2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

ஐ. அமெரிக்க நிகழ்ச்சிநிரலைத் தாண்டுதல்: ஐரோப்பா

Editorial   / 2020 ஜனவரி 27 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஜனகன் முத்துக்குமார்

ஐக்கிய அமெரிக்காவின் இராணுவக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட யுத்தமுனைப்புக்களில் ஐரோப்பியாவின் பங்கு தொடர்பான செயற்பாட்டு நிலைமை, 9/11 தாக்குதலுடன் அதன் மூன்றாம் பரிமாணத்தை எட்டியிருந்தது.

இராண்டாம் உலகப்போரின் போதிலும், பனிப்போர் மத்தியிலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்க முதலிரண்டு பரிமாணங்களை தாண்டி, மூன்றாம் பரிணாமம் தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்ற பரந்துபட்ட கருப்பொருளில் உருப்பெறச்செய்யப்பட்டு, தொடர்ச்சியாக ஈராக், லெபனான், உக்ரைன், லிபியா, சிரியா என உருமாறத் தொடங்கவே, ஐரோப்பிய நாடுகள் தமது பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார நலன்களை கருத்திற் கொண்டு, ஐக்கிய அமெரிக்காவுடன் இராணுவ நடவடிக்கைகளை பொறுத்தவரை தேவையற்ற விதத்தில் பங்காளராவதில்லை என்ற கொள்கையை வரித்துள்ளமையே, ஈரான், வடகொரியா தொடர்பாக ஐக்கிய அமெரிக்காவின் யுத்தமுனைப்புக்கள் பலதடவைகள் வலுப்பெற்றிருந்தபோதிலும், அவை மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட ஒன்றாக அமைந்திருந்தது.

இருப்பினும் தொடர்ச்சியான ஐக்கிய அமெரிக்காவின் ஊகம் என்னவென்றால், ஐரோப்பாவின் வெளிவிவகாரக் கொள்கைகளில் ஐக்கிய அமெரிக்காவின் நலனடிப்படையில் பேணப்படவேண்டும் என்பதுடன், அதன் வெளிப்பாடாக ஐரோப்பிய ஒன்றியம், யூரேசிய கண்ட நாடுகள் ஐக்கிய அமெரிக்காவின் இராணுவத் துறை சார் நகர்வுகளில் தொடர்ச்சியான கூட்டிருப்பை உறுதிசெய்யவேண்டும் என்பதே ஆகும்.

 

ஐக்கிய அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கை இன்னமும் 9/11 க்கு எதிர்ப்பாக ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய அமெரிக்க படைகள் தமது இராணுவ நகர்வுகளை மேற்கொண்டபோது, ஒட்டுமொத்த வட அத்லாண்டிக் ஒப்பந்த (நேட்டோ) உறுப்பு நாடுகளும் தமது பங்கை சரியாக ஆற்றியமையை - ஐக்கிய அமெரிக்காவின் இராணுவ தலைமைக்கு உட்பட்ட ஒரு ஐரோப்பிய நகர்வாகவே பார்க்கின்றது.

ஆனால், அந்நிலை இப்போது இல்லை. குறிப்பாக, லிபியாவின் முன்னை நாள் கடாபியின் அரசாங்கத்துக்கு எதிராக வான் விமானத் தாக்குதல்களை ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்து பிரான்ஸ், பிரித்தானியா மேற்கொள்ளும்போது பல ஐரோப்பிய நாடுகள் தமது பங்ககை வெகுவாகவே குறைத்திருந்தன.

சிரியாவில் உள்நாட்டு போர் மூண்ட வேளையில், ஐக்கிய அமெரிக்காவின் அரசாங்கம் ஒரு இராணுவ நகர்வை மேற்கொள்ள முடியாமல் போனதற்கான அடிப்படையான காரணமாக ரஷ்யாவின் சிரியாவுக்கான உதவி இருந்தபோதிலும், மேலதிக காரணம் ஐரோப்பிய நாடுகள் குறித்த இராணுவ நடவடிக்கையில் தம்மை ஈடுபடுத்த விரும்பாமையே ஆகும்.

அதே போல, உக்ரைனில் ஐக்கிய அமெரிக்காவின் வெளிவிவகார கொள்கை வெகுவாகவே தோற்றமைக்கு காரணம் - குறிப்பாக ஒபாமா அரசாங்கம் உக்ரேனின் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துக்கு பதிலாக ஒரு அமெரிக்க கொள்கை திணிக்கப்பட்ட பாசிச ரஷ்ய எதிர்ப்பு அரசாங்கத்தை அமைக்க விரும்பியதும் அதன் மூலம் கிறீமியாவில் உள்ள ரஷ்யாவின் மிகப்பெரிய கடற்படை தளத்துக்கு போட்டியாக, மற்றொரு ஐக்கிய அமெரிக்க கடற்படைத் தளத்தை அமைக்க முயன்றமையின் விளைவே ரஷ்யா கிறீமியாவில் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்ட செயலாகும் - என்பதுடன் குறித்த விவகாரத்தில் ஐக்கிய அமெரிக்காவுக்கு இராணுவ ரீதியில் உதவுவதற்கு ஐரோப்பிய நாடுகள் பின்நின்ற காரணமாகும் என்று வாதிடுகிறார் புலனாய்வு வரலாற்றாளர் எரிக் சூஸெ.

 

ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெய்ன் மற்றும் ஐரோப்பாவின் எஞ்சிய பகுதிகள், உண்மையில் அத்லாண்டிக் பெருங்கடலில், யூரேசிய கண்டத்தின் மற்ற பகுதிகளுடன் தொடர்ச்சியான பாதுகாப்பு மற்றும் இராணுவ கட்டமைப்பு விருத்திக்கு விரும்புகின்றன. அவை, முன்னெப்போதும் இல்லாதளவு ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் அமெரிக்கா - முதல் எனும் கொள்கைக்கு மாறுதலாகவே தமது ஒன்றிணைந்த பாதுகாப்பு கொள்கைவகுப்பை பார்க்கின்றன. இந்நிலையில், ஐக்கிய அமெரிக்காவின் தொடர்ச்சியான நட்பு நாடுகளில் அங்கம் வகிக்கும் பலமான நாடுகளாக, பிரித்தானியா, சவுதி அரேபியா, இஸ்ரேல் என்பனவே அமைகின்றமை, ஐக்கிய அமெரிக்கா தனது தொடர்ச்சியான இராணுவ முனைப்புக்களை மேற்கொள்வதற்கு போதுமான இடைவெளியை தரவில்லை.

 

நேட்டோவைப் பொறுத்தவரை, அது ஐக்கிய அமெரிக்காவின் கொள்கைகளுக்கு அமையவே தனது செயல்பாடுகளை காலகாலம் மேற்கொண்டு வந்தபோதிலும், அண்மைய நேட்டோ அமர்வுகள் அவ்வாறான ஒரு தன்மையை கொண்டிருக்கவில்லை என்பதையும் ஒரு புறம் அவதானிக்கலாம். நேட்டோ, இராணுவத் தளபாட கொள்வனவுகளுக்கு பதிலாக, மனிதாபிமான பணிகள், இணையக் குற்றங்களை தடுத்தல் தொடர்பாகவும், ரஷ்ய பிராந்தியத்தில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அதேநேரம், ரஷ்யாவுடன் தொடர்ந்து இணங்கி சர்வதேச பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முனைகின்றமை, ஐக்கிய அமெரிக்காவின் இராணுவக் கொள்கையை பின்தள்ளும் ஒரு செயற்பாடாகவே பார்க்கப்படவேண்டியதாகும். இதன் அடுத்தகட்ட விரிவாக்கமாகவே ஒன்றிணைந்த ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்பு கட்டமைப்பு விருத்தி என்பது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளால் முன்னெடுக்கப்படுகின்றமை ஐக்கிய அமெரிக்க தலைமையிலான நேட்டோ உறுப்புரிமைக்கு சமமான ஐரோப்பிய பிராந்திய இராணுவ வலையமைப்பை தோற்றுவிக்கும் என்பதுடன், அது ஐக்கிய அமெரிக்க இராணுவ தலைமைத்தன்மையை இரண்டாம் தளத்துக்கு பின்தள்ளும் என்பதும் மறுதலிக்க முடியாத ஒன்றாகும்.

 

இவ்வாறாக ஐக்கிய அமெரிக்க தலைமையிலான இராணுவ மற்றும் வெளிவிவாகர கொள்கைகளிலிருந்து ஐரோப்பா விலகலின் ஒரு செயற்பாடாகவே அண்மையில் லிபியாவின் பாதுகாப்பு தொடர்பாக ஐக்கிய அமெரிக்க தலைமை இல்லாது - ஜேர்மனியில் - ஐரோப்பிய மற்றும் இஸ்லாமிய கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் மற்றும் ரஷ்யா ஆகியன இணைந்து பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தி அதன்மூலம் சமாதானத்துக்கான ஒரு தீர்வுத்திட்டத்தை முன்மொழிந்ததை பார்க்கமுடியும்.

 

அந்நிகழ்ச்சிநிரலின் அடுத்தப்படியாவே, ஈரான் தொடர்ச்சியாக அணுஆயுத ஒப்பந்தத்தில் இருக்கவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் ஈரானிடம் வலியுறுத்துவதும், ஈரான் தொடர்பாக ஐக்கிய அமெரிக்கா யுத்த நிலைமைகளை கையாண்ட கடந்த மாதத்தில் ஐரோப்பிய நாடுகள் ஒரு நடுநிலையான தன்மை வகித்தமையையும் பார்க்கமுடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .