Janu / 2026 ஜனவரி 18 , பி.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
லக்ஸ்மன்
1948 பெப்ரவரி 4ஆம் திகதி பிரித்தானிய காலணித்துவ ஆட்சியாளர்கள் ஆட்சி அதிகாரம் அனைத்தையும் சிங்கள பௌத்த பேரினவாதத்திடம் ஒப்படைத்த நாள். அந்தநாளில் இருந்து தமிழர்தாயகத்தில் தமிழ்த்தேசிய மக்களாகிய நாம் திட்டமிட்டு அடக்கப்பட்டு இனப்படுகொலைக்கு ஆளாகி ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். என்ற கோசத்துடன் இவ்வருடத்தின் கரிநாள் போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது வெற்றிகரமானதாக நடைபெறுமா இல்லையா என்பதனை போராட்ட முடிவிலேயே காணமுடியும்.
வட கிழக்குத் தமிழர்களின் போராட்டம் என்பது இலங்கையில் தமிழர்களின் தன்னாட்சி, மரவுவழித் தாயகம் உட்பட்ட மனித, குடிசார், அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகளை முன்வைத்து ஈழத் தமிழர்கள் முன்னெடுத்துவரும் போராட்டங்களையே குறிக்கிறது. 1948இல் இலங்கையின் ஆட்சி அதிகாரம் பிரித்தானியாவிடம் இருந்து இலங்கையர்களுக்கு கையளிக்கப்பட்டது தொடக்கம் இப் போராட்டம் இலங்கையில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. நாட்டில் ஆட்சி அமைத்துவந்த சிங்களப் பெரும்பான்மை அரசுகளுக்கு எதிராக ஈழத் தமிழர்களின் பல்வேறு அரசியல் தலைமைகளால் போராட்டம் முன்னெடுத்து வரப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான இனவாத அடக்குமுறை சட்டங்கள், நடைமுறைகள், வன்முறைகள், இனப்படுகொலைகள், ஆக்கிரமிப்புகள் இப் போராட்டத்தின் அடிக் காரணிகளாக அமைகின்றன. இந்தப் போராட்டங்களில் ஒன்றாகவே ‘இலங்கையின் சுதந்திர தினம் தமிழர் தேசித்தின் கரிநாள்’ எதிர்ப்பும் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு வருடத்திலும் புலத்திலும் நிலத்திலும் இந்த எதிர்ப்பு காண்பிக்கப்பட்டு வருகிறது. இந்த வருடத்திலும் இந்த எதிர்ப்பினை வெளிக்காட்ட தமிழர்கள் தயாராகி வருகின்றனர். ஒவ்வொரு வருடத்திலும் நடைபெறும் போராட்டங்கள் தொடர்பில் கருத்து முரண்பாடுகளும் விமர்சனங்களும் வெளிவருவது வழமை என்பது போல இவ்வருடத்திலும் ஆரம்பித்திருக்கும் கரிநாள் தொடர்பான ஏற்பாட்டுக் காலத்திலேயே இவை தொடங்கிவிட்டது.
வடக்கு கிழக்கில் நடைபெறும் போராட்டங்களின் வெற்றி, தோல்விகள் அதில் ஏற்படவுள்ள பிரச்சினைகள் பின்னர் ஆராயப்படலாம் என்று ஏற்பாட்டாளர்களும் தமிழ் உணர்வாளர்களும் கூறிக் கொண்டிருந்தாலும் அவை கட்டுப்பாட்டுக்குள் இல்லை. கடந்த வருடங்களில் இப் போராட்டத்திற்கு நீதிமன்றத் தடையுத்தரவுகள் பெறப்பட்டிருந்தன. போராட்டங்கள் கடுமையாக இறுக்கப்பட்டிருந்த சந்தர்ப்பங்களும் உண்டு. ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சி சற்று வித்தியாசமாக இருந்தாலும் தையிட்டி விகாரை விவகாரத்தில் அவர்களுடைய உண்மைமுகம் கடந்த வாரங்களில் வெளிப்பட்டிருப்பதனை தமிழர்கள் கண்டிருக்கிறார்கள், உணர்ந்திருக்கிறார்கள்.
தடையுத்தரவுகள், கட்டுப்பாடுகள், அடக்குமுறைகள் தமிழர்களின் உணர்வைக் கட்டுப்படுத்த முடியாது என்கிற உறுதிப்பாடு இருந்தாலும். இம்முறை நடைபெறவுள்ள கரிநாள் போராட்டமானது, வடக்குக் கிழக்கு தமிழ் மக்களின் பூர்வீகத் தாயகம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும். தமிழ் மக்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதி செய்யும் வகையில் தமிழ் மக்களின் தேசிய உரிமையை அங்கீகரிக்க வேண்டும். தமிழ் இன அழிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான நிரந்தர பொறுப்புக்கூறலை உறுதி செய்ய வேண்டும். இலங்கை அரசு கையகப்படுத்தியுள்ள தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்களை விடுவிப்பதோடு, தமிழர் தாயகத்தை பல்வேறு வகையில் புத்த விகாரைகளை நிறுவியும் தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரங்களைப் பயன்படுத்தி கையகப்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். "பயங்கரவாதத் தடைச்சட்டம்" என்ற பெயரில் இன்றும் தொடரும் தமிழின அடக்கு முறைகளை நிறுத்தி, நீண்ட காலமாகச் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். கடந்த 77 ஆண்டுகளாகத் தொடரும் தமிழர் மீதான இன அழிப்பை நிறுத்தி ஓர் சர்வதேச நீதிப் பொறிமுறை மூலம் தமிழர்களின் வாழ்வுரிமையை உறுதி செய்யப்பட வேண்டும் போன்ற விடயங்களை முன்நிலைப்படுத்தியதாக அமையவிருக்கிறது.
முக்கியமாக வடக்குக் கிழக்கு இணைந்த தமிழர்களின் பூர்வீகத் தாயகம் என்பதையும் தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமை உடையவர்கள் என்பதையும் ஏற்றுக் கொண்டு, வட்டுக்கோட்டைத் தீர்மானம் மற்றும் திம்பு பேச்சு வார்த்தைகளின் அடிப்படையில் இறையாண்மை உள்ள தேச அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற விடயத்தினை வலியுறுத்தும் வகையில் கரிநாள் போராட்டமானது நடைபெறவுள்ளதாக ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்ற தாயக செயலணி அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இறைமை, சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டித் தீர்வு வேண்டும் என்கிற கோரிக்கையுடன் நடைபெற்று வருகின்ற வட கிழக்கு தமிழர்களின் போராட்டமானது இலங்கையின் சுதந்திரத்துக்காக தமிழர்கள் பாடுபட்டிருந்தாலும், சுதந்திரத்தின் பின்னர் நடைபெற்ற விடயங்கள் தமிழர்கள் தங்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றமையை உணர்ந்து கொண்டதன் விளைவேயாம். ஆரம்பகால அகிம்சைப் போராட்டங்கள் 1980களிருந்து 2009 வரை ஆயுதப் போராட்டமாக பல்வேறு இயக்கங்களால் முன்னெடுக்கப்பட்டது. இவ்வியக்கங்களின் கடைசி ஆயுதப் போராட்ட இயக்கமாக இருந்த விடுதலைப் புலிகள் 2009 மே 18 உடன் அழிக்கப்பட்ட பின்னர் இப் போராட்டம் மீண்டும் முழுமையான அரசியல் போராட்டமாக மாறியிருக்கிறது.
விடுதலைப்புலிகளின் முடிவுக்குப் பின்னர் தோற்கடிக்கப்பட்ட தமிழர்கள் நாம் எதனைக் கொடுத்தாலும் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும் என்கிற மனோநிலைக்கு பெரும்பான்மையினர் வந்துவிட்டனர். இந்த உண்மையை யாரும் வெளிப்படையாகச் சொல்ல அச்சப்பட்டாலும் இதுவே உண்மையாகும். ஓற்றையாட்சியைவிட்டால் வேறொன்றில்லை என்ற நிலைப்பாட்டிலிருக்கும் இலங்கை அரசாங்கம் தமிழர்களிற்கான சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் என்பதில் துளியளவும் நம்பிக்கையற்றவர்களாகவே தமிழ் மக்கள் இருந்து வருகின்றனர். அதனாலேயே சர்வதேசத்தின் பங்குபற்றலை எதிர்பார்க்கின்றனர். இன அழிப்பு, போர்க்குற்றங்களை மேற்கொண்ட ஒரு அரசு மீது ஐக்கிய நாடுகள் சபை ஊடாக நீதி வழங்கப்படவேண்டும் என்று கோருகின்றனர். இவை நடைபெற்றால் தமிழர்கள் நிம்மதியடைவார்கள் என்று கூட சிந்திப்பதற்கு சர்வதேசம் தயாரற்றதாக இருந்து வருகிறது. இதற்கு தமிழர் தரப்பிடம் இல்லாமலிருக்கின்ற ஒற்றுமையாகும்.
தமிழர் தேசத்தை இஸ்ரேலுடன் ஒப்பிட்ட காலங்களும் உண்டு, ஆனால் யூதர்களுடைய ஒற்றுமையும் விட்டுக் கொடுக்காமையும், கொள்கைப்பிடிப்பும், தொடர் முயற்சியும், முறையான திறமையான இராஜதந்திரமும் நம்மிடமில்லை என்பதனை மறந்துவிடுகிறோம். அவ்வாறானால், ஏன் இந்தப் போராட்டங்கள் என்ற கேள்வி எல்லோரிடமும் இருந்கிறது. போராடாத இனம் இல்லாது போன இனமாகிப்போகும் என்பதன் அடிப்படையில் மாத்திரமே நடைபெறுகின்றன என்றே சொல்லமுடியும்.
தமிழர்களின் சுயநிர்ணயக் கோரிக்கைக்கான அரசியல் தீர்வை வழங்குவதற்காக ஏதோ ஒரு வகையில் காலங்கடத்தும், அடக்குமுறையின் மூலமும் தமிழர்களின் போர்க் குணத்தை இல்லாதொழிக்க அரசாங்கங்கள் முயன்று வந்திருக்கின்றமையுமே வரலாறாகும். தமிழ் மக்களுக்கு அரசியல் பிரச்சினை ஒன்று இருப்பதனையே மறுக்கின்ற பெரும்பான்மை அரசாங்கங்கள் மூடி மறைக்க முயல்வதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக வடக்கு கிழக்கில் விடுதலைப் போராட்ட அமைப்புகளால் நடத்தப்பட்ட யுத்தம் திம்பு பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கும் இலங்கை இந்திய ஒப்பந்தம் அதனால் 13ஆவது திருத்தச் சட்டம் ஏற்படுத்தப்படவுமு; காலாய் இருந்த். இருப்பினும் இதுவரையில் அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆனால் புதிய அரசியலமைப்புடன் 13ஆவது திருருத்தமும் இல்லாமலாக்கப்படும் என்பதே நிச்சயம்.
இலங்கை அரசாங்கத்தின் உள்விவகார நிலைப்பாட்டுடன் நின்று போகின்ற இந்திய அழுத்தமும் கனடா, பிரிட்டன் போன்ற நாடுகளின் மேம் போக்கான செயற்பாடுகளும் தமிழர்களுக்கு நீதியையோ, சுயநிர்ணயத்தையோ பெற்றுத்தராது என்ற நிலையில் தொடரும் போராட்டங்களின் பயனை வெறுமனே கணக்கிட மாத்திரமே முடியும்.
அந்தவகையில் இவ்வருடத்தில் நடைபெறப்போகும் சுதந்திரதின - கரிநாள் போராட்டம் வெற்றியடைய, அனைத்து ஊடகங்களும், அமைப்புக்களும், குறிப்பாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள், மாணவர் அமைப்புக்கள், வடக்குக் கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம், பட்டதாரிகள் சங்கம், சிவில் அமைப் புக்கள், மத அமைப்புக்கள், வர்த்தகர் சங்கங்கள், கடல் தொழிலாளர் சங் கங்கள், விவசாயக் கழகங்கள், போக்குவரத்துக் கழகங்கள், விளையாட்டுக் கழகங்கள், ஊர்ச் சங்கங்கள், புத்திஜீவிகள் மற்றும் பொது மக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவருடைய பேராதரவும் ஒத்துழைப்பையும் கோரப்பட்டிருக்கிறது.
பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் ஆகியன இணைந்து தாயகச் செயலணியாக நடத்தும் இவ்வருடத்தின் கரிநாள் போராட்டம் வெற்றியடைவதில் உள்ள தடைகள் நீக்கப்படுவது எவ்வளவுக்கு முக்கியமானதோ அதேயளவுக்கு அனைத்து தரப்பினரையும் ஒற்றுமைப்படுத்துவதும் ஒருமிப்புக்குள் கொண்டுவருவதும் காலத்தின் தேவையாகும். இதனை நிறைவேற்றுவதில் காட்டப்படும் அக்கறையொன்றே தமிழர்களின் இன்றைய தேவையாகும். அதுவே இவ்வருடத்தின் கரிநாள் போராட்டப் பயனாகவும் இருக்கும். நாட்டில் புரையோடிப்போன இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்கும் இந்த ஒற்றுமையான பலமே தேவையானது.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago