2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

இலங்கை தமிழர் பிரச்சினைகளை தீர்க்க மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

Editorial   / 2023 ஜூலை 24 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்க பிரதமர் மேலும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அரசியலாளரும், வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கருத்து கூறியுள்ளார். காமராஜரின் ஸ்தாபனக் காங்கிரஸ், திமுக, மதிமுக ஆகிய கட்சிகளிலும் முக்கிய பங்கு வகித்த இவர், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 1983-ம் ஆண்டு ஜூலை   கலவரத்தை நினைவுகூரும் ‘கறுப்பு ஜூலை’ தினம்  அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி பின்வருமாறு:

இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் உருவான ஈழத் தமிழர் பிரச்சினை இன்னும் முடியாமல் நீள்கிறதே?

ஆங்கிலேயரிடம் இருந்து 1948-ல் இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்பு சிம்லாவில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அப்போது, ‘‘இந்தியாவின் ஒரு தீவாகத்தான் இலங்கை இருந்தது’’ என்று கூறி அதையும் சேர்த்துக் கொள்ள மவுன்ட்பேட்டன் யோசனை தெரிவித்தார். அதற்கு நேருவும், வல்லபபாய் படேலும் சம்மதிக்கவில்லை என்ற கூற்றும் உண்டு. மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகப் பகுதிகளைச் சேர்ந்த தமிழர்கள் தேயிலை தோட்டங்களில் பணியாற்றியதாலும், இலங்கையின் வடக்கு, கிழக்கு மாநிலங்களில் வாழ்ந்த பூர்வீகத் தமிழர்களாலும் மவுன்ட் பேட்டனுக்கு இந்த யோசனை உதித்துள்ளது.

இந்த இரு தரப்பினரும் அப்போது சிங்களவர் எண்ணிக்கைக்கு இணையாக இருந்துள்ளனர். இதை குறைக்க தேயிலை தொழிலாளர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டு தமிழகம் அனுப்பப்பட்டனர். அதன்பின்னர் தமிழர்களுக்காக இலங்கை அரசு 1964-ம் ஆண்டுவரை 9 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு அவற்றில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. காவல் துறை, அரசு நிர்வாகம் என அனைத்திலும் சிங்களர்கள் ஆதிக்கம். இவற்றை எதிர்த்து நடத்தப்பட்ட அரசியல் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டன. இதுபோன்ற பல இன்னல்களால், மே 14, 1976-ல் கொண்டுவரப்பட்ட வட்டுக்கோட்டை மாநாட்டின் தீர்மானத்துக்கு பிறகு தமிழர்களின் போராட்டத்தில் மாற்றங்கள் ஏற்பட்டன. 1970,1974-ம் ஆண்டுகளை விடப் பெரிதாக, 1983-ல் ‘கருப்பு ஜூலை’ எனும் பெரும் கலவரம் ஏற்பட்டது.

தலைநகர் கொழும்பில் கடந்த ஜூலை 24, 1983-ல் தொடங்கி 6 நாட்கள் நடைபெற்ற கலவரம் தனித்தமிழ் ஈழப்போராட்டமாக மாறியதில், அப்போதுசுமார் 5,000 பேர் உயிரிழந்து ஒன்றரை லட்சம் தமிழர்கள் வீடுகளை இழந்தனர். பிரபாகரனை போன்ற இலங்கை தமிழர்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். அதன்பிறகு தான் இலங்கை தமிழர்கள் அகதிகளாக நாட்டை விட்டு கிளம்பத் தொடங்கினர். இதை முன்னின்று நடத்தியவர் அன்று அமைச்சராக இருந்தவரும், ஜெயவர்தனேவின் மருமகனுமான தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கே.

இப்பிரச்சினையில், முன்னாள் பிரதமர்களை விட தற்போதைய பிரதமர் மோடியின் அணுகுமுறை எப்படி உள்ளது?

பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்தில், சீனாவின் ஆதிக்கமும், கோயில்களில் புத்த விஹாரங்கள் அமைத்து மாற்றப்படுவதும் என இரண்டு பிரச்சினைகளும் கவனத்தில் உள்ளன.யாழ்ப்பாணத்தில் தமிழர்களுக்காக ஒரு கலாச்சார மையம் கட்ட வைத்துள்ளார் பிரதமர் மோடி. இவர், இந்து மகா சமுத்திரத்தில் இந்தியாவுக்கு சவாலாகி வரும் புவி அரசியலையும் திறமையுடன் சமாளித்து வருகிறார்.

இந்தச் சூழலில், ஈழத் தமிழர்கள் பிரச்சினையை கையில் எடுக்கும்படி பிரதமர் மோடியை என் போன்றவர்கள் வலியுறுத்துகின்றனர். ஏனெனில், புவிஅரசியலில் ஈழத் தமிழர்கள் இந்தியாவின் பாதுகாப்புக்கு கேடயமாக இருப்பார்கள் என்பதை பிரதமர் மோடி உணர்கிறார். எனவேதான், பல்வேறு உத்திகளை பிரதமர் மோடி வகுத்துள்ளார். அவற்றை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மூலமாக செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் கிடைக்கிறது. ஐஎப்எஸ் அதிகாரியாக இருந்த காலம் முதல் இலங்கை தமிழர்கள் பிரச்சினையை ஜெய்சங்கர் நன்கு அறிந்தவர். அதனால் இந்த பணிகளுக்கு ஜெய்சங்கர் முக்கிய பங்காற்றுவார்.

இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கு முடிவுகட்ட உங்களுடைய யோசனை என்ன?

ஆங்கிலேயர் காலம் முதலாகவே இலங்கையில் தமிழர்கள் இரண்டாம்தரக் குடிமகன்களாகவே நடத்தப்பட்டனர். இதை சுதந்திரப் போராட்டக் காலத்தில் யாழ்ப்பாணத்துக்கு வந்த மகாத்மா காந்தியும், நேருவும் கூட உணர்ந்தனர். எனவே, இலங்கை தமிழர்கள் போராட்டம் முதல் நடைபெற்ற தமிழின அழிப்பு, தமிழ்த் தலைவர்கள் படுகொலைகள் உள்ளிட்ட கொடுமைகள் மீதுசர்வதேச அளவில் ஒரு சுதந்திரமான விசாரணை தேவை. முள்ளிவாய்க்கால் சம்பவமும் ஐக்கிய நாடுகள் சபையில் நிலுவையில் உள்ளது. இந்தப் பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்த வேண்டும்.

இலங்கை மக்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை அறியபொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதிகாரங்கள் இன்றி பொம்மைகளாக இருக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு முழு அதிகாரங்கள் வழங்க வேண்டும். இறுதிப் போர் நடைபெற்ற முள்ளிவாய்க்காலில் காணாமல் போன ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இதே முள்ளிவாய்கால் போருக்கு பின் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள தமிழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு மாநிலங்களில் தமிழர்களது காணி நிலங்களில் 14 வருடங்களாக ராணுவம் அமர்ந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. அவசியம் இல்லாத இந்தராணுவத்தை அங்கிருந்து விலக்க வேண்டும்.

தமிழர்களுக்காக இந்திய அரசுஅளித்த நிதி முழுமையாக செலவிடப்படவில்லை. தமிழர்களே இல்லாத ராஜபக்சவின் தொகுதியான காழியில் மிகப்பெரிய ரயில் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவெனில், பிரதமர் மன்மோகன் ஆட்சியில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த எஸ்.எம்.கிருஷ்ணா அந்த ரயில் நிலையத் திறப்புவிழாவுக்கு சென்றிருந்தார். இதுபோன்ற தவறுகளை இந்திய அரசு கணக்கு எடுத்து தம் நிதியை பயனுள்ள வகையில் செலவிட வலியுறுத்த வேண்டும்.

பிரபாகரன் இன்னும் உயிருடன் இருப்பதாக ஒரு கருத்து எழுந்துள்ளதில் உண்மை என்ன?

பிரபாகரனுக்கு மிகவும் வேண்டியவர்களில் முதலாமவர் நெடுமாறன், அடுத்து நான், பிறகு புலவர் புலமைப் பித்தன். கடந்த 1982-ல் பாண்டி பஜார் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பின்புதான் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வெளியில் பரவலாக அறியப்பட்டார்.

ஆனால், அதற்கும் பல வருடங்களுக்கு முன்பே அவரை எங்களுக்கு தெரியும். சென்னையில் பிரபாகரன் மயிலாப்பூர் வீட்டில் என்னுடன்சுமார் ஒரு வருடம் தங்கி இருந்தார். நெடுமாறன் கூறியதன்படி நானும் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவே நம்புகிறேன். இதை ஒரு காலத்தில் மதிமுக தலைவர் வைகோவும் வழிமொழிந்திருந்தார். அவர் எங்கோ உயிருடன் இருக்கிறார். இந்தியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்கினால் ஒருநாள் வருவார்.

பிரபாகரன் உயிரிழந்ததாக இலங்கை அரசு கூறும் தகவல்களில் முரண்பாடுகள் உள்ளன. அவரது உடலின் டிஎன்ஏ சோதனை செய்யப்பட்டதாக வெளியான தகவலும் பொய். ஏனெனில், பிரபாகரன் உறவினர்களில் யாரிடம் இருந்து ரத்தம்எடுக்கப்பட்டது என்ற தகவல் இல்லை.

அப்போது, இந்த சோதனைக்கான வசதி இலங்கையில் இல்லை. அதற்காக இலங்கை அரசு இந்தியாவிலும் அதை செய்யவில்லை. டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் வெளியாக குறைந்தது ஒரு வாரமாகும். ஆனால், இவர்கள் 24 நேரத்தில் செய்து கண்டுபிடித்ததாகக் கூறுவதை நம்ப முடிய வில்லை.

மீன்பிடிக்கச் செல்லும் போது இலங்கையில் சிக்கும் மீனவர்களுக்கும் தீர்வு காண முடியாமல் உள்ளதே?

இருதரப்பு மீனவர்கள் இடையே தேவையில்லாத மோதலை இலங்கை அரசு உருவாக்கி வருகிறது. கச்ச தீவை மீட்டால் தமிழக மீனவர்கள் பிரச்சினை தீர ஒரு வழி பிறக்கும். இது மீட்கப்பட்ட பின் அங்கு காவலுக்கு இருக்கும் இந்திய பாதுகாப்பு படை தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பளிக்கும். கச்சத் தீவு அளிக்கப்பட்ட போது முறையாக வழிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை.

இதுதொடர்பான மசோதாக்களும் நமது பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்படவில்லை.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X