2025 நவம்பர் 14, வெள்ளிக்கிழமை

குதிரைக் கொம்பாகவே இருக்கும்

R.Tharaniya   / 2025 நவம்பர் 13 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

முருகானந்தம் தவம்
 
சிவாஜிகணேசன் நடிப்பில் 1965ஆம் ஆண்டு  வெளியாகிப் பெரு வெற்றிபெற்ற திரைப்படம் ‘திருவிளையாடல்’ .அந்தப்படத்தில் கூத்தனாக வரும் சிவாஜிகணேசனாவுக்கும் தருமியாக வரும் நாகேஷுக்குமிடையில் கேள்வி பதில் வடிவில் இடம்பெறும் காட்சி இன்றுவரை மட்டுமல்ல என்றுமே மறக்க முடியாதது. அந்தளவுக்கு அந்தக்காட்சி வரவேற்பை பெற்றிருந்தது .
 
அந்தக்காட்சியில் தருமியாக வரும் நாகேஷ் எழுப்பும் கேள்விகளும் கூத்தனாக சிவாஜி கணேசன் அளிக்கும் பதில்களும் தற்போதைய இலங்கை அரசியலுக்கும் கட்டுப்படுத்தமுடியாதிருக்கும் பாதாள உலக குழுக்களின் நடவடிக்கைகளும் மிக இலகுவாகப் பொருந்தக்  கூடியவையாகவுள்ளன.
 
அந்த கேள்வி பதில் இதுதான்
தருமி :  பிரிக்க  முடியாதது என்னவோ
கூத்தன்  :  தமிழும்  சுவையும்
தருமி    : பிரியக்கூடாதது
கூத்தன்  :  எதுகையும்  மோனையும்
தருமி : சேர்ந்தே  இருப்பது
கூத்தன் :  வறுமையும்  புலமையும்
தருமி :  சேராமல்  இருப்பது
கூத்தன்  :  அறிவும்  பணமும்
தருமி :  சொல்லக்கூடாதது
கூத்தன்  :  பெண்ணிடம்  ரகசியம்
தருமி :  சொல்லக்கூடியது
கூத்தன் :  உண்மையின்  தத்துவம்
தருமி :  பார்க்கக்கூடாதது
கூத்தன் :  பசியும்  பஞ்சமும்
தருமி :  பார்த்து  ரசிப்பது
கூத்தன்  :   கலையும் அழகையும்
தருமி :   கலையில் சிறந்தது
கூத்தன் :  இயல்  இசை  நாடகம்
தருமி :  நாடகம்  என்பது
கூத்தன்  :  நடிப்பும்  பாட்டும்
 தருமி : ஆசைக்கு
கூத்தன் :  நீ
தருமி : அறிவுக்கு
கூத்தன் :  நான் என்றவாறாக   தொடரும்
இதனை இலங்கை அரசியலுக்கு ஏற்றவாறு மாற்றினால்
தருமி :  பிரிக்க  முடியாதது என்னவோ
கூத்தன் :  அரசியலும் பாதாள உலகக் குழுக்களும்
தருமி : பிரியக் கூடாதது
கூத்தன் :  அனுரவும் ஹரிணியும்
தருமி : சேர்ந்தே  இருப்பது
கூத்தன் :   ஊழலும் இலஞ்சமும்
தருமி :   சேராமல்   இருப்பது
கூத்தன் :  ரணிலும் சஜித்தும்
தருமி :  சொல்லக்கூடாதது
கூத்தன் :  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி யார் என்பதை
தருமி :  சொல்லக்கூடியது
கூத்தன் :  விரைவில் அறிவிப்போம்
தருமி :  பார்க்கக் கூடாதது
கூத்தன் :  ராஜபக்‌ஷக்களின் கைதை
தருமி :  பார்த்து  ரசிப்பது
கூத்தன் :   செவ்வந்தியை
தருமி      :   கலையில் சிறந்தது
கூத்தன் :  வாக்குறுதி வழங்கி ஏமாற்றுவது
தருமி :  நாடகம்  என்பது
கூத்தன் :  தற்போதைய ஆட்சி
 தருமி : ஆசைக்கு
கூத்தன் :  அரசியல்வாதிகள்  
தருமி : அறிவுக்கு
கூத்தன் :  ஐ.எம்.எப்.
என்றவாறாக   இருக்கின்றது.
 
அந்தளவுக்கு இலங்கையின் அரசியலும் ஆட்சியும் நாறிப்போய் இலங்கை குற்றங்கள்,கொலைகள் மலிந்த பூமியாகிவருகின்றது  2025ஆம் ஆண்டு ஜனவரி முதல்  இற்றைவரை  நாட்டில் 110இற்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடுகள் நடந்துள்ளன, இதனால் 54 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 
 
58 பேர் காயமடைந்துள்ளனர். இந்த  துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில், 
80 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவை.
 அதுமட்டுமன்றி, இலங்கையில் இந்த 2025ஆம் ஆண்டின் ஜனவரி முதலாம் திகதி முதல் ஒக்டோபர் 22ஆம் திகதி வரையான சுமார் 10 மாத காலப்பகுதியில், நாட்டில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 1,87 ,672 வழக்குகள் நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.இந்தக்  காலப்பகுதியில், பாதுகாப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட 1,91,320 சுற்றிவளைப்புகளில், போதைப்பொருள் தொடர்பில் 195,950 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் வகைகளில், ஐஸ்  போதைப்பொருளே அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன .அதன்படி மொத்தமாக 2,550.5 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் கைப்பற்றப்பட்டு, இது தொடர்பாக 66,593 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, 1,835.8 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டு, 58,131 வழக்குகளும், 14,775.4 கிலோ கஞ்சா மற்றும் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டு 
 
58,724 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.அத்துடன், 32.6 கிலோ கொக்கெய்ன் கைப்பற்றப்பட்டு 91 வழக்குகளும், 30 இலட்சம் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டு 2,808 வழக்குகளும், 600கிலோ வேறு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு 1,475 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
 
இவ்வாறான சுற்றிவளைப்புகளின் போது, ரீ 56 ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் மற்றும் ரிவோல்வர்கள் உட்பட மொத்தமாக 2,097 துப்பாக்கிகள் பாதுகாப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி, பாதாள  உலக்குழுக்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் பலர் உள்  நாட்டில் மட்டுமன்றி, வெளிநாடுகளில் வைத்தும்  கைது செய்யப்பட்டு நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர். ஆனாலும், அனுர அரசினால் நாட்டில் கொலை களையோ, குற்றங்களையோ, பாதாளக் குழுக்களையோ, போதைப்பொருட்களையோ கட்டுப்படுத்த முடியாதளவுக்கு  இலங்கையின் அரசியலும் அரச அதிகாரமும் பாதாளக் குழுக்களுடன் பின்னிப் பிணைந்துள்ளன.  
 
எந்த பாதாளக் குழுத்தலைவரை கைது செய்தாலும் அல்லது சுட்டுக்கொன்றாலும் அவரின் பின்னணியை ஆராய்ந்தால் அவர் ஏதோவொரு அரசியல் கட்சியுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவராகவும் அவருடன் அரசியல்வாதிகள், அரசு அதிகாரத்தில் உயர் மட்டத்தில் உள்ள பலரும் தொடர்பு வைத்திருப்பவர்களாகவுமே உள்ளனர். இலங்கை அரசியலும் அரச அதிகார உயர்மட்டமும்  பாதுகாப்புத் தரப்புக்களும் எந்தளவுக்கு பாதாள உலகக் குழுக்களோடு பின்னிப்பிணைந்து நகமும் சதையுமாக இருக்கின்றன என்பதற்கு அண்மையில் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ என்ற தேசிய செயற்பாட்டு அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றிய  ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
 
 ஜனாதிபதி அனுரகுமார தனது உரையில்,’’போதைப்பொருள் அச்சுறுத்தல் இயற்கையாக உருவாகவில்லை என்றும், அது நீண்ட காலமாக அரசியல்வாதிகள் மற்றும் சில அரச அதிகாரிகளின் ஆசீர்வாதத்துடன் உருவாக்கப்பட்டது.   கருப்புப் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வர்த்தகமாக இது மாறியுள்ளது. அதனால் அவர்களிடையே சந்தையைப் பங்கு போடுவதில் மோதல் காணப்படுகிறது. ஒவ்வொருகுழுக்களுக்கிடையில் துப்பாக்கிச் சூடு நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரதேச எல்லைகளுக்கு மற்றைய தரப்பு நுழைய முடியாது.
 
போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபட்டதாகவே இந்தக் கொலைகள் நடைபெறுகின்றன.அவர்களிடமுள்ள பண பலத்தினால் அரச பொறிமுறை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.  அவர்களிடையே ஆயுதங்கள் உள்ளன. அனுமதிப் பத்திரத்துடன் ஆயுதங்களைப் பயன்படுத்தும் அதிகாரம் அரசாங்கத்திற்கே உள்ளது. அரசிடம் இருக்க வேண்டிய ஆயுதங்கள் எவ்வாறு அவர்கள் கைகளுக்குச் சென்றன? சில இராணுவ முகாம்களில் இருந்து 73 ரீ 56 ரக துப்பாக்கிகள் அவர்களின் கைகளுக்குச் சென்றுள்ளன.
 
இராணுவ கேர்னல் ஒருவர் தான் இவற்றை வழங்கியுள்ளார். அதற்காக அவரின் வங்கிக் கணக்கிற்குப் பணம் கிடைத்துள்ளது. ஒரு பொலிஸ் அதிகாரி தனது ஆயுதத்தை விற்பனை செய்து விட்டுத் தப்பிச் சென்றுள்ளார். அந்த ஆயுதக் குழுக்களிடமுள்ள பண பலத்தினால் இவை நிகழ்ந்துள்ளன. இது தொடர்பான விசாரணைகளில் பொலிஸ் அதிகாரிகளின் தொடர்பு வெளிப்பட்டுள்ளது.
 
தேசிய பாதுகாப்பு, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனங்களுக்குள் கருப்பு ஆட்சி உருவாக்கப்பட்டுள்ளது.  குடிவரவு குடியகல்வு திணைக்களம் தேசிய பாதுகாப்பிற்காக பங்களிக்கும் நிறுவனம். ஆனால் சில அதிகாரிகள் பாதாள தலைவர்களுக்குக் கடவுச்சீட்டு தயாரித்துவழங்கியுள்ளனர். இவ்வாறு தான் அரச கட்டமைப்பிற்குள் இந்தப் பேரழிவு நுழைந்துள்ளது. சுங்கத் திணைக்களத்திலுள்ள சிலருக்கும் இந்தக் கும்பலுடன் தொடர்பு உள்ளது.
 
அதனால் உத்தியோகபூர்வ அரசாங்கம் இருப்பதைப் போன்று அதே அளவு பலமாக இல்லாவிட்டாலும், அவர்களுக்குத் தேவையானவற்றை வழங்கும் அரச நெறிமுறையொன்றைத் தம்பிடியில் வைத்துள்ளனர்
அரசியல் கட்சிகளுக்குள்ளேயும் அவை நுழைந்துள்ளன. சிலர் மக்கள் பிரதிநிதிகள் ஆகின்றனர். உள்ளூராட்சி தலைவர்களாகத் தெரிவாகின்றனர்.
 
தனியான பட்டியல் தயாரித்து தேர்தலில் போட்டியிடச் சிலர் தயாராகி இருந்தனர். ஆட்சி அதிகாரம், எம்.பிகள் உருவாக்குவது வரையான ஆரம்ப விதை நடப்பட்டுள்ளது. இதனை அடையாளங் கண்டுள்ளோம். இந்த நிலை தானாக உருவானதல்ல. நீண்ட காலமாக அரசியல் மற்றும் சில அரச அதிகாரிகளின் ஆசீர்வாதத்துடன்தான் இது உருவானது. இதன் பின்னணியில் தெளிவான அரசியல் ஆசீர்வாதம் உள்ளது.
 
அதிகாரிகளின் ஆதரவு இருக்கிறது. அரசியல்வாதிகளுடன் நெருங்கிப் பழகி அவர்களின் தேவைகளை நிறைவேற்றி மறைவான அதிகாரத்தை போதைப்பொருள் வர்த்தகர்கள் பெறுகிறார்கள். சில அரச பொறிமுறையில் நுழைந்து விசாரணைகளைத் தடுக்கவும் வீதியில் சுட்டுக் கொலை செய்வதற்கும் இந்த மறைவான அதிகாரத்தை அவர்கள் பயன்படுத்துகின்றனர்’’ என்று கூறுகின்றார்.

 இவ்வாறாக  முன்னர் இருந்த அரசாங்கங்கள், மற்றும் பிரபல அரசியல் கட்சிகளுக்குப் பாதாள உலகக் குழுக்களோடு இருந்த தொடர்புகள் போல் தற்போதைய  ஜே.வி.பி.- தேசிய மக்கள் சக்தி அரசுக்குத் தொடர்புகள் இல்லை

என்பதனால் அவர்கள் பாதாள உலகக் குழுவை வேட்டையாடுவதில்  தீவிரம் காட்டினாலும் இலங்கையில் அரசியலும் பாதாள குழுக்களும் பிரிக்கப்பட முடியாதவையாக இருப்பதனாலும், அவ்வாறு பாதாள உலகக் குழுக்களை  அழிப்பதானால் பல பிரபல அரசியல்வாதிகளிலும் அரசியல் கட்சி களிலும்  கை வைக்க வேண்டி வரும் என்பதாலும் தற்போதைய அரசுக்குப் பாதாள உலகக்குழுவை வேட்டையாடுவதென்பது  குதிரைக் கொம்பாகவே இருக்கும் .


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X