2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலும் இஸ்‌ரேலும்

Editorial   / 2023 நவம்பர் 03 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் புதுப்புது கதைகள், ஆதாரங்கள் வெளிக்கிளம்பிக் கொண்டே இருக்கின்றன. பலஸ்தீனத்தில் இஸ்‌ரேல் பெரும் மனிதப் பேரவலங்களை ஏற்படுத்தி வருகின்ற ஒரு காலகட்டத்தில், இலங்கையில் 2019 ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னணியிலும் இஸ்‌ரேல் இருந்திருக்க வேண்டும் என்று சந்தேகங்கள் இப்போது முன்வைக்கப்பட்டுள்ளன. 

இத்தாக்குதல் தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சனல் 4 தொலைக்காட்சியிலும், அதன் பிறகு வேறு இணைய ஊடகங்கள் ஊடாகவும் அசாத் மௌலானா வெளியிட்டிருந்த தகவல்கள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தன. இப்போது இத்தாக்குதலுடன் இஸ்‌ரேலுக்கு தொடர்பிருந்திருக்கலாம் என்ற விடயத்தை பாராளுமன்றத்தில் உரையாற்றிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் கூறியுள்ளார். 

இப்படி பலதரப்பட்ட கதைகளும், சந்தேகங்களும் ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம்  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளிப்படையான, முழுமையான விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகளும் சூத்திரதாரிகளும் கண்டுபிடிக்கப்படாமையாலேயே ஆகும். 

2019 ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதலை மேற்கொண்டது சஹ்ரான் கும்பல் என்பது உடனே மக்களுக்குத் தெரிய வந்து விட்டது. இதனை அடிப்படையாக வைத்து முஸ்லிம் சமூகம் கடுமையாக அடக்கி ஒடுக்கப்பட்டதை உலகே அறியும்.  

ஆனால், இலங்கை முஸ்லிம் சமூகத்திற்குக் கத்தோலிக்க மக்களைக் கொல்ல வேண்டிய எந்த முகாந்திரமும் இல்லை என்பதை உடனே விளங்கிக் கொண்ட அனைத்து இனங்களையும் சேர்ந்த நாட்டு மக்கள் இதன் பின்னணியில் ஒரு ‘பெரிய மறைகரம்’ இருந்திருக்கின்றது என்பதை உடனேயே அனுமானித்துக் கொண்டார்கள் இருப்பினும், முஸ்லிம்கள் மீதான ஒடுக்குமுறை தணிவதற்குப் பல வருடங்கள் எடுத்தன. 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்பது சர்வ சாதாரணமான சம்பவம் அல்ல. இதில் 269 பேர் உயிரிழந்ததுடன் 500 இற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மிக முக்கியமாக, இந்த தாக்குதல் கத்தோலிக்க தேவாலயங்களையும் நட்சத்திர ஹோட்டல்களையும் இலக்கு வைத்திருந்தது. இது மிகப் பெரியதொரு இன மோதல் நிலையை கொளுத்தி விட்ட சதித்திட்டமாகும். 
ஆயினும், இது தொடர்பாக முழுமையான விசாரணைகள் வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்படவில்லை என்பதுதான் இன்று வரை முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டாகும். அந்த அடிப்படையில் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க சமூகத்திற்கோ, பழிவாங்கப்பட்ட முஸ்லிம் சமூகத்திற்கோ இன்னும் நீதி கிடைக்கவில்லை. 

இந்த நிலையிலேயே முன்னாள் புலி உறுப்பினரும் பின்னர் கிழக்கு முதலமைச்சராக இருந்தவருமான தற்போதைய இராஜாங்க அமைச்சர் 
எஸ்.சந்திரகாந்தனின் (பிள்ளையானின்) வலது கரமாகச் செயற்பட்ட அசாத் மௌலானா அண்மையில் சனல் 4 தொலைக்காட்சி ஊடாக வெளியிட்ட கருத்துக்கள் பெரும் சர்ச்சையைக் கிளறி விட்டிருந்தன. 

இந்த தாக்குதலுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புபட்ட கூட்டுக் களவாணியான மௌலானா, இத் தாக்குதலுடன் பிள்ளையானுக்கும் ராஜபக்‌ஷக்களுக்கும் சில பாதுகாப்பு உயரதிகாரிகளுக்கும் தொடர்பிருந்ததாகக் கருத்துக்களை முன்வைத்திருந்தார். ஆட்சி மாற்றத்திற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பதுதான் சாரம்சமாகும். 
இந்த தாக்குதல் தொடர்பாக இந்தியா ஏற்கனவே இலங்கையை எச்சரித்திருந்ததாகக் கூறப்பட்டது.

அத்துடன், தாக்குதல் இடம்பெற்று சில மணி நேரங்களுக்குள்ளேயே இந்தியத் தொலைக்காட்சிகள் சில தகவல்களை வெளியிட்டன. அதுமட்டுமன்றி புளஸ்தினி என்கின்ற சாராவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்பு பற்றியும் பேச்சடிபட்டது. 

ஆகவே, இந்த விவகாரத்தில் இந்தியாவில் உள்ள எந்த தரப்பிற்கோ இதில் தொடர்பிருக்கலாம் அல்லது அவர்கள் முன்கூட்டியே திட்டத்தை அறிந்திருக்கலாம் என்ற சந்தேகம் குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு ஆரம்பத்தில் ஏற்பட்டது. ஆனால், அதனை உறுதி செய்வதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. பல்வேறு கோணத்திலான கதைகளே பின்னர் வெளிவந்தன எனலாம்.  

இது ஒரு ஆட்சி மாற்றத்திற்காக நிகழ்த்தப்பட்டது என்றாலும், இத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் யார்? இதற்குப் பின்னால் வெளிநாடுகள், வெளிநாட்டுச் சக்திகள் அல்லது புலனாய்வு அமைப்புக்கள் இருந்துள்ளனவா? 

இதில் ஏன் சஹ்ரான் கும்பல் ஈடுபட்டார்கள் ? இது தொடர்பில் இதுவரை திருப்திகரமான விசாரணையொன்று நடத்தப்படாமல் ஏன் இழுத்தடிக்கப்படுகின்றது?  என்பது பொதுவாக நாட்டு மக்கள் எல்லோருக்கும் இருக்கின்ற கேள்விகளாகும்.

இந்தக் கேள்விகளுக்கு எவ்வித விடையும் இல்லாமலேயே நான்கரை வருடங்கள் கழிந்து விட்டன. இந்நிலையில், அசாத் மௌலானா கூறிய விடயங்கள் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியிருந்தாலும் கூட வழக்கம் போல இரு விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டு, இரு வாரங்களின் பின்னர் எல்லாம் அடங்கிப் போயிருக்கின்றது. 

இந்தப் பின்னணியிலேயே, இஸ்‌ரேல் இப்போது அகன்ற பலஸ்தீனத்தில் பெரும் யுத்தமொன்றை மேற்கொண்டு வருகின்றது. ஹமாஸை காரணம் காட்டி தாக்குதலை நடத்துவதன் மூலம் சர்வதேச போர் விதிமுறைகள், மனிதாபிமான சட்டங்கள் எல்லாவற்றையும் இஸ்‌ரேல் மீறி வருகின்றது. அத்துடன், போர்க் குற்றங்களும் வெளிப்படையாகவே இஸ்‌ரேலினால் இழைக்கப்பட்டு வருகின்றன. 

இதற்கெதிராக பெரும்பாலான உலக நாடுகள் குரல் கொடுக்கின்றன. இஸ்‌ரேலுக்கு ஆதரவளிக்கும் ஒரு சில நாடுகளில் உள்ள இலட்சக்கணக்கான மக்களும் பலஸ்தீன மக்கள் மீது மேற்கொள்ளப்படுகின்ற இனவழிப்புக்கு எதிராகக் குரல் கொடுக்கின்றனர். யுத்தத்தை நிறுத்துமாறு, இஸ்‌ரேலை உருவாக்குவதற்காக முன்னின்ற ஐ.நா. சபை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. 

ஆனால், சியோனிச-இஸ்‌ரேல் அரசு எதனையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. கண்ணுக்கு முன்னே இன அழிப்பும் மனித உரிமை மீறலும் போர்க்குற்றமும் மேற்கொள்ளப்பட்டு, பெரும் மனிதப் பேரவலம் நடந்தேறிக் கொண்டிருக்கின்ற போதிலும் கூட, உலகம் இன்னும் காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் செய்யாமல் இருக்கின்றது எனலாம்.

இவ்வாறான நிலையில். கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் உரையாற்றிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் எம்.பி ஒரு குண்டை தூக்கிப் போட்டுள்ளார். 
அவர் கூறியதாவது,“உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் இடம்பெற்று சில தினங்களுக்குப் பின்னர் கத்தோலிக்க சமயத் தலைவரான பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தை நாங்கள் சந்தித்தோம். அப்போது பேராயர், இது மத்திய கிழக்கு நாடொன்றின் வேலை.

இதன் பின்னணியில் இஸ்‌ரேல் இருந்திருக்கலாம்” என்று தனது சந்தேகத்தை எம்மிடம் தெரிவித்தார். 
‘நீங்கள் ஏன் இதற்காகக் கவலைப்படுகிறீர்கள். தாக்குதலுக்கு இந்நாட்டு முஸ்லிம்கள் பொறுப்பானவர்கள் அல்லர் என்று பேராயர் எம்மிடம் கூறினார். நானும் அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌஸி, கபீர் ஹாசீம், ரிசாத் பதியுதீனும் அங்கிருந்தோம்’ என்றார் ஹக்கீம். 

மு.கா. தலைவர் அத்தோடு நிற்கவில்லை. இன்னுமொரு விடயத்தையும் சபைக்குச் சுட்டிக்காட்டினார். அதாவது, அவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையில், சஹ்ரான் குழுவினர் இஸ்‌ரேலின் புலனாய்வுத் துறையுடன் தொடர்புபட்டிருப்பதற்கான ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்று சொன்னார்.  
குறிப்பாக, பக்கம் பின் அபூ என்பவர் பற்றிய சஹ்ரானின் முகநூல் பதிவொன்றை இட்டுள்ளார்.  பின்னர் அதற்குப் பதிலளித்துள்ள பக்கம் பின்அபூ, சஹ்ரான் இஸ்‌ரேலின் முகவர் எனக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயங்கள் விசாரணை அறிக்கையில் உள்ளன.

ஏற்கனவே கர்தினால் வெளியிட்ட சந்தேகத்தை இது மேலும் வலுப்படுத்துகின்றது என்று மு.கா. தலைவர் இந்த நாட்டின் உயரிய சபையில் தெரிவித்துள்ளார். இது மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். 
எனவே இது புறக்கணிக்கப்பட முடியாத விடயமாகும். உலக அரங்கில் இஸ்‌ரேலும், சியோனிசமும் செய்து கொண்டிருக்கின்ற குழப்படிகளை மூவாயிரம் ஆண்டு வரலாறு நமக்குத் தெளிவுபடுத்துகின்றது. 

எனவே. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விடயத்தில் சஹ்ரான் குழுவுக்கு மேலதிகமாக, உள்நாட்டு அரசியல் தரப்புகள் மட்டுமே சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று மக்கள் இதுவரை நினைத்துக் கொண்டிருந்தனர். 

இந்த தாக்குதலுக்கும் அல்லது சஹ்ரானுக்கும் இஸ்‌ரேலுக்கும் இடையில் தொடர்பிருந்திருப்பதாக விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விடயம் கூட வெளிச்சத்திற்கு வரவில்லை. அதனை றவூப் ஹக்கீம் வெளிக்கொணர்ந்துள்ளார். 

எனவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக உண்மையான, வெளிப்படையான விசாரணைகளை நடத்துவதன் அவசியம் மேலும் அதிகரித்திருக்கின்றது.

2023.10.31


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .