Editorial / 2026 மார்ச் 03 , பி.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்
kanaga.raj132@gmail.com
செய்திகளைச் சேகரித்து பகுப்பாய்வு செய்து அச்சு மின்னணு அல்லது சமூக ஊடகங்கள் மூலம் மக்களுக்குத் தெரிவிக்கும் தொழில்முறை வல்லுநர்கள் ஊடகவியலாளர்கள் ஆவர். அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சி, வானொலி மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் தகவல்களைப் பரிமாறுவதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். அவர்கள் ஒவ்வொரு நாளும் புதிய விடயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன், வரலாறுகளை ஞாபகத்தில் கொள்ளவேண்டும். அதுமட்டுமன்றி, வீன யுகத்துக்கு ஏற்றவகையில் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.

அந்த வகையில், இந்தியாவின் ஹைதராபாத்தில் தெலுங்கானாவில் உள்ள Dr. MCR HRD (Dr. Marri Channa Reddy Human Resource Development Institute) (MCR HRD) வில் ஊடக முகாமைத்துவம் தொடர்பாக நடைபெற்ற ஒருவார கால விசேட பயிற்சி திட்டத்தில் பங்கேற்பதற்கு எனக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. நான் அடங்களாக 30 பேரடங்கிய இரண்டாவது தொகுதியினர் 2026 பெப்ரவரி 16-21 வரையிலும்
இப் பயிற்சித்திட்டத்தில் பங்கேற்றிருந்தோம்.
பயிற்சித் திட்டத்திற்கான பயணத்தில் கிடைத்த அனுபவங்கள், MCR HRD கற்றுக்கொண்டவை, களப்பயணம், இன்னும் பல சுவாரஸ்யமான விடயங்களைப் பயணக் கட்டுரையாக எழுதுகின்றேன். அதில், MCR HRD நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பெயர்மாற்றம் தற்போது எவ்வாறான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன என்பது தொடர்பிலான தகவல்களை இந்த பகுதி கொண்டிருக்கின்றது.
இந்தியாவின் ஹைதராபாத்தில் தெலுங்கானாவில் உள்ள Dr. MCR HRD (Dr. Marri Channa Reddy Human Resource Development Institute) (MCR HRD) வில் ஊடக முகாமைத்துவம் தொடர்பாக நடைபெற்ற ஒருவார கால விசேட பயிற்சி திட்டத்தில் இலங்கையின் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் அதிகாரிகள் இரு குழுக்களாகக் கலந்து கொண்டிருந்தனர். 30 பேர் அடங்கிய முதலாவது தொகுதியினர் 2026 ஜனவரி 26-31 காலப்பகுதியிலும் இரண்டாவது தொகுதியினர் 2026 பெப்ரவரி 16-21 வரையிலும் இப் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
தொழில் நிபுணத்துவத்தினை வலுப்படுத்துவதிலும், வளர்ந்து வரும் உலகளாவிய ஊடக பரப்பில் அச்சு, இலத்திரனியல், டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்களில் பங்கேற்பாளர்கள் மேம்பட்ட திறன்களுடன் பணியாற்றுவதையும் குறித்த இரு பயிற்சித் திட்டங்களும் இலக்காகக் கொண்டிருந்தன. அதில், காலையில் யோகா பயிற்சி முக்கியமானது.
இந்திய அரசாங்கத்தால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த இந்த திட்டங்கள், ஊடக தொழில்நுட்பம், செய்தி கூடங்களின் நிலை மாற்றங்கள், ஆட்சித் தொடர்புகள், மற்றும் கோட்பாட்டு அடிப்படையிலான ஊடகவியல் உள்ளிட்ட விடயங்களில் அண்மைய அபிவிருத்திகள் தொடர்பான நடைமுறை தெளிவூட்டல்களை வழங்குவதை இலக்காகக் கொண்டிருந்தன.
அச்சு, ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள் உள்ளிட்ட துறைகளில் இலங்கையின் பாரிய ஊடக நிறுவனங்களது பிரதிநிதிகள் இப்பயிற்சிகளில் கலந்து கொண்டிருந்தனர். தலைமைத்துவ அபிவிருத்தி, ஆட்சி சார் பயிற்சி மற்றும் தொழில்முறை நிபுணத்துவத்துக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முதன்மையான பயிற்சி நிறுவனமாகப் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ள MCR HRD சமகால தொடர்பாடல் சவால்களை எதிர்கொள்வதற்கும், பொது விவாதத்தை வடிவமைக்கும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப செல்நெறிகளுக்குமான நற்பெயரைக்
கொண்டுள்ள ஒரு நிறுவனமாகும்.
நிபுணர்கள் தலைமையிலான விரிவுரைகள், கலந்துரையாடல் அமர்வுகள், விளக்க காட்சிகள், குழுநிலை பயிற்சிகள், கள விஜயங்கள் ஊடாக இரு குழுக்களையும் சேர்ந்தோர் சிறந்த நேரடி கற்றல் அனுபவங்களைப் பெற்றுக்கொண்டிருந்தனர். பங்கேற்பாளர்கள் அறிவு ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் திறன்களைப் பெறுவதை உறுதி செய்யும் வகையில் இந்த அமர்வுகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. அணுகுமுறை திறன்கள் மூலம் மனித திறனை மேம்படுத்தல், செயற்கை நுண்ணறிவு உட்பட ஊடகங்களில் புதிய மற்றும் நவீனத் தொழில்நுட்பங்கள், டிஜிட்டல் மாற்றம் மற்றும் தரவு அடிப்படையிலான அறிக்கையிடல், தவறான/பிழையான தகவல் மற்றும் பிரசாரத்தை எதிர்கொள்ளல், நல்லாட்சியில் சமூக ஊடகங்கள், ஊடகவியலாளர்களுக்கான ஒளிப்பதிவு முறைமைகள்; ஊடகங்களுக்கும் மக்கள் தொடர்புகளுக்கும் இடையே நம்பிக்கையை உருவாக்குதல்,
நெருக்கடி முகாமைத்துவத்தில் தொடர்பாடல் சவால்கள் மற்றும் தொழில்முறை நெறிமுறைகள் மற்றும் நேர்காணல்களுக்கான தயார்நிலை
உள்ளிட்ட தொனிப்பொருட்களில்
இப்பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
அனுபவ ரீதியான கற்கையின் ஒரு பகுதியாக இரு தொகுதியினரும் ஹைதராபாத் மற்றும் அயல் பிராந்தியங்கள் முழுவதும் கலாசார விஜயங்களை மேற்கொள்ள முடிந்தது. வரலாற்றுச் சிறப்பு மிக்க Old City இல் உள்ள சர்மினார் மற்றும் இந்தியாவின் முன்னணி புத்தாக்க நிறுவனமான T Hub மற்றும் Golconda fort ஆகியவற்றுக்கான நேரடி விஜயங்கள் மூலம் நாட்டின் புத்தொழில் நிறுவனங்கள் குறித்த உள்நோக்குகளை பெற்றுக்கொள்ள முடிந்தது. இந்தியாவின் உயர்வான பாரம்பரியம்,
புத்தாக்க சூழல், ஜனநாயக மரபுகள் தொடர்பாகவும் பிராந்தியத்தின் புத்த மரபுகள் குறித்தும் ஆழமான புரிதல்களையும் பெற்றுக்கொள்ள முடிந்தது.
இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி இலங்கைக்கு 2025 ஏப்ரலில் மேற்கொண்டிருந்த உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, அவரால் அறிவிக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட ஆளுமை விருத்தி திட்டத்தின் கீழ் இந்த நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த நிகழ்ச்சித் திட்டமானது இன்றைய வேகமாக வளர்ந்து வரும் தகவல் கட்டமைப்பில் டிஜிட்டல் மாற்றம் தகவல் தொடர்பு ஆகியவற்றிற்கு வினைத் திறனுடன் பதிலளிக்க ஊடக நிபுணர்களை தயார்ப்படுத்தும் வகையில், உரிய நேரத்தில், பொருத்தமான மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களாக பரவலாகக் கருதப்படுகின்றது.
Dr. MCR HRD (Dr. Marri Channa Reddy Human Resource Development Institute) என்பது ஹைதராபாத்தில் அமைந்துள்ள இந்தியாவின் மிக முக்கியமான அரசு நிர்வாகப் பயிற்சி நிறுவனங்களில் ஒன்றாகும்.
இதன் முழுப்பெயர் டாக்டர் மர்ரி சென்னா ரெட்டி மனிதவள மேம்பாட்டு நிறுவனம் என்பதாகும். ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் மர்ரி சென்னா ரெட்டியின் நினைவாக
இந்த பெயர் சூட்டப்பட்டது.
இது தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தில் உள்ள ஜூபிளி ஹில்ஸ் (Jubilee Hills) பகுதியில் சுமார் 45 ஏக்கர் பரப்பளவில் பசுமையான சூழலில் அமைந்துள்ளது. அரசு அதிகாரிகளுக்குத் தேவையான நிர்வாகத் திறன், தலைமைத்துவம் மற்றும் ஆளுமைப் பயிற்சிகளை வழங்குவதே இதன் முதன்மையான நோக்கமாகும்.
இந்திய ஆட்சிப் பணி (IAS), இந்தியக் காவல் பணி (IPS) போன்ற அகில இந்தியப் பணி அதிகாரிகளுக்கான அடிப்படைப் பயிற்சிகள் (Foundation Course) தெலுங்கானா மாநில அரசு அதிகாரிகள் மற்றும் பிற மாநில அரசு அதிகாரிகளுக்கான சிறப்புப் பயிற்சிகள், மத்திய அரசுப் பணியாளர்க்கான மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இது 1976ஆம் ஆண்டு ‘நிர்வாக நிறுவனம்' (Institute of Administration) என்ற பெயரில் தொடங்கப்பட்டது. 1998ஆம் ஆண்டு, டாக்டர் மர்ரி சென்னா ரெட்டியின் நினைவாக தற்போதைய பெயர் வழங்கப்பட்டது. காலப்போக்கில், இது தேசிய அளவிலான ஒரு மிகச்சிறந்த பயிற்சி மையமாக உருவெடுத்துள்ளது. தற்போது இது தெலங்கானா மாநில அரசின் முதன்மை பயிற்சி நிறுவனமாகச் செயல்படுகிறது.
இந்த நிறுவனம் உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டுள்ளது. இணைய வசதி மற்றும் நவீனக் கற்பித்தல் கருவிகளுடன் கூடிய வகுப்பறைகளை கொண்டுள்ளன. சுமார் 900க்கும் மேற்பட்ட பயிற்சி பெறுபவர்கள் தங்கும் வசதி (Air-conditioned Rooms) உள்ளன. நூலகம் மற்றும் விளையாட்டு, ஒரு விரிவான நூலகம், நீச்சல் குளம், விளையாட்டு மைதானங்கள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் உள்ளன.
டிஜிட்டல் கற்றல்: ‘TeAMS' (Telangana e-Learning Application Management System) போன்ற ஒன்லைன் தளங்கள் மூலம் மின்-கற்றல் (e-Learning) வசதிகளையும் வழங்குகிறது. நிர்வாகப் பிரிவுகள் (Centers), தகவல் தொழில்நுட்ப மையம் (CIT), சட்ட மற்றும் பொது நிர்வாக மையம் (CLP), பேரிடர் மேலாண்மை மையம், நிதி மற்றும் பொருளாதார மையம், முக்கிய பாடத்தலைப்புகள் (Core Topics): ஊடக மேலாண்மை மற்றும் தொடர்பு (Media Management): அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் உத்திகள், பத்திரிகையாளர் சந்திப்புகளை (Press Conferences) முறையாக நடத்துவது எப்படி? ஊடக உறவுகளை (Media Relations) ஆரோக்கியமாகப் பேணுதல், புதிய மற்றும் சமூக ஊடகங்கள் (New & Social Media): பேஸ்புக், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களை அரசுத் தொடர்பாடலுக்குப் பயன்படுத்துதல். ஊடகத் துறையில் செயற்கை நுண்ணறிவு AI-இன் தாக்கம் மற்றும் அதனை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துதல். தவறான தகவல்கள் மற்றும் போலிச் செய்திகளை (Fake News) அடையாளம் காணுதல் மற்றும் முறியடித்தல். நெருக்கடிக் காலத் தொடர்பாடல் (Crisis Communication): பேரிடர் அல்லது அவசர காலங்களில் வதந்திகள் பரவாமல் தடுத்து, சரியான தகவல்களை விரைவாக மக்களிடம் கொண்டு செல்லும் முறைகள், டிஜிட்டல் ஆளுமை (e-Governance): அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல் ஆகியன தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டன.
இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான உறவை வலுப்படுத்துவதுடன், இலங்கையின் ஊடகத் துறையை உலகத் தரத்திற்கு உயர்த்துவதே இந்த முறையான பயிற்சியின் பிரதான நோக்கமாக இருந்தது. இரண்டாவது தொகுதியினருக்கான விசா குத்திய கடவுச்சீட்டுக்கள் கொழும்பில் உள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலத்தில், பெப்ரவரி 13ஆம் திகதியன்று வழங்கப்பட்டு, விளக்கமும் அளிக்கப்பட்டது. காலதாமதமாகக் கையளித்தவர்களுக்குக் கடவுச்சீட்டுகள் காலதாமதமாகவே வழங்கப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை (15) பிற்பகல் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் இருந்து பயணம் ஆரம்பமானது.
வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் போது, அந்தந்த நாடுகளின் பிரபல்யமான இடங்களைப் பார்க்க வேண்டும், அந்நாட்டு உணவுகளை ருசிக்க வேண்டும் என்பதே பலரின் ஆசையாகும். வேறு நாடுகளின் மிக பிரபல்யமான உணவுகள் இங்கும் இருக்கும். எனினும், அந்தந்த நாடுகளுக்குச் சென்று சாப்பிட்டு பார்த்தால்தான் அதன் தனிச் சுவையை நா அறியும். ஹைதராபாத் என்றாலேயே ஹைதராபாத் பிரியாணி. எமது குழுவைச் சேர்ந்த பலரும் உள்நாட்டில் சுவைத்திருந்தார்கள் எனினும், ஹைதராபாத்தில் சுவைக்க வேண்டுமெனப் பேசிக் கொண்டார்கள். ஹைதராபாத் பிரியாணி பெயரைக் கேட்டவுடனேயே எனக்கும் நாவில் எச்சில் சுரந்தது. கண்களை மூடிக் கொண்டு கற்பனை செய்து கொண்டேன். எனினும், எட்டு நிமிடங்கள் பொறுமையிழந்த ஒருவர், அரிசியை ‘லப்க் லப்கென' விழுங்கி விட்டார்.
எமது குழுவில் அடங்கியிருந்த 30 பேரையும் ஏனைய பயணிகளையும் தாங்கிய indigo flight கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஒருசில நிமிடங்களில் மேகங்களின் மேலே பறந்தது. எனது அலைபேசியை எடுத்த நான், அந்தக் காட்சியை வீடியோவாக பதிவு செய்து, “பஞ்சு மேகங்கள் எனது பிஞ்சு முகத்தை வருடுகின்றன” என எழுதி ஹைதராபாத் விமான நிலையத்தில் இரண்டு மணி நேரத்துக்குள் இறங்கி MCR HRD க்கு பயணிக்கும் வழியில் எனது முகப் புத்தகத்தில் பதிவிட்டேன்.
( ஹதராபாத் பயண அனுபவம் தொடரும்)...

1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago