2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

ஒபாமாவின் உரையும் அமெரிக்காவின் நிலையும்

Thipaan   / 2016 ஜனவரி 20 , பி.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

பேரரசுகள் என்றென்றைக்குமானவையல்ல. உலக வரலாற்றில் நிலையான பேரரசுகள் என எதுவும் இருந்ததில்லை. அவை பெரும்பாலும் வல்லரசுகளாக இருக்கின்றனவே தவிர, நல்லரசுகளாக இல்லை. அவை மக்களின் அவலத்தின் மீதும் துன்பங்களின் மீதும் சுரண்டல்களின் மீதும் கட்டியெழுப்பப்பட்டவை. மக்கள் எழுச்சியுறுகிற போது பேரரசுகளின் அத்திபாரம் ஆட்டங் காண்கிறது.

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக உலகின் தன்னிகரில்லாத பேரரசாக அமெரிக்கா வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது. உலகின் எம்மூலையில் எது நடந்தாலும் அதைத் தீர்மானிக்கின்ற, செல்வாக்குச் செலுத்துகின்ற சக்தியாக அதன் வளர்ச்சி வியக்கத்தக்கது. அதனாலேயே அதனை 'உலகப் பொலிஸ்காரன்' என அழைப்பதுண்டு. அமெரிக்கா பற்றி உலக மக்களிடையே உள்ள பிம்பம் அதன் வெளியுறவுக் கொள்கையுடன் பாற்பட்டது.

உலக நிகழ்வுகளில், அமெரிக்கா ஒரு சண்டியன் போல தலையிடுவது பலருக்கு பரவசத்தை ஏற்படுத்தும் ஒன்று. இந்தப் பரவசம் பல தேசங்களில் அமெரிக்காவின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையாக வளர்ச்சியடைந்துள்ளன. ஆனால், அதன் அபத்தத்தை மிகுந்த விலைகொடுத்து உணர்ந்துகொண்டவர்கள் தமிழர்கள் என்பதை இங்கே நினைவூட்டல் தகும்.

கடந்தவாரம் அமெரிக்கக் காங்கிரஸின் கூட்டுக்கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் உரை கவனத்தை ஈர்த்தது. அமெரிக்க ஜனாதிபதியாகத் தனது இறுதி கூட்டுக்கூட்ட உரையை ஒபாமா நிகழ்த்தினார் என்பது ஒருபுறமிருக்க, அவ்வுரை சொல்லிய சொல்ல மறந்த கதைகள் முக்கியமானவை.

அமெரிக்காவின் மேன்மை பற்றியும் பொருளாதார ரீதியில் அமெரிக்க எவ்வாறு முன்னிலையில் இருக்கிறது என்பது பற்றியும் பெருமையுடன் சிலாகித்தார். ஒபாமா யாருடைய அமெரிக்கா பற்றிச் சொன்னார் என்பதுதான் கேள்வியாகிறது. 

அமெரிக்காவை அதன் வெளியுறவுக் கொள்கைசார் செயற்பாடுகளின் அடிப்படைகளில் மதிப்பிடப் பழகிவிட்ட, அதனிலும் பொருத்தமாக ஊடகங்கள் மதிப்பிடப் பழக்கிவிட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் உள்விவகாரங்களும் அமெரிக்காவுள் நிலவுகின்ற நெருக்கடிகளும் பொதுவாகக் கவனம் பெறுவதில்லை.

இன்று அமெரிக்கப் பொருளாதாரம் மிகுந்த நெருக்கடியில் இருக்கிறது. 2008ஆம் தொடங்கிய பொருளாதார நெருக்கடி இன்றும் தீர்வை எட்டவில்லை. இது இன்று பல்வேறு பரிணாமங்களில் அமெரிக்கத் தெருக்களில், அமெரிக்கப் பெரு நகரங்களில், ஊர்களில் என எங்கும் வியாபித்திருக்கின்றன.

அமெரிக்காவின் மிகவும் புகழ்பெற்ற வளங்கொழிக்கும் நகரமாகவும் உலகப் பொருளாதாரத்தின் தலைநகர் எனவும் அழைக்கப்படுகின்ற நியூயோர்க்கில் மட்டும் 60,000 பேர் வீடற்றவர்களாக தெருக்களில் வாழ்ந்துவருகிறார்கள். காட்போட் மட்டைகளை ஏந்தியபடி உதவி கேட்டு தெருவோரங்களில் அமரும் காட்சிகள் மிகச் சாதாரணமானவை. ஆண்டுதோறும் வீதிகளில் வசிப்பவர்களில் கிட்டத்தட்ட 35பேர்  அதிக குளிரின் காரணமாக உயிரிழக்கிறார்கள்.

கடந்தாண்டு அமெரிக்காவெங்கும் கிட்டத்தட்ட ஆறு இலட்சம் பேர் வீடற்றவர்களாக இருக்கிறார்கள். இதில் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தங்குபவர்கள், அரச உதவியில் வாழ்பவர்கள் உள்ளடக்கப்படவில்லை. அதையும் சேர்த்தால் கிட்டத்தட்ட 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் வீடற்றவர்களாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் காற்பங்கினர் சிறுவர்கள். கறுப்பர் அமெரிக்காவை ஆளுகின்ற போதும் வீடற்றவர்களில் 57 சதவீதமானவர்கள் கறுப்பின அமெரிக்கர்கள்.

இதேவேளை, வீடற்ற நிலையை முடிவுக்கு கொண்டுவருவதற்கு 7 மில்லியன் வீடுகள் தேவை என வீடற்றவர்களுக்கான தேசிய கூட்டமைப்பு தெரிவிக்கிறது. இதேவேளை, வீடுகளில் வாழ்ந்துவரும் அமெரிக்கர்களில் ஆறு மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் மாத வருமானத்தில் அரைவாசிக்கும் மேற்பட்ட தொகையை வீட்டு வாடகையாகக் கட்டுகிறார்கள்.

உலகெங்கும் உள்ள நாடுகளில் வீட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், வாழ்வாதாராத்தை மேம்படுத்தல் என உதவிகளைச் செய்கின்ற அமெரிக்காவில் வீடில்லாத நிலை மிகப்பாரிய பிரச்சனையாகும். பேரரசுகள் இவ்வாறு தான் கட்டமைக்கப்படுகின்றன. பேரரசுகளுக்கு உள்நாட்டு அலுவல்களின் மீதான கவனத்தை விட வெளிநாட்டு அலுவல்கள் மீதான கவனம் மிக அதிகம். ஏனெனில், அவையே பேரரசுத்தனத்தை நிலைநிறுத்தும் குறிகாட்டிகள்.

வீடில்லாப் பிரச்சனையை விட மிக மோசமான பிரச்சனை அமெரிக்கர்கள் எதிர்நோக்கும் பட்டினிப் பிரச்சனையாகும். ஆறில் ஓர் அமெரிக்கர் பட்டினியால் வாடுகிறார். 17.5 மில்லியன் அமெரிக்கர்களுக்கு உணவுப் பாதுகாப்பு இல்லை. அவர்களால் அடுத்த வேளை உணவை உறுதிப்படுத்த முடியாமல் உள்ளது. 49 மில்லியன் அமெரிக்கர்களால் தினமும் இருவேளை உணவை உண்ண முடியாமல் உள்ளது. அமெரிக்காவில் ஐந்தில் ஒரு குழந்தை தினமும் பட்டினியால் பரிதவிக்கிறது. இவ்வாறு பட்டினியில் வாடுபவர்களில் அமெரிக்காவில் வாழ்கின்ற ஆபிரிக்க அமெரிக்கர்கள், லத்தினமெரிக்கர்களில் மூன்றில் ஒருவர் என்ற நிலையில் பட்டினி உள்ளது.

இதனால் அமெரிக்கா போதியளவு உணவை உற்பத்தி செய்யவில்லை என்று தவறாக எண்ணிவிடக் கூடாது. ஆண்டுதோறும் அமெரிக்காவின் மொத்த உணவில் 40 சதவீதம்  (இது கிட்டத்தட்ட 165 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியானது) வீணாக்கப்படுகிறது. அதைவிட இன்னும் பெருந்தொகையாக உற்பதிகள் கடலில்  கொட்டபடுகின்றன. அமெரிக்கா கோதுமை விலைகளை நிலையாகப் பேணுவதற்காக மேலதிகமாக உற்பத்தி செய்யப்பட்ட கோதுமையை கடலில் கொட்டுகிறது. ஆண்டு தோறும் 2 பில்லியன் பவுண்ஸ் நிறையுள்ள பிடிக்கப்பட்டு இறந்த மீன்கள் மீண்டும் கடலில் கொட்டப்படுகின்றன. இவை உணவாக உட்கொள்ளக் கூடியவை.

இவை மிக முக்கிய கேள்விகளை எழுப்புகிறது. அமெரிக்காவின் உள்அலுவல்கள் இவ்வளவு மோசமாக இருக்கையில் அமெரிக்கா உலகெங்கும் போர் செய்கிறது. பல நாடுகளில் அபிவிருத்தி உதவித் திட்டங்களை வழங்குகிறது. அமெரிக்காவுக்கு வெளியே 800க்கும் மேற்பட்ட இராணுவத்தளங்களை அமெரிக்கா நடாத்தி வருகிறது.

உள்நாட்டின் நிலைமைகளையும் தாண்டி அமெரிக்கா தனது வெளியுறவுக்கொள்கை சார்ந்து ஏராளமான பணத்தைச் செலவழிப்பதன் நோக்கம் உலக நாடுகளின் மீதான அக்கறையாக நிச்சயம் இருக்க முடியாது. ஏனெனில், தனது சொந்த நாட்டு மக்களின் நலனில் அக்கறையில்லாத அரசு உலகின் ஏனைய நாட்டு மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளது என்ற வாதம் ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதைதான்.

இந்நிலையை அமெரிக்கா ஏன் வந்தடைந்தது என்று நோக்குவதாயின் வரலாற்றைக் கொஞ்சம் பின்நோக்கிப் பார்க்க வேண்டியிருக்கும். முதலாம் உலகப் போர், கொலனியாதிக்கம் கலைவதற்கான நிகழ்வுகளை ஏற்படுத்திய போதும்  கொலனியாதிக்கம் கலைந்து போவதற்கான முக்கிய அலை இரண்டாம் உலகப் போரிலேயே தொடங்கி, பின்னர் சில ஆண்டுகள் வரை தொடர்ந்தது. இரண்டாம் உலகப் போரின் முடிவில், ஏற்கெனவே உலகின் முதன்மையான தொழிற்றுறை சக்தியாக விளங்கிய அமெரிக்கா அச் சமயத்தில் தொழில் உற்பத்தி, செல்வச் செழிப்பு, இராணுவ பலம் போன்றவற்றால் ஒப்புயர்வற்ற நிலையை எட்டியது. இதைத் தொடர்ந்து மாற்றமடைந்து வந்த உலகப் பொருளாதாரம் உலக நாடுகளை நிதி மூலதனத்தின் மூலம் கட்டுப்படுத்தும் நிலையை உருவாக்கியது. இதன் வளர்ச்சிக்கும் பரவலுக்கும் உலகமயமாக்கம் வழியமைத்தது.

மூலதனத்தின் நேரடி ஆதிக்கத்திலிருந்து இந்த உலகின் எந்தவொரு முக்கிய இடமும் தப்பவில்லை என்கிற வகையில், சோவியத் யூனியன் கலைந்ததும், சீனா உலகச் சந்தையோடு முழுமையாக ஐக்கியமடைந்ததும், எல்லைகளற்ற வகையில் அமெரிக்கப் பேரரசு உலகம் முழுவதும் விரிந்து பரவ வழிவகுத்தது. சந்தை பரவலாக விரிவுபடுத்தப் பட்டதோடு, தீவிரமாக ஆழப்படுத்தப்பட்டது. 'இலாபம்' உலக அலுவல்களின் பிரதான தேவையானது. அதற்காகவே அமெரிக்கா உலகெங்கும் போர் தொடுக்கிறது, ஆட்சி மாற்றங்களை நிகழ்த்துகிறது. மனிதாபிமான உதவிகளைச் செய்கிறது. இலாபத்துக்கான கணக்கு வழக்கில் மிகுந்த நெருக்கடிக்குள் உயிர்வாழும் அமெரிக்கர்கள் சேரமாட்டார்கள்.

ஒபாமா தனது உரையில் மகிழ்சியாகக் கூறிய அமெரிக்கக் கனவு என்பது எதுவென்றால், 48 மில்லியன் அமெரிக்கர்களை வறுமைக்கோட்டுக்குள் கொண்டுள்ள, ஐந்தில் ஓர் அமெரிக்க சிறுவர்கள், உணவு முத்திரையை நம்பியே உயிர் வாழ்கிற, மேலும் 46 மில்லியன் அமெரிக்கர்கள் அரச மானிய உணவுக்காக தினமும் வரிசையில் நிற்கிற அமெரிக்காவைத் தான், ஒபாமா அமெரிக்கக் கனவு எனப் புகழ்ந்தார்.

மிகச் சாதாரணமான உழைக்கின்ற வறுமையில் உழல்கின்ற மக்கள் அமெரிக்காவின் கனவின் கணக்கில் சேராதவர்கள். அமெரிக்காவின் எதிர்காலம் எனப்படுகின்ற குழந்தைகளில் 65 சதவீதத்தினர் ஏதாவதொரு அரச உதவி பெறும் குடும்பங்களுக்குரியவர்கள். வறுமை அமெரிக்காவெங்கும் கால்நீட்டிப் படுத்திருக்கிறது.

தனது உரையில் அமெரிக்கப் பொருளாதாரம் உய்விக்கப்பட்டுள்ளதாகவும் இன்றைய அமெரிக்க இளைஞர்களுக்கு வளமான எதிர்காலம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஒபாமா சொன்னார். 25 வயது நிறைந்த இளைஞர்களில் அரைவாசிப்பேர் இன்னமும் பெற்றோருடன் தான் வசிக்கிறார்கள். வேலைக்குப் போகத் தகுதியுள்ள ஆனால் வேலையில்லாமல் இருக்கின்ற அமெரிக்கர்களின் தொகை 10.2 மில்லியன்.

இனி ஒபமாவின் சாதனைகளுக்கு வருவோம். அமெரிக்காவில் பொதுமக்களுக்கு துப்பாக்கி வைத்திருப்பதற்கான அனுமதி வழங்கப்படுவதுண்டு. அவ்வாறு வழங்கப்பட்ட துப்பாக்கிகளின் பாவனையால் உயிர் இழந்தவர்களை நினைவுகூரும் முகமாக, இம்முறை ஒபாமா உரையாற்றுகின்ற போது, ஓர் ஆசனம் எவரும் அமராமல் வெறுமையானதாக விடப்பட்டிருந்தது.

துப்பாக்கி வன்முறைக்கு இரையாகி குரலற்றவர்களாகியவர்களுக்காக அவ்வாசனம் ஓதுக்கப்பட்டுள்ளதாக தனது உரையில் சொன்ன அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஆயுதங்களை தனிமனிதர்கள் வைத்திருப்பதற்கான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனக் கோரினார். அப்படியானால் இதேபோல ஒபாமாவின் கொள்கைகளால் குரலற்றவர்களாக்கப்பட்டவர்களுக்கும் ஓர் ஆசனம் வெறுமையாக வைத்திருக்கப்பட வேண்டும். கடந்தாண்டு மட்டும் அமெரிக்காவில் பொலிஸாரால் கொல்லப்பட்ட 986 பேரை நினைவுகூர்ந்தும் ஓர் ஆசனம் வெறுமையாக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு அமெரிக்க-மெக்சிக எல்லையில் எல்லைக்க காப்பு வீரர்களால் கடந்தாண்டு கொல்லப்பட்ட 150 மெக்சிகர்களுக்கும் ஓர் ஆசனம் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்.

இவையனைத்தும் கடந்தாண்டு அமெரிக்காவின் உள் நிகழ்ந்த சில பாரதூரமான நிகழ்வுகள் மட்டுமே. இவை எதையும் தனது உரையில் அவர் சுட்டவில்லை. கடந்தாண்டு அமெரிக்காவில் நடந்த மனிதாபிமானமற்ற, சட்ட ஒழுங்குக் புறம்பான, அநீதியான நடவடிக்கைகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு வெறுமையான ஆசனத்தை ஒதுக்கியிருந்தால் வெறும் கதிரைகள் நிறைந்த அறையில் ஒபாமா உரையாற்ற நேர்ந்திருக்கும்.

அதை அவர் அறிவார். அதனால் தான் அமெரிக்கக் கனவின் பெருமை பற்றிப் பேசினார். நடப்பன பற்றிப் பேச இயலாததால் அவர் கனவைப் பற்றிப் பேசுகிறார். சரிகின்ற பேரரசு கடந்த காலப் பெருமைகளையும் எதிர்காலக் கனவுகளையுமே பேச முடியும். நிகழ்காலந்தான் நரகமாய் இருக்கிறதே.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X