2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை: தமிழ்த் தரப்பின் மௌனம் ஏனோ?

Thipaan   / 2016 ஒக்டோபர் 06 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

தமிழ் ஊடகங்களில் பெரும்பாலானவை, கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக, எழுக தமிழ் என்ற ஒரு விடயத்தை முக்கியப்படுத்தி வந்துள்ளன. ஆங்கில, சிங்கள மொழி ஊடகங்கள் கூட, எழுக தமிழுக்கும் அதற்குப் பின்னரான கருத்துகள் தொடர்பாக முக்கியத்துவத்தை வழங்கியிருந்தன. ஆனால், ஏனைய மொழி ஊடகங்கள் சிலவற்றில், இன்னொரு விடயமும் முக்கியத்துவம் பெற்றிருந்தது. குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவையில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சி தான் அது. 

இவ்வாண்டு ஓகஸ்ட் 15ஆம் திகதி, வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட இந்தத் திருத்தம் தொடர்பான கவனம், சில நாட்களுக்கு முன்னரே ஏற்படுத்தப்பட்டது. அதுவரை, இவ்விடயம் தொடர்பாகப் பெரிதளவு கவனம் காணப்பட்டிருக்கவில்லை. 

அத்திருத்தத்தில், 37 (அ) பிரிவாக உட்புகுத்தப்பட்டுள்ள பிரிவு தான், அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. “கைது செய்யப்பட்ட ஆட்கள், சட்டத்தரணி ஒருவரை அமர்த்துவதற்கும் ஆலோசனை பெறுவதற்குமான உரிமை” என அது வர்ணிக்கப்பட்டாலும், “கைதுசெய்யப்பட்டு பொலிஸ் கட்டுக் காவலில் தடுத்துவைக்கப்பட்டுள்ள எவரேனும் ஆள், 110 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் ஏற்பாடுகளின் நியதிகளின் படி அவரது வாக்குமூலங்களைப் பதிவுசெய்த பின்னரும் அத்துடன் ஒரு நீதிவான் முன்னர் கொணரப்படுவதற்கு முன்னரும் தடுத்துவைக்கப்பட்டவரின் சொந்தச் செலவில் அவரது விருப்பப்படி சட்டத்தரணி ஒருவரை அமர்த்தி அவரிடமிருந்து ஆலோசனை பெறுவதற்குமான உரிமையைக் கொண்டிருத்தல் வேண்டும்” என்று கூறப்படுகிறது. மேலோட்டமாகப் பார்த்தால், சட்டத்தரணியைக் கொண்டிருப்பதற்கான உரிமையை, இந்தத் திருத்தம் வழங்குகிறது. 

ஆனால், ஆழ்ந்து கவனித்தால், பொலிஸில் வாக்குமூலங்களைப் பதிவுசெய்த பின்னரே, சட்டத்தரணியைக் கொண்டிருப்பதற்கான உரிமையை, இத்திருத்தம் வழங்குகிறது. அதாவது, நபரொருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, பொலிஸாரால் விசாரணை செய்யப்பட்டு, பொலிஸ் வாக்குமூலம் பதிவுசெய்யப்படும் வரை, சட்டத்தரணியைக் கொண்டிருப்பதற்கான உரிமை, அவருக்குக் கிடையாது. 

இது தொடர்பாக ஊடகங்கள் சிலவற்றில் செய்தி வெளியாகி, அது தொடர்பான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்படும் வரை, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு போன்றவை உட்பட மனித உரிமைகள் செயற்பாட்டுக் குழுக்களதும் இன்னும் வேறு தனிநபர்களதும் கவனம் காணப்பட்டிருக்கவில்லை. ஆனால், ஊடகங்களின் அழுத்தத்தைத் தொடர்ந்து, இச்சட்டமூலத் திருத்தத்தை எதிர்ப்பதாக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்தது. ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு கூட, தனது கண்டனத்தை வெளியிட்டது. 

இந்த எதிர்ப்புக்கெல்லாம் மசிந்து கொடுக்காத நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ, இத்திருத்தத்தை நியாயப்படுத்தியுள்ளார். அந்த நியாயப்படுத்தலில் அவர் தெரிவித்த விடயம், “இத்திருத்தத்தின் மூலம், தேவையற்ற தலையீடுகளின்றி, வாக்குமூலங்களைப் பதிவுசெய்ய, பொலிஸாருக்கு வாய்ப்பு ஏற்படும் எனவும் தெரிவித்திருக்கிறார். இந்தத் திருத்தம் குறித்து, சட்டத்தை மதித்து நடக்கும் எவரும் கவலையடையத் தேவையில்லை எனவும் குறிப்பிட்டார். அத்தோடு, மனித உரிமைகள் ஆணைக்குழுவினதும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினதும் எந்தவிதமான விமர்சனங்களுக்கும் மடிந்து போகப் போவதில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். 

சந்தேகமின்றி ஒருவரது குற்றம் நிரூபிக்கப்படும் வரை, அவர் வெறுமனே சந்தேகநபர் மாத்திரமே என்பதோடு, குற்றம் செய்யாதவர் என்றே அவர் கருதப்பட வேண்டுமென்பது சட்டத்தின் கடப்பாடு. இந்நிலையில், சந்தேகநபர் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள், குற்றம் செய்யாத ஒருவருக்கு முக்கியமானவை என்பதை, சட்டத்தரணியான அமைச்சர் மறந்தமை விநோதமானது.  

இந்த நிலையில் தான், இந்தத் திருத்தத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகளைக் கொண்ட தமிழ்ச் சமூகத்தில், இத்திருத்தம் தொடர்பாகப் போதியளவு கவனம் காணப்பட்டிருக்காமை, ஒரு வகையில் வியப்பையும் விசனத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. 

கொழும்பிலுள்ள பொலிஸாரால் கைது செய்யப்படும் சிங்கள மொழி தெரியாத தமிழர் ஒருவர், சட்டத்தரணியை அணுகுவதற்கு முன்னரே, பொலிஸ் வாக்குமூலம் பதியப்பட்டுவிடும். தமிழ்மொழியில் பரிச்சயமுள்ள பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை சிறிது சிறிதாக அதிகரித்து வருகின்ற போதிலும், தமிழ் தெரிந்த பொலிஸாரின் எண்ணிக்கை, இன்னமும் மிகக்குறைவாகவே காணப்படுகிறது. எனவே, பொலிஸாரால் பதிவுசெய்யப்படும் வாக்குமூலம், எந்தளவுக்கு உண்மையானதாக, சரியானதாக இருக்குமென்பது கேள்விக்குரியது. பொலிஸாருக்கு முதலில் வழங்கும் வாக்குமூலமென்பது, அனேக வழக்குகளில் முக்கியமான சாட்சியாக மாறுமென்பதால், குற்றம் செய்யாதவர்கள் கூட மாட்டிக் கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. 

எங்காவது அறிவித்தல் பலகைகளில் தமிழில் பிழை காணப்பட்டால், அவற்றைப் பிரித்து ஆராய்ந்து, அது அரசாங்கத்தின் சதியா, இனவாதமா, தமிழை அழிப்பதற்கான சதியா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யும் பலர் கூட, ஆபத்தான இந்தத் திருத்தம் குறித்துப் போதுமான கவனத்தைச் செலுத்தியிருக்கவில்லை. அறிவித்தல் பலகைகளில் தமிழ்ப் பிழைகள் என்பன சாதாரணமானவை என்றோ அல்லது ஏற்றுக் கொள்ளப்படக்கூடியன என்றோ அர்த்தமன்று. ஆனால், தவறான அறிவித்தல் பலகையோடு ஒப்பிடும் போது, அந்த மொழியைப் பேசும் இனத்தவர்களுக்கு நேரடியான ஆபத்தைச் செலுத்தக்கூடிய திருத்தம் குறித்துக் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதில்லையா? 

இவ்விடயம் தொடர்பாக, பகிரங்கமாகக் கருத்தெதனையும் வெளிப்படுத்தியிருக்காத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிங்கள மொழி மூல ஊடகவியலாளர் ஒருவர் முன்வைத்த விமர்சனங்களைத் தொடர்ந்து, தனது கருத்துகளை டுவிட்டர் மூலம் வெளியிட்டது. குறித்த திருத்தத்துக்கு, தாங்கள் தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும் அதுகுறித்து நாடாளுமன்றச் செயற்குழுக்களிலும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தது. ஆனால், பொதுமக்களிடத்தில் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்ததை, உண்மையென்று ஏற்றுக் கொள்ள முடியாமலிருக்கிறது. பரந்தளவில், மக்களிடத்தில் கொண்டுசெல்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டமைக்கான ஆதாரங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. 

இந்த விடயத்தில் ஒரு விடயம் உண்மையாது. “தமிழர்களின் பிரச்சினைகளுக்கு சமஷ்டி தான் தீர்வு” என்று சொல்வதில் இருக்கின்ற இயல்பான, மக்களுக்குப் பரிச்சயமான தன்மை, “சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டால், பொலிஸ் வாக்குமூலம் பெறப்படும் வரை, சட்டத்தரணியொருவரைக் கொண்டிருப்பதற்கு அவருக்கு அனுமதி இல்லை” என்று சொல்வதில் இல்லை. இந்த விடயம், சுவாரசியம் குறைவானது. அதனால் தான், அரசியல்வாதிகள் மாத்திரமன்றி, ஊடகங்கள் கூட, இவ்விடயத்தைப் பெரிதாக முக்கியப்படுத்தவில்லை. 

ஆனால், மக்களுக்கு விளங்குகின்ற அல்லது மக்கள் விரும்புகின்ற விடயங்களைத் தான் ஊடகங்கள் கொண்டு சேர்க்குமென்றால், கிசுகிசுக்களும் இனத்தை முன்னிறுத்துகின்ற கருத்துகளும் தான் ஊடகங்களில் இடம்பெற முடியும். பெரும்பாலானவர்கள், அதையே விரும்புகிறார்கள். ஆனால், மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதைத் தாண்டி, மக்களுக்குத் தேவையானவற்றை வழங்குவது, ஊடகங்களின் பொறுப்பாகும். அதேபோல் தான் அரசியல்வாதிகளும், மக்கள் கோரும் விடயங்கள் அல்லது மக்களிடம் பிரபல்யமாக இருக்கின்ற விடயங்களை மாத்திரமன்றி, மக்களுக்குத் தேவையான விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்துதல் அவசியமானது. பரிந்துரைக்கப்பட்டுள்ள சட்டத் திருத்தம், அவ்வாறானதொன்றாகும். 

2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து உருவாகிய தேசிய அரசாங்கம் மீதான விமர்சனங்கள் எவ்வாறு இருந்தாலும், ஒரு விடயத்தில் அவர்கள், இளகிய நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறார்கள். பாரியளவில் மக்கள் எதிர்ப்பு எழுப்பப்படும் போது, தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதே அதுவாகும். தொடர்ந்தும் அவ்வாறு மாற்றிக் கொண்டிருப்பது எந்தளவுக்கு ஆரோக்கியமானது என்பது ஒருபுறமிருக்க, இவ்விடயத்தில், அந்த இயல்பைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். போதிய எதிர்ப்பைப் பிரயோகித்தால், சர்ச்சைக்குரிய இந்த விடயத்தை, அரசாங்கம் நிச்சயமாக மாற்றும். கடந்த காலங்களில், இவ்வாறான நிலைமை காணப்பட்டதா என்பது சந்தேகமே. ஆகவே தான், ஏற்பட்டுள்ள இந்த ஜனநாயக இடைவெளியைப் பயன்படுத்தி, தமிழ்த் தரப்புகள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும். 

இது, ஒட்டுமொத்தமாக இலங்கையர்கள் அனைவரது பிரச்சினை என்ற போதிலும், மொழிப்பிரச்சினை கொண்ட தமிழர்கள், எவ்வாறு அதிகமாகப் பாதிக்கப்பட முடியுமென்பது, ஏற்கெனவே ஆராயப்பட்டுள்ளது. ஆகவே, தென்னிலங்கையிலுள்ள முற்போக்கு சக்திகளுடன் இணைந்து, இவ்விடயத்தில் தமிழ்த் தரப்புகள் ஒன்றிணைய வேண்டும். இதன்மூலம், பொதுவான பிரச்சினைகளில், பெரும்பான்மை மக்களோடு இணைந்து செயற்படுவதற்குத் தமிழ்த் தரப்புகள் தயாராக இருக்கின்றன என்ற செய்தியையும் அளிக்க முடியும். இனியும் எதற்காகத் தயக்கம் என்பது தான் கேள்விக்குரியதாக இருக்கிறது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X