2024 ஜூன் 17, திங்கட்கிழமை

இரத்த வெள்ளத்தால் இலாபம் தேடும் அரசியல்

Mayu   / 2024 மே 24 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஐயூப்

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர்,  2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாத தாக்குதலைப் பற்றி அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த மாதம் தெரிவித்த கருத்தொன்றினால் அவர் பெரும் பிரச்சினையொன்றில் சிக்கி இருப்பதாக தெரிகிறது. 

ஆயினும் இந்த விடயத்தில் அவரது உண்மையான நோக்கத்தை சரியாக புரிந்துகொள்ளாது அவரை ஒரு பலவீனமானவராகவோ அல்லது மடையராகவே கருத முடியாது. 
கண்டியில் ஊடகவியலாளர்களிடம் கடந்த மாதம் 22 ஆம் திகதி கருத்து தெரிவிக்கும் போது உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை பின்னால் இருந்து நடத்தியவர்களை தமக்குத் தெரியும் என்றும் நீதிமன்றம் தமக்கு கட்டளையிட்டால் தாம் அதனை வெளியிடத் தயார் என்றும் அவர் கூறியிருந்தார். 

தகவல் தெரிந்திருந்தும் ஐந்தாண்டுகளாக அதனை உரிய முறையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்காமை சட்டவிரோதம் என்றும் எனவே, அவரை கைது செய்ய வேண்டும் என்றும் பலர் கோஷம் எழுப்பினர். எனவே, அவரை விசாரிக்குமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், இரகசிய பொலிஸாரை பணித்தார்.அதன் படி அவர் விசாரிக்கப்பட்டார். 

இந்திய அரசாங்கமே பயங்கரவாத தாக்குதலின் பின்னால் இருந்துள்ளதாகவும்   மத்தல விமான நிலையம் போன்ற பாரிய திட்டங்களை இந்தியாவுக்கு வழங்காமையே அதற்குக் காரணம் என்றும் இந்திய இராஜதந்திர அதிகாரி ஒருவர் தமக்கு இந்தத் தகவலை அறிவித்தார் என்றும் மைத்திரிபால , இரகசிய பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டு இருந்தது. 

இந்த விவகாரம் தொடர்பாக பல அரசியல் கட்சிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தாலும் ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவே மைத்திரியின் கூற்றால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருக்கும். ஏனெனில் அக்கட்சியையே இப்போதும் பலர் இத்தாக்குதலுக்காக குற்றஞ்சாட்டி வருகின்றனர். குற்றச்சாட்டு வேறு பக்கம் திரும்புவது அக்கட்சிக்கு சாதகமாகவே அமையும். 

கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் ஏழு இடங்களில் கிறிஸ்தவர்களை இலக்கு வைத்து முஸ்லிம் பயங்கரவாத குழுவொன்றால் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல்களால் சுமார் 300 பேர் உயிரிழந்தனர். சுமார் 500 பேர் காயமடைந்தனர். சம்பவம் இடம்பெற்ற நாள்முதல் அரசியல்வாதிகளும் சில ஊடகங்களும் தமக்கு பிடிக்காதவர்களை இதில் சிக்கவைக்க பெரு முயற்களில் ஈடுபட்டனர். 

குண்டுத் தாக்குல்களில் இரண்டை நடத்திய இரு நபர்களின் தந்தையான இப்ராஹீம் என்பவர் 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஜே.வி.பியின்  தேசிய பட்டியலில் இருந்தவர் என்றும் எனவே, ஜே.வி.பிக்கும் தொடர்பு இருப்பதாகவும்   விமல் வீரவன்ச கூறினார். 

 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, இத்தாக்குதலால் மிகப் பெருமளவில் அரசியல் ரீதியாக பயனடைந்தது. அக்கட்சியை ஆதரித்த சில ஊடகங்கள் முழு முஸ்லிம் சமூகத்தையே பயங்கரவாதிகளாக சித்தரித்தன.

முன்னாள் மாகாண ஆளுநர்களான  ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி மற்றும் அப்போதைய அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் ஆகியோருக்கு எதிராக பலத்த விமர்சனங்கள் எழுந்து கறுப்பு ஜூலையைப் போன்றதொரு நிலைமையின் விளிம்புக்கே நாடு தள்ளப்பட்டது. 

தாக்குதல் இடம்பெற்று ஆறு நாட்களில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, தாம் அதேயாண்டு நடைபெறவிருந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாகவும் அதன் மூலம் தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதாகவும் தெரிவித்தார். 

இத்தாக்குதலின் சூத்திரதாரியை அப்போதை ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம் கண்டுப்பிடிக்கவில்லை என்றும் தாம் பதவிக்கு வந்து அவரை கண்டுபிடித்து தண்டனை வழங்குவதாகவும் பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் மேடைகளில் கூறி வந்தனர்.  

இவ்வாறு பொதுஜன பெரமுனவை ஆதரித்த ஊடகங்கள், முஸ்லிம் விரோத பிரசாரத்தோடு கோட்டாவை மகா வீரனாக சித்தரித்ததன் மூலம் அவர் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இலகுவாகவே வெற்றியடைந்தார். ஆனால்   தாக்குதலை திட்டமிட்ட சூத்திரதாரியை கண்டுபிடிக்கும் விடயத்தில் புதிய அரசாங்கம் கையை விரித்துவிட்டது. எந்த விசாரணையையும் கோட்டா புதிதாக ஆரம்பிக்கவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால நியமித்த ஆணைக்குழுவே தொடர்ந்து விசாரணைகளை நடத்தியது. 

அதனை அடுத்து தாக்குதலின் சூத்திரதாரி ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளார் என்று அரசாங்கம் கூறியது. 2021 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் இதைப் பற்றி பலமுறை கருத்து தெரிவித்த அப்போதைய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, தடுப்புக் காவலில் இருக்கும் நௌபர் மௌலவியே சூத்திரிதாரி என்று கூறினார். 

இது புதிதாக விசாரணைகள் நடைபெறும் என்றும்  சூத்திரதாரி உள்ளிட்ட பல விடயங்கள் தெரியவரும் என்றும் நம்பியிருந்த கிறிஸ்தவ சமூகத்துக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது. 

சம்பவம் இடம்பெறும் காலத்தில்  ரணில்  தலைமையிலான ஓர் அரசாங்கம் பதவியில் இருந்தமையால் அக்கட்சி அக்காலத்தில் இந்த விவகாரத்தை ஒரு வித தயக்கத்துடனேயே கையாண்டது. ஜனாதிபதி மைத்திரிபாலவே பாதுகாப்பு அமைச்சராக இருந்தமையால் அவர் மீதே குண்டு வெடிப்பின் சகல பொறுப்புக்களையும் சுமத்த அது முயன்றது.
பின்னர் ஆட்சி மாறியதை அடுத்து அக்கட்சியும் அதன் மூலம் அரசியல் இலாபம் தேட முயன்றது. தமது காலத்தில் கண்டு பிடிக்கப்படாத சூத்திரதாரியை கண்டுபிடிக்குமாறு அக்கட்சி கோட்டாபய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்தது.

2022 ஆம் ஆண்டு நாட்டைவிட்டு கோட்டா தப்பியோடிய பின்னர் பதில் ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில், தாம் நிரந்தர ஜனாதிபதியாக பதவியேற்று பிரிட்டனின் ஸ்கொட்லன்ட்யாட் பொலிஸ் மூலம் 21/4தாக்குதலைப் பற்றி விசாரணைகளை ஆரம்பிப்பதாக கூறினார். 

கத்தோலிக்க திருச்சபை அதனை நிராகரித்தது. புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் விக்ரமசிங்க, கிறிஸ்தவ எம்.பிக்களின் ஆதரவை நாடியே தாம் பதவியில் இருக்கும் போது செய்யாத விசாரணையை செய்வதாக இப்போது கூறுகிறார் என்று திருச்சபை கூறியது.

எனினும், தாம் ஸ்கொட்லன்டயாட் உதவியை கோரியிருப்பதாக அதே ஆண்டு செப்டம்பர் மாதம் ரணில், யூஎஸ்எய்ட் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி சமந்தா பவரிடம் கூறினார். ஒரு வருடத்துக்குப் பின்னர் அதைப் பற்றி ஆராய்ந்த டெய்லி மிரர் பத்திரிகை அவ்வாறு ஸ்கொட்லன்ட்யாட் பொலிஸிடம் எவ்வித  கோரிக்கையும் விடுக்கப்படவில்லை என்று செய்தி வெளியிட்டது. 

அரச புலனாய்வு சேவையின் பிரதம அதிகாரி சுரேஷ் சலேக்கும் குண்டு வெடிப்புக்களுக்கு தலைமை தாங்கிய தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் சஹ்ரான் ஹாஷிமுக்கும் இடையில் குண்டு வெடிப்புக்களுக்கு முன்னர் 2018 ஆம் ஆண்டு சந்திப்பொன்று இடம்பெறறுள்ளதாக பிரிட்டனின் சனல் 4 என்ற தொலைக்காட்சி கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் செய்தி வெளியிட்டது. இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் அசாத் மௌலானாவுடனான நேர்காணல் ஒன்றின் மூலமே அத்தொலைக்காட்சி அச்செய்தியை வெளியிட்டது. 

இது பெரும் சர்ச்சையாகவே, அதைப் பற்றி விசாரிக்க முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.ஐ.இமாமின் தலைமையில் குழுவொன்றை ஜனாதிபதி ரணில் நியமித்தார். ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் அக்குழுவுக்கு பணிக்கப்பட்டது. ஆயினும் அவ்வறிக்கை இது வரை சமர்ப்பிக்கப்படவில்லை.   

ஜனாதிபதியின் தலைமையிலேயே இருக்கும் பாதுகாப்பு அமைச்சு வெளிப்படையான விசாரணைகள் மூலம் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலைப் பற்றி உண்மைகள் ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளதாக அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்தது. அதாவது ஸ்கொட்லான்ட் மற்றும் இமாம் குழு மூலமான விசாரணைகள் கண்துடைப்பா?  

பயங்கரவாத தாக்குதலின் பின்னால் பாரியதொரு சதி இடம்பெற்று இருந்துள்ளதாக தாக்குதல் இடம்பெற்ற போது சட்டமா அதிபராக இருந்த தப்புல டி லிவேரா கூறியிருந்தார். இமாம் விசாரணைக்குழுவை நியமிக்கும் போதே அந்தக் கூற்றைப் பற்றியும் விசாரிக்க பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதாக ரணில் கூறியிருந்தார். அக்குழுவும் இது வரை நியமிக்கப்படவில்லை. 

சூத்திரதாரியை கண்டுபிடிப்போம் என்ற தமது வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது கோட்டா அரசாங்கம் தடுமாறிக்கொண்டு இருக்க, கோட்டாவே சூத்திரதாரி என்றதொரு கருத்து எங்கிருந்தோ முளைத்து சமூக ஊடகங்கள் மூலம் பரவியது. அது நடக்க முடியாத விடயமல்ல. ஆனால் அதற்காக எவரும் ஆதாரங்களை முன்வைக்கவில்லை. 

 சஜித் பிரேமதாசவும் இவ்விவகாரத்தை பற்றி அடிக்கடி பல்வேறு கருத்துக்களை தெரிவிக்கிறார். சம்பவம் இடம்பெற்ற காலத்தில் அமைச்சராக இருந்த அவர் சனல் 4 விவகாரம் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் என்றார். இரண்டு நாட்களுக்குப் பின்னர் இரகசிய பொலிஸின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிடம் விசாரணைகளை கையளிக்குமாறு கூறினார்.

அதே கால கட்டத்தில் ஸ்கொட்லன்ட்யாட் பொலிஸாரிடம் விசாரணைகளை ஒப்படைக்குமாறு கூறினார். இப்போது தாம் பதவிக்கு வந்து இரண்டு மாதங்களில் ஆணைக்குழுவொன்றை நியமிப்பதாக கூறுகிறார்.  சுமார் 300 பேரின் உயிரை காவுகொண்ட ஒரு சம்பவம் அரசியல்வாதிகளின் கையில் பந்தாடப்படுகிறது.

04.17.2024


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X