2025 மே 10, சனிக்கிழமை

கட்டலோனியா: நட்டாற்றில் சுதந்திரம்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ   / 2017 ஒக்டோபர் 26 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக அரசியல் அரங்கில், பிரிந்து போவதற்கான உரிமை தொடர்பிலான நியாயங்கள், மீண்டும் பேசுபொருளாகியுள்ளன.   

கெடுபிடிப்போருக்குப் பிந்தைய, கடந்த மூன்று தசாப்தங்களில், நாடுகள் ஏகாதிபத்திய நோக்கங்களுக்காகப் பிரிக்கப்பட்ட போது, அவற்றுக்குப் பல்வேறு நியாயங்கள் கூறப்பட்டன.   

இன்று, மேற்குலகின் புதிய மையமாக உருவெடுத்துள்ள ஐரோப்பாவில், பிரிந்து போவதற்கான உரிமை தொடர்பான வினாக்கள் எழுந்துள்ளன. இவை தொடர்பான விவாதங்களை, சட்டவரையறைக்குள் வைத்துக்கொள்வதற்கு ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள்.   

சட்டத்துக்கு வெளியேயான அரசியல், சமூக, பொருளாதாரக் காரணிகளை நோக்கவோ, அது தொடர்பில் ஆராயவோ விரும்பாத சூழலே இன்று நிலவுகிறது. இது இன்னொரு வகையில், இந்நெருக்கடியின் தீவிரத்தையும் அதைக் கையாள இயலாமல் ஆட்சியாளர்கள் தடுமாறுவதையும் காட்டி நிற்கின்றது.   

இம் மாதம் முதலாம் திகதி, 7.5 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட ஸ்பெய்னின் சுயாட்சிப் பிராந்தியமான கட்டலோனியாவில் நடாத்தப்பட்ட பொதுசன வாக்கெடுப்பில், பெரும்பான்மையானோர் பிரிந்து செல்வதற்கு விரும்புவதாக வாக்களித்திருப்பதானது, ஐரோப்பிய அதிகார அடுக்குகளில், ஒருவகையான அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.  

 மிக நீண்டகாலமாக, ஸ்பெய்ன் தலைநகரான மட்ரிட் மத்திய அரசாங்கத்துக்கும், கட்டலோனியா பிராந்தியத்துக்கும் இடையில் நிலவுகின்ற நெருக்கடி, பிரிந்துபோவதற்குக் கோரும் நிலையை நோக்கி இன்று நகர்ந்துள்ளது.  

 பண்பாடு, மொழி அடிப்படையில் தனித்துவத்தைக் கொண்ட கட்டலோனியா மக்கள், தொடர்ச்சியாக ஒடுக்கப்பட்டு வந்த நிலையில், நீண்டகாலமாகத் தங்களது உரிமைகளுக்காகப் போராடி வந்துள்ளனர். 19 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் அரைப்பகுதியில், கட்டலோனியா கைத்தொழில் மயமாகத் தொடங்கியது.  இதன் விளைவால், தோற்றம்பெற்ற தொழிலாளர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் ஆகியன கட்டலோனியர்களின் உரிமைகளுக்காகப் போராடுவதற்கான மீளெழுச்சியைக் கொடுத்தன.  

குறிப்பாக, எட்டு மணிநேர வேலைநேரக் கோரிக்கையைப் போராடிப் பெற்ற, முதலாவது ஸ்பானியப் பிரதேசமாக, கட்டலோனியாவின் பார்சிலோனா திகழ்ந்தது. அவ்வகையில் இயல்பிலேயே உரிமைகளுக்காகப் போராடுகின்ற குணமுடையவர்களாகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்களை உடைய கட்டலோனியா இருந்து வந்தது.   

1931இல் இரண்டாவது ஸ்பானியக் குடியரசின் கீழ், ஸ்பெய்னின் முதலாவது சுயாட்சிப் பிரதேசமாக கட்டலோனியா அறிவிக்கப்பட்டது. ஆனால், இதைத் தொடர்ந்த ஸ்பானிய உள்நாட்டுப் போரில், இரண்டாவது ஸ்பானியக் குடியரசின் தோல்வி, 1939 இல் சர்வாதிகாரி பிரான்ஸில்வா பிராங்கோவை ஆட்சிப்பீடம் ஏற்றியது.  

 பிராங்கோவின் ஆட்சியில் கட்டலோனியர்களின் அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டன. அவர்களது கட்டலான் மொழி தடைசெய்யப்பட்டது. அவர்களது சுயாட்சி உரிமைகள் இரத்துச் செய்யப்பட்டன. 1975இல் பிராங்கோவின் மரணம் வரை, இந்நிலை தொடர்ந்தது. 1978இல் உருவாக்கப்பட்ட, புதிய ஸ்பானிய அரசமைப்பில், கட்டலோனியா தனது சுயாட்சி உரிமைகளை மீளப்பெற்றுக் கொண்டது.   

2008இல் தொடங்கிய உலகப் பொருளாதார நெருக்கடி, ஸ்பெய்னை மோசமாகத் தாக்கியது. பொருளாதார ரீதியாக, வளம்மிக்க பகுதியான கட்டலோனியா, இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது. பொருளாதார பலம் இருந்தபோதும், நாட்டின் பிறபகுதிகள் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டமையால், தனது பொருளாதார பலத்தை கட்டலோனியா இழந்தது. மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவால் வேலையிழப்பு, சமூகநல வெட்டுகள் எனச் சிக்கன நடவடிக்கைகளை கட்டலோனியா எதிர்நோக்கியது.  

 இதனால், தமக்கு மேலதிக நிதிச் சுதந்திரத்தைத் தருமாறு கட்டலோனிய பிராந்திய அரசு கோரியது. ஆனால், இக்கோரிக்கையை ஸ்பெய்ன் கணக்கில் எடுக்கவில்லை.   
இதைத்தொடர்ந்து, 2014இல் கட்டலோனியாவில் நடந்த குடியொப்பத்தில், 80 சதவீதமானவர்கள் வாக்களித்திருந்தார்கள். அதில் 92 சதவீதமானவர்கள் கட்டலோனியா பிரிந்து, தனிநாடாவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார்கள்.   

இதைத்தொடர்ந்து, கட்டலான் பிராந்திய சட்ட அவையானது, ஸ்பெய்னில் இருந்து பிரிந்து, தனிநாடாவதற்கான செயன்முறையை நடைமுறைப்படுத்துவதற்கான அங்கிகாரத்தை வழங்கியது.   

இதன்படி, பிரிந்து போவதா, இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் வாக்கெடுப்புக்கு, கட்டலான் ஜனாதிபதி கார்லெஸ் புய்க்டெமொன்ட் முயற்சிகளை எடுத்தபோது, ஸ்பெய்ன் அரசாங்கம், இராணுவ வன்முறை மூலம் அதைத் தடுத்து நிறுத்த முயன்றது.  

இம்முயற்சியும் ஸ்பெய்ன் மத்திய அரசாங்கத்தின் கடும்போக்கும் கட்டலோனிய மக்கள், மத்திய அரசாங்கத்தை வெறுப்பதற்கும், கட்டளையை மீறி வாக்களிப்பதற்கும் வழிவகுத்தது.   

வாக்களிப்பின் முடிவுகளை ஏற்க மறுத்த ஸ்பானியப் பிரதமர் மரியானோ ராஜோய், இதைச் சட்டவிரோதமான செயல் என வர்ணித்தார். தொலைக்காட்சியில் தோன்றிய ஸ்பானிய மன்னர் ஆறாம் பிலிப், கட்டலோனியர்களின் செயலைக் கடுந்தொனியில் கண்டித்தார். மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஆதரித்த ஸ்பெய்ன் அரசமைப்பு நீதிமன்றம், இந்த வாக்கெடுப்பு செல்லாதது என அறிவித்தது.   

புய்க்டெமொன்ட், தாங்கள் மத்திய அரசாங்கத்துடன் பேசுவதற்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். அவர், “ஏராளமான சர்வதேச, ஸ்பானிய மற்றும் கட்டலான் ஸ்தாபனங்கள் மற்றும் மக்களிடம் இருந்தான வேண்டுகோள்களை ஒட்டி, பேச்சுவார்த்தை என்கிற நேர்மையாக ஒரு யோசனையை நான் முன்வைக்கிறேன். அது பலவீனத்தின் வெளிப்பாடாக அல்ல; மாறாக, பல வருடங்களாக முறிவு கண்டிருக்கக் கூடிய ஸ்பானிய அரசுக்கும் கட்டலோனியாவுக்கும் இடையிலான உறவுக்கு ஒரு தீர்வு காண்பதற்கான, ஒரு நேர்மையான முயற்சி” என்றார்.   

அதேவேளை, கட்டலான் மக்கள் மற்றும் அரசாங்கத்தின் மீதான மத்திய அரசாங்கத்தினதும் இராணுவத்தினதும் ஒடுக்குமுறையைத் திரும்பப் பெறும்படி கோரினார். ஆனால், பேச்சுவார்த்தைக்கு ஸ்பெய்ன் அரசாங்கம் மறுத்துவிட்டது.   

இதேவேளை, ஸ்பெய்னின் அரசாங்கப் பேச்சாளர்கள் புய்க்டெமொன்ட்டையும் ஏனைய கட்டலான் ஆட்சியாளர்களையும் ‘ரஷ்யாவின் கைக்கூலிகள்’ என்றும் இப்பிரிவினை முயற்சிக்கு, ரஷ்யா ஆதரவளித்துள்ளது என்றும் சொல்லியிருப்பது, ஸ்பானிய அரசாங்கத்துக்கு பாரிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது.   

இதில் கவனிக்க வேண்டியது யாதெனில், கட்டலான் நெருக்கடியில் ரஷ்யா சம்பந்தப்பட்டுள்ளதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்னதாகவே ‘வொஷிங்டன் டைம்ஸ்’ உள்ளிட்ட அமெரிக்க ஊடகங்களில் கூறப்பட்டு, ஸ்பானியத் தேசிய ஊடகங்களில் எதிரொலித்திருந்தன.   

ஆயினும், ஸ்பானிய அரசாங்கம், இந்தக் குற்றச்சாட்டுகளை வெளிப்படையாக மறுத்தே வந்திருந்தது. ஆனால், இப்போது அரசாங்கப் பேச்சாளர்களிடமிருந்தே இக்குற்றச்சாட்டு வருவது, இப்பிரச்சினையைக் கையாள இயலாமல் தடுமாறும், அரசாங்கத்தின் நிலையைக் குறிகாட்டுகிறது.   

இதேவேளை, கடந்தவாரம் பிரதமர் ராஜோய், கட்டலோனிய ஆட்சியாளர்களைத் தேசத்துரோகிகள் என்று குறிப்பிட்டதோடு, புய்க்டெமொன்ட்க்கு, லூலிஸ் கொம்பானிஸின் நிலையே ஏற்படும் என அச்சுறுத்தினார்.   

லூலிஸ் கொம்பானிஸ் 1930களில் கட்டலான் பிராந்தியத் தலைவராக இருந்து, பிராங்கோவின் அடக்குமுறைக்கெதிராகப் போராடியமையால், ஸ்பானிய பாசிச ஆட்சியால் சுட்டுக் கொல்லப்பட்டவராவார்.   

கடந்த மூன்று வாரங்களாக, முடிவற்றுத் தொடரும் இந்நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர, ஸ்பானிய அரசமைப்பின் 155வது சரத்தைப் பயன்படுத்தி, கட்டலோனியச் சட்ட அவையைத் கலைத்து, மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்போவதாக பிரதமர் ராஜோய் அறிவித்துள்ளார்.   

இவ்விடத்தில், இந்நெருக்கடி இவ்வளவு ஆழமடைவதற்கு புய்க்டெமொன்ட் உள்ளிட்ட தேசியவாதிகள் பொறுப்பாக்கப்பட வேண்டியவர்கள். நீண்டகாலத் திட்டமின்றியும் எதிர்விளைவுகளை எதிர்வுகூறாமலுமே ஒக்டோபர் முதலாம் திகதி, இவ்வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.   

சுதந்திரத்தைப் பிரகடனம் செய்வதற்கான உரிமையை கட்டலோனியா வென்றிருப்பதாக ஒக்டோபர் 10 அன்று புய்க்டெமொன்ட் அறிவித்திருந்ததன் பின்னர், அவர் உண்மையில் கட்டலான் சுதந்திரத்தைப் பிரகடனம் செய்திருந்தாரா என்பதைத் தெளிவுபடுத்துவதற்கு ஸ்பெய்னின் பிரதமர் மரியானோ ராஜோய், ஒக்டோபர் 16 வரை கெடு விதித்திருந்தார்.   

ஆனால், இன்றுவரை புய்க்டெமொன்ட், ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்பதான எந்தப் பதிலையும் வழங்காத நிலையில், ஸ்பானிய அரசாங்கம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, இதைக் கட்டுக்குள் கொண்டுவர நினைக்கிறது.   

கட்டலான் தேசியவாதிகளைப் பொறுத்தவரையில், இவ்வாறான வாக்கெடுப்பின் மூலம் பெறப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, மத்திய அரசாங்கத்துடன் பேரம் பேசுவதன் மூலம், மேலதிகமான அதிகாரங்களைப் பெறமுடியும் என எதிர்பார்த்தார்கள்.   

ஆனால், இவர்கள் எதிர்பார்த்ததற்கு வேறுவிதமாகவே அரசாங்கம் பதிலளித்தது. சுதந்திரப் பிரகடனத்தை இன்றுவரை புய்க்டெமொன்ட் அறிவிக்காமல் இருப்பதற்குக் காரணம், அதைத் தொடர்ந்து வரும் விளைவுகள் பாரதுரமானவையாக இருக்கும் என அவர் அறிவார்.   

தேசியவாதம், உரிமைகளுக்காகப் போராடும் மக்களை எவ்வாறு நடுத்தெருவில் விடும் என்பதற்கு, இப்போது கட்டலோனியாவில் நடந்தேறுபவை நல்லதோர் உதாரணம்.   
இப்போதும், கட்டலோனியத் தேசியவாதிகள், அரசாங்கத்துடன் ஒரு மோதலைத் தவிர்க்கும் முயற்சியிலேயே இறங்கியுள்ளார்கள். இதேவேளை அரசாங்கம், பாரிய இராணுவ நடவடிக்கைக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.   

அடக்குமுறை, பல்வேறு வடிவங்களில் மெதுமெதுவாக கட்டலோனியாவில் அரங்கேறுகிறது. இந்நெருக்கடியின் உடனடிக் காரணம், ஸ்பெய்ன் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியாகும்.   

ஒரு தசாப்த கால, ஆழமான சிக்கன நடவடிக்கைகளுக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் பின்னர், இன்று ஐரோப்பாவெங்கும் பதற்றங்களும் சமூக அமைப்புகளுக்கிடையேயான வெடிப்புகளும் உயர் நிலையை எட்டியுள்ளன.   

மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் - குறிப்பாக இளைஞர்கள் - தொழில்களற்ற நிலையில், ஐரோப்பிய நாடுகளில் நிலவும் ஒழுங்குக்கு எதிராக, ஒரு வெகுஜன எழுச்சியை ஆதரிப்பார்கள் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இது, ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப்பெரிய அபாயமாக இனங்காணப்பட்டுள்ளதுடன், இன்று ஐரோப்பா எங்கும் அடக்குமுறைச்சட்டங்கள் வாழ்வியலின் பகுதியாயுள்ளன.   

பிரான்ஸில் இப்போதும் நடைமுறையில் உள்ள அவசரகாலநிலை மற்றும் ஸ்பெய்னின் இராணுவ ஆட்சியை நோக்கிய நகர்வு என்பன அவதானிக்கப்பட வேண்டியன.   

தொழிலாளர்களுக்கும் புரட்சிகர சக்திகளுக்கும் எதிராக, அடக்குமுறையை நிகழ்த்துவதற்கு அகதிகள் பிரச்சினையும் பயங்கரவாதமும் முன்னிறுத்தப்படுகின்றன. 

அண்மையில் வெளியிடப்பட்ட ‘ஒக்ஸ்பாம்’ நிறுவனத்தின் அகதிகள் பற்றிய அறிக்கையானது, ஒரு முக்கிய உண்மையைக் கோடிட்டுக் காட்டியது. 86 சதவீதமான அகதிகள் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலேயே வசிக்கிறார்கள். அந்நாடுகளே அவர்களுக்கு புகலிடம் அளித்துள்ளன. வெறும் 14 சதவீதமான அகதிகளே அபிவிருத்தியடைந்த நாடுகளில் வாழ்கிறார்கள். இவையெல்லாம் எமக்குச் சொல்லப்படும் செய்திகளன்று.   

கட்டலோனியாவின் இன்றைய நிலை, பரந்த தளத்தில் போராடும் தேசிய இனங்களுக்கும் போராட்ட இயக்கங்களுக்கும் முக்கியமான சில பாடங்களைச் சொல்லியுள்ளது.   

முதலாவது, சுயநிர்ணய உரிமை தொடர்பானது. சுயநிர்ணய உரிமை எனும் நெறி, முதன்முதலில் சோவியத் ஒன்றிய புரட்சியின் தொடர்பில், லெனினால் முன்வைக்கப்பட்டது. அது, ஸார் ஆட்சியின் கீழ் ஒடுக்கப்பட்ட அனைத்துத் தேசங்களிடையிலும், சுயதெரிவின் அடிப்படையில் ஒற்றுமையைப் பேணி, அதன்மூலம், அவை சோஷலிசக் குடியரசுகளின் ஒன்றியம் ஒன்றுக்குள் சமமான பங்காளிகளாகத் தொடர்ந்திருக்க வேண்டி, நன்கு சிந்தித்து வகுக்கப்பட்ட ஒரு மூலோபாயமாகும்.   

தேசங்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்திய நோக்கம் ஏதெனில், பிரிந்துசெல்லும் உரிமையானது, பிரிவினையை ஊக்குவிப்பதற்கு மாறாக, எவ்விதமான கட்டாயமுமின்றிச், சுயவிருப்பின் அடிப்படையில் ஒற்றுமையை இயலுமாக்கலாகும்.  
விளாடிமிர் லெனின், சுயநிர்ணய உரிமையை விளக்கி வரைவிலக்கணப்படுத்திய பின்பே, பிறர், குறிப்பாக வூட்றோ வில்சன், சுயநிர்ணய உரிமை என்பது மக்கள் தங்களைத் தாங்களே ஆள்வதற்கான உரிமை என வரையறை செய்கிறார்.   

சுயநிர்ணய உரிமை என்பது, மக்களின் இணக்கப்பாடின்றி சட்டரீதியாக எவரும் ஆளமுடியாது என்ற பொருள் கோடலை உள்ளடக்கும். வில்சன் தனது ‘14அம்ச உரை’யில் சுயநிர்ணய உரிமையைப் பறைசாற்றியிருப்பது நோக்கல் பாலதே. அடிப்படையில் வில்சன், லெனின் இருவரிடையிலும், பின்னவர் பிரிந்து போகும் உரிமையை ஏற்றுள்ளார்.   

ஒன்றாக இருப்பது, முடியாமல் போனால் சுயநிர்ணய உரிமையின்படி, பிரிந்துபோக உரிமையுண்டே ஒழிய, அதுவே பிரிவினையாக மாட்டாது. இதை லெனின், ‘மணமுறிவு’ உரிமையை எடுத்துக்காட்டி ஒப்பிட்டு விளக்குகிறார். மணமுறிவு உரிமை என்பது, மண உறவை முறிப்பதல்ல; ஆனால், ஒவ்வொருவரும் மண ஒப்பந்தத்தை ஏற்படுத்தும்போது, பின்பயன் கருதி, மணமுறிவு உரிமையையும் உறுதிசெய்வது போல, மணமுறிவு உரிமை இல்லாமல் எந்தத் திருமணமும் நீடுநிலைப் பொறுப்புறுதி வழங்கமுடியாது.   

பிரிவதற்கான உரிமை, உறவை சமமாக வைக்கவும் நிலைத்து நிற்கவும் செய்வதற்கானது. ஆகவே, ஓர் ஒன்றியத்தின் (Union) தேசிய இனங்களும் இனக்கூறுகளும் பிரிந்துபோவதற்கான உரிமை என்பது, இணைந்து வாழ்வதற்கான சாத்தியங்களைத் துருவித் தேடலே என்பது லெனின் முன்வைக்கும் கருத்தாகும்.  

கட்டலோனியா சொல்கின்ற இரண்டாவது பாடம், தேசியவாதிகளிடம் அவதானமாக இருக்க வேண்டியதன் தேவை குறித்தது. தேசியவாதிகள் எவ்வாறு தேசிய விடுதலைப் போராட்டங்களை திசைதிருப்பி, ஏகாதிபத்திய நலன்களுக்கு வாய்ப்பாக்கினார்கள் என்பதை வரலாறெங்கும் காணலாம்.   

அதேவேளை, சமரச அரசியல் எவ்வளவு ஆபத்தானது என்பதை நாம் கண்டு வந்திருக்கிறோம். கட்டலான் நிலைவரம் பேசவே தயாராகவில்லாத ஒரு தரப்பிடம், பேச்சுக்கு வலியுறுத்துவதும், பிற உபாயங்கள் அற்றும் இருப்பதும் எவ்வளவு முட்டாள்த்தனமானது என்பதைக் காட்டி நிற்கிறது.   

இவ்விடத்தில் ‘நாம் எந்த ஆயுதத்தைப் பயன்படுத்துவது என்பதை எதிரியே தீர்மானிக்கிறான்’ என்ற மாவோவின் கூற்றை நினைவுபடுத்தல் தகும்.   

சுயநிர்ணய உரிமை என்பது, கண்முடித்தனமாகவோ, தேச, தேசிய இனக் கூறுகளின்மேல் அல்லது இனக்குழுக்களின் மேல் அழுத்திச் சுமக்க வைக்கும் ஒன்றல்ல.   
ஒடுக்கப்பட்ட ஒரு தேசிய இனமோ, இனக்குழுவோ, குலமரபுக்குழுவோ ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிராகத் தன்னைத் தற்காக்கும் நியாயத்தை மறுக்க இயலாது.   

ஆனால், தனது நியாயத்துக்கான போராட்டம் திட்டமிடப்படாததாக, முன்நோக்கற்றதாக, வெறும் தேசியவாதக் கோஷமாக இருக்க, அனுமதிப்பது ஒடுக்கப்பட்ட சமூகத்தின் ஒவ்வோர் அடிப்படை உரிமையினதும் பாதுகாப்புக்குத் தீங்கானது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X