2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

இரண்டு முக்கிய வழக்குத் தீர்ப்புகள்

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2018 ஜூன் 20 , மு.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வாரம் உயர் நீதிமன்றம், ஜனநாயகத்தின் கண்ணோட்டத்தில் மிகவும் முக்கியமான இரண்டு தீர்ப்புகளை வழங்கியிருந்தது.  

 அவற்றில், ஒன்று தனிப்பட்ட ஒருவரின் நலன் சார்ந்த வழக்கு தொடர்பாகவும் மற்றையது, தேசிய ரீதியில் முக்கியமான ஒரு விடயம் தொடர்பாக, ஒருவர் தாக்கல் செய்திருந்த வழக்கு தொடர்பாகவும் வழங்கப்பட்டு இருந்தன.  

தனிப்பட்ட வழக்கு, புகைத்தலுக்கு அடிமையாகி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணித்த ஒருவர், மரணிக்கும் முன் இலங்கை புகையிலை நிறுவனத்துக்கு எதிராகத் தாக்கல் செய்த வழக்கொன்றின் தொடர்ச்சியாக, அவரது மனைவி தாக்கல் செய்த வழக்காகும். இந்த வழக்கு, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.  

இந்த வழக்கில், பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்ட இலங்கை புகையிலை நிறுவனம், வழக்கின் இடையில், மாவட்ட நீதிமன்றத்தால் கொடுக்கப்பட்ட உத்தரவொன்றை எதிர்த்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றத்திலும் மேன்முறையீடு செய்து இருந்தது.   

மேன்முறையீட்டைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், 12 வருடங்களாக வழக்கை இழுத்தடித்ததாகக் கூறி, அந்த மனுதாரருக்குப் பிரதிவாதி நிறுவனம், செலவுத் தொகையாக நான்கு இலட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.  

இரண்டாவதாக, நாம் குறிப்பிட்ட வழக்கு, மாகாண சபைகள் தொடர்பானதாகும். மாகாண சபைத் தேர்தல்களின் போது, அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் சமர்ப்பிக்கும் வேட்புமனுப் பத்திரங்களில், 30 சதவீதம் பெண்கள் உள்வாங்கப்பட்டிருக்க வேண்டும் என்பதைச் சட்டமாக்கும் வகையில், அரசாங்கம் கடந்த வருடம், மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது. 

அந்தச் சட்டமூலம், நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட போது, அதற்குக் கொண்டு வரப்பட்ட ஒரு திருத்தத்தின் மூலம், அரசாங்கம் மாகாணசபைத் தேர்தல்களுக்கும் கலப்புத்தேர்தல் முறையை அறிமுகப்படுத்தியது.   

இதுபோன்ற ஒரு விடயத்தை, விவாதம் ஒன்றின் நடுவே, திருத்தம் ஒன்றின் மூலம் கொண்டு வர முடியாது என்று, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கே, இரண்டாவது வழக்காகும். 

நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்துக்கு எதிராக, வழக்குத் தாக்கல் செய்ய முடியாது என உயர் நீதிமன்றம், அந்த மேன்முறையீட்டைத் தள்ளுபடி செய்தது.  

புகைத்தலுக்கு அடிமையாகி இருந்த கே.எஸ் பெரேரா என்பவர், புகைத்தலின் காரணமாக 1996 ஆம் ஆண்டு முதல், தமக்குப் புற்றுநோய் ஏற்பட்டு இருப்பதாகவும் இலங்கை புகையிலை நிறுவனம் உற்பத்தி செய்த சிகரெட்டுகளைத் தாம் புகைத்ததாலேயே தாம், அவ்வாறு பாதிக்கப்பட்டதாகவும் கூறி, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில், அந்நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தார். 

தமக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு, இலங்கை புகையிலை நிறுவனம் நட்ட ஈடு வழங்க வேண்டும் என்பதே அவரது வாதமாகியது.   

இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், 2001 ஆம் ஆண்டு, பெரேரா புற்றுநோயால் உயிரிழந்தார். 
அந்த வழக்கில், தமது கணவருக்குப் பதிலாகத் தம்மை மனுதாரராக ஏற்று, வழக்கைத் தொடருமாறு, பெரேராவின் மனைவியான பொலன்னறுவையைச் சேர்ந்த லலிதா பத்மினி பெர்னாண்டோ நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.   

ஆயினும், “பெரேரா தனிப்பட்ட முறையில் முன்னைய வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். அதனால் அவரது மரணத்துக்குப் பின்னர் வழக்குச் செல்லுபடியாகாது” என்று கூறி, நீதிமன்றம் அந்தக் கோரிக்கையை நிராகரித்தது.  

அதையடுத்து, லலிதா பத்மினி பெர்னாண்டோ, தாமாகவே ஒரு வழக்கைத் தாக்கல் செய்து, தமது கணவரின் மரணத்துக்காக இலங்கை புகையிலை நிறுவனத்திடம் 50 இலட்சம் ரூபாய் நட்டஈடு கோரி, 2003 ஆம் ஆண்டு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.  

அந்த வழக்கின் ஒரு கட்டத்தில், நீதி மன்றம் வழங்கிய ஓர் உத்தரவை எதிர்த்து, பிரதிவாதியான நிறுவனம், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தது. 

ஆனால், மேன்முறையீட்டு நீதிமன்றம் அதைத் தள்ளுபடி செய்து, மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தது.   

பிரதிவாதியான நிறுவனம், அதையும் எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவொன்றைத் தாக்கல் செய்தது.   

இதற்குள் 12 ஆண்டுகள் உருண்டோடின. எனவே, அந்த நிலைமையைக் கருத்தில் கொண்ட உயர்நீதிமன்றம், “பிரதிவாதியான நிறுவனம், இந்த மேன்முறையீடுகள் மூலம், வழக்கை 12 வருடங்களாகத் தாமதிக்கச் செய்துள்ளது. அதனால் மனுதாரர் பெரும் செலவை எதிர்நோக்க வேண்டியுள்ளது. அது அவருக்குப் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது” எனத்  தமது தீர்ப்பில் கூறி, புகையிலை நிறுவனத்தின் மேன்முறையீட்டைக் கடந்த வெள்ளிக்கிழமை (15) தள்ளுபடி செய்தது.   
இவ்வாறு மேன்முறையீட்டின் மூலமாக, வழக்கொன்று 12 வருடங்களாக நீடிப்பதால், மனுதாரர் வழக்கைத் தொடர முடியாமல், வழக்கைக் கைவிட நேரிடலாம் என்றும் கூறிய நீதிமன்றம், மனுதாரருக்கு வழக்குச் செலவாக, நான்கு இலட்சம் ரூபாய் செலுத்துமாறும் பிரதிவாதி நிறுவனத்துக்குப் பணிப்புரை வழங்கியது. அத்தோடு, கூடிய விரைவில் வழக்கை விசாரித்து முடிக்குமாறு, மாவட்ட நீதிமன்றத்தையும் உயர்நீதிமன்றம் பணித்தது.  

இந்த வழக்கில் உள்ள முக்கியத்துவம் என்னவென்றால், சட்ட அமுலாக்கல் சரியாக மட்டுமன்றி, நீதியாகவும் இருக்க வேண்டும் என, நீதிமன்றம் வலியுறுத்துவதே ஆகும்.  

 சாதாரண ஒருவருக்கும், செல்வந்தர் ஒருவருக்கும் இடையிலான, ஒரு பிணக்கு தொடர்பான வழக்கொன்றில், செல்வந்தர் இவ்வாறு தொடர்ந்து, மேன்முறையீடுகளைச் செய்யலாம். அது சட்டபூர்வமானதாக இருந்தாலும், அதன் நோக்கம், மற்றவரைப் பொருளாதார ரீதியாக நெருக்கடிக்குள்ளாக்கி, அவரை வழக்கிலிருந்து வாபஸ் பெறச் செய்வதாக இருந்தால் அது நியாயமில்லை. 

எனவேதான் பிரதிவாதி, மனுதாரருக்கு வழக்குச் செலவைச் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

இரண்டாவது வழக்கு, கடந்த வருடம் அரசியல் அரங்கில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஒரு விடயம் தொடர்பானதாகும்.   

அரசாங்கம் கடந்த வருடம், மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்துக்கு இரண்டு திருத்தங்களைக் கொண்டு வந்தது. வழமை போல், மாகாண சபைகளுக்கு கட்டம் கட்டமாகத் தேர்தல்களை நடத்தாது ஒன்பது மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல்களை நடத்துவதற்காகவென ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டது. அது 20 ஆவது அரசமைப்புத் திருத்தம் என்றழைக்கப்பட்டது. (அது, பின்னர் கைவிடப்பட்டதால் இப்போது, மக்கள் விடுதலை முன்னணி நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதற்காக, அதேபெயரில் அதாவது 20 ஆவது அரசமைப்புத் திருத்தம் என்ற பெயரில் மற்றொரு சட்ட மூலத்தைச் சமர்ப்பித்துள்ளது).  

மாகாண சபைகள் தொடர்பான, அந்த 20 ஆவது அரசமைப்புத் திருத்தம், அன்று பரிசீலனைக்காக உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்ட போது, அதனால் மாகாண சபைத் தேர்தல்கள் தாமதமாகலாம் எனக் கூறிய உயர்நீதிமன்றம், அந்தத் திருத்தம் அரசமைப்புக்கு முரணானது எனத் தீர்ப்பு வழங்கியது.   

அரசாங்கம் அதைக் கைவிட்டுவிட்டு, மாகாண சபைத் தேர்தல்களுக்கான அரசியல் கட்சிகளினதும் சுயேட்சைக் குழுக்களினதும் வேட்பு மனுப் பத்திரங்களில் 30 சதவீதம் பெண்களின் பெயர்கள் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது.   

அது தொடர்பாக எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால், அரசாங்கம் அந்தச் சட்ட மூலம், நாடாளுமன்றத்தில் குழு நிலையில் விவாதிக்கப்படும் போது, திருத்தம் ஒன்றின் மூலம், மாகாண சபைத் தேர்தல்களையும் கலப்புத் தேர்தல் முறைப் படி நடத்துவதற்கான வாசகங்களை அதில் புகுத்த முற்பட்டது.  

மாகாண சபைத் தேர்தல்களைத் தாமதப்படுத்த முடியாது என உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ள நிலையில், அரசாங்கம் இந்த வாசகங்கள் மூலம் மாகாண சபைத் தேர்தல்களைத் தாமதப்படுத்த முயல்வதாக அப்போது எதிர்க்கட்சிகள் கூறின.  

ஆனால், அரசாங்கம் அதைப் பொருட்படுத்தாது, விவாதத்தின் குழு நிலையின்போது, அந்த வாசகங்களைப் புகுத்தி, மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொண்டது.   

சர்ச்சைக்குரிய அந்த வாசகங்கள் புகுத்தப்பட்ட முறை, ஏற்றுக் கொள்ள முடியாததாக இருந்தாலும் அவற்றால் நல்லதொரு நோக்கமே நிறைவேறுகிறது என்ற அடிப்படையில், மக்கள் விடுதலை முன்னணியும் அதை ஆதரித்தது.   

ஆனால், புகுத்தப்பட்ட வாசகங்கள் மூலம், அறிமுகப்படுத்தப்பட்ட கலப்புத் தேர்தல் முறையை, அமுலாக்குவதற்காக ஒவ்வொரு மாகாண சபைக்கு உட்பட்ட பிரதேசங்களிலும் புதிதாகத் தேர்தல் தொகுதிகள் உருவாக்கப்பட வேண்டும்; அதற்கு நீண்ட காலம் எடுக்கும்; எனவே அதற்காக மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் ஒத்திப்போட வேண்டியுள்ளது.   

20ஆவது அரசமைப்புத் திருத்தம் உயர்நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டபோது, எதைச் செய்யக் கூடாது என நீதிமன்றம் தமது தீர்ப்பின் மூலம் கூறியதோ, அதை அரசாங்கம் மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலத்தின் மூலம் செய்துவிட்டது.   

மேற்படி வாசகங்கள் புகுத்தப்படும் முன்னர், இச்சட்ட மூலம் ஓரிரு வாசகங்களைக் கொண்ட சிறியதொரு சட்டமூலமாகவே இருந்தது. 

ஆனால், புகுத்தப்பட்ட வாசகங்கள் அதைவிடப் பல மடங்கு விரிவானதாக இருந்தன. எனவே, அது புதியதொரு சட்ட மூலம் போன்றதாகிவிட்டது. 

ஒரு சட்ட மூலத்தைப் பற்றிய விவாதத்தின் நடுவே, அதுபோன்ற திருத்தங்கள் புகுத்த முடியாது என, ஒன்றிணைந்த எதிரணி வாதிட்டது.  

அந்த அடிப்படையில் தான், முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா, மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டத்தை எதிர்த்து, வழக்குத் தாக்கல் செய்தார். சட்ட மூலம் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

 22 ஆம் திகதி சபாநாயகர், அதற்கான தமது அங்கிகாரத்தை வழங்கினார். 

28 ஆம் திகதி சில்வா, நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு எதிராகத் தமது அடிப்படை உரிமை மீறல் மனுவை, உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.   

அது தொடர்பான, உயர்நீதிமன்ற விசாரணையின் போது, சட்டமா அதிபரின் சார்பில் வாதாடிய சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சஞ்ஜே ராஜரத்னம், “அரசமைப்பின் 124 ஆம் வாசகத்தின் பிரகாரம், இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றார்.   

முறைப்படி சமர்ப்பிக்கப்பட்ட ஒரு சட்ட மூலத்தையோ, அதைச் சட்டமாக்குதலையோ, எந்தவொரு நீதிமன்றமும் கேள்விக்குள்ளாக்க முடியாது என அந்த வாசகம் கூறுகிறது.   

நாடாளுமன்ற அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் சட்டத்தின் படியும் நாடாளுமன்ற விவாதங்கள், எந்தவொரு நீதிமன்றத்தாலும் கேள்விக்குள்ளாக்க முடியாது எனவும் அவர் சுட்டிக் காட்டினார். 

அதன்படி, உயர்நீதிமன்றம் முன்னாள் பிரதம நீதியரசரின் அடிப்படை உரிமை மனுவைத் தள்ளுபடி செய்தது.   

மாகாணசபைகளுக்குக் கலப்புத் தேர்தல் முறையை அறிமுகப்படுத்திய இந்த மாகாணசபைத் தேர்தல்கள் சட்டம், நிறைவேற்றப்பட்டு இருப்பதால் இனி மாகாண சபைகளுக்கான தேர்தல்களும் கலப்புமுறையில் தான் நடத்தப்பட வேண்டியுள்ளது. அதன் கீழ் 30 சதவீத பெண் பிரதிநிதித்துவமும் சட்டமாக்கப்பட்டுள்ளது.   

ஆனால், கலப்புத் தேர்தல் முறையும் கட்டாயப் பெண் பிரதிநிதித்துவமும் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்து, உள்ளூராட்சி சபைகளை நிறுவுவதில் பெரும் குழப்பத்தை உருவாக்கி இருந்தன.   

சரத் என். சில்வாவின் மனு ஏற்கப்பட்டு இருந்தால், அந்தப் பிரச்சினை தீர்ந்திருக்கும். 

ஒத்திப் போடப்பட்ட மாகாண சபைத் தேர்தல்களையும் நடத்த வேண்டியிருக்கும். 

ஆனால், அப்போது அது, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம், நீதிமன்றத்தால் இரத்துச் செய்யப்பட்டதாகிவிடும்.   

எனவே, நாடாளுமன்றத்தின் இறைமையை இந்த வழக்குப் பாதுகாத்தமையே இதன் முக்கியத்துவமாகும்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X