2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இலஞ்சமே விதிமுறையான நாட்டில் மாட்டினார் மயோன் முஸ்தபா

Johnsan Bastiampillai   / 2023 பெப்ரவரி 23 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

எம்.எஸ்.எம் ஐயூப்

 

 

 

 

இலஞ்சம் பெறுவது மட்டுமல்லாது, இலஞ்சம் வழங்குவதும் சட்டத்தில் குற்றமாகவே கருதப்படுகிறது. 

ஆனால், அரச அதிகாரிகளும் பொலிஸாரும், தமது சேவையை நாடி வரும் மக்களை நிர்ப்பந்தித்து, அவர்களிடம் இலஞ்சம் பெறுகிறார்கள். கடந்த 17 ஆம் திகதி, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பாலபட்டபந்திகே, இலஞ்சம் வழங்கிய குற்றத்துக்காக, முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவின் குடியியல் உரிமையை, ஏழு வருடங்களுக்கு இரத்துச் செய்தார். அதற்கு புறம்பாக, முஸ்தபாவுக்கு ஆறு மாத கடூழிய சிறைத் தண்டனையையும் மேதிகமாக 500 ரூபாய் அபராதமும் விதித்தார். 

2010ஆம் ஆண்டு, ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்‌ஷவை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குமாறு கூறி, விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மொஹமட் முஸம்மிலுக்கு 42 இலட்சம் ரூபாய் இலஞ்சமாக வழங்கியதற்காகவே, அவருக்கு இத்தண்டனை வழங்கப்பட்டது.

தேசிய சுதந்திர முன்னணி, அப்போது மஹிந்த ராஜபக்‌ஷவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியோடு இணைந்து செயற்பட்டது. இலஞ்சப் பணத்தை பெற்றுக் கொண்ட முஸம்மில், ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தி, நடந்த சம்பவத்தை அம்பலப்படுத்திவிட்டு பொலிஸாரிடமும் முறைப்பாடு செய்தார். 

அதற்கான வழக்கு விசாரிக்கப்பட்டு, சுமார் 13 வருடங்களுக்குப் பின்னர் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நீதிபதி தீர்ப்பை வழங்கும்போது, “பாராளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதியாக இருந்த முஸ்தபா செய்த குற்றத்துக்கு, இதைவிடக் கூடுதலான தண்டனையை வழங்க வேண்டுமாக இருந்த போதிலும், சட்டத்தால் வழங்கக்கூடிய அதியுயர் தண்டனை இதுவே” என்றும் கூறியிருந்தார்.  

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றத்தின் அரசியல் உள்ளடக்கத்தை, பணபலத்தால் மாற்ற எடுத்த முயற்சிக்காக வழங்கப்பட்ட இத்தண்டனையை, ஜனநாயகத்தை மதிக்கும் எவரும் பாராட்டத்தான் வேண்டும். அதேபோல், இலஞ்சப் பணத்தை பெற்றுக் கொண்ட முஸம்மில், கட்சித் தாவல் செய்யாது, இலஞ்சம் தந்தமையை அம்பலப்படுத்திவிட்டு, அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தமையும் சரியானதே! 

ஆனால், இச்சம்பவத்தோடு பல கேள்விகள் எழுகின்றன. முதலாவதாக, இந்த விடயத்தில் நேர்மையாக நடந்து கொண்டதாக தெரியும் முஸம்மில், பொதுவாக அரசியலில் நேர்மையானவரா? 

முஸ்தபாவும் முஸம்மிலும், ஒரே வேட்பாளரை ஆதரிக்கும் நிலையில், முஸ்தபா, மற்றைய வேட்பாளரின் ஆதரவாளர் ஒருவருக்கு இவ்வாறு இலஞ்சம் வழங்கி இருந்தால் முஸம்மில், முஸ்தபாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்திருப்பாரா?

இச்சம்பவத்துக்கு முன்னரும் பின்னரும், இதுபோன்ற விடயங்களின் போது, முஸம்மிலும் அவரது கட்சியான தேசிய சுதந்திர முன்னணியும் எவ்வாறு நடந்து கொண்டுள்ளனர் என்பதிலேயே இந்தக் கேள்விக்கு பதில் இருக்கிறது. 

2008ஆம் ஆண்டிலேயே, விமல் வீரவன்ச மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதையடுத்து அவர் ஆரம்பித்த தேசிய சுதந்திர முன்னணி, மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசாங்கத்தின் சகல செயற்பாடுகளையும் ஆதரித்தது; நியாயப்படுத்தி வந்தது. மஹிந்தவின் ஆட்சியானது, ஊழல் மலிந்த அரசாங்கம் என்பதை உலகமே அறிந்த விடயமாகும். 

தனித்தனி சம்பவங்களை எடுத்து ஆராயாவிட்டாலும், ராஜபக்‌ஷர்களின் ஆட்சியானது ஊழல் மலிந்தது என்பதை உலகமே அறிந்தது என்பதற்கு, அமெரிக்காவில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றே போதுமானதாகும். பொருளாதார நெருக்கடி காரணமாக, கடந்த வருடம் அரசாங்கம் வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்தியதை அடுத்து, இரட்டை தீவு நாடான சென் கிட்ஸ் மற்றும் நெவிஸை தளமாகக் கொண்ட ‘ஹமில்டன் ரிசேர்வ் வங்கி’, அரசாங்கத்தின் அந்த முடிவை எதிர்த்து, நியூயோர்க் நகர நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது. 

ராஜபக்‌ஷ குடும்பம், பல வருடங்களாகப் பொதுச் சொத்தை சுருட்டியதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து அமெரிக்க செனட் குழு தயாரித்த அறிக்கையிலும் ராஜபக்‌ஷ குடும்பத்தைப் பற்றி இதேபோல் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கிறீஸ் நாட்டில் பிணைமுறிகளில், மஹிந்தவின் அரசாங்கம், மத்திய வங்கி பணத்தை முதலீடு செய்து, பல்லாயிரம் கோடி ரூபாய் நட்டத்தை அடைந்ததாகவும், அந்தக் கொடுக்கல் வாங்கலில் பெரும் தொகைப் பணம் கைமாறியதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. 

வடக்கு - கிழக்கில் வீடமைப்புத் திட்டம் ஒன்றுக்காக பணம் ஒதுக்கப்பட்ட போதிலும், வீடுகள் கட்டப்படவில்லை என்று ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. சட்ட விதிமுறை பிரச்சினை காரணமாக, அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட போதிலும், ஒதுக்கப்பட்ட பணத்துக்கு என்ன நடந்தது என்பது இதுவரை எவருக்கும் தெரியாது. இவற்றைப் பற்றி, தேசிய சுதந்திர முன்னணி வாய் திறக்கவில்லை. 

மஹிந்தவின் அரசாங்கத்தின் கீழ், விமல் வீரவன்ச வீடமைப்பு அமைச்சராக இருக்கும் போது, முறைகேடாகத் தமது உறவினர்களுக்கு வீடுகளை வழங்கியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. 

எனவே, இவற்றின் பிரகாரமே முஸ்தபா இலஞ்சம் கொடுத்த விடயத்தில், முஸம்மில் நேர்மையாக நடந்து கொண்டாரா அல்லது அரசியல் இலாபத்துக்காக தேசிய சுதந்திர முன்னணி, இந்த இலஞ்சத்தை அம்பலப்படுத்தி, வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்ததா என்பதை முடிவு செய்ய வேண்டும். 

இலங்கையில் குறிப்பாக அரச துறையில், இலஞ்சம் இல்லாமல் எந்தப் பணி நடைபெறுகிறது என்பதே கேள்வியாக இருக்கிறது. குறிப்பாக, இலஞ்சம் கொடுத்து அரசியல்வாதிகளை விலைக்கு வாங்குவது, ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் இடம்பெறுகிறது. 2001ஆம் ஆண்டு, சந்திரிகாவின் அரசாங்கத்திலிருந்து 12 பேர் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்குத் தாவினர். ஒவ்வொருவருக்கும் அப்போது மூன்று கோடி ரூபாய் வீதம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. 

2007ஆம் ஆண்டு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட 17 எம்.பிக்கள், ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து மஹிந்தவின் அரசாங்கத்துக்குத் தாவினர். கொள்கைப் பிரச்சினைக்காக ஒருவர் கட்சி மாறலாம். ஆயினும், பலருக்கு கூட்டாக எவ்வாறு ‘அரசியல் ஞானம்’ பிறக்க முடியும்?    

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுத்து, குற்றங்களில் இருந்து எத்தனை குற்றவாளிகள் தப்பித்துக் கொள்கிறார்கள்? எத்தனை பேர், மற்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறார்கள்? சுங்கம் என்பது, எவ்வாறான இடம் என்பதை, சில சுங்க அதிகாரிகளின் வீடுகளைப் பார்த்தால் விளங்கிக் கொள்ள முடியும். 

வீடுகளுக்கான வரைபடங்களுக்கு உள்ளூராட்சி மன்ற அலுவலகங்களில் அனுமதி பெறும் போது, தொழில்நுட்ப அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்காது அதைச் செய்து கொண்டவர்கள் மிகச் சிலரே, நாட்டில் இருக்க முடியும். நீதிமன்றங்கள் கூடாத போயா தினமொன்றில், சிறையில் இருந்த முன்னாள் கிரிக்கெட் சபைத் தலைவர் திலங்க சுமத்திபாலவுக்கு பிணை வழங்கிய நீதிபதியின் சேவை இடைநிறுத்தப்பட்டது. 

இலங்கைக்கு பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரத் தயங்குவதற்கு, அவர்களது முதலீடுகளுக்கு அனுமதி வழங்கும் போது, அதிகாரிகள் இலஞ்சம் கோருவதே காரணம் என்பது பொது அறிவு. சந்திரிகாவின் காலத்தில் இது போன்றதொரு பிரச்சினைக்காக, முதலீட்டுச் சபைத் தலைவர் ஒருவர் சிக்கிக் கொண்டார். 

பல பொலிஸ் மாஅதிபர்களும் நீதியரசர்களும் ஓய்வு பெற்றதன் பின்னர், வெளிநாடுகளில் தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களது பதவிக் காலத்தில், அவர்கள் எவ்வாறு நடந்த கொண்டு இருப்பார்கள் என்ற சந்தேகம் எழுவது இயல்பாகும். அதன் அடிப்படையில், அவர்களின் தூதுவர் பதவிகள் இலஞ்சமாகவே தெரிகிறது.     


அதாவது, அரச அலுவலகங்களில் மிகவும் உயர்மட்ட அதிகாரிகள் முதல் சிற்றூழியர் வரை, பெரும்பாலானவர்கள் மத்தியில் இலஞ்சமானது சர்வசாதாரணமான விடயமாகும். அவர்களில் மிகச் சிலரே, சட்டத்தின் முன் ஆஜராக்கப்பட்டு தண்டிக்கப்படுகின்றனர். அந்தநிலையில் தான், முஸ்தபாவும் தண்டிக்கப்பட்டுள்ளார். அதுதான் முஸ்தபா தொடர்பிலான வழக்கின் முக்கியத்துவமாகும். 

பொதுவாக, இலஞ்ச குற்றத்துக்காக அபராதமும் சிறைத் தண்டனையுமே வழங்கப்படுகிறது. அரசியல்வாதிகள் விடயத்திலேயே பெரும்பாலும் குடியியில் உரிமை (Civic rights) இரத்துச் செய்யப்படுகின்றது. இவ்வாறு தண்டிக்கப்பட்டவரின் குடியுரிமை (Citizenship) இரத்தாவதில்லை. அவரது வாக்குரிமையே இரத்தாகிறது. அதன் மூலம் அவர், தேர்தல்களில் போட்டியிடும் உரிமையும் இரத்தாகிறது. 

1959ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி, முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க சுட்டுக் கொல்லப்படுவதற்கு இரண்டு வரங்களுக்கு முன்னர், சில அமைச்சர்கள் உள்ளிட்ட தமது அரசாங்கத்தின் சில உறுப்பினர்கள் மீதான இலஞ்ச குற்றச்சாட்டுகளை விசாரிக்க, நீதிபதி தல்கொடபிட்டியவின் தலைமையில் ஆணைக்குழுவை நியமித்தார். பண்டாரநாயக்கவின் மரணத்தின் பின்னர், 1960ஆம் ஆண்டு அதன் அறிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி சி.ஏ.எஸ் மரிக்கார், எம்.எஸ் காரியப்பர் உள்ளிட்ட ஐவர் குற்றவாளிகளாகக் காணப்பட்டார்கள். ஆனால், ஆட்சியில் இருந்த சிறிமா பண்டாரநாயக்க, அவர்களைத் தண்டிக்கவில்லை. அடுத்து பதவிக்கு வந்த டட்லி சேனாநாயக்க அரசாங்கத்தின் கீழ், அவர்களது குடியியல் உரிமை ஏழு வருடங்களுக்கு இரத்துச் செய்யப்பட்டது.

1980ஆம் ஆண்டு, ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவின் அரசாங்கத்தின் கீழ், அதிகார துஷ்பிரயோகம், ஊழல் குற்றங்களுக்காக முன்னாள் பிரதமர் சிறிமா பண்டாரநாயக்க, அவரது அமைச்சரவையில்  மூத்த அமைச்சராக இருந்த பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க ஆகியோரின் குடியியல் உரிமை, ஏழு வருடங்களுக்கு இரத்துச் செய்யப்பட்டமையும் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .