2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

உலகப் பொருளாதார மன்றம்: இலாபத்தை பங்கிடல்

Thipaan   / 2016 ஜனவரி 27 , பி.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

மக்களின் நன்மைக்காகத் தலைவர்கள் என்றுமே ஒன்றுகூடுவதில்லை. குரங்கு, அப்பம் பிரித்த கதையாய், மக்கள் நலன் என்ற போர்வையில், புதுப்புது வழிகளில் உலக வளங்களை எவ்வாறு கொள்ளையிடலாம் என முடிவுசெய்ய, உலக மக்களின் பெயரில் அவர்கள் கூடி, எங்கள் தலைவிதியைத் தீர்மானிக்கிறார்கள். பொருளாதாரத்தின் பெயரால் எங்களின் எதிர்காலத்தை அடகுபிடிக்கிறார்கள்.

கடந்தவாரம் சுவிட்ஸர்லாந்தின் டாவோஸ் நகரில் நான்கு நாட்கள் நடந்த உலகப் பொருளாதார மன்றம், பல வழிகளில் முக்கியமானது. முதலாவதாக, உலகத் தலைவர்கள் எல்லோரும் ஒன்றுகூடி உலகப் பொருளாதாரம் பற்றிக் கலந்துரையாடியமை. இரண்டாவதாக, மாநாட்டிற் பங்குகொள்ள இலங்கை முதன்முறையாக அழைக்கப்பட்டமை. மூன்றாவதாகச், சரியும் எண்ணெய் விலைகள், நெருக்கடியிலுள்ள ஐரோப்பிய அகதிகள் பிரச்சினை ஆகியவற்றின் நடுவே உலகத் தலைவர்கள் சந்தித்தமை.

உலகப் பொருளாதார மன்றம் என்பது சுவிட்ஸர்லாந்தில் இயங்கிவரும் நிறுவனமாகும். இது உலக நாடுகளின் தலைவர்கள், பல்தேசிய நிறுவனங்கள், பெருநிறுவனங்கள் போன்ற உலகைச் சுரண்டும் முக்கியஸ்தர்கள் பலரையும் ஒரே அரங்கில் ஒன்றிணைக்கும் அமைப்பாகும். ஆண்டுதோறும் டாவோஸில்

நடைபெறும் மாநாடு, உலகின் அதிபெரிய சுரண்டற்காரர்களும் கொள்ளையர்களும் ஒன்றுகூடி இலாபத்தைப் பெருக்கப் புதிய வழிகளைக் கண்டுபிடிக்க உதவுகிறது.

ஏனைய மாநாடுகள் போலல்லாது இதில் பங்குபற்றக் கட்டணஞ் செலுத்தவேண்டும். அத்துடன் உலகப் பொருளாதார மன்ற உறுப்புரிமை பெற வேண்டும். அடிப்படை உறுப்புரிமைக் கட்டணம் ஆண்டுக்கு 52,000 அமெரிக்க டொலர்கள் (75 இலட்சம் இலங்கை ரூபாய்). அதன் மூலோபாய உறுப்புரிமை பெறவேண்டின் ஆண்டுக்கு 600,000 அமெரிக்க டொலர்கள் (87 மில்லியன் இலங்கை ரூபாய்) செலுத்த வேண்டும்.

அதைவிட மாநாட்டிற் பங்குபற்றப், பயணச்சீட்டு, தங்குமிடம் என்பவற்றுக்காக ஆளுக்குக் குறைந்தது 32,000 அமெரிக்க டொலர்கள் (இலங்கை நாணய மதிப்பில் 46 இலட்சம்; ரூபாய்) செலவாகும். ஒரு மாநாட்டில் பங்குபற்ற ஒருவர் இவ்வளவு தொகையைச் செலவழிக்கிறார் எனின், அது உலக நன்மைக்கானதாய் இருக்கும் வாய்ப்பு மிகக்குறைவு. ஆண்டு தோறும் 2,500 பேர் இம் மாநாட்டிற் கலந்து கொள்கிறார்கள்.

உலகப் பொருளாதாரமும் நிதி மூலதனமும் செயற்படும் விதம் கடந்த நான்கு தசாப்தங்களில் மிக மாறியுள்ளது. அம் மாற்றத்தை வடிவமைப்பதில் உலகப் பொருளாதார மன்றம் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளது. 1970களில் தோன்றி, 1980களில் உலகப் பொருளாதாரத்தின் கொள்கையுருவாக்கத்துடன் நெருக்கமாகி, இன்று உலகப் பொருளாதாரம் பற்றிக் கலந்துரையாடும் முக்கியமான மன்றமாக இதன் பரிணாமம் தற்செயலல்ல.

1970களில், அமெரிக்கா பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியது. அதன் விளைவாகத் தங்கத்தின் விலைக்கு நிலையானதொரு டொலர் பெறுமானம் பேணும் முறை கைவிடப்பட்டு, அமெரிக்க அரசின் தங்கக் கையிருப்பின் கணிசமான பகுதி சந்தைக்கு வந்தது. அந்த நெருக்கடி ஐரோப்பாவில் எழுப்பிய அபாய அலையால் உலகப் பொருளாதாரம் பற்றிக் கலந்துரையாடுவதற்கான ஓர் அமைப்பாக 1971இல் தோன்றிய 'ஐரோப்பிய முகாமைத்துவ மன்றம்;', பின்னர், 1987இல் உலகப் பொருளாதார மன்றமாகியது. முதலாளியம் ஏகாதிபத்தியமாக முதிர்ந்த நிலையில் நிதி மூலதனத்தின் எழுச்சியும் ஆதிக்கமும் உலக மயமாதலும் மூலதனத்தின் அசைவாற்றலும் 1980களின் பின் நவதாராளவாதம் ஓர் அரசியல் சக்தியாகப் பெற்ற எழுச்சியுடன் இணைந்த பின்னணியில் இவ் விருத்தியை நோக்கல் தகும். மூலதனம் செயற்படும் விதம் மாறத் தொடங்கியதைத் தொடர்ந்து, உலகின் பெரிய நிறுவனங்கள் உலகப் பொருளாதாரத்தின் தீர்மானமான சக்திகளாவதை இம் மன்ற மாநாடுகளின் முடிவுகள் உறுதி செய்தன.  

மூலதனம் ஏகபோக மூலதனமாக வளர்ந்து, தன் தேச எல்லைகளைத் தாண்டி அந்நிய நாடுகளின் உற்பத்தியையும் வணிகத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குட் கொண்டு வந்துள்ளது. உலகச் சந்தை மீதான ஏகபோக முதலாளிய ஆதிக்கம் மூலப் பொருட்கள் முதல் அடிப்படை உற்பத்திப்பொருட்கள் வரையானவற்றின் விலைகளைத் தாழ்த்தியும் தனது நேரடியான கட்டுப்பாட்டிலுள்ள உற்பத்திக் கூறுகளது விலைகளை உயர்த்தியும் மூன்றாமுலகப் பொருளாதாரங்களைப் பின்தங்கிய நிலையில் வைத்துள்ளது. அதன் மூலம், மூன்றாமுலக நாடுகளைக் கட்டுப்படுத்தித் தன் ஆணைப்படி வழிநடத்த அதற்கு இயலுமாயிற்று. அதை விடவும், கடன் என்ற பெயரிலும் உதவி என்ற பெயரிலும் ஏழை நாடுகளின் பொருளாதாரம் ஏகபோக மூலதனத்தின் தேவைகட்கமைய நெறிப்படுகிறது. எனவே தேசியப் பொருளாதாரம் ஒன்றை உருவாக்க இயல்வதில்லை. ஒவ்வொரு நாட்டின் மீதும் ஏற்றுமதியை மையமாகக் கொண்ட ஒரு நுகர்வுப் பொருளாதாரம் திணிக்கப்படுகிறது.

அதன் விளைவாக அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படுகிறது. அதை விட உலகமயமாதல் என்ற பெயரில் நாடுகள் தமது சகல பொருளாதாரச் செயற்பாடுகளையும் தனியார் துறையிடம் கையளிக்கவும் தாராளமயம் என்ற பெயரில் அந்நிய மூலதனம் அவற்றின் மீது ஆதிக்கஞ் செலுத்தவும் திறந்த பொருளாதாரம் என்ற பெயரிற் கட்டுப்பாடின்றி ஆடம்பரப் பொருட்களையும் தமது மேலதிக உற்பத்திகளையும் நாடுகட்குள் கொண்டுவந்து குவிக்கவும் இயலுமானது. இவ்வாறு முதலீட்டையும் கொள்ளை இலாபத்தையும் வேண்டிய போது தடையின்றி இடம்பெயர்க்கவும் வழியமைந்தது.

நவதாராளவாதத்தின் வளர்ச்சியை உறுதிப்படுத்தியதில் உலகப் பொருளாதார மன்றத்தின் பங்கு பெரிது. அரசின் வகிபாகத்தைக் குறைக்கவும் தனியார்துறையை முன்தள்ளவும் கொள்கை ரீதியான அடிப்படைகள் உருவாக்கத்திலும் அது முக்கிய அரங்காடியாக இருந்துள்ளது. மேற்கூறிய கொள்கை முடிவுகளின் விளைவாக, முன்னேறிய முதலாளிய நாடுகளில் சமூகப் பாதுகாப்பினதும் சமூக நலனினதும் பிரதான ஆதாரமாக அரசின் பங்குக்குக் குழிபறிக்கப்பட்டது. மூன்றாம் உலகில் அவற்றின் விளைவுகள் மேலுங் கடியவை. அரசின் மீது நிதி மூலதன அழுத்தங்கள் மூலம் அரசு தனது சமூகப் பொறுப்பைக் கைவிடக் கட்டாயப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக அரசு வழங்கி வந்த சொற்ப சமூகப் பாதுகாப்பு நிவாரணம் மட்டுமன்றி அரச பொறுப்பிலிருந்த கல்வி, உடல் நலன், பொதுசனப் போக்குவரத்து, நீர் வழங்கல் ஆகிய அத்தியாவசிய சேவைகள் மெல்லச் சிதைய விடப்பட்டன. 

இவ்வாண்டின் மாநாடு 'நான்காம் தொழிற்; புரட்சிக்குத் தேர்ச்சிபெறல்' என்ற தொனிப் பொருளுடன் நடந்தது. அதில் வெளியான மூலோபாய அறிக்கைகள் அடுத்த ஐந்து ஆண்டுகட்கு இலாபத்தைத் தக்கவைக்கவும் அதிகரிக்கவுமான வழிவகைகளையும் அவற்றின்; விளைவுகளையும் எதிர்வுகூறுகின்றன. அடுத்த 5 ஆண்டுகளில் உலகெங்கும் 71 இலட்சம் மக்கள் வேலையிழப்பது உறுதி எனவும் மனிதர்களை இயந்திரங்களாற் பிரதியிடுவதே குறைந்துசெல்லும் இலாபத்தைத் தக்க வைக்கும் வழி எனவும் மனிதரில் முதலிடுவதற்குப் பதிலாக இயந்திரங்களில் முதலிடுவது இலாபம் மிக்கது எனவும் அறிவுறுத்துகிறது.

அத்துடன், இலாபத்தை அதிகரிக்க, மிகக் குறைந்த செலவிற் பொருட்களை உற்பத்தி செய்யக் கூடிய இடங்களுக்குத் தொழில்களை மாற்றுமாறு கம்பெனிகட்கு ஆலோசனை சொல்லப்படுகிறது. குறிப்பாக அதிகரிக்கின்ற பொருளாதார நெருக்கடி மூன்றாமுலக நாடுகளை மோசமாகத் தாக்கும். அனேக மூன்றாமுலக நாடுகளில் உலகமயமாக்கம் முழுமையாகியுள்ளது. எனவே முதலாம் உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் விளைவுகளை மூன்றாமுலக மக்களும் அனுபவிப்பர். அதனாற் குறைந்த கூலிக்கு வேலையாட்கள் கிடைப்பர். அவ்வந் நாட்டு அரசுகளும் அதற்கு உடன்படும். எனவே இலாபத்தை அதிகரிக்கச் செலவு குறைந்த நாடுகளுக்குத் தொழிற்சாலைகளை மாற்ற அந்நாட்டு அரசாங்கங்களதும் தலைவர்களினதும் ஆசீர்வாதம் இருக்கும்.

கடந்த பத்து ஆண்டுகளில் ஆழமாகியுள்ள பொருளாதார நெருக்கடி இலாபத்தின் அளவை மிகக் குறைத்துள்ளது. எனவே, தொழிலாளர் நலத் திட்டங்களைக் குறுக்கலும் ஊதியங்களைக் குறைத்தலும் தவிர்க்கவியலாதன என இவ்வாண்டு உலகப் பொருளாதார மன்ற அறிக்கை கூறுகிறது. ஆனாற், சர்வதேச தொழில் அமைப்பின் அறிக்கைப்படி, கடந்த பத்து ஆண்டுகளில் தனியார் துறையின் இலாபம் 44 சதவீத அதிகரித்துள்ளதுடன்; அது என்றும் குறையவில்லை.

உலகப் பொருளாதார மன்றம் உலகின் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக மாறுவதைப் பற்றிப் பேசுகிறது. இம்மன்றம் உலகின் 99 சதவீதம் பேரின் சொத்து மதிப்பை விட அதிகஞ் சொத்துக்களையுடைய 1 சதவீதம் பேரின் நலன்களைக் காப்பது பற்றிப் பேசுகிறது.

இம் மாநாட்டில், உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் 'சமமின்மை' பற்றியும், சூழலை மோசமாகப் பாதிக்கின்ற தனியார் ஜெட் விமானங்களில் வந்திறங்கியோர் சூழல் மாசடைதலும்; காலநிலை மாற்றமும் பற்றிப் பேசியமையே இம் மாநாட்டின் முரண்நகை.

மாநாட்டை ஒட்டி வெளியான அறிக்கைகள், தற்போதைய உலகப் பொருளாதாரம் பற்றிய மோசமானதொரு சித்திரத்தை வரைகின்றன. அதன் சாராம்சம் இதுவே: 'உலகப் பொருளாதாரத்தின் தற்போதைய நிலை 2007ஆம் ஆண்டினதினும் மோசமானது. ஆனால் 2007ஆம் ஆண்டையடுத்துச் செய்தது போல பிணையெடுப்புக்களை மேற்கொள்ள இயலாது'.

நான்கு நாள் திருவிழாவின் பின் உலகத் தலைவர்களும் பெரும் பணக்காரர்களும் பெரு நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகளும் வீடு திரும்பிவிட்டனர். உலகப் பொருளாதார நெருக்கடி உள்ளபடியே உள்ளது. அகதிகள் நெருக்கடி மேலும் கூர்மையடைந்துள்ளது.

அவர்கள் செய்யப்போவது இவைதான். சரியும் பொருளாதாரத்தின் சுமையைச் சாதாரண மக்களின் தலையில் ஏற்றுவது. இதைச் சரிவரச் செய்ய வரிகள் அதிகரிக்கப்பட வேண்டும். கடுமையான சட்ட திட்டங்கள் அமுலாக்கப்பட வேண்டும். மக்கள் எதிர்ப்பைச் சமாளிக்க வேண்டும் அல்லது திசை திருப்ப வேண்டும். அதற்குச் சர்வாதிகாரத்தன்மையுடைய ஆட்சிகள் அவசியம்.

இம் மாநாட்டிற் பங்கேற்ற பெரும்பாலானோர் தொடர்ந்தும் போர்களில் ஈடுபடுவதன் மூலம் உலகெங்கும் அசாதாரண நிலையைத் தோற்றுவிப்பது, குறைவின்றி இலாபம் பெறவும் மக்களின் எதிர்ப்புக்களைப் பயங்கரவாதத்தின் பெயரால் அல்லது வேறு வழிகளில் நசுக்கவுமே. எல்லா வகைகளிலும் போர் அவர்களுக்கு இலாபமானது.

உலகப் பொருளாதார மன்றம் சாதாரண மக்களின் நலனுக்கானதல்ல. அது அதிகாரத்தில் உள்ளவர்களுக்குச் சேவகம் செய்கிறது. அவர்களுடைய அக்கறை இலாபம் பற்றியது. அதற்கு எவ்வித ஆபத்தோ குறைவோ வராமல் அவர்கள் கவனிக்கிறார்கள். நெருக்கடி மிகுந்த காலத்திலும் இலாபத்தைப் பங்கிடுதற்கான புதிய வழிகளை அவர்கள் தேடுகிறார்கள். அதில் மனிதநேயம் இல்லை.

நனையும் ஆடுகட்;காக ஓநாய் விடுங் கண்ணீர் அபத்தமானது மட்டுமல்ல, ஆபத்தானதும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X