2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இலங்கையின் பெரும் சாபக்கேடு: தீர்க்கதரிசனமுள்ள அரசியல்வாதிகள் இல்லாமை

Johnsan Bastiampillai   / 2023 ஏப்ரல் 19 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

என்.கே அஷோக்பரன்

Twitter: @nkashokbharan

 

 

 

1965 இல் சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்ததைத் தொடர்ந்து, லீ குவான் யூ சிங்கப்பூர் என்ற குட்டித் தீவுத் தேசத்தை நிறுவும் பணியைத் தொடங்கினார். ஒரே ஒரு தலைமுறையில், லீ குவான் யூ, அந்தக் குட்டித் தீவின் மக்களை ஒன்று திரட்டி, ஆயுதப் படைகளை வலுப்படுத்தவும், உள்கட்டமைப்பை விரிவுபடுத்தவும், குடியேறியவர்களை அவர்களின் பூர்வீகம் பொருட்படுத்தாமல் வரவேற்கவும் தனது அமைச்சரவை கூட்டாளிகளை வழிநடத்துவதன் மூலம் சிங்கப்பூரை ‘மூன்றாம் உலக’ நாட்டிலிருந்து ‘முதல் உலக’ உலகளாவிய பெருநகரமாக மாற்றினார். 

இன்று உலகளவின் தனிநபர் தலா வருமானம் உயர்ந்த முதல் ஐந்து நாடுகளுக்குள் சிங்கப்பூர் இருக்கிறது. மலேசியாவால் வேண்டாம் என்று ஒதுக்கப்பட்ட ஒரு குட்டித் தீவை, பொருளாதார, மற்றும் சமூக ரீதியாக வளர்ந்த நாடாக மாற்றியது லீ குவான் யூவின் சாதனை. அதனால் அவர் சிங்கப்பூரின் ‘ஸ்தாபக தந்தை’ என்று பரவலாக அங்கிகரிக்கப்பட்டார். 

சிங்கப்பூரைக் கட்டியெழுப்புவதில் அவர் பெற்ற வெற்றி, வரலாற்றில் இருந்து பாடம் கற்று, பல்லின மற்றும் பன்மொழி அரசை உருவாக்கும் திறனில் வேரூன்றி இருந்தது. சிங்கப்பூர் அடைந்த பெரும் வளர்ச்சி, மலேசியாவில் சாத்தியப்படவில்லை. அங்கு பெரும்பான்மை மலாய் மக்கள், தங்கள் தேசத்தில்  சீனர்கள் மற்றும் பிற சிறுபான்மையினரை குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே சேர்க்க வேண்டும் என்று விரும்பினர்.  இது மலேசியாவுக்குள் இன ரீதியான கொதிப்பு நிலைகள் உருவாகக் காரணமானது.

லீ இதனை நன்கு அவதானித்திருந்தார். லீ சிங்கப்பூருக்கான புதிய அரசாங்கக் கட்டமைப்பை மாற்றியமைக்க நினைத்தார். சிங்கப்பூரை அவர் ஒரு பல்லின மற்றும் பன்மொழி மாநிலத்தின் அடித்தளத்தில் கட்டினார். அவரது புதுமையான நிர்வாகம் மற்றும் ஆட்சி அணுகுமுறை சிங்கப்பூர் செழிக்கவும், 20 ஆம் நூற்றாண்டின் மிக வெற்றிகரமான வளர்ச்சிக் கதையாக மாறவும் காரணமானது. லீயின் சிந்தனை, ‘லீ குவான் யூ: த மான் அன்ட் ஹிஸ் ஐடியாஸ்’ என்ற புத்தகத்தில் தௌிவாகப் பிரதிபலிக்கிறது.

இது சிங்கப்பூரின் சவால்களைத் தீர்ப்பதற்கான அவரது மூன்று பகுதி அணுகுமுறையை கோடிட்டுக் காட்டுகிறது: தடையை கண்டறிதல், தீர்வை முன்வைத்தல் மற்றும் சமூகம் வளர என்ன தேவை என்பதை மதிப்பீடு செய்தல்.

சிங்கப்பூர் மற்றும் உலகிற்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் எதிர்காலத்தின் படத்தை அவர் விட்டுச் சென்றார். ஒரு தீர்க்கதரிசனமுள்ள தலைமை கிடைத்தது சிங்கப்பூர் என்ற குட்டித் தீவுக்குக் கிடைத்த பெரும் வரம்.

சீனர்கள், மலாயர்கள், இந்தியர்கள் என பல்லினங்கள் நிறைந்த, அதேவேளை சீனர்களை 70%-ற்கு அதிகமாகக் கொண்ட தீவை, சீன இனத்தை சார்ந்த லீ குவான் யூ நினைத்திருந்தால், சீன இனத் தேசியவாதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்து ஆட்சியைத் தக்கவைத்தும் இருந்திருக்கலாம். ஆனால் சிங்கப்பூர் இவ்வளவு தூரம் வளர்ந்திருக்காது. இலங்கையைப் போல இனப்பிரச்சினையில் சிக்கி சீரழிந்திருக்கும். இந்த விஷயத்தில் லீ குவான் யூ தௌிவாக இருந்தார்.

பெரும்பான்மை வாக்குகளைப் பெறுவதற்கான எளிதான வழி, “எங்களுக்கு வாக்களியுங்கள்; நாங்கள் சீனர்கள்; அவர்கள் இந்தியர்கள்; அவர்கள் மலாய்க்காரர்கள் என்று சொல்வது. அப்படிச் செய்தால் எங்கள் சமூகம் பிளவுபடும்” என்று லீ குவான் யூ பகிரங்கமாகவே கூறினார். “உங்களிடம் ஒற்றுமை இல்லையென்றால். ஒரு சமுதாயமாக உங்களால் முன்னேற முடியாது” என்பது லீ குவான் யூ சொன்ன செய்தி. எத்தனை உயர்ந்த தீர்க்கதரிசனம்! இந்த விடயத்தில் விட்டுக்கொடுப்பிற்கே இடமில்லை என்பதில் லீ பிடிவாதமாக இருந்தார். இனம், மொழி, மதம் ஆகிய அட்டைகளைக் காட்டி விளையாட வேண்டாம். நாங்கள் இவ்வளவு தூரம் வந்துவிட்டோம், நாங்கள் ஒற்றுமையாகிவிட்டோம், அதை அப்படியே வைத்திருங்கள்” என்பது சிங்கப்பூர் மக்களுக்கு லீ குவான் யூ சொல்லிச் சென்ற செய்தி.

லீ குவான் யூவின் தீர்க்கதரிசனம் என்பது இந்த இனங்கள் சார்ந்த விடயத்தைத் தாண்டி, சிங்கப்பூர் என்ற எந்த இயற்கை வளங்களுமற்ற குட்டித் தீவை பொருளாதார ரீதியில் மேம்படுத்துவதிலும் முக்கியத்துவம் பெற்றிருந்தது. இன்று உலகளவின் தனிநபர் தலா வருமானம் உயர்ந்த முதல் ஐந்து நாடுகளுக்குள் சிங்கப்பூர் இருக்கிறது என்றால் அதற்கு லீ குவான் யூ எடுத்துக்கொண்ட பொருளாதார அணுகுமுறைதான் அடிப்படைக் காரணம். கம்யுனிசம், சோஷலிசம், மூடிய பொருளாதாரம் பேசி மக்களை ஏமாற்றும் பணியை லீ செய்யவில்லை.

சர்வதேச வணிகத்தை ஏதோவோர் ஆபத்தான பொருளாக லீ கருதவில்லை. ஆனால் சிங்கப்பூரின் நிதியையும், வணிகத்தையும் பாதுகாப்பதற்கான எல்லா நடவடிக்கைகளையும் அவர் எடுத்தார்.

சிங்கப்பூர் டொலரின் சர்வதேச மயமாக்கலைத் தடுப்பதன் மூலமும், வெளிநாட்டு வங்கிகளின் செயற்பாடுகளை மட்டுப்படுத்துவதன் மூலமும் லீ உள்நாட்டு நிதியில் இறுக்கமான பிடியை வைத்திருந்தார். இதன் பொருள் சர்வதேச நிறுவனங்கள் சிறிய தீவு நாட்டில் தங்களை நிலைநிறுத்துவதற்கான வாய்ப்பைக் கண்டன, ஊழலற்ற சூழல், தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் இணைந்து சிறந்த நிதி மற்றும் பொருளாதாரக் கொள்கை என்பன, பல பன்னாட்டு நிறுவனங்கள் சிங்கப்பூரை ஒரு பிராந்திய மையமாகத் தேர்ந்தெடுத்தன.

லீ திறந்த சுதந்திர வர்த்தகத்தை கையிலெடுத்து வெற்றியும் கண்டார். இது சிங்கப்பூர், பெரும் பன்னாட்டு நிறுவனங்களின் வௌிநாட்டு முதலீட்டை தாராளமாக ஈர்க்க உதவியது. மேலும், சிங்கப்பூரின் எழுச்சிக்கான ஒரு தெளிவான காரணி, உலகளாவிய நிதிய எழுச்சிகளை சீராகப் பயன்படுத்திக் கொள்ளும் லீயின் திறன் ஆகும். இது 1971 இல் அமெரிக்கா டொலரை தங்கத்தின் பெறுமதியின் நிர்ணயத்திலிருந்து நீக்கியபோது தொடங்கியது. லீ இந்த வாய்ப்பை விரைவாகப் புரிந்துகொண்டு, சிங்கப்பூரை அந்நியச் செலாவணிக்கான பிராந்திய மையமாக நிறுவினார்.

 உண்மையில், 1968 முதல், சிங்கப்பூர் அரசாங்கம் ஆசிய டொலர் சந்தையை வளர்ப்பதற்கு ஊக்கத்தொகை மற்றும் முன்னுரிமை வரி சலுகைகளை வழங்கியுள்ளது. இந்த முன்முயற்சியானது சிங்கப்பூர் ஒரு நிதி மையமாக வளர்ச்சியடையவும், அதன் அருகில் உள்ள போட்டியாளரான ஹொங்கொங்கை விட முன்னணியில் இருக்கவும் உதவியது. 

அதேவேளை உள்நாட்டு உட்கட்டமைப்பு அபிவிருத்தியடையாமல் பொருளாதார, சமூக வளர்ச்சி சாத்தியமில்லை என்பதையும் லீ உணர்ந்திருந்தார். வீடமைப்பு உள்ளிட்ட உள்நாட்டு உட்கட்டமைப்பை சரியான வகையில் திட்டமிட்டு லீயின் அரசாங்கம் முன்னெடுத்தது. சேரிப்புறங்களை மாற்றி, உலகத்தரத்தில் திட்டமிடப்பட்ட நகரமயமாக்கலை சிங்கப்பூர் கண்டது!

லீ குவான் யூ மீதும், சிங்கப்பூர் மீதும் விமர்சனங்கள் இல்லாமல் இல்லை. சிங்கப்பூரில் ஜனநாயக இடைவௌி குறைவாக இருக்கிறது. பேச்சுச் சுதந்திரமில்லை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. ஒரு பலமான எதிர்க்கட்சி கூட சிங்கப்பூரில் இல்லை எனலாம். சிங்கப்பூர் கண்ட அசுர வளர்ச்சியின் விலை அது என்று கூடச் சொல்வோரும் உண்டு.

இந்தக் குறைகள் இருந்தாலும், இப்படி ஒரு தலைமை எங்கள் நாட்டுக்குக் கிடைக்கவில்லையே என பலரும் அங்கலாய்க்கும் ஒரு தெளிவான பார்வையும், தீர்க்கதரிசனமும் கொண்ட தலைமை சிங்கப்பூரிற்குக் கிடைத்துள்ளது.

சரி! இத்தகைய ஒரு தலைமையேனும் இலங்கைக்கு கிடைத்துள்ளதா என்றால் அது கேள்விக்குறியே? இலங்கையிலுள்ள எத்தனை அரசியல்வாதிகளுக்கு இலங்கை என்ற நாடு பற்றிய தீர்க்கதரிசனம் இருக்கிறது? இந்தக் கேள்வியை இலங்கை மக்கள் தமக்குத் தாமே கேட்டுக்கொள்வது அவசியம்.

இனவாதத்தால் எந்த நாடும் வளர்ந்ததில்லை என்பதுதான் வரலாறு. ஆனால் அந்த வரலாறு தெரிந்த, புரிந்த, பெரும் கல்வி கற்ற அரசியல்வாதிகள் கூட, அரசியலுக்காக இனவாதம் பேசிய நாடு இது. தேர்தல் வெற்றி, பதவி மோகம், ஆட்சி அதிகாரம் என்ற சின்ன வட்டத்துக்குள் வாழ்ந்துகொண்டு, நாட்டைச் சூறையாடி தமது வாழ்க்கையை எப்படி முன்னேற்றலாம் என்று சிந்திக்கும் அரசியல்வாதிகளையும், அவர்களுடைய அடிவருடிகளையும் கொண்ட நாடும், அவர்களை வாக்களித்து ஆதரிக்கும் மக்களும் உள்ள நாடு வங்குரோத்தானதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது. இங்குள்ளவர்கள் லீ குவான் யூவின் சர்வாதிகாரத்தை மட்டும் கையிலெடுக்க விரும்புகிறார்கள்; மற்றவற்றை மறந்துவிடுகிறார்கள்.

இலங்கை அரசியலின் பெரும்குறை, இங்கு நாட்டையும் மக்களையும் நேசிக்கும், லீ குவான் யூ போன்ற தீர்க்கதரிசனம் மிக்க தலைமைகள் இல்லாமை!


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .