Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Administrator / 2017 பெப்ரவரி 20 , மு.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றிருக்கிறார். காலையில் பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். மாலையில் பதவிப்பிரமாணம்.
‘அதிக சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டவரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்’ என்ற இந்தியாவில் இருக்கின்ற அரசியல் சட்ட மரபைத் தமிழக ஆளுநர் வித்யாசகர் ராவ் நிலைநாட்டியிருக்கிறார்.
‘இராஜினாமாச் செய்து ஏற்றுக் கொள்ளப்பட்டு காபந்து முதலமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வத்தை, பலத்தை நிரூபிக்க அழைக்கக் கூடாது’ என்ற உயர்ந்த மரபினை உருவாக்கியிருக்கிறார் ஆளுநர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வராக இருந்த ஜகதாம்பிகாபால் வழக்கில் உச்சநீதிமன்றம் முதல் முதலாக உத்தரவிட்ட ‘Composite Floor Test’ மாதிரியை இந்திய அட்டோர்னி ஜெனரலே சுட்டிக்காட்டியும் ஏற்க மறுத்து, நியாயமான மரபைத் தமிழக ஆளுநர் உருவாக்கி, மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் வழி காட்டியாகத் திகழ்கிறார்.
எல்லாவற்றையும் விட ‘எதிர்வரும் ஊழல் வழக்கின் தண்டனையைக் காரணம் காட்டி, சசிகலா நடராஜனை ஆட்சி அமைக்க அழைக்காமல்’ இந்திய அரசியலில் புதிய முன்னுதாரணத்தையும் தமிழக ஆளுநர் உருவாக்கியிருக்கிறார்.
“முதலமைச்சர் பதவிக்கு என்னை நியமிக்க வேண்டும்” என்று ஆளுநரைச் சந்தித்து முறையிட்ட சசிகலா நடராஜன், தற்போது பெங்களூர் சிறையில் இருக்கிறார்.
ஆனால், அங்கு செல்வதற்கு முன்பு தனக்குப் பதில் எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்து ஆட்சியமைக்கக் கடிதம் கொடுத்து விட்டுச் சென்றதன் மூலம், இன்றைக்கு தமிழகத்தின் புதிய முதலமைச்சராக, தொழில் மண்டலமான கொங்கு மண்டலத்திலிருந்து மூதறிஞர் ராஜாஜி, சுப்புராயன் போன்றவர்களுக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகி இருக்கிறார்.
அதே நேரத்தில், தான் சிறையில் இருக்கும் காலகட்டத்தில் அ.தி.மு.கவின் கட்சி விவகாரங்களைக் கவனிக்க டி.டி.வி தினகரனை அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளராக நியமித்துள்ளார் சசிகலா நடராஜன்.
இதன் விளைவாகக் குடியரசுத் தலைவர் ஆட்சியை நோக்கி நகர வேண்டிய தமிழகம், தற்போது தற்காலிகமாகத் திசை மாறி,
அ.தி.மு.க தலைமையில் (சசிகலா அ.தி.மு.க) ஆட்சி அமைந்திருக்கிறது.
கட்சிக்குள் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களைச் சமாளித்து எப்படி ஆட்சியை முன்னெடுத்துச் செல்லப் போகிறார் என்பது வானத்தில் நகரும் மேகங்கள் போல்தான் இன்றைய திகதியில் இருக்கிறது.
அவருக்கே நிலைமையின் நெருக்கடி தெரிந்துதான் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் கால அவகாசம் இருந்தும் உடனடியாக நிரூபிக்க முடிவு எடுத்தார் எடப்பாடி பழனிச்சாமி.
அதேநேரத்தில், ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்து, “இராஜினாமா கடிதம் வற்புறுத்தி வாங்கப்பட்டது” என்று அறிவித்து, மத்திய அரசாங்கத்தின் மறைமுக ஆதரவுடன் ஓ. பன்னீர்செல்வத்துக்குக் கிடைத்த வாய்ப்பு, சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லாததால் வெற்று விளையாட்டாக மாறி விட்டது.
15 வருடங்கள் அமைச்சராகவும் முதலமைச்சராகவும் மாறி மாறி அ.தி.மு.க அரசியலில் கொடிபிடித்த ஓ. பன்னீர்செல்வம், இப்போது எந்தப் பதவியும் இல்லாமல் “நீதி கேட்டு நெடும் பயணம் நடக்கப் போகிறேன்” என்று அறிவித்துள்ளார்.
இந்தப் பயணத்தின் இறுதியில் அ.தி.மு.க தொண்டர்கள் அவர் உடன் நிற்கலாம். இப்போது, அவருடன் இருக்கும் தலைவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள் என்பது விடை தெரியாத புதிராகவே இருக்கிறது.
சசிகலா அ.தி.மு.கவும் ஓ.பி.எஸ் தலைமையிலான அ.தி.மு.கவும் இனித் தேர்தல் ஆணையத்தில் முட்டி மோதப் போகிறார்கள்.
இதன் விளைவாக யாருக்கு இரட்டை இலைச் சின்னம் கிடைக்கும்? அல்லது இருவருக்குமே இல்லாமல் மக்கள் மத்தியில் பிரபலமான அந்த எம்.ஜி.ஆரின் சின்னம் முடக்கப்படுமா என்ற காட்சிகள் எல்லாம் அரங்கேறும்.
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவில் அ.தி.மு.கவின் 45 ஆவது ஆண்டு விழாவில் அ.தி.மு.க இப்படியொரு மிகப்பெரிய சோதனையை சந்திக்க மிக முக்கிய காரணம் ‘ஊழல் வழக்கு’ என்பதுதான், இந்திய அரசியலில் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் மிக முக்கியமான பாடம்.
இந்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புத்தான் தமிழக அரசியலில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது.
முடிவுக்கு வந்திருக்கும் சொத்துக் குவிப்பு வழக்கில் பல காட்சிகள் இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்களுக்கும் கட்சிகளுக்கும் தக்க பாடமாகவே கருதப்படுகிறது.
சசிகலா, இளவரசி, வி.என் சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு வருடம் சிறைத்தண்டனை அளித்த பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜோன் மைக்கேல் குண்ஹாவின் தீர்ப்பை உறுதி செய்திருக்கும் உச்சநீதிமன்றம், கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்த ‘கூட்டுப்பிழை’ தீர்ப்பை இரத்து செய்திருப்பது பலரின் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பொது ஊழியர். சசிகலா உள்ளிட்ட மற்ற மூவரும் பொது ஊழியர்கள் அல்ல. முன்னவரை வைத்து, பின்னவர்கள் மூவரும் அரசாங்க அதிகாரத்தைப் பயன்படுத்தினார்கள் என்பதும் இந்த நால்வருமே சேர்ந்து கூட்டுச் சதி செய்து வருமானத்துக்கு மீறிய சொத்துக் குவித்தார்கள் என்பதும் வழக்கு.
இதில்தான், ஊழலுக்கு எதிரான மாவட்ட நீதிபதியின் உத்தரவை இந்திய உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த வழக்கு, இன்னொரு விதத்திலும் விநோதமான வழக்கு.
அரசாங்கத்தில் இருந்த பொது ஊழியரான முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, மரணம் அடைந்து விட்டதால், அவர் சிறைத் தண்டனையை அனுபவிக்க முடியாது. அதனால், அவர் மீதான மேல் முறையீடு வழக்குத் தள்ளுபடி ஆகியிருக்கிறது.
ஆனால், பொது ஊழியராக இல்லாத மற்ற மூவருக்கும் சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டு, கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
வழக்கு விசாரணை முடிந்து, தீர்ப்புக்காக எட்டு மாதங்கள் இந்த வழக்கு காத்திருந்தாலும் தமிழகத்தில் மிக முக்கியமான அரசியல் நிகழ்வு நடக்க வேண்டிய நேரத்தில், இந்தத் தீர்ப்பை வெளியிட்டு, ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் முதலமைச்சராகப் பதவியேற்பதற்கு முட்டுக்கட்டை போட்டது, உச்சநீதிமன்றம் என்பதுதான் இன்றையளவில் மக்களின் ஏகோபித்த வரவேற்பாக இருக்கிறது.
உச்சநீதிமன்றத்தைப் பொறுத்தவரை இந்த வழக்கில் ‘மறைந்த முன்னாள் முதல்வரின் சட்டவிரோத வருமானத்தைப் பயன்படுத்திச் சொத்துகள் வாங்கிக் குவிக்க, சசிகலா உள்ளிட்ட மூவரும் ‘முகமூடி அணியாக’ இருந்தார்கள், என்றும் ‘1991-96 ஜெயலலிதா ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட 32 க்கும் மேற்பட்ட கம்பெனிகள் எல்லாம் மூலதனம், தொழில், இலாபம் ஏதும் இல்லாத வெற்றுக் கம்பெனிகள் (SHELL COMPANIES)’ என்றும், ‘பொது ஊழியர் வருமான வரிக்கணக்குத் தாக்கல் செய்து விட்டாலே, அதில் உள்ள வருமானம் எல்லாம் சட்டபூர்வமானது அல்ல’ என்றும், ‘பொது ஊழியர் நன்கொடை பெறக்கூடாது’ என்றும் அரசியல் வாதிகள் எதிர்காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய பல்வேறு நெறிமுறைகளை இந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினராய் கோஷ் மற்றும் அமிதாவ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு வகுத்துக் கொடுத்துள்ளது.
21 வருடங்களாக நடைபெற்ற வழக்கினைத் தொடங்கிய கதாநாயகன் டொக்டர் சுப்ரமண்யம்சுவாமி என்றால், இதை முறையாக நடத்திய சிறப்பு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இருந்த ஆட்சியும் அதன் பிறகு அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகன் நடத்திய நீதிப் போராட்டமும் முக்கிய பங்கை வகிக்கும்.
இந்த வழக்குக்கு பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. வழக்கின் ஒவ்வொரு கட்டத்திலும் உச்சநீதிமன்றம் வரை மனுக்கள் போடப்பட்டன. 259 சாட்சிகளில் 60க்கும் மேற்பட்ட சாட்சிகள் பிறள் சாட்சிகளானார்கள்.
தமிழகத்திலிருந்து அண்டை மாநிலமான கர்நாடகாவில் இந்த வழக்கை நடத்த உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். ‘அரசு வழக்கறிஞர்தான், இவர்தான் வேண்டும்’ என்று குற்றம் சாட்டப்பட்டவர்களின் சார்பில் உச்சநீதிமன்றத்திலேயே கோரிக்கை வைக்கப்பட்டது.
வழக்கின் இறுதிக் கட்டத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பதற்குக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் காட்டிய தயக்கத்தால் உச்சநீதிமன்றமே தலையிட நேர்ந்தது.
வழக்கு விசாரணையின் இறுதிக் கட்டத்தில் ‘மறு புலனாய்வு’ நடத்த வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவர் தலைமையில் உள்ள அரசே உத்தரவு போட்ட விநோத வழக்கு. ஒரு முதலமைச்சர் ஊழல் வழக்கில் நான்கு வருடம் சிறைத் தண்டனையும் 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஊழல் வழக்கு!
ஊழல் வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி எப்படிக் கவனமாகத் தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றமே வழி காட்டுதல்களை வழங்கிய வழக்கு.
கூட்டுப் பிழை மூலம், ஊழல் வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதியே விடுதலை கொடுத்த வழக்கு.
மேல்முறையீடு விசாரணை முடிந்து எட்டு மாதங்களின் பிறகு உச்சநீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட வழக்கு.
எல்லாவற்றிற்கும் மேலாக, தமிழகத்தில் சசிகலா நடராஜன் முதல்வராக முடியாமல் தடுத்த வழக்கு. இப்படி இந்த ஊழல் வழக்கு, அகில இந்தியாவுக்கும் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறது.
ஊழல்வாதிகள் அரசியலில் ஆதிக்கம் செலுத்த முடியாது என்பதற்கு இந்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சம்மட்டி அடி.
பீஹாரில் லாலு பிரசாத் யாதவ், ஹரியானாவில் ஓம் பிரகாஷ் சவுதாலா, தமிழகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இப்படி அனைவர் மீதும் ஊழல் வழக்கில் அதிரடியான தீர்ப்புகளை வழங்கி இந்திய உச்சநீதிமன்றம் ‘அழுக்கு அரசியலை’ சுத்தம் செய்து கொண்டிருக்கிறது.
ஆனாலும், ஊழல்வாதிகளுக்கு வாக்களிக்கக் கூடாது என்ற விழிப்புணர்வு எதிர்பார்க்கும் அளவுக்கு மக்களிடம் ஏற்படவில்லை என்பதும், ஊழலற்ற அரசியவாதிகளை உருவாக்கும் மன உறுதியில் இன்னும் போர்க்குணம் ஏற்படவில்லை என்பதும் சற்று ஏமாற்றமாகவே இருக்கிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
7 hours ago
8 hours ago