றோம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகின்றோம் என்று சவால் விட்ட நிலையில் அது வெறும் வாய்ச்சவடாலாகவே போய்விட்டது. (வீடுகளை அமைத்துக் கொடுக்க ஒன்றரை வருடங்களுக்கு அதிகமாகிறது என்றால் அவ்வளவு பெறுமதியான வீடுகள் போல...‚‚‚)
இதேநேரம் தற்போது ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் தொடர்பில் முற்கூட்டியே அறிவிக்கக்கூடிய அளவுக்கு வெளிநாடுகளில் தொழிநுட்ப வசதிகள் இருக்கின்ற நிலையில், இலங்கையில் அவ்வாறானதொரு நிலை இல்லாததால் முற்கூட்டியே அறிவிக்க முடியாமல் போய்விட்டதாக வானிலை அவதான நிலைய ஊழியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஒருவிதத்தில், 'இன்று மழை பெய்யும் என்று வானிலை அறிக்கையில் சொன்னால் தைரியமாக குடை இல்லாமல் வெளியில் செல்லலாம்' என்று நகைச்சுவை, கிராமம் முதல் நகரத்தில் உள்ள அனைவருக்கும் பரிச்சயமான ஒன்று.
இதனை நகைச்சுவை என்று எடுத்துக்கொள்ளாமல் பார்த்தால் இதிலும் உண்மை இல்லாமல் இல்லை. ஏனென்றால், நம்ம ஊரில் உள்ள வானிலை மையத்தின் நவீன தொழிநுட்பம் அவ்வளவு பழமையானது. (பழைமையை விட்டுக்கொடுக்க நாம் முன்வருவதில்லையல்லவா) வருடங்கள் செல்லச் செல்ல பூமிக்கும் வயதாகிறதல்லவா? அதனால், மனிதர்களைப் போலவே அதற்கும் நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். பூமிக்கு எது வந்தாலும் பாதிக்கப் போவது நாம் தானே. எனவே, இனியாவது அலட்சியமாகச் செயற்படாமல் தேவையற்ற அபிவிருத்தி என்று பணத்தை வாரியிறைக்காமல், பொதுமக்களின் பெறுமதியான உயிர்களை இனியாவது இயற்கைக்குப் பலியாக்காமல், இயற்கை அனர்த்தங்களை முற்கூட்டியே அறிந்து கொள்ளக்கூடிய தொழிநுட்ப உபகரணங்களை தருவிக்க தற்போதைய அரசாங்கமாவது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
முற்கூட்டியே அறிந்துகொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருந்தும் அதை வசப்படுத்தாமல் இருப்பது முட்டாள் தனமன்றி வேறு என்னவென்று சொல்ல முடியும்? அனர்த்தம் நடந்தபின் அழுவதைவிட, வருமுன் காக்க நடவடிக்கை எடுப்பதே சிறந்தது என்பதை சொல்ல இன்னுமொரு வள்ளுவர் வேண்டுமா நமக்கு?
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
7 hours ago