Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2024 ஒக்டோபர் 10 , பி.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
முருகானந்தம் தவம்
லங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும்செப்டெம்பர் 21ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவிக் கதிரைக்காக வழக்கமாக ‘இருமுனை’ப் போட்டியே இடம்பெறும் நிலையில், இம்முறை வழக்கத்துக்கு மாறாக ‘பஞ்ச முனை’ (5 முனை) போட்டி ஏற்பட்டுள்ளமை எந்தவொரு பிரதான ஜனாதிபதி வேட்பாளரும் 50 சத வீத வாக்குகளைப் பெறமுடியாத நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.
இம்முறை 39 ஜனாதிபதி வேட்பாளர்கள் களமிறங்கிய நிலையில், ஒருவர் திடீர் மரணமடைந்துள்ளதால் ஏனைய 38 ஜனாதிபதி வேட்பாளர்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திசாநாயக்க, பொதுஜன பெரமுன வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் தமது வாக்கு வங்கியைப் பலப்படுத்தும் முயற்சிகளிலும் ஆதரவுத் தளத்தை அதிகரிக்கும் அணி திரட்டல்களிலும் தீவிரம் காட்டி வரும் நிலையில், பிரதான இரு வேட்பாளர்களான தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடனும் பல கட்சிகள், பல எம்.பிக்கள் இணைந்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் தான், இம்முறை தமிழ்த் தேசியக் கட்சிகள், சிவில் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து தமிழ் பொதுக் கட்டமைப்பு என்ற ஓரணியாக ஜனாதிபதித் தேர்தலில் ‘தமிழ் பொது வேட்பாளர்’ ஒருவரைக் களமிறக்கியுள்ளதுடன், அவருக்கான ஆதரவுத் தளத்தை அதிகரித்து அதன் மூலம் அரசுக்கும் சர்வதேசத்துக்கும் தமிழ் மக்கள் தொடர்பில் ஒரு செய்தியைத் தெரிவிக்க முனைப்புக்காட்டி நிற்பதுடன், தமிழ் பொது வேட்பாளருக்குத் தமிழ் மக்கள் மத்தியிலான ஆதரவும் அதிகரித்து வருகின்றது.
எனினும், வழக்கமாக தமிழர் தரப்புக்குள் இருக்கும் ‘தலைக்கன அரசியல்வாதிகள்’ சிலர் இந்த தமிழ் பொது வேட்பாளருக்கு தமது எதிர்ப்பை சிலர் வெளிப்படையாகவும் இன்னும் சிலர் ‘கறுப்பு ஆடுகள்’ போன்றும் வெளிப்படுத்தி தமிழ் மக்களின் ஒற்றுமைக்குக் குழி தோண்டிக் கொண்டிருக்கின்றனர்.
இதில் முக்கியமாகத் தமிழ் தேசியக் கட்சிகளின் தாய்க்கட்சி என வர்ணிக்கப்படும் இலங்கை தமிழரசுக் கட்சியிலுள்ள ‘சுமந்திரன் அணி’ இந்த தமிழ் பொது வேட்பாளரைக் கடுமையாக எதிர்த்து வருகின்றது. இதேவேளை, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, இந்த ஜனாதிபதி தேர்தலைப் பகிஷ்கரிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளதுடன், அதற்கான தீவிர பிரசாரத்திலும் இறங்கியுள்ளது.
இவ்வாறான சூழலில் தான் தமிழரசுக் கட்சியின் வவுனியா அலுவலகமான தாயகத்தில் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடத்தப்பட்டு இந்த தமிழ் பொது வேட்பாளர் மற்றும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் தீவிரமாக ஆராயப்பட்டு சுமந்திரன் அணியின் அழுத்தத்தால் சில முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்த மத்திய குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களைச் சுமந்திரன் எம்.பி. ஊடகங்களுக்கு அறிவிக்கையில், “இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வுடைய ஆட்சி முறையை வழங்கத் தயாராகவுள்ள ஜனாதிபதி வேட்பாளர், அந்த நிலைப்பாட்டைத் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் சிங்கள மக்களுக்கும் வெளிப்படுத்தத் தயாராக இருந்தால் அவருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் தீர்மானிப்போம் என்ற கருத்து கூட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தார்.
அதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர்களில் பிரதானமான இருவரான ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச ஆகியோர் யாழ்ப்பாணம் வந்து எம்மை சந்தித்துப் பேசியபோது, அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் முன்வைத்த விடயங்கள், தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யவில்லை. அதனை நாம் அவர்களுக்கும் சொல்லியுள்ளோம் என்றும் சுமந்திரன் கூறியுள்ளார்.
அதன் பின்னர் அவர் கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது, “ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி யாருக்கு ஆதரவளிக்கும் என்பது இதுவரை தீர்மானிக்கப்படவில்லை. யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் அவசரப்பட வேண்டிய தேவை கிடையாது.
வாக்களிப்பு இடம்பெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர் எமது தீர்மானத்தை அறிவிப்போம். தமிழ் பொது வேட்பாளருக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை. அவர் எங்களின் கட்சி உறுப்பினர். அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னெடுத்துள்ளோம். இதன் மூலம் எமது நிலைப்பாட்டை விளங்கிக் கொள்ளவேண்டும்.
கடந்த கால தேர்தல்களிலும் எமது நிலைப்பாட்டை இறுதித் தருணத்திலேயே அறிவித்திருந்தோம். அதற்கமைய 80 சதவீதமானோர் எமது தீர்மானத்துக்கு அமையவே வாக்களித்தார்கள். ஆகவே, இம்முறையும் நாங்கள் குறிப்பிடும் வேட்பாளருக்கே எம்மக்கள் வாக்களிப்பார்கள் என கூறியுள்ளார்.
இங்கு இலங்கை தமிழரசுக் கட்சியிடம் அதிலும், சுமந்திரன் அணியிடம் ஒரு சில கேள்விகளை எழுப்ப வேண்டியுள்ளது. அதாவது, “இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வுடைய ஆட்சி முறையை வழங்கத் தயாராக உள்ள ஜனாதிபதி வேட்பாளர் அந்த நிலைப்பாட்டைத் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் சிங்கள மக்களுக்கும் வெளிப்படுத்தத் தயாராக இருந்தால், அவருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் தீர்மானிப்போம்” என்ற விடயம் தமிழரசுக் கட்சியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வுடைய ஆட்சி முறையை வழங்கத் தயார் என எந்தவொரு சிங்கள வேட்பாளரும் அறிவிக்கப் போவதுமில்லை. தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப் போவதுமில்லை.
ஆகவே, தமிழரசுக் கட்சியினால் நிச்சயம் சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்கள் எவருக்கும் ஆதரவளிக்க முடியாது. அவ்வாறானால் உங்கள் ஆதரவு எந்த வேட்பாளருக்கு?
அடுத்ததாக இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வுடைய ஆட்சி முறையை வழங்கத் தயார் என தமிழ் பொது வேட்பாளரினால் மட்டும் தான் அறிவிக்க முடியும். தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்படும். அப்படியானால் தமிழரசுக் கட்சி தமிழ் பொது வேட்பாளரைத்தான் ஆதரிக்க வேண்டும். உங்கள் தீர்மானத்தின் படி, ஆதரிப்பீர்களா?
உங்கள் கட்சி தீர்மானத்தின்படி, உங்களினால் சிங்கள ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிக்க முடியாது. “தலைக்கன அரசியல்வாதிகள்” என்ற வகையில் உங்களினால் தமிழ் பொது வேட்பாளருக்கும் ஆதரவளிக்க முடியாது என்றால், உங்களின் அடுத்த தெரிவு என்ன?
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்த ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது போல், நீங்களும் இந்த ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும். அதனை செய்வீர்களா?
“யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் அவசரப்பட வேண்டிய தேவை கிடையாது. வாக்களிப்பு இடம்பெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர் எமது தீர்மானத்தை அறிவிப்போம். கடந்த கால தேர்தல்களிலும் எமது நிலைப்பாட்டை இறுதி தருணத்திலேயே அறிவித்திருந்தோம். அதற்கமைய 80 சதவீதமானோர் எமது தீர்மானத்துக்கு அமையவே வாக்களித்தார்கள்.
ஆகவே, இம்முறையும் நாங்கள் குறிப்பிடும் வேட்பாளருக்கே எம்மக்கள் வாக்களிப்பார்கள்’’ என்று சுமந்திரன் எம்.பி. கூறியுள்ளார். கடந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் தமிழரசுக் கட்சி கூறினால் என்ன? கூறாவிட்டால் என்ன? தமிழ் மக்கள் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்காது, சஜித் பிரேமதாசவுக்குத்தான் வாக்களித்திருப்பார்கள். இது சிறு குழந்தைக்கும் தெரியும். எனவே, தமிழ் மக்களின் அந்த முடிவுக்கு தமிழரசுக் கட்சி உரிமை கோர முடியாது.
ஆகவே, இந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு இரு தெரிவுகள் மட்டுமே உண்டு.
ஒன்று, தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என தமிழ் மக்களைக் கோர வேண்டும்.
இரண்டு, தமிழ் மக்கள் தாம் விரும்பியவர்களுக்கு வாக்களிக்கலாம் என கூறவேண்டும். இவ்விரண்டில் ஒன்றைச் செய்யாது விட்டால், இலங்கை தமிழரசுக் கட்சி தமிழ் மக்களினால் புறக்கணிக்கப்பட்ட, வெறுக்கப்பட்ட கட்சி என்பதனை அக்கட்சி ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைமையே ஏற்படும்.
29.08.2024
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago