2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உண்மையான மாற்றம் தேர்தலால் மட்டும் சாத்தியமா?

Johnsan Bastiampillai   / 2023 மார்ச் 13 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா

உள்ளூராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை விரைவாக நடத்துமாறு கோரி ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் இடம்பெற்று வருகின்றன. அரசாங்கம் இப்போதைக்கு தேர்தலை நடத்துவதில்லை என்ற முடிவில் இருப்பதாகத் தெரிகின்றது. 

கடந்த வருடம் இடம்பெற்ற ‘அரகலய’ மக்கள் எழுச்சியின் ஊடாகக் கூட, மக்கள் எதிர்பார்த்த ‘மாற்றம்’ நிகழவில்லை. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதைத் தவிர, பெரிதாக வேறு எதுவும் நடந்து விடவும் இல்லை. 

நாட்டை இந்த நிலைக்கு இட்டுச் சென்றவர்கள் ராஜபக்‌ஷர்கள் என்று மாற்று அணியினர் சொன்னது உண்மையென்றால், ‘அரகலய’வுக்குப் பிறகு அவர்கள் மீது சட்டம் தன் கடமையைச் செய்யவில்லை என்பது வினோதமானது. 

அதுமட்டுமன்றி, கோட்டாபய அரசாங்கத்தில் பதவிகளை, அதிகாரங்களைச் சுகித்தவர்கள்தான் ரணில் ஆட்சியிலும் முக்கிய பங்கு வகிக்கின்றார்கள் என்பது இரகசியமல்ல! 

இந்தப் பின்னணியில், இப்போது இடம்பெறுகின்ற ஆர்ப்பாட்டங்களால் அல்லது உள்நாட்டு, வெளிநாட்டு அழுத்தங்களால் பெரிதாக எதையும் சாதித்து விடலாமா என்பது நிச்சயமற்றது.  மாறாக, அது ஒரு பலப்பரீட்சையாக மட்டுமே அமையும் எனலாம். 

இதையெல்லாம் தாண்டி, மிகக் கிட்டிய காலமொன்றில் தேர்தல் நடைபெற்று, அதன் மூலம் ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும். நாட்டின் அரசியல் கலாசாரமும், மக்களை மறந்த போக்கும், கட்டமைப்பும் மாற வேண்டும்.  மக்கள் எதிர்பார்த்த மாற்றத்துக்கான அடித்தளமாவது இடப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் எல்லோரிடமும் உள்ளன என்பது முக்கியமானது. 

ஆனால், இலங்கை அரசியல் பெருவெளியில், இயங்கிக் கொண்டிருக்கின்ற கட்சிகள், அதன் வேட்பாளர்கள் மற்றும் அதில் செல்வாக்குச் செலுத்துகின்ற தரப்பினரைப் பார்க்கின்ற போது, இது எந்தளவுக்கு நடைமுறைச் சாத்தியம் என்பதை ஊகிக்க முடியாமலுள்ளது. 

இந்த நாட்டின் அரசியலும் மக்களின் நல்வாழ்வும் பொருளாதாரமும் சீர்குலைந்து நாசமானதற்கு ‘இவர்’ முக்கிய காரணம் என்று கூற முடியுமே தவிர, ‘இவர் மட்டும்தான் காரணம்’ என்று யாரையும் சொல்ல முடியாது.  

வளம் நிறைந்த ஒரு தேசம், இன்று நல்ல ஆளுகைக்காகவும் பொருளாதார வளர்ச்சிக்காகவும் நிதிக்காகவும் இறக்குமதி பொருட்களுக்காகவும் சிறந்த ஆட்சியாளர்களுக்காகவும் ‘பிச்சைப் பாத்திரம்’ ஏந்தி நிற்கின்றது என்றால், அதற்கு எல்லோரும்தான் காரணமாகின்றார்கள். 

ஆட்சியாளர்கள், பெருந்தேசிய கட்சிகளின் தலைவர்கள், தமிழ், முஸ்லிம் கட்சிகள், அதன் எம்.பிக்கள், ஆயுதக் குழுக்கள், பயங்கரவாதிகள், இனவாதிகள், மதவாதிகள், இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகள், மதத் தலைவர்கள், பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் என இந்தப் பட்டியல் நீளமானது. 

ஏன், பொருத்தமில்லாத உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் முதற்கொண்டு உருப்படியற்ற ஆட்சியாளர்கள் வரை அனைவருக்கும் கண்ணைமூடிக் கொண்டு வாக்களித்த, இன்னும் வாக்களிக்கத் தயாராக இருக்கின்ற மக்களும் இந்த நாட்டில் ஏற்பட்ட பின்னடைவுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களே ஆவார். 

ஒரு தேர்தல் மூலம், இதில் ஓரிரு தரப்பினரை மட்டுமே மாற்ற முடியுமே தவிர, மற்றெல்லா பிரிவினரும் இந்தக் கட்டமைப்புக்குள் ஒட்டுண்ணியாக தொங்கிக் கொண்டுதான் இருப்பார்கள். அதனை நாம் கடந்த காலங்களில் பல தடவை கண்டிருக்கின்றோம். 

இதையெல்லாம் தாண்டி, அடிமட்டத்தில் இருந்து ஒரு முறைமை மாற்றத்ததை ஆரம்பித்தால் மாத்திரமே, நீண்டகாலத்தில் அது நாடு தழுவிய ஒரு ‘சிஸ்டம் சேன்ஜ்’ஆக வரும். வெறுமனே ஆட்சியாளர்களை மட்டும் மாற்றுவதால், இது நடந்து விடாது என்பதையும் நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும். 

அதைச் செய்வதற்கான அதிகபட்ச சாதகமான களநிலை 2022 இல் ஏற்பட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இலங்கை சமூகம் அதையும் தவறவிட்டது என்பதுதான் வரவாறு. 

இப்போது, நிதிப் பற்றாக்குறையை காரணம்காட்டி, உள்ளூராட்சி தேர்தலை சில மாதங்களுக்கு தாமதிப்பதற்கு அரசாங்கம் எத்தனிக்கின்றது. தேர்தல் உடனடியாக நடத்தப்படுவதன் மூலம் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் மறுபுறத்தில் எழுகின்றன. 

மக்கள் வாக்களிப்பதற்கான ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்தும் வகையில், உரிய காலத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்பது எல்லோரும் ஏற்றுக் கொண்ட விடயமாகும். 

ஆனால், ஜனநாயகம் பாதுகாக்கப்படுதல் என்பது வாக்களிப்போடு மட்டும் முடிந்து விடுகின்றதா? அதற்குப் பிறகு நடக்கும் மக்கள் விரோத செயல்களுக்கும் ஜனநாயகத்துக்கும் தொடர்பில்லையா என்ற கேள்விக்கு விடையென்ன?

அதேபோல், உடனடியாக உள்ளூராட்சித் தேர்தல் நடைபெற்றால், இந்த நாட்டில் மக்கள் நலன் காப்பாற்றப்படும். மக்கள் நினைத்த மாற்றம் ஏற்படும் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது? 

அரசாங்கம் சொல்வது போல, காலதாமதமாகி தேர்தல் நடத்தினாலும் ஜனநாயகம் காப்பாற்றப்படும். ஒரு சிறந்த கட்டமைப்பு அல்லது முறைமை மாற்றம் ஏற்படும் என்பதை எதனை அடிப்படையாக வைத்து நம்புவது? இவை எதற்கும் உத்தரவாதமில்லை. 

இப்படியான அபூர்வங்கள் நடக்க வேண்டும் என்பது, மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாகும். ஆனால், நடைமுறை யதார்த்தம் என்பது அவ்வாறு இருந்ததும் இல்லை; இருக்கப் போவவுமில்லை. 

இதே குட்டையில் ஊறிய மட்டைகளுக்குத்தான் அதிகாரம் கிடைக்கப் போகின்றது. அல்லது, மக்கள் இன்னும் அவர்களுக்குத்தான் மாறி மாறி வாக்களிக்கப் போகின்றார்கள். இதற்கு ஒரு நல்ல உதாரணத்தை கூறலாம். 

அதாவது, தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, தேர்தல் களம் கடுமையாக சூடுபிடித்திருந்தது. பரப்புரைகள் வானைப் பிளந்தன. வேட்பாளர்கள் வீடுவீடாகச் சென்றனர். வாக்குறுதிகளை மட்டுமன்றி பல வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கினர். 

வட்டார தேர்தலில் கூட, வெற்றி பெறுவது சிரமம் எனத் தெரிந்தவர்களும் உள்ளுக்குள் பாராளுமன்ற உறுப்பினராக கனவு கண்டு கொண்டிருந்தனர். எனவே, கடைசிக் கட்டத்தில் பணத்தைக் கொடுத்தாவது சில வாக்குகளை பெறும் திட்டம் அவர்களுக்கு இருந்தது. 

பொய் வாக்குறுதியை, பொருளையோ, பணத்தையோ, கட்சி என்ற அடையாளத்தையோ காட்டி வாக்குகளைப் பெறும் எண்ணம் இருந்தது. முஸ்லிம் பிரதேசங்களில் இந்த நிலைமை அதிகமாக அவதானிக்கப்பட்டது. இது வழக்கமாக சிறியதும் பெரியதுமாக கடைப்பிடிக்கப்படும் உத்திதான். 

ஆனால், தேர்தல் தாமதமாகும் என்ற அறிவிப்பு வெளியானவுடன் 95 சதவீதமான வாக்காளர்களை களத்தில் காணக் கிடைக்கவில்லை. எல்லோரும் தமது சொந்த வாழ்வுக்கு திரும்பிவிட்டதாகத் தெரிகின்றது. 

இப்போது தேர்தல் நடைபெறாதுதானே; எனவே நாம் ஏன் வீணாக நேரத்தையும் பொருளையும் இப்போதே செலவு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் இது. 

ஒருவகையில் பார்த்தால், இப்படிப்பட்ட பேர் வழிகளை மாநகர சபைகளுக்கு, நகர சபைகளுக்கு, பிரதேச சபைகளுக்கு அனுப்புவதற்காகவே நாம் தேர்தல் ஒன்றை வேண்டி நிற்கின்றோம். இவர்கள்தான் இன்னும் சில வருடங்களில் மாகாண சபைக்கு, பாராளுமன்றத்துக்கு மக்கள் பிரதிநிதியாகச் செல்லப் போகின்றார்கள். 

பிரதேச சபை உறுப்பினராவதற்குக்  கூட பொருத்தமற்ற ஒருவருக்கு 69 இலட்சம் வாக்குகளை அளித்த இலங்கை மக்கள், மேற்குறிப்பிட்ட விதத்திலான உருப்படியற்ற, மக்களை ஏமாற்றுகின்ற வேட்பாளர்களைத்தான், தொடர்ச்சியாக மக்கள் பிரதிநிதிகளாக அதிகளவில் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். 

கடந்த காலங்களில் உள்ளூட்சி சபை உறுப்பினராக, மாகாண சபை உறுப்பினராக, எம்.பியாக, அமைச்சராக, பிரதமராக, ஜனாதிபதியாக பதவி வகித்தவர்கள், தாங்கள் செய்யத் தவறிய காரியங்களுக்காக, எவ்விதம் பொறுப்புக் கூறியுள்ளார்கள்; அல்லது, பிராயச்சித்தம் தேடியிருக்கின்றார்கள்? 

பொதுமக்கள் உள்ளடங்கலாக, அரச உத்தியோகத்தில் இருக்கின்றவர்கள் தொடக்கம் அமைச்சுகளின் உயர் பதவிகளில் இருக்கின்றவர்கள் வரை, தமது சமூகக் கடமையை பொறுப்புடன் நிறைவேற்றத் தவறியமைக்காக எவ்விதம் தண்டிக்கப்பட்டுள்ளார்கள்? 

எதுவுமே நடக்கவில்லை; நடக்கப் போவதும் இல்லை!

இந்த இலட்சணத்தில், இங்கே தேர்தல் சட்டங்களை மாற்றுவதாலோ, வட்டார முறைமையில் மாற்றத்தை கொண்டு வருவதாலோ, எல்லைகளை மீள நிர்ணயிப்பதாலோ, அரசியலமைப்பில் மாற்றத்தை கொண்டு வருவதாலோ, உடனடியாக அல்லது தாமதித்து வாக்கெடுப்பை நடத்துவதாலோ மட்டும் எதுவும் நடந்து விடாது. 

உண்மையில், அடிமட்ட மக்கள் தொடக்கம், அதிகாரிகள் தொட்டு அரசியல் பிரதிநிதிகள் மற்றும் ஆட்சியாளர்கள் வரை எல்லா மட்டத்தில் உள்ளவர்களினதும் மனப்பாங்கு மாறாத வரை எது நடந்தாலும் அது உப்புச் சப்பான சடங்காக அமையுமே தவிர, நாட்டில் மக்கள் எதிர்பார்க்கும் உருப்படியான ஒரு மாற்றம் தொடக்கி வைக்கப்படாது என்பதுதான் யதார்த்தம் ஆகும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X