Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூன் 17 , மு.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அம்பிகா சற்குணநாதன்
கடந்த சில வாரங்களில் இடம்பெற்ற, சட்டத்துக்குப் புறம்பான மூன்று பொலிஸ் வன்முறை நடவடிக்கைகள் பொதுமக்களின் விமர்சனத்துக்கு வழிவகுத்திருந்தன. 14 வயதான மனவளர்ச்சி குன்றிய சிறுவனொருவன் பொலிஸாரால் தாக்கப்பட்டதும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது வன்முறையைப் பயன்படுத்தி, அவர்களைக் கைது செய்திருந்ததும் பதின்ம வயது இளைஞனொருவர் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, தந்தை வரும் வரையில் விசாரணை என்ற பெயரில் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தமையும் அந்தச் சம்பவங்களாக அமைகின்றன.
இவற்றைவிட வடக்கில், ஊர்காவற்றுறை பொலிஸாரால் இரண்டு பேர் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றமையும் வட்டுக்கோட்டையில் நபரொருவர், அவரது வீட்டில் வைத்துப் பொலிஸாரால் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றமையும் கீரிமலையில் சிறப்புத் தேவையுடைய நபரொருவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகின்ற சம்பவங்கள், தமிழ் ஊடகங்களில் மாத்திரம் வெளிவந்தமையால் அதிகம் கவனம் பெறவில்லை என்பதுடன், பொதுவெளியில் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கவில்லை.
இந்நிலையில், சில சம்பவங்களில் சில பிழையான அதிகாரிகளின் செயற்பாடுகளால், முழுப் பொலிஸ் படையும் தவறான திசையில் சென்று கொண்டிருக்கின்றது எனக் கூற முடியாது என, பொலிஸாரைக் கண்காணிக்கும் அரசமைப்பின் வழி அதிகாரம் அளிக்கப்பட்ட, தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அந்தவகையில், திட்டமிடப்பட்டதும் கட்டமைப்பு ரீதியிலானதுமான பிரச்சினைகளைப் பொலிஸ் ஆணைக்குழு தவிர்த்துள்ளது எனக் கொள்ளலாம்.
ஜெரால்ட் பெரேராவும் நந்தினி ஹெராட்டும் முறையே வத்தளை, வாரியப்பொல ஆகிய இடங்களில் 2002ஆம் ஆண்டு பொலிஸாரால் துன்புறுத்தப்பட்டமை, 2012ஆம் ஆண்டு, முந்தலம பொலிஸாரால் கே.ஏ. சோமரத்ன துன்புறுத்தப்பட்டவை போன்றன, திட்டமிட்ட பொலிஸ் வன்முறையைச் சுட்டிக்காட்டும் சில வழக்குகளாகும்.
2009ஆம் ஆண்டில், அங்குலானவில் தடுப்பில் இருக்கும்போது தினேஷ், தனுஷ்க ஆகியோரின் உயிரிழப்புகள், கொழும்பில், மனநலப் பிரச்சினையுடைய பாலவர்ணம் சிவகுமாரின் இறப்பு என்பன, பொலிஸ் வன்முறையால் ஏற்பட்ட உயிரிழப்புகள் ஆகும்.
கடந்து சென்ற ரயிலொன்றைக் கற்களால் தாக்கியதைத் தொடர்ந்து, பொலிஸ் குழுவொன்றால் சிவகுமார் கடலுக்குள் வைத்து பொலிஸாரால் அடிக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டிருந்ததுடன், மூழ்கும் வரையில் கரைக்கு வரத் தடுக்கப்பட்டிருந்தார். இந்தச் சம்பவத்தைக் கடற்கரையிலிருந்த மக்கள் கூட்டமும் ஊடக நிறுவனமொன்றின் ஒளிப்படக் கலைஞராலும் அவதானிக்கப்பட்டது. இச்சம்பவத்தைக் குறித்த ஒளிப்படக் கலைஞர் ஒளிபதிவு செய்திருந்தார்.
ஜெரால்ட் பெரேரா, நந்தினி ஹெரால்டின் வழக்குகளில், அவர்களின் அரசமைப்பு உரிமை மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் கண்டுபிடித்தபோதும், 2008ஆம் ஆண்டு மே மாதம், ஜெரால்ட் பெரேராவைத் துன்புறுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள், நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருந்தனர். நந்தினியைத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் அதிகாரிகளின் விசாரணையானது, 2005ஆம் ஆண்டில் ஆரம்பித்து, இம்மாதமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், திட்டமிட்ட வன்முறையை ஏற்றுக்கொள்வதற்கு மாறிமாறி பதவிக்கு வந்திருந்த அரசாங்கங்கள் மறுத்திருந்தமை நிரூபணமாகிறது. இருந்தபோதும், அபசின் பண்டாவுக்கு எதிரான, உதவி ஆய்வாளர் குணரட்ன மற்றும் ஏனையோரின் வழக்கில், 1978ஆம் ஆண்டு அரமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு ஏறத்தாழ 18 ஆண்டுகளின் பின்னர், பொலிஸாரால், அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக 1995ஆம் ஆண்டு, உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்தவகையில், குறித்த நபரொருவரின் அடையாமான இனம், மதம், பால் போன்றவை காரணமாகக் குறித்த நபரும் சமூகமும் அதிக துன்புறுத்தலை எதிர்கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. உதாரணமாக, தனது இனம் காரணமாக, விஜிதா யோகலிங்கம் துன்புறுத்தலை எதிர்கொள்ளும் சந்தர்ப்பத்தை எதிர்கொண்டிருந்தார்.
2000ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் திகதி, கடத்தப்பட்டிருந்த விஜிதா, கராஜ் ஒன்றில் சில மணித்தியாலங்கள் வைத்திருக்கப்பட்டு அந்நேரம், தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினராக பொலிஸாரால் குற்றஞ்சாட்டப்பட்டு, நெஞ்சு, முழங்கால், அடிவயிற்றுப் பகுதி, முதுகில் தாக்கப்பட்டிருந்தார்.
அவசரகால நிலைமைகளின் கீழ், தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு கடும் சித்திரவதையை எதிர்கொண்ட விஜிதா, ஒப்புதல் வாக்குமூலமொன்றில் கைச்சாத்திட மறுத்த நிலையில், வன்புணரப்படப் போவதாக அச்சுறுத்தப்பட்டிருந்தார். அவர், சுயநினைவை இழக்கும் வரையில், 15 நிமிடங்கள் வன்புணர்வு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில், துன்புறுத்தல் மூலம் ,விஜிதாவின் அடிப்படை உரிமை மீறப்பட்டதாக, உயர்நீதிமன்றம் கண்டுபிடித்திருந்தது.
அந்தவகையில், அவசரகால நிலையொன்றின் கீழ் அமல்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம், அவசரகாலச் சட்டம் என்பன, துன்புறுத்தலுக்கான சந்தர்ப்பங்களை உருவாக்கியது என்பது, விஜிதாவின் வழக்கு வெளிப்படுத்துகிறது.
பொலிஸ் வன்முறைக்கான பதிலளிப்பாக, பொலிஸை சீர்திருத்தம் அமைகிறது. சீர்திருத்தங்களின் வழி, மேலும் சட்டங்கள் இறுக்குகையில் குறைந்தளவு வன்முறைக்கு வழிவகுக்கும்.
சீர்திருத்தத் திட்டங்களானவை, வழமையாகப் புதிய விதங்களில் விசாரிப்பதற்குப் பொலிஸாருக்குப் பயிற்சியளித்தல், உடல் கமெராக்கள், விசாரணை அறைகளில் கண்காணிப்புக் கமெராக்கள் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதை உள்ளடக்குகின்றன.
எவ்வாறெனினும், 2,000க்கும் அதிகமான பொலிஸ் அதிகாரிகளிடம், ஐக்கிய அமெரிக்காவில் 2017ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியொன்றில், அதிகாரிகள் பலத்தைப் பிரயோகித்தல் நடத்தையில் உடல் கமெராக்கள், ஏறத்தாழ எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை எனத் தெரியவந்துள்ளது.
பொலிஸ் மிருகத்தனத்தை, கவனத்தில் எடுக்கும் முதலாவது நடவடிக்கையாக, பொலிஸ் திணைக்களத்தால் பயன்படுத்தப்படும் அதிகாரமானது, விரிவாக மீளாய்வு செய்யப்பட வேண்டும். அதில், அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்ட அதிகாரங்களானவை, தரவுகளில் உள்ளடக்கப்பட வேண்டும். இது பகிரங்கப்படுத்தபடவில்லை; ஆயினும், படைபலத்தை அதிகாரிகள் பிரயோகிப்பதற்கான வழிமுறைகள், வழங்கப்பட வேண்டும். தவிர, படைபலத்தைப் பிரயோகிக்கும்போது, பொலிஸாரின் தேவையானது குறைந்த பட்சமானது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
2002ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி, கைதுசெய்யப்பட்ட 19 வயதான லலித் ராஜபக்ஷ, 2002ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் திகதி, கந்தானை பொலிஸ் நிலையப் பொலிஸ் அதிகாரிகளால் சுயநினைவற்ற நிலையில், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தார். அவரின், மருத்துவ அறிக்கையில் 10 காயங்களும் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு காயத்தையும் கொண்டிருந்தார் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. எவ்வாறெனினும், லலித் ராஜபக்ஷ, தான் கைது செய்யப்படுவதைத் தடுக்க முயன்றார் எனவும் ஆகவே, அவரை அடக்குவதற்குக் குறைந்தபட்ச படைப்பலத்தைப் பயன்படுத்த வேண்டி ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
அந்தவகையில், பொலிஸ் வன்முறையைக் கருத்தில் கொள்கையில், அடிப்படைக் கட்டமைப்புகள், பொலிஸார் பணியாற்றும் விதங்கள் தொடர்பாக, மீளாய்வுகளை மேற்கொண்டு, சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியமை கட்டாயமாகும்.
('கொமன்வியூஸ்' இணையத்தளத்தில் ஆங்கிலத்தில் நேற்று முன்தினம் (15) வெளியான கட்டுரையின் மொழிபெயர்ப்பு இது).
மொழிபெயர்ப்பு: எம் சண்முகம்
1 hours ago
1 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
4 hours ago
4 hours ago