2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஒற்றைத்தலை வலி

Princiya Dixci   / 2021 ஓகஸ்ட் 28 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகத்தில் 80 சதவீதமானவர்கள் தலைவலியை எப்போதாவது அனுபவிக்கின்றனர். ஆபத்தான தலைவலி என்று நோக்கும்போது கபாலத்துக்குள் ஏற்படும் இரத்தக் கசிவுகள்  மூளைக் கட்டிகளால் ஏற்படும் தலையிடி, மூளைக் காய்ச்சலால் ஏற்படும் தலைவலி என்பன திடீரென தோன்றுவதோடு  நினைவிழத்தலையும் ஏற்படுத்தக்கூடியது.

டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல், எலிக் காய்ச்சல் போன்ற பக்ரீறியா தொற்றுகளின் பொதுவான குணங்குறிகளில் ஒன்றாகத் தலையிடி காணப்படுகிறது. நோயாளியின் ஒட்டுமொத்த குணக்குறிகளையும் வைத்துத்தான் இவற்றை அனுமானிக்க முடியும் என்று கூறுகிறார் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விஷேச பொது வைத்திய நிபுணர் டொக்டர் முத்து முருகமூர்த்தி MBBS, MD, MCCP. ஒற்றைத் தலைவலி தொடர்பாகவும் அது ஏற்படுவதற்கான காரணங்களையும் தவிர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் தொடர்பாக தமிழ்மிரருக்கு வழங்கிய நேர்காணலில் விவரமாகத் தெரிவித்திருந்தார்.

கே: ஒற்றைத் தலைவலி ஒருபக்கமாக ஏன் ஏற்படுகிறது?

பதில்: ஒற்றைத் தலைவலி, தலையின் ஒரே பக்கம்வரும் என்பதல்ல. இரண்டுபக்கங்களிமோ முன்பக்கமோ பின்பக்கமோ மாறி மாறி ஏற்படலாம். ஆயினும், ஒருமுறை ஏற்படும்போது ஒரு பக்கத்தில் ஏற்படும். சிலருக்கு ஆரம்பத்தில் விட்டு விட்டு ஒற்றைத் தலைவலி ஏற்படும். இதனால் பல மாதங்கள் அல்லது பல வருடங்கள் தொடர்ந்து தலைவலியால் அவதிப்படுவார்கள். இந்த நிலைமையை நாட்பட்ட தொடர் தலைவலி என்று அழைப்போம்.

சாதாரணமாக ஒற்றைத் தலைவலி சரிவர நிருவகிக்கப்படாமல் விடுபடும்போது, ஒற்றைத் தலைவலியுடன், இறுக்கத் தலைவலி சேர்ந்து விடுவதால் இவ்வாறான நிலைமை ஏற்படும். முக்கியமாக இவர்களுக்கு ஒருபக்கத் தலைவலியுடன் முன் நெற்றியில் இறுக்கமும் சேர்ந்து காணப்படும்.

எனினும், சுமார் 3 சதவீதமான நோயாளர்கள் மூளைக் கட்டிகளால் பாதிக்கப்படுவதுண்டு. மிக மெதுவாக வளரக்கூடிய கட்டிகள் முதலில் ஒற்றைத் தலைவலி போன்று தோற்றமளித்து, பின்னர் தொடர்ந்த தலைவலியாக மாற ஏதுவாகின்றன. ஆனால், இவர்களின் தலைவலி ஒரே பக்கத்திலேயே காணப்படும். அதாவது, பக்கம் மாறி மாறி ஏற்படாது. இவ்வாறான தோற்றப்பாட்டுடன் எச்சரிக்கை அறிகுறிகளும் தென்படுமாயின் அவர்களுக்கு MRI ஸ்கேன் பரிசோதனை அவசியப்படுகிறது.

மருந்துகளால் ஏற்படும் தலைவலிகள் வைத்தியத்துறையில் முக்கியமானவை. இருதய வலி நிவாரணியாக பாவிக்கப்படும் GTN, ISMN போன்ற நைற்றேற் வகை மருந்துகள் தலையிடியை ஏற்படுத்தலாம். அடிப்படையில் இந்த மருந்துகள் குருதிக் குழாய்களை விரிவடையச் செய்வதால் இவ்வாறு ஏற்படுகிறது.  இதேபோன்று தலைவலி நிவாரண மருந்துகளை நீண்டகாலம் அளவுக்கு அதிகமாக எடுத்து வருவதால் அதன் பக்க விளைவாக தொடர்ச்சியான தலையிடி ஏற்படக்கூடும்.

டொக்டர் முத்து முருகமூர்த்தி 

கே: பார்வைக் குறைபாடுகள் காரணமாக ஒற்றைத் தலைவலி ஏற்படுமா?

பதில்: குறும்பார்வை குறைபாடு உள்ளவர்கள் தூரப் பார்க்கும்போது, கண்ணின் உட்தசைகள் அதிக களைப்படைவதால் கண்களைச் சுற்றியும் தலைவலி ஏற்படுகிறது. இது ஒற்றைத் தலைவலியிலிருந்து வித்தியாசமானது. இவர்கள் கண்பார்வையை பரீட்சித்து, உரிய கண்ணாடி அணியும்போது நிவர்த்தியாகிவிடும்.

கே: பலவிதமான தலையிடிகள் உள்ளபோது, இவற்றை அடையாளம் காண்பது எவ்வாறு?

பதில்: தலையிடி ஏற்படும் பக்கத்தையும் அதன் தன்மையையும் வைத்துத்தான் அது ஒற்றைத் தலைவலியா அல்லது சாதாரண தலைவலியா என்று அடையாளம் கண்டுகொள்ள முடியும். ஒற்றைத் தலைவலி, தலையின் ஒருபக்கமாக ஏற்படும். அத்துடன் வாந்தி, குமட்டல், வயிற்றைத் திரட்டுவது, தலைச்சுற்று என்பன ஏற்படும். இந்த தலைவலி 3 மணித்தியாலங்கள் தொடக்கம் 3 நாள்கள் வரை நீடிக்கலாம். இவ்வாறு ஒற்றைத் தலைவலி ஏற்படுவோரில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு தலைவலி ஏற்படப்போகிறது என்ற முன் அறிகுறிகள் தோன்றும்.

மேலும்,கண்களில் மின்னல் போன்ற ஒளி விம்பங்கள், நெளி  கோடுகள், கறுப்புப் புள்ளிகள் போன்றன தோன்றலாம். கழுத்து தோள்பட்டை பகுதியில் ஊசியால் குத்துவது போன்ற உணர்வு, மண நுகர்ச்சி குறைவடையலாம், சிலருக்கு காதில் இரைச்சல் ஏற்படலாம். இந்த அறிகுறிகள் தலையிடி ஏற்பட 15 நிமிடம் முதல் 1 மணித்தியாலம் முன்னதாக ஆரம்பிக்கலாம்.

தூண்டற் காரணிகள் உள்ளபோது மூளை குருதிச் சுற்றோட்ட சிறு நாடிகள் சுருக்கம் ஏற்பட்டு குருதி விநியோகம் குறைகிறது. இதன் பக்க விளைவாக ஏற்படும் இரசாயன தூண்டல்களால் குருதிக் குழாய்களும், கபாலத்தின் (தலையோட்டின்) வெளிப்புறத்தில் காணப்படும் குருதிக் குழாய்களும் விரிவடைகின்றன. இவ்வாறு சடுதியாக விரிவடைவதால் குருதிக் குழாய் சுவர்களில் காணப்படும் நரம்பு முடிவிடங்கள் தூண்டப்பட்டு அது வலியாக உணரப்படுகிறது.

அதிகமான இரைச்சல் அல்லது தாங்க முடியாத சப்தத்தின் அண்மையில் இருக்கும்போதும், அதிக வெளிச்சம், வெப்பமான இடங்களில் அதிகமான நேரத்தை செலவிடும்போதும் ஒற்றைத் தலைவலி தூண்டப்படுகின்றது. குறிப்பாக, பெண்களுக்கு மாதவிடாய் அண்மித்த காலத்தில் அல்லது மாதவிடாயின்போது ஒற்றைத் தலைவலி தூண்டப்படுகிறது. சிலவேளைகளில் மலச்சிக்கல் உள்ளபோதும் ஒற்றைத் தலைவலி ஏற்படலாம்.

கே: கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு தலையிடியும் இருப்பதாக சொல்லப்படுகின்றதே?

பதில்: கொவிட்- 19 நோயாளர்கள் அரைவாசிக்கும் மேற்பட்டோர் தலையிடியை அனுபவித்து வருகின்றார்கள். குறிப்பாக, வயிற்றுப்போக்கு, மணம், குணம் தெரியாமை போன்ற அறிகுறிகளுடன், மெல்லிதான தலையிடி, விட்டு விட்டு ஏற்படும் தலையிடி, தலையில் இறுக்கம் ஏற்படுவது போன்ற உணர்வு அல்லது கடுமையான குத்து வலியாகவும் காணப்படலாம்.  இவ்வாறு  தலையிடி ஒருவருக்கு ஏற்படுமாயின் அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளாகி உள்ளார் என்பது உறுதியாகும். இது பெண்களைவிட ஆண்களுக்கே அதிகமாக ஏற்படுகின்றது.

சுமார், 15 சத வீதமானோர் தலையிடியை மட்டும் அறிகுறியாகக் கொண்டு காணப்படுவர். இந்தத் தலையிடி பொதுவாக, மூன்று முதல் ஐந்து நாள்களுக்கு நீடிக்கும். கொரோனா வைரஸ் தொற்று நோயால் ஏற்படும் தலையிடி சிலவேளை மூளையில் நோய்த்தாக்கம் ஏற்பட்டுள்ளதைக் காட்டலாம். ஆயினும், பொதுவான குணக்குறிகளில் ஒரு பகுதியாகவே தலையிடி ஏற்படுகின்றது. மேலும், தாகம், பசியின் அடையாளமாகவும் தலையிடி ஏற்படுகின்றது.

கே: ஒற்றைத் தலைவலி உள்ளவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் எவை?

பதில்: ஒற்றைத் தலைவலி உள்ளவர்கள் தூண்டற் காரணிகளை தவிர்த்துக் கொள்ளுதல், தடுப்பு மருந்துகளை கிரமமான முறையில் எடுத்தல், குறைந்தது 6 மணித்தியாலங்கள் தொடர்ச்சியான நித்திரை, காலை ஆகாரம் மிக அவசியம், (காலை 8 மணிக்கு முன்னதாக எடுத்தல்), தூரப்பயணம் செய்ய வேண்டியவராயின் அதிகாலை 5 மணிக்கே காலை ஆகாரத்தை எடுக்க பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும். இதன் மூலம் எமக்கு உற்சாகத்தையும்  மாணவர்கள் கல்வி கற்றல் விடயங்களில் சுறுசுறுப்பாக ஈடுபடவும் தேவையான சக்தியை மூளைக்கு வழங்கும். 

இதேபோன்று மதிய உணவு, இராப் போசனத்தையும் சரியான நேரத்தில் எடுத்தல் அவசியமாகிறது. தவிர்க்க முடியாமல் பிந்திப் போகுமானால் பசியை தவிர்த்துக்கொள்ள இடையில் சிற்றுண்டிகளை எடுத்துக் கொள்வது நல்லது. நீண்ட நேரத்துக்கு சக்தியை கொடுக்கக்கூடிய முட்டை போன்ற உணவுகளை சேர்த்துக் கொண்டால் நல்லதாகும்.

திறன்பேசி, கணினி நீண்டநேரப் பாவனை, தொலைக்காட்சி நீண்ட நேரம் பார்த்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுதலால் கண்கள் களைப்படைவதோடு மூளையும் களைப்படைவதால் தலைவலி தூண்டப்படும். ஆகவே, 30 நிமிடங்களுக்குமேல் இவ்வாறான செயற்பாடுகளைத் தொடர்ந்து செய்யாமல் இருப்பது நல்லது. தொலைக்காட்சி பார்க்கும்போது மிக அருகில் இருந்து கொண்டு பார்க்கக்கூடாது.

கணினியில் நீண்ட நேரம் வேலை செய்பவர்களாயின் ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும் 5 நிமிடங்கள் கணினித் திரையிலிருந்து ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு தொடக்கம் மூன்று லீற்றர் நீராகாரம் எடுக்க வேண்டும். (நீர் மட்டுமின்றி இளநீர், பழச்சாறு, கஞ்சி, சூப்) தூண்டல் காரணியாக செயற்படத்தக்க உணவுகளை முடியுமானவரை தவிர்த்துக் கொள்ளவேண்டும். அவ்வாறு தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் உதாரணமாக, நண்பர்களுடன் விருந்து ஒன்று உள்ளதாயின் அன்றைக்கு தடுப்பு மருந்துகளை முன்கூட்டியே எடுப்பதால் பெரும்பாலும் ஒற்றைத் தலைவலி ஏற்படுவதை தவிர்க்கக் கூடியதாக இருக்கும்.

எனது அனுபவத்தில் பெரும்பாலான நோயாளர்கள் சுமார் 3 மாத சிகிச்சைக்கு பின்னர் குறிப்பிட்ட வழிமுறைகளை கடைப்பிடிப்பதால் தலையிடியை தவிர்த்துக் கொள்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .