2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கசந்த ‘முத்தம்’

Princiya Dixci   / 2021 ஜூலை 03 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

முத்தம்’ தானே என்று, சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். அன்பு, நம்பிக்கை, நெகிழ்ச்சி என எல்லா வகையான உணர்வுகளையும் வெளிப்படுத்துவதற்கான அடிநாதமாக அமைவது முத்தம் தான்!

காதல், பாசம், மதிப்பு, நட்பு, கவலை என பல வகை உணர்ச்சிகளின் வெளிப்பாடாக முத்தம் அமைகிறது. உலகில் சில நாடுகளில், முத்தமிடுதல் சடங்காகவும் உள்ளது. பெரும்பாலான மக்களின் பண்பாடுகளில், முத்தமிடுதல் முக்கிய பாரம்பரியமாகத் திகழ்ந்தாலும், இந்தப் பண்பாட்டை வழக்கமாகக் கொண்டிருக்காத மக்கள் கூட்டங்கள் பலவும் உலகத்தில் உள்ளன.

இலங்கை , இந்தியா போன்ற நாடுகளில் பொது இடங்களில் முத்தமிடுதல் ஆபாசமாகவும், கலாசார வரம்பு மீறலாகவும் கருதப்படுகிறது. முத்தமிடுதலை சாதாரண செயலாக ஏற்றுக்கொள்ள இந்த நாட்டு மக்களின் பண்பாடுகள் அனுமதிப்பதில்லை. 

மத்திய கிழக்கு ஆசியா, ரஷ்யா, ஐரோப்பாவின் பல பகுதிகளில் வாழும் மக்களில், ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் உதடுகள்  உரசியோ, கன்னத்தில் முத்தமிட்டோ, தமது அன்பையும் மதிப்பையும் பறிமாறிக் கொள்வதற்கு, அவர்களது பண்பாடுகள் அனுமதிக்கின்றன. ஆனால், அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா போன்ற ஆங்கில மொழி பேசும் நாடுகளில், ஒரே பாலினத்தவர்கள் உதடுகளில் முத்துமிடுதல், பாலியல் நோக்கம் சார்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

அதேவேளை, தாய் - தந்தை பிள்ளைகளுக்குக் கொடுக்கும் முத்தம், காதலன்  - காதலிக்குக் கொடுக்கும் முத்தம், கணவன் - மனைவிக்குக் கொடுக்கும் முத்தங்கள் இடம், சூழ்நிலை ஆகியவற்றுக்கு ஏற்ப, முத்தத்தின் அர்த்தங்களும் வேறுபடுகின்றன.

முத்தத்தால் சில நன்மைகளும் உண்டு என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதாவது, முத்தம் கொடுப்பதன் மூலம், நமது உடலில் கலோரிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைகிறது என்கிறார்கள். 

இது இப்படியிருக்க, கடந்த வாரங்களில் ‘ஒரு முத்தம்’, உலகம் முழுக்க பேசுபொருளாக மாறிய நிலையில், அந்த முத்தத்துக்கு சொந்தக்காரர், தனது பதவியையும் மனைவியையும் இழந்து தனித்து நிற்கின்றார். அவர் வேறு யாருமல்ல, பிரித்தானியாவின் முன்னாள் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் என்பர்தான்.

பிரிட்டிஷ் சுகாதார செயலாளராக பதவி வகித்த மாட் ஹான்காக், தனது உதவியாளரான பெண்ணுடன், அலுவலகத்தில் நெருக்கமாக இருந்தமை அங்கிருந்த கண்காணிப்புக் கமெரா மூலம் தெரியவந்ததைத் தொடர்ந்து, அவர் பதவி  விலகல் இடம்பெற்றிருக்கின்றது.

முத்தம் கொடுப்பது, அதுவும் ஐரோப்பிய நாடுகளில் உள்ளவர்கள் முத்தம் கொடுப்பது, ஒரு குற்றமா என்று யாராவது நினைக்கலாம். எனினும், இங்குதான் இடம், பொருள், ஏவல் என, கொரோனா வைரஸ் தனது கைவரிசையைக் காட்டிவிட்டது.

யார் இந்த மாட் ஹான்காக் என்று கேட்பவர்களுக்கு, அவர் திருமணமானவர்; அவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். அவர் பிரித்தானிய சுகாதார செயலாளராகப் பதவி வகித்தவர். தனது உதவியாளரான ஜினா கொலடங்கேலோவுடன் முத்தமிட்ட காட்சிகள் வெளிவரும் வரை, கொரோனா வைரஸுக்கு எதிராக, இங்கிலாந்தின் போராட்டத்திலும், தேசிய அளவிலான தடுப்பூசித் திட்டம் உள்ளிட்ட கொவிட்-19 பெருந் தொற்றுக்கு எதிராக முக்கிய திட்டங்களை வகுத்து, செயற்படுத்தும் இன்றைய காலகட்டத்தில் மிகமுக்கியமான பொறுப்புகளை நிர்வகித்து வந்தார்  என்று சுருக்கமாகச் சொல்லாம்.

கொரோனா வைரஸ் தொற்றால், பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்து தவித்து, பெருந்தொற்றிலிருந்து மீண்டு வரும் முக்கிய தருணத்தில், அந்தப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டிய முக்கிய பதவியில் இருக்கும் ஒருவர், பிரிட்டஷ் சுகாதார அமைச்சின் அலுவலகத்தில் வைத்து, தனது உதவியாளரை அணைத்து (முத்து திரைப்பட பாணியில் ‘இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தரு​’ என்பது போல) முத்தம் கொடுத்ததைப் பாரத்தால், ஐரோப்பிய நாட்டவர் முத்தம் கொடுத்தது ஒரு குற்றமா என்ற கேள்வி எழாது.

‘தி சன்’ என்ற பிரபல நாளிதழ், அது தொடர்பான புகைப்படங்கள், வீடியோவை வெளியிட்ட நிலையில், அந்தச் சம்பவத்தின்மூலம், கொரோனா வைரஸ் தொற்று விதிமுறைகளை மீறியதாக, மாட் ஹான்காக் மீது குற்றம் சுமத்தப்பட்டு, பூகம்பம் வெடிக்க ஆரம்பித்தது.

இந்த நூற்றாண்டில், ஆரோக்கியம் என்பது இங்கிலாந்தின் மிகப்பெரிய ஆர்வமாக இருக்கும் நேரத்தில், அந்நாட்டின் பேசுபொருளாக இந்தச் சம்பவம் அவரை முன்னிலைப்படுத்தி இருந்தது.

இந்தச் சர்ச்சையானது, ஹான்காக் அவரது திருமணமான உதவியாளரான ஜினா கொலடங்கெலோவை இறுக்கமாக அரவணைத்து, முத்தமிட்டதாக முதலில் கசிந்த சி.சி.டி.வி காட்சிகளில் ஆரம்பித்து, இறுதியாக ஜூன் 26 சனிக்கிழமை மாலை அவர் அமைச்சரவையில் இருந்து  இராஜினாமா செய்தவுடன்  ஓய்ந்தது. சஜித் ஜாவித், ஹான்காக்கின் இடத்தில் சுகாதார செயலாளராக இப்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கையில், சமகாலத்தவர்களாக இருந்த ஹான்காக்வுக்கும் கொலடாங்கெலோவுக்கும்  தலா மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இங்கிலாந்து வரலாற்றில் மிக நீண்ட காலம் பணியாற்றிய சுகாதார செயலாளராக இருந்த ஜெர்மி ஹண்டின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, 42 வயதான ஹான்காக், 2018 முதல் அந்தப் பதவியில் இருந்தார். மேலும் அவர் 2010 முதல் எம்.பியாக இருந்து வருகிறார்.

ஹான்காக் 2006ஆம் ஆண்டில் மார்தா ஹோயர் மில்லர் என்பவரை மணந்தார். அவர்களுக்கு  ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், ஜூன் 24 வியாழக்கிழமை, ஹான்காக்  தொடர்பில் வெளியான சி.சி.டி.வி காட்சிகள், அவர்களின் 15 ஆண்டுகால உறவுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டன. இந்தச் சம்பவத்தை அடுத்து, அவரது மனைவி வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

இந்நிலையில், சர்ச்சையில் சிக்கியுள்ள கொலடாங்கெலோவுடன் அவர் இணைந்து வாழ வாய்ப்புள்ளது என்று, அவருக்கு நெருங்கிய நண்பர்கள் ‘டைம்ஸ்’ பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் சூடுபிடித்த நிலையில், ஹான்காக் தனது செயல்களுக்காக மன்னிப்புக் கோரியிருந்தார். “இந்தச் சூழ்நிலைகளில் சமூக இடைவெளி வழிகாட்டலை மீறினேன் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் மக்களை வீழ்த்திவிட்டேன்; நான் மிகவும் வருந்துகிறேன்” என்று அவர் தெரிவித்திருந்தார்.

மக்களின் வரிப்பணத்தில் நபர்களை வேலைக்கு அமர்த்தி, அவர்களிடம் தகாத தொடர்புகளைப் பேணி, மக்களை ஏமாற்றியதாக அந்நாட்டு ஊடகங்கள் அவரைக் கடுமையாகச் சாடியிருந்தன. தெரிந்தோ, தெரியாமலோ அவர் கொடுத்த முத்தம், அவர் அறிந்தோ அறியாமலோ வெளியாகி, இன்று சர்சையாகிக் கிடக்கின்றது.

உலக நாடுகளில் முக்கிய பொறுப்பில் உள்ள இன்னும் எத்தனை பேர், என்னென்ன செய்கிறார்களோ? எல்லாம் அந்த முத்தத்துக்கே வெளிச்சம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .