2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இலங்கையில் சீனா: விளங்கிக் கொள்ளலும் வினையாற்றலும் - 3

Johnsan Bastiampillai   / 2021 ஜூலை 27 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

 

 

இலங்கையில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கு, ஆபத்தானது என்பதில் ஐயமில்லை. அதேவேளை, அந்நியர் எவரதும் செல்வாக்கு இலங்கையில் அதிகரிப்பதும் இலங்கைக்கு ஆபத்தானது என்ற உண்மையை நாம் உணரவேண்டும். 

அமெரிக்காவின் செல்வாக்குப் பரவாயில்லை; இந்தியாவின் செல்வாக்கு தமிழருக்கு நல்லது போன்ற எடுகோள்களும் எதிர்பார்ப்புகளும், அபத்தமானவை மட்டுமன்றி, ஆபத்தானவையும் கூட! சர்வதேச சமூகத்தின் மீதான அளவுகடந்த நம்பிக்கையொன்றைத் தமிழ் அரசியல் கட்சிகளும் புலம்பெயர் தமிழர்களில் பெரும்பகுதியினரும் தொடர்ந்தும் கட்டியெழுப்புகின்றனர். ஆனால், இவர்கள் வருந்தி அழைக்கின்ற சர்வதேச சமூகத்தின் கடந்த கால்நூற்றாண்டுகால நடத்தையை, நாம் கடந்தே வந்திருக்கின்றோம்.  

இலங்கையில் செல்வாக்கு மிக்க நாடாக, சீனாவின் உருவாக்கம் புதியதாயினும், இலங்கையின் உள்விவகாரங்களில், சீனாவின் தலையீடு ஒப்பீட்டளவில் குறைவு. இலங்கையின் கடந்த அரைநூற்றாண்டுகால வரலாற்றில், அந்நியத் தலையீடுகள் மோசமான விளைவுகளைத் தந்துள்ளன. 

இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையின் தொடக்கத்துக்கு, பல்வேறு வரலாற்று வேர்கள் உள்ளன. அதன் அண்மைக் கால விருத்தியும் போராக அதன் பரிணாமமும் போரிலிருந்து மீள இயலாத தவிப்பும், வெறுமனே தமிழ்-சிங்கள இனப் பகையின் அடிப்படையில் மட்டும் விளக்கக் கூடியதல்ல. 

அந்நியத் தலையீடுகள், கடந்த கால் நூற்றாண்டுக்குள் மிகவும் அதிகரித்துள்ளன. இந்தியாவின் தலையீடு மறைமுகமாகவும் நேரடியாகவும் இருந்து வந்துள்ளமை இரகசியமல்ல. இந்தியாவின் தலையீட்டை எஸ்.ஜே.வி செல்வநாயகம், 1970களில் விரும்பியதாக அவரது மருமகனும் ஜே.ஆர். ஜயவர்தனவுக்கு நெருக்கமானவராக இருந்தவருமான ஏ.ஜே. வில்சன் எழுதியிருக்கிறார். 

எனினும், 1978 வரை இலங்கை அரசுக்கு எதிராக, இந்தியா தலையிடும் வாய்ப்பு இருந்ததில்லை. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவு, அதற்கான எந்தவொரு வாய்ப்பையும் இந்தியாவுக்கு வழங்கவில்லை.  

இலங்கையில் சுதந்திரக்கட்சி ஆட்சி நடத்திய 1956-65, 1970-77 காலங்கள், ‘மிதவாத’த் தமிழ்த் தலைவர்கள், அமெரிக்கா, பிரித்தானியா போன்ற சக்திகளின் மதிப்புக்கு உரியவர்களாய் இருந்த காலங்கள் ஆகும். 

ஐ.தே.கவுடன் இணைந்து தமிழரசுக் கட்சி ஆட்சி நடத்திய 1965-68 காலமும், ஐ.தே.கவுடன் பகைக்காமல் அரசாங்கத்திலிருந்து வெளியேறியிருந்த 1968-70 காலமும் நல்லுறவுக்கு உரியவையாகவே இருந்தன. 

எனவே, தமிழ்த் தேசியவாதத் தலைமைகள், சிங்களப் பேரினவாதத்துக்கு எதிரான மோதலில், அமெரிக்க ஜனநாயகம் தங்கள் பக்கத்தில் நிற்கும் என்று எதிர்பார்த்தனர். இந்த எதிர்பார்ப்பு ஒருபுறமிருக்க, தமிழ்த் தேசியவாதிகள் வலிந்து ‘சோசலிச நாடுகளை’, குறிப்பாகச் சீனாவை எதிர்த்தன. 

1978ஆம் ஆண்டு முதல், இலங்கையின் அயற்கொள்கையில் ஏற்பட்ட அமெரிக்க சார்புப் பெயர்ச்சி, இந்தியத் தலையீட்டுக்கான நியாயங்களை ஏற்படுத்தியதுடன் தெற்காசிய அரசியல், இராணுவ, பொருளாதார ஆதிக்கத்துக்கான போட்டியில் இலங்கையை ஒரு முக்கியமான களமாகவும் மாற்றியது.

1983க்கு முன்னரே, இந்திய ஆட்சியாளர்கள், தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கு வரையறுக்கப்பட்ட ஆதரவு வழங்கியதோடு, தனி நாட்டுக் கோரிக்கையை இந்தியா ஆதரிக்கும் என்ற மயக்கத்தையும் ஏற்படுத்தி இருந்தனர். இன்றும் கூட, இந்திரா காந்தி உயிரோடு இருந்தால், இந்தியா வேறு விதமாக நடந்து கொண்டிருக்கும் என்று நம்புகிறவர்கள் இருக்கிறார்கள். 

இன்று, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தெற்காசிய மேலாதிக்கத்துக்கான போட்டியில், சில உடன்பாடுகள் காணப்பட்டுள்ளன. அமெரிக்கா, சீனாவையும் ரஷ்யாவையும் தனிமைப்படுத்துவதற்கான உபாயங்களில் காட்டுகின்ற கவனம், சீன-இந்திய, ரஷ்ய-இந்திய நல்லுறவுக்கும் ரஷ்யா-சீனா-இந்தியா ஆகியவற்றின் நெருங்கிய பொருளாதார-இராணுவ ஒத்துழைப்புக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில்,   இந்தியாவுடன் தனது ‘நட்பை’ கடந்த பத்தாண்டுகளில் வலுப்படுத்தியுள்ளது. இன்று சீனாவைப் பொது எதிரியாகக் கட்டமைப்பதில், இந்திய-அமெரிக்கக் கூட்டு ஒன்றுபட்டுள்ளது. இந்தக் கூட்டு என்றென்றைக்குமானதல்ல. 

இலங்கையின் இறைமை, 1978 இல் தொடங்கிய திறந்த பொருளாதாரக் கொள்கையுடன் வலுவிழக்கத் தொடங்கியது. இக்கொள்கை, இலங்கையின் தேசிய பொருளாதாரம் வளரத் தடையாக இருந்ததுடன், நுகர்வுப் பொருளாதார வளர்ச்சிக்கும் வழி கோலியது. தவறான பொருளாதாரக் கொள்கைகளால், இலங்கை இன்று பெரிய கடனாளி நாடாக மாறியுள்ளது. 

1977ஆம் ஆண்டு முதல் அயற்கொள்கையில் ஐ.தே.க ஆட்சி மேற்கொண்ட அமெரிக்கச் சார்பு நிலைப்பாடு, இந்தியாவுடன் முரண்பாடுகளை ஏற்படுத்தியது. அதன்பின்பு, தேசிய இனப்பிரச்சினையைப் போராக்கியதன் மூலம், இலங்கை பல்வேறு நாடுகளினதும் இராணுவ உதவியை நம்பியிருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இவை மகிழ்ச்சிக்குரிய விடயங்களல்ல. 

எனினும், இலங்கையில் விடுதலைப் புலிகளை அழிக்கக் கைகொடுத்த மேற்குலகும் இந்தியாவும், இலங்கை அரசாங்கத்தின் மீது இன்று கடுப்புடன் உள்ளன. எனினும், அவற்றால் இங்கு ஓர் ஆட்சிக் கவிழ்ப்பையோ நேரடித் தலையீட்டையோ மேற்கொள் இயலாதுள்ளது. 

மேற்குலகு விரும்பும் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவதற்குச் சாதகமான அரசியல் சூழ்நிலை இன்று இங்கில்லை. இந்தியா நினைத்தவாறு, இலங்கை அரசாங்கத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதும் இயலுமானதாக இல்லை.

இன்றைய இலங்கை அரசாங்கம், அமெரிக்காவினதும் இந்தியாவினதும் பலவீனங்களை அறிந்து, அவற்றைப் பயன்படுத்துகிறது. சீனாவுடனான அதன் நெருக்கம், அதற்கு வாய்ப்பாக உள்ளது. ஆனால், தன்னால் இலங்கையை என்றுமே காப்பாற்றமுடியாது என்ற உண்மையை சீனாவும் நன்கறியும். 

இதேவேளை, இலங்கையின் சீனாவுடனான நெருக்கத்தை, அமெரிக்கா, இந்தியா ஆகிய இரண்டு நாடுகளும் விரும்பாமைக்குக் காரணம், சீனாவை மிரட்டிப் பணிய வைப்பதற்கு, அமெரிக்கா வகுத்து வரும் திட்டங்களைச் சீன ராஜதந்திரமும் பொருளாதார உதவிகளும் முறியடித்து வருகின்றன. இலங்கையை மிரட்டிப் பணிய வைப்பதற்கு, சீனா ஒரு தடையாக உள்ளது என்பது அமெரிக்காவினது கவலை மட்டுமல்ல அது இந்தியாவின் கவலையுமாகும். 

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இலங்கையில் நேரடிப் போட்டி, இறக்குமதி வணிகத்  துறையில் உள்ளதல்ல; இராணுவத் துறையிலும் சீன-இந்தியப் போட்டியென எதுவுமில்லை. இலங்கையின் அபிவிருத்தி முதலீடுகள் சார்ந்து, போட்டிகள் உள்ளன. அவற்றின் பொருளாதாரப் பரிமாணங்கள் ஒருபுறம் இருக்க, இலங்கை அரசின் மீதான செல்வாக்குப் பற்றிய போட்டியுள்ளது.

இலங்கை மீதான செல்வாக்கு எதற்கானது என்பதில் வேறுபாடுண்டு. இந்தியாவுக்குத் தனது தெ‌ற்காசிய மேலாதிக்கத்துக்கு, இலங்கை மீது செல்வாக்கு அவசியம். 

சீனாவுக்குத் தனது கடல் வணிகம், பாதுகாப்புப் போன்றவற்றுக்கு எதிரான அமெரிக்க மிரட்டலையும் முற்றுகையையும் தவிர்க்க, இந்து சமுத்திரப் பிரதேசத்தில் நட்புச் சக்திகள் தேவை. சீனாவுக்கு எதிராக, இலங்கையை அமெரிக்கா பாவிக்க இயலாமல் இருப்பது சீனாவுக்குப் போதுமானது. 

கடந்த 60 ஆண்டுகளாக, இலங்கையின் எந்த ஆட்சி மாற்றமும் சீனாவின் எந்தத் திசைமாற்றமும் இலங்கை -சீன உறவைக் குலைக்காமல் பாதுகாப்பதில், சீனா கவனமாக இருந்துள்ளது. எனவே, சீன நோக்கங்களை இந்திய, அமெரிக்க நோக்கங்களினின்று விலக்கிப் பார்க்க வேண்டியுள்ளது.

இலங்கைக்குச் சீன இராணுவ அதிகாரிகளும் கடற்படைக் கலங்களும் வந்து போவதைப் பற்றிக் கவலைப்படுவோருக்கு அதே காலப்பகுதியில் அவுஸ்திரேலிய, ஜப்பானியக் கடற் படைக்கலங்கள் வந்து போனதோ அமெரிக்கக் கடற்படை தனது பயிற்சிகளை இலங்கைக் கடற்படையுடன் சேர்ந்து நடத்தியதோ கவலை தரவில்லை.

 சீன-இலங்கை நெருக்கம் பற்றிய கவலைகளுக்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று, இலங்கை மீது மேற்குலகினதும் முக்கியமாக அமெரிக்காவினதும் இந்தியாவினதும் ஆதிக்கத்துக்குச் சீனா ஆப்பு வைக்கிறது. மற்றையது, ராஜபக்‌ஷர்களின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்குத் தடையாகச் சீனா இருக்கிறது.

சீனாவின் பொருளாதார ஆதிக்கம்,  இராணுவச் செல்வாக்கு, அரசியல் தலையீடு ஆகியவை இலங்கைக்கு நல்லதல்ல. வேறு வல்லரசு எதுவுமே, தலையிடுவதை எதிர்ப்பவர்கள், சீனச் செல்வாக்கை விமர்சிப்பது நேர்மையானது. 

ஒர் அந்நிய ஆதிக்கத்தை வரவேற்க வேண்டி, இன்னொன்றின் ஆதிக்கம் வரக்கூடும் என்று மிரட்டுவது, இலங்கையை நேசிக்கும் எவரதும் நிலைப்பாடாகாது. ராஜபக்‌ஷ ஆட்சி கவிழாமல் தடுப்பது, சீனாவின் தேவையல்ல. மக்கள் கொதித்தெழுந்தால் சீனாவாலும் அந்த ஆட்சியைக் காப்பாற்ற இயலாது. ஆனால், ஆட்சிக் கவிழ்ப்பில் மேற்குலகின் நோக்கங்கள், இலங்கையின் நலன்கள் சார்ந்ததல்ல. 

இலங்கையில் மக்களின் ஐக்கியப்பட்ட போராட்டத்தால் ஏற்படாத எந்த ஆட்சிமாற்றமும், நாட்டின் நெருக்கடிகளை மேலும் மோசமாக்குமே ஒழிய, நாட்டைக் காப்பற்றப் போவதில்லை. எனவே, சீன நோக்கங்கள் பற்றி விழிப்புடன் இருப்பது வேறெந்த அந்நிய வல்லரசின் நோக்கங்களும் பற்றிய விழிப்பின் அளவுக்கு முக்கியமானது. 

(அடுத்த வௌ்ளிக்கிழமை தொடரும்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .