Thipaan / 2016 ஒக்டோபர் 04 , மு.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்திலிருந்து அழகன் கனகராஜ்
kanaga.raj132@gmail.com
நேற்றுத் திங்கட்கிழமை (03), 15ஆம் பக்கத்தில் வெளியான பயணக்கட்டுரையின் தொடர்ச்சி...
வாழைப்பழமுனு சொன்னதுக்கு பிறகுதான் ஞாபகத்துக்கு வருது, நான்கு நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு நியூசிலாந்துக்கு வருகை தந்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர், ஒக்லான்ட் மிருகக்சாட்சிசாலைக்கும் விஜயம் செய்வதற்கு மறந்துவிடவில்லை.
பிரதமருக்கு முன்பாகவே நாங்கள் அங்கு சென்றுவிட்டோம். பிரதமர் தலைமையிலான குழுவினர் ஒரு வாயிலூடாகவும் நாங்கள் மற்றுமொரு வாயிலிலூடாகவும் செல்லவேண்டியதாயிற்று. குறுக்கு வழியில், நாங்கள் அங்கு சென்றுகொண்டிருந்தபோது, நான், ஒரங்குட்டானைக் கண்டேன்.
ஒரங்குட்டானை கண்டதும், சற்று நின்று, கையைத் தூக்கி அசைத்து சைகை செய்துகொண்டிருந்தேன். ஹாய்... ஊய்... என்று சொல்லவும் என் வாய் மறுக்கவே இல்லை. அப்படி சொல்லிக்கொண்டே இருந்த நான், அங்கிருந்த விளக்கப்பலகையை கண்டுவிட்டேன்.
அதில், “நானும் நீயும் ஒரே மாதிரித்தான். ஆனால், நான் வித்தியாசமானவன், என்னைத் தொந்தரவு பண்ணாதே” என்று, ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. கொஞ்சம் தூக்கிவாரிப் போட்டுவிட்டது. “என்ன செய்ய?” என்று மனதிலேயே நினைத்துகொண்டு, அவ்விடத்தை விட்டு நகர்ந்து, அஞ்சலி இருக்கும் இடத்துக்குச் சென்றுவிட்டேன்.
என்னுடன் வந்தவர்கள், சற்று நேரத்துக்கு முன்னதாகவே அங்கு சென்று, “உனக்குச் சிங்களம் தெரியாதா? ஆங்கிலம் தான் தெரியுமோ” என்றெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தனர்.
“அஞ்சலி” என்றால், 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 23ஆம் திகதியன்று பின்னவல யானைகள் சரணாலயத்தில் பிறந்து, ஒக்லான்ட் மிருகக்காட்சிசாலைக்கு, இலங்கை அரசாங்கத்தினால், 2015ஆம் ஆண்டு அன்பளிப்பாக வழங்கப்பட்ட யானைக்குட்டியாகும்.
சற்றுநேரத்தில் பிரதமர் தலைமையிலான குழுவினரும் அங்கு வந்துவிட்டனர். நாம் அன்பளிப்பாக வழங்கிய யானையையும் மியன்மாரினால் வழங்கப்பட்ட யானையையும் பார்த்ததில் ஒரு சந்தோஷம்தான். ஏனென்றால், இரண்டு யானைக்குட்டிகளையும் கவனிக்கும் விதமே வித்தியாசமானது.
குளிரைத் தாங்கிக்கொண்டு நிற்பதற்கு தனியானதோர் இடம். மரத்தூள், பஞ்சு மெத்தை போல போடப்பட்டிருந்தது. எனினும், அடக்குவதற்கு சுமார் ஒரு முழம் அளவிலான அங்குசத்தை மட்டுமே வைத்திருந்தனர்.
யானைப் பாகன்கள் இருவருடன் பாகியும் இருந்தாள். அவர்கள், யானைகளுடன் ஆங்கிலத்தில் பேசினர். அவர்கள் ஏதோ, ஏதோ கூற, யானைகளும் கால்களைத் தூக்கின, தும்பிக்கைகளைத் தூக்கி ஆட்டின, வாயைத் திறந்து பற்களைக் காண்பித்தன.
அவர்கள் மூவரும், யானைகளுடன் பேசியது, ஆங்கிலமா அல்லது வேறு ஏதாவது மொழியா என்பது, 2 யானைகளுக்கும் அந்தப் பாகன்கள் மற்றும் பாகிக்கும் மட்டுமே தெரியும். எனக்கு என்னமோ, ஆங்கில மொழி மாதிரிதான் இருந்தது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நியூசிலாந்துக்கான இந்த விஜயத்தின் போது, யானைக்குட்டியொன்றை அன்பளிப்பாக வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சித்தது. எனினும், உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையால், அந்த முயற்சியை அரசாங்கம் கைவிட்டுவிட்டதாவே அறியக்கிடைத்தது.
பிரதமரும் ஏனையவர்களும், யானைகளுக்கு வாழைப்பழம் உள்ளிட்ட பழங்களைக் கொடுத்தனர். அதன் பின்னர், உலகிலேயே இரண்டே இரண்டு பூச்சிகள் மாத்திரம் வாழ்கின்ற அரிய பூச்சி இனத்தைக் காண்பித்தனர். அவை விஷத்தன்மையுடையவை. ஆகையால், தொட்டுப்பார்ப்பதற்கு அனுமதியில்லை.
அந்த இனத்தைப் பெருக்கிக் கொள்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக, அந்தப் பூச்சிகளைக் கண்காணித்து வளர்க்கும் மிருகக்காட்சிசாலையின் பெண் ஊழியர்கள் இருவரும் தெரிவித்தனர்.
மிருகக்காட்சிசாலைக்கான விஜயத்தை முடித்துக்கொண்ட பிரதமர் தலைமையிலான குழுவினர், ஒக்லான்டில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகளை, மெட் அல்பிரட் யுத்த ஞாபகார்த்த மண்டபத்தில், சனிக்கிழமை மாலை சந்தித்தனர்.
ஒரு வித்தியாசமான ஏற்பாடு, பௌத்த மதகுருமார் இருவரும் முஸ்லிம் மதகுரு ஒருவரும் வந்திருந்தனர். எந்தவிதமான மதப்போதனைகளோ, ஆசீர்வாத வழங்கல்களோ அங்கு இடம்பெறவில்லை.
ஒளிப்பதிவு செய்யப்பட்டிருந்த கண்டிய நடனத்துக்கான மேளதாளம் இசைக்கப்பட, நான்கு பெண் பிள்ளைகள் நடனமாடியவாறு, பிரதமர் தலைமையிலான குழுவினரை வரவேற்று அழைத்துச்சென்றனர்.
சுமார் 30 நிமிடங்களில் மிகவும் எளிமையாகவே அந்தக் கூட்டம் நிறைவடைந்தது. வெளிநாட்டு பிரதிநிதியொருவர் இலங்கைக்கு வருகைதந்தால், இருநாட்டு கொடிகளாலும், விமான நிலையம் முதல், அப்பிரதிநிதி செல்லும் இடங்களெல்லாம் அலங்கரிக்கப்பட்டிருக்கும். ஆனால், நமது நாட்டுத் தேசியக் கொடியை மட்டுமல்ல, அந்நாட்டுத் தேசியக் கொடியையும் வீதிகளில் காணக்கிடைக்கவில்லை.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அரச மரியாதை செலுத்துவதற்காக, சனிக்கிழமை காலை வரவேற்பளிக்கப்பட்ட, ஒக்லான்டில் உள்ள அரசாங்க இல்லத்தில் மட்டுமே இருநாட்டு கொடிகளும் ஏற்றப்பட்டிருந்தன.
அத்துடன், பால் உற்பத்தி செய்கின்ற, பொன்டேரா நிறுவனத்தின் தொழிற்சாலையில், இரு நாட்டு கொடிகளும் அந்நிறுவனத்தின் கொடியும் ஏற்றப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
வீதிகளில் வாகன நெரிசலை காணக்கிடைக்கவில்லை, ஒரு வாகனத்துக்கு முன்பாகவும் பின்பாகவும் சுமார் 3 அடி இடைவௌியிலேயே வாகனங்கள், வீதிகளில் நிறுத்தப்படும். பாடசாலை வாகனங்கள் செல்வதற்கு தனி வழி, அது பாடசாலை வலயமாகவே குறிப்பிடப்பட்டிருந்தது.
வாகனங்களோ, மனிதர்களோ, வீதி சமிக்ஞைகளை மீறிச் செல்வதைப் பார்க்கத் துடித்துக் கொண்டிருந்த கண்கள், ஏமாந்தே போய்விட்டன. ஒவ்வொரு வகையான வாகனங்களும் பயணிப்பதற்கு என்று ஓர் ஒழுங்கை, ஒழுங்கையை மீறியதையோ, முன்பாகப் போகும், வாகனங்களை முந்திச்சென்ற மற்றொரு வாகனத்தையோ காணக்கிடைக்கவில்லை.
நகரங்களைத் தவிர, ஏனைய இடங்களில் மனிதர்களைக் காணவே கிடைக்கவில்லை. வீடுகள் இருந்தன. பெரும்பாலான நகரங்களில் உணவகங்களே கூடுதலாக இருந்தன. உணவகங்கள் நிரம்பி வழிந்துகொண்டுதான் இருந்தன. ஆண்கள் மற்றும் பெண்களின் கைகளில் குவளைகளுக்குப் பஞ்சமே இருக்கவில்லை.
எமக்கு வழிகாட்டி, அழைத்துச் சென்றவர்கள் தெரிவிக்கையில், “இங்கு எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம், ஆனால், தேவாலயங்களுக்கு மக்கள் செல்வதில்லை. பலருக்குத் தாங்கள் எந்த மதமென்றே தெரியாது. மதத்தை பின்பற்றுவதில், இங்குள்ளவர்கள் கரிசனை காட்டமாட்டார்கள்” என்றனர்.
ஒரேயொரு விகாரை இருப்பதாகவும் நியூசிலாந்தில், இரட்டைக் குடியுரிமை பெற்ற சுமார் 9 ஆயிரம் இலங்கையர்கள் இருப்பதாகவும் தெரிவித்த அவர்கள், அதில் பௌத்தர்களாக இருக்கின்றவர்கள் விகாரைக்கு செல்வதேயில்லை என்றனர்.
யார் எங்கு சென்றாலும் செல்லாவிட்டாலும் நமக்குப் பிரச்சினையில்லை. ஆனால், சும்மா சுத்திப் பார்ப்போம் என்று சென்று, தப்பித் தவறிவிட்டோமேயானால், இருந்த இடத்துக்குத் திரும்புவதற்குக் கூட வழி கேட்பதற்கு ஒரு நாதியில்லை. அவ்வளவுக்கு அவ்வளவு அமைதியானதும் இரம்மியமானதும், யாரிடமும் கையேந்திக் கடன் வாங்காத நாடாகும்.
இந்நாடு, வெளிநாடுகளிலிருந்து கடன் வாங்காத போதிலும், இரண்டு மூன்று பேர் கையேந்திக்கொண்டு இருந்ததை அவதானிக்க முடிந்தது. மிகவும் நெருக்கமான நிகழ்ச்சி நிரலுக்கு மத்தியில், தூக்கமில்லாமல் கண்கள் கலங்கினாலும் சிலவற்றை கூர்ந்து அவதானிக்க வேண்டியதாயிற்று போங்க.
இங்கு உள்ளூராட்சித் தேர்தல் காலம், ஆங்காங்கே, ஒரே இடத்தில் இரண்டொரு போஸ்டர்கள் மட்டுமே ஒட்டப்பட்டிருந்தன. அதுவும், போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் மட்டுமே இருந்தன.
தேர்தலில் போட்டியிடுவோர், அந்த பிரதேசத்துக்குரிய மாநகர சபையிடம் வரியைக் கட்டிவிட்டு, அந்த மாநகர சபை ஒதுக்கும் ஓர் இடத்தில் மட்டும்தான் போஸ்டர்களை ஒட்டவேண்டுமாம்.
அதற்கு அப்பால், வீட்டுக்கு வீடு பிரசாரங்களும் மேற்கொள்ளப்படும். அவ்வாறு தேர்தல்களில் போட்டியிட்டாலும், சுரண்டுவது, கொள்ளையடிப்பது அல்லது கமிஷன் வாங்குவதெல்லாம் இயலாத காரியமாகுமாம். தேர்தல்களில் போட்டியிட்டால் சம்பாதிப்போம் என்ற நோக்கமின்றி, செலவழிக்கவே வேண்டுமாம் என்று வழிகாட்டிகள் தெரிவித்தனர்.
ஏனென்றால், நாடாளுமன்றத் தேர்தல் உள்ளிட்ட சகலவற்றுக்குமான ஆட்சிக் காலம், மூன்று வருடங்களாகும். அந்த மூன்று வருடங்களில், முதல் வருடம் திட்டம் வகுக்கப்படும். இரண்டாவது வருடத்தில் செயற்படுத்த வேண்டும். மூன்றாவது வருடத்தில், அடுத்த தேர்தலில் போட்டியிடுவதற்குத் தயார்படுத்த வேண்டும்.
தேர்தல் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா என்று நமக்கு தெரியாத அளவுக்கு பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அதிகமான குளிர் என்பதனால் வெளியில் வரமாட்டார்களோ என்று வினவுகையில்தான், இந்த நாட்டை ஒரு சித்திர நாடு என்று கூறுவதாகக் கூறினர்.
“அப்படினா”, சித்திரம், பார்ப்பதற்கு அழகாக இருக்கும். தொட்டுப் பார்க்கலாம், ஆனால், அசைவிருக்காது. அதேபோலதான் நியூசிலாந்து அழகானது, அமைதியானது, இரம்மியமானது. அதனை அனுபவிக்கலாம், நாட்டின் அசைவினைப் பார்க்கமுடியாது என்றனர்.
அந்த இரம்மியத்தை அனுபவிப்பதற்கான இந்தத் தூதுக்குழுச் சுற்றுலாவை, இலங்கைப் பிரதமர் காரியாலயத்துடன் இணைந்து வெளிவிவகார அமைச்சே ஏற்பாடு செய்திருந்தது.
வியாழக்கிழமை பயணத்தை ஆரம்பித்து, பயணக்குழுவுடன் ஒக்லான்ட் விமான நிலையத்தை வெள்ளிக்கிழமை பகல் வந்திறங்கினோம். தூதரக அதிகாரியுடன், நியூசிலாந்து சுங்கப்பிரிவைச் சேர்ந்த அந்தப் பெண் அதிகாரி வந்தார்.
அனைவருக்கும் புன்முறுவலுடன் ஒரு குட்மோர்னிங் சொன்னார், “உங்களிடம் பழம் இருக்கிறதா?” என்று கேட்டார். ”இது என்னாடா புதுக் கேள்வியா இருக்கேனு...” சந்தேகத்தில் இரண்டு மூன்று முறை கைகளை உள்ளே விட்டுத் துழாவிப் பார்த்தேன் இல்லை. ஒரு கவலைதான்...
“பழங்கள் இருகுதான்னு, விஷேடமாக ஏன்டா அப்படிக் கேக்குறாங்கன்னு ஒரு சந்தேகம், அப்ப, கூதலுக்கு யூஸாகுமேனு நான் வாங்கி வைத்திருந்த வாழைப்பழம் எங்கனு யோசித்தேன், ஒரு சந்தேகத்தில் மற்றுமொரு தடவை பார்த்துக் கொண்டேன். ஆனால், இருக்கல,
அப்புறம் தானே விளங்கியது. அப்படியோ நல்ல நேரமுடா சாமினு”, ஏனென்றால், நியூசிலாந்தில் ஒவ்வொரு சட்டமும் கடுமையாகவே அமுல்படுத்தப்படுகின்றன. நாட்டுக்குள் நுழையும் ஒருவர், பழத்தைக் கொண்டுவந்துவிட்டால், நியூசிலாந்து டொலரில் 400 டொலர் அபராதம் விதிக்கப்படும். அந்த அபராதமானது ஒரு பழத்துக்காகும்.
நல்லநேரம், நான் வாங்கியிருந்த வாழைப்பழத்தை மறந்தோ அல்லது தெரிந்தோ தெரியாமலேயோ ரூமிலேயே விட்டுவிட்டு வந்திருக்கிறேன் என்று நினைத்துகொண்டேன். எனினும், எம்முடன் வந்தவர்களில் ஒருவரிடம் வாழைப்பழச் சீப்பே இருந்தது. அந்த அக்காவோ (சுங்கத் திணைக்கள அதிகாரி) விடல.
ஒருமாதிரி அந்த வாழைப்பழச் சீப்பை வாங்கி, அங்கிருந்த குப்பைவாளியில் போட்டுவிட்டனர். ஒரு மாதிரியாக மனத்தைத் தேர்த்திக்கொண்டு. அடுத்தக்கட்ட சோதனைக்குச் செல்கையில், எனக்கு முன்னால் போனவரை நிறுத்திக்கொண்டனர்.
அதுவும் ஒரு சுங்க அதிகாரிதான், நாயுடன் நின்றிருந்தார். பயணக்களைப்பில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. இலங்கையிலிருந்து சென்ற தூதுக்குழுவில், எனக்குப் பின்பாக ஒரேயொருவர்தான் நிற்கின்றார். முன்னால் சென்றவர்கள் எல்லோரும் பின்னால் பார்க்காமலேயே சென்றுவிட்டனர்.
ஓகே, அந்த அதிகாரியோ... எனக்கு முன்பாகச் சென்றவரின் பயணப்பொதியை மறித்துவைத்துகொண்டு ஏதேதோ கேட்டார். நம்ப ஆளு அளித்த பதில், அதிகாரிக்கு விளங்கவில்லை. எனினும், ஒருமாதிரியாக அந்த இடத்துக்கு நானும் சென்றுவிட்டேன். நண்பன் நிரப்பிக் கொடுத்திருந்த அட்டையைப் பார்த்து, இதை நீங்களா நிரப்பினீர்கள்? வாசித்தா நிரப்பினீர்கள்? உங்கள் பொதியை நீங்களா பொதியிட்டீர்கள்? உள்ளே இருபவற்றில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? பிரித்து பார்க்கலாமா என்று கேட்க, சிங்களத்திலும் ஆங்கிலத்திலும், மாறி மாறி மொழிபெயர்த்தேன். அவற்றுக்கெல்லாம் சரியான பதிலை கொடுத்த பின்னரே, பேக்கை விரித்தார்.
அதில், றுலங் இனிப்புப் பண்டம் இருந்தது. அப்பாடா, பையை மூடி வெளியேறுவதற்கு அனுமதித்தார். அதற்குப் பின்னர்தான், கடவுச்சீட்டில் ஒரு சீலைக் குத்தினர். அந்த றுலங் இனிப்புப் பண்டம், ஸ்கானில் விதைகள் போல தெரிந்திருக்கிறது. அதுதான் அதிகாரிக்கு சந்தேகம் வந்துவிட்டது.
சரி, எப்படியோ வந்து, அஞ்சலியையும் பார்க்கப் போனா, அப்பத்தான் அஞ்சலியை குளிப்பாட்டி, அழைத்துவந்தனர். பிரதமர் ரணில் உள்ளிட்டோர், இரண்டு யானைகளுக்கும் வாழைப்பழங்கள் உள்ளிட்டவற்றைக் கொடுத்தனர். படங்கள் பிடிக்கப்பட்டன. எனினும், நியூசிலாந்து ஊடகவியாளர்களுக்கு, எடுத்த படத்தில் திருப்தியில்லை.
சற்று நேரத்துக்குப் பின்னர் பிரதமர் ரணிலை பார்த்து, “சேர், சேர்... டச் ப்ளீஸ், ஸ்மோல் டச் அஞ்சலி ப்ளீஸ் சேர்” (அஞ்சலியைக் கொஞ்சம் தொடுங்க சேர்) என்றுக் கேட்டனர். எனினும், பிரதமர் மறுத்துவிட்டார். “நான் சின்ன டச் கொடுக்க, அது பெரிய டச்சா கொடுத்துவிட்டால்” என்று பிரதமர் சிரித்துவிட்டார். இதனைக்கேட்ட எல்லோரும் சிரித்துவிட்டனர். என்னதான் நாங்கள் சிரித்தாலும், முதல் நாள் காலையில், குளிரில் நடுங்கிக்கொண்டிருக்க, ஓர் ஆட்டம் போட்டதும்... கீழே போட்டதை நடுநடுங்கிக்கொண்டு எடுத்ததையும், பின்னர் தொடைகளைத் தட்டி அழைத்துச்சென்றது வித்தியாசமானது தான். அத எடுக்காடி தொடையைத் தட்டமாட்டார்களாமே...
(தொடரும்...)
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
7 hours ago