2025 ஒக்டோபர் 30, வியாழக்கிழமை

இலங்கை அரசியலில் ஓர் அம்சம்

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 29 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஐயூப்

வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்கிரமசேகர அவரது அலுவலகத்தில் வைத்து கடந்த 22 ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அரசியல் வாதிகளின் பாதுகாப்பு, குற்றச் செயல்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான உறவு மற்றும் குற்றச் செயல்களை கையாள்வதில் பொலிஸாரினதும் ஊடகங்களினதும் ஒழுக்க நெறிகள் போன்ற பல பிரச்சினைகள் பேசு பொருளாகி உள்ளது.

அந்த சம்பவத்தை அடுத்து ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் வித்தானவும் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார். அதன் பிரகாரம் அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்துக்கு அவ்வாறான அச்சுறுத்தல்கள் இருப்பதாக முன்னர் அறிவிக்கப்படாத போதிலும் அவருக்கும் அச்சுறுத்தல்கள் இருப்பதால் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும் கடந்த திங்கட்கிழமை செய்திகள் கூறின. 

தமக்கு எதிராக கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக கூறி லசந்த விக்ரமசேகர பாதுகாப்பு கோரியிருந்தார் என்றும் ஆனால் பொலிஸார் அவருக்கு பாதுகாப்பு வழங்கவில்லை என்றும் எனவே, இப் படுகொலைக்கு அரசாங்கமே பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியினர் வாதிட்டனர்.

அது மட்டுமல்லாது இக்கொலைக்கு பின்னால் ஆளும் தேசிய மக்கள் சக்தியே இயங்கியுள்ளது என்ற அர்த்தத்திலும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 
அதற்கு பதிலளித்து உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், வெலிகம பிரதேச சபைத் தலைவர் பாதாள உலகத்தோடு தொடர்பு உள்ளவர்.

அதுவே கொலைக்கு காரணம். அவருக்கு எதிராக நீதிமன்றங்களில் ஆறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே ஒரு வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை அனுபவிக்கும் நிலையிலேயே கொல்லப்பட்டுள்ளார் என்றும் கூறினார்.

விந்தையான விடயம் என்னவென்றால் ஐக்கிய மக்கள் சக்தியினரும் ஆளும் கட்சியினரும் இவ்வாறு ஒருவருக்கொருவர் குற்றஞ்சாட்டி கொண்ட போதிலும் மற்றைய கட்சியினரின் குற்றச்சாட்டுகளை  எக்கட்சியினரும் மறுக்கவில்லை என்பதேயாகும்.

படுகொலை செய்யப்பட்ட பிரதேச சபைத் தவிசாளர் தமக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்தும் அரசாங்கம் பாதுகாப்பு வழங்கவில்லை என்பதை மறுக்காத பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர், பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு வழங்க சட்டத்தில் இடமில்லை என்றார்.

லசந்த விக்ரமசேகர பல குற்றச் செயல்களை புரிந்தவர் என்ற அமைச்சரின் குற்றச்சாட்டை மறுக்காத ஐக்கிய மக்கள் சக்தியினரும் அவர் ஒரு மக்கள் பிரதிநிதி என்றும் எனவே, அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்க வேண்டும் என்று கூறினர்.

உண்மை தான், லசந்த விக்ரமசேகர பாதாள உலக குண்டனாக இருக்கலாம். ஆனால், அவர் பொது மக்களின் வாக்குகளால் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்டு சட்டப்படி பிரதேச சபையின் தவிசாளர் ஆனார். அதோடு அவருக்கு கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. இந்த நிலையில் அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்?

அவர், ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை அனுபவிப்பவர், அவருக்கு எதிராக மேலும் ஆறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதற்காக அவரை படுகொலை செய்ய அவரது எதிரிகளுக்கு இடமளிப்பதா? அவர் பிரதேச சபைத் தவிசாளராக இல்லாதிருந்தால் எங்காவது சென்று பதுங்கியிருப்பா​ர்.

ஆனால், அவரது அரசியல் பொறுப்பின் காரணமாக அவரால் அவ்வாறு பதுங்கி வாழவும் முடியாது. அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போரிடுவோர் தவிர்ந்த ஏனையோர்களில் ஒருவர் பாதாள உலக தாதா என்பதற்காகவாவது அவரை படுகொலை செய்ய இடமளிக்க பொறுப்பு வாய்ந்த ஓர் அரசாங்கத்துக்கு முடியாது.

பிரதேச சபைத் தவிசாரைப் பற்றி அமைச்சர் கூறிய எதையும் ஐக்கிய மக்கள் சக்தியினர் மறுக்கவில்லை. அவருக்கு எதிராக உண்மையிலேயே வழக்குகள் நிலுவையில் இருப்பதாக இருந்தால், அவர் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை அனுபவிப்பவராக இருந்தால், இதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் போதும் அதைப் பற்றி ஐமச தலைமை அறிந்திருக்கத்தான் வேண்டும்.

அவ்வாறாயின் அக்கட்சி ஒரு கேடியை தமது வேட்பு மனு பத்திரத்தில் ஏன் சேர்த்துக் கொண்டது?  அமைச்சர் விஜேபால பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது விக்ரமசேகரவின் படுகொலையை நியாயப்படுத்தினார் என்று எதிர்க் கட்சியினர் கூறுகின்றனர். ஐக்கிய மக்கள் சக்தியினர் படுகொலை சம்பவத்தைப் பற்றி கூறிய உடன் விக்ரமசேகர பல குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்டவர் என்று அமைச்சர் கூறிமையே அதற்குக் காரணமாகும். ஒரு வகையில் அவர்களது வாதம் சரியானதாகும்.

ஆனால், அரசாங்கம் விக்ரமசேகரவுக்கு ஏன்? பாதுகாப்பு வழங்கவில்லை என்பதை அமைச்சர் விளக்கவும் வேண்டும். அதற்காக விக்ரமசேகரவின் கடந்த கால நடவடிக்கைகளை விவரிக்கவும் வேண்டும்.

அத்தோடு விக்ரமசேகரவை படுகொலை செய்தவர்களை இரண்டு மூன்று நாட்களில் கைது செய்வதாக அமைச்சர் அன்றே கூறினார். அவர் கூறியதை போலவே துப்பாக்கிச் சூட்டை நடத்தியர் உள்ளிட்ட பலர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

ஆனால், அக்கொலையில் சம்பந்தப்பட்ட துப்பாக்கிதாரி கைது செய்யப்படும் காட்சியும் அவர் விசாரிக்கப்படும் காட்சியும் தொலைக்காட்சி மூலமும் சமூக ஊடகங்கள் மூலமும் வைரலாகியது. இது மிக மோசமான நடவடிக்கையாகும். கைது செய்தவர்கள் சீருடையில் இருக்கவில்லை.

ஆயினும் அவர்கள் பொலிஸ் உளவுப் பிரிவினர் போல் தான் தெரிகிறது. அவர்கள் அந்த நபரிடம் கேட்கும் கேள்விகள் சாதாரண  மக்கள் கேட்கும் கேள்விகள் அல்ல.
அந்நபர் உண்மையான குற்றவாளியா? என்பதை நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும். அது வரை அவர் நிரபராதியாகவே சட்டத்தில் கருதப்படுவார்.

நீதிமன்றத்தால் அவர் விடுவிக்கப்படவும் கூடும். அவ்வாறிருக்க அந்நபர் நையப்புடைக்கப்படுவது ஊடகங்கள் மூலம் காட்டுவது நாகரிகமான செயலல்ல. இதை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தவிசாளர் சாலிய பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த நபர்தான் உண்மையான குற்றவாளியாக இருந்தாலும் அவர் இந்தக் காட்சிகளை சுட்டிக்காட்டி பொலிஸார் தம்மை தாக்கியே ஒப்புதல் வாக்குமூலம் பெற்றனர் என்று கூறி வழக்கிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் கூடும். இதற்கு முன்னரும் ஒரு பொலிஸ் நிலையத்தில் சந்தேக நபர் ஒருவர் விசாரிக்கப்படும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகியது.

இலத்திரனியல் ஊடகவியலாளர் சங்கமும் இவ்வாறு சந்தேக நபர்களை சமூகத்தில் அசௌகரிததுக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பொலிஸாரிடம் கேட்டு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

வெலிகம பிரதேச சபைத் தவிசாளரின் படுகொலையை அடுத்து களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் வித்தான கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் தான் உயிராபத்தை எதிர்நோக்கியுள்ளதால் தமக்கு பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் களுத்துறை சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளதாகவும் ஆனால், பொலிஸார் அதைப் பற்றி இன்னும் தமக்கு அறிவிக்கவில்லை என்று கூறினார்.

ஒரு நபருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தால் முதலாவதாக அதை அறிந்து கொள்ள வேண்டியவர் அந்நபரே. பொலிஸாருக்கு அவருக்கான தமது கடமைகளை முறையாக நிறைவேற்றவும் அது உதவும். பொலிஸ் மா அதிபர் அதை விடுத்து வித்தான எம்பிக்கும் பாதாள உலகோடு தொடர்பு உள்ளதால் இந்த அச்சுறுத்தல் வந்துள்ளது எனறு கூறுகிறார். பொலிஸ் திணைக்களம் அரசியல் மாயமாகியுள்ளது இது காட்டுகிறது.

சாணக்கியனும் எப்போதும் அரசாங்கத்தை கடுமையாக விமர்சிப்பவர்.  எனினும் சாணக்கியனுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருப்பதாக கூறி அரசாங்கம் அவருக்கு பாதுகாப்பு வழங்க முன்வந்துள்ளது. அவர் பாதுகாப்பை கேட்டதாக எவரும் அதற்கு முன்னர் கூறவில்லை.

அரசியல் பின்னணியில் உள்ள பாதாள உலகம் என்பது இலங்கையில் புதிய விடயம் அல்ல. 1977 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமே அதை உருவாக்கியது. அக்காலத்தில் ரணில் விக்ரமசிங்கவின் தொகுதியான பியகமவைச் சேர்ந்த கோனவல சுனில் என்னும் பாதாள உலகத் தலைவர் கொழும்பு கம்பஹா ஆகிய மாவட்டங்களிலும் ஆதிக்கம் செலுத்தி வந்தார்.

ஜனாதிபதி பிரேமதாசவின் காலத்திலும் சொத்தி உபாலி போன்றோர் அதுபோலவே நடந்துகொண்டனர். சந்திரிக்காவின் காலத்தில் இந் தாதாக்களுக்கு உத்தியோகபூர்வ அந்தஸ்தும் வழங்கப்பட்டது. மஹிந்தவின் காலத்தில் இந்த பாதாள உலக கும்பல்களோடு பாதுகாப்பு படையினரும் அரசியல் எதிரிகளை தாக்க பயன்படுத்தப்பட்டனர்.

இவ்வாறு வளர்ந்த பாதாள கும்பல்கள் போரின் காரணமாக நாட்டில் பரவிய நவீன ஆயுதங்களை பாவித்து போதைப் பொருள் வியாபாரத்தின் மூலம் கோடிக் கணக்கில் சம்பாதிக்கின்றன. அந்த பாதாள கும்பல்களோடு தான் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போது போராடுகிறது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X