Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2021 ஜூலை 24 , பி.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
“மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மாத்திரமே தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததன்று“ என்று மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் பாடல் வரிகள் எவ்வளவு அழகாக, காத்திரமாக தந்தைக்கும் மகளுக்கும் இருக்கும் உறவுப் பிணைப்பை ஆழமாக உணர்த்தினாலும் இன்றைய சூழலில் இந்த வரிகள் பொய்பிக்கப்பட்டு வருகின்றன.
காம வெறி பிடித்தால் கட்டியவள், பெற்றவள், தம் இரத்தத்தில் உருவானவள், உடன் பிறந்தவள் அனைவரையும் காமப் பார்வையுடன் பார்க்கும் சில காமவெறியர்கள் வாழும் கலிகாலத்தில் நாமும் பெண்ணுரிமை, சிறுவர் உரிமை என என்னதான் குரல் கொடுத்துதாலும், சிறுமிகள் மீதான பாலியல் கொடுமைகள் குறைவில்லாமல் அரங்கேறிக்கொண்டு தான் இருக்கின்றன.
தந்தைக்கும் மகளுக்கும் இருக்கும் உறவென்பது புனிதமானதொன்று! ஒரு குறிப்பிட்ட வயது வரை மாத்திரமே தாய் - மகள் உறவு நல்ல நட்பாகக் காணப்படும். ஆனால், தந்தை- மகள் இடையிலான உறவைச் சிறந்த முறையில் அனுபவிப்பவர்களுக்குத் தான், அதன் அன்பும் பிணைப்பும் புரியும். மகள்களுக்கு தன் தந்தையே முதல் கதாநாயகன்; அவரே தன்னம்பிக்கையின் ஊற்றாகப் பெண் பிள்ளைகளுக்கு விளங்குகின்றார்.
ஆனால், இந்த உன்னத உறவு, அண்மைக்காலமாக அருவருக்கத்தக்கதான அவலங்களாக எமது நாட்டில் அரங்கேறி வருகின்றது.
இன்று, இந்தச் சமூகத்தில் ‘வேலியே பயிரை மேய்வது போல’, பெற்ற தந்தையே தனது காம இச்சைகளைத் தான் பெற்றவளிடம் பூர்த்தி செய்யுமளவுக்கு, எமது சமூகம் கலாசார சீரழிவின் உச்சத்தில் இருக்கின்றது. பெற்றவனே, தான் பெற்றவளைச் சீரழிக்கும் சம்பவங்கள் எங்கோ, எப்போதோ நமது நாட்டில் ஏதாவது ஒரு மூலையில் நடந்தேறிய நிலை மாறி, இன்று தினமும் இடம்பெறுகின்றன.
இன்னும் கூறப்போனால், கொரோனா முடக்கம், இந்தக் காமவெறியர்களுக்கு நல்லதொரு வாய்ப்பாக மாறியுள்ளது. கொரோனா முடக்கத்தால் வீடுகளில் முடங்கியிருக்கும் தந்தை என்ற அந்தஸ்துக்குரிய சிலர், தனது பெண் பிள்ளைகளை, பருவமடையும் முன்னரே, பாலியல் ரீதியாகச் சிதைத்து விடுகிறார்கள்.
இந்தக் கொடுமைகள் கொரோனாவுக்கு முன்னரும் அரங்கேறியுள்ளன. பெண் சிசுக்கள் கூட, காம வெறியர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவங்களும், எமது நாட்டில் இடம்பெற்றதை யாரும் எளிதில் மறந்துவிட முடியாது.
இவ்வாறான சம்பவங்களின் பின்னணி என்ன? ஒன்று, தாய் குடும்பத்திலிருந்து பிரிந்து சென்றிருக்க வேண்டும். அல்லது, பெற்றவனை நம்பி, குடும்ப சுமையை இறக்கி வைப்பதற்காக தாய் வெளிநாட்டுக்குச் சென்றிருக்கலாம்; கொழும்பு போன்ற நகரங்களுக்கு வீட்டுத் தொழிலுக்குச் சென்றிருக்கலாம். அல்லது, மனைவியின் இரண்டாவது கணவனாக இருக்கலாம். இவ்வாறான பின்னணிகளில், வீட்டில் தனித்திருக்கும் தனது மகளையே, மனைவியாகப் பயன்படுத்தும் காமுகன்கள் உருவாகின்றார்கள். ஆனால், தாய் அருகிலிருந்தும் தனது இரு பெண் பிள்ளைகளையும் தந்தையொருவன் கர்ப்பமாக்கிய சம்பவம் கடந்த வாரம் பதுளை, தெமோதர தோட்டத்தில் பதிவாகியுள்ளது.
13, 15 வயதுகளையுடைய மகள்களுடன் தாய், தந்தை என நால்வரங்கிய குடும்பத்தில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. மகள்கள் இருவருக்கும் ஒரே நேரத்தில் வயிற்று வலி வந்ததால், அவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற தாய்க்கு காத்திருந்தது பேரிடி. ஆம்! அவர்கள் இருவரும் கர்ப்பிணிகள் என வைத்தியர்கள் அறிவித்த நிலையில், இந்தக் கர்ப்பத்துக்கு காரணம் யார் எனப் பார்க்கும் போது, அந்தப் பிள்ளைகளை பெற்ற ‘மகராசனே’ காரணமாயிருக்கிறான். இங்கு பல கேள்விகளுக்கு இடமுள்ளது.
தாய் அறியாமல், இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்குமா? தாயே அதற்கான வழியை ஏற்படுத்திகொடுத்தாளா? தந்தையால் துஷ்பிரயோகத்துக்கு ஆளானதை வெளியே கூற முடியாத அளவுக்கு, அந்தப் பிள்ளைகள் முட்டாள்களா, ஊமைகளா? இது பற்றி யாரிடம் சரி, அந்தப் பிளைளைகள் கூறியிருக்கலாம். அல்லது, அவர்களது விருப்பத்தை மீறி தந்தை தொடும் போது, கூச்சலிட்டு ஊரைக் கூட்டியிருக்கலாம். ஆனால், இப்படி எதுவுமே நடக்கவில்லை. இறுதியில், அந்த சகோதரிகள் இருவரும் தந்தையின் குழந்தையை வயிற்றில் சுமக்கிறார்கள்.
இதேபோன்ற மற்றுமொரு சம்பவம், நாவலப்பிட்டியில் பதிவாகியது. அதாவது, 13 வயது சிறுமியொருவர் பல வருடங்களாகப் பலரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, ஐவர் கைதுசெய்யப்பட்ட நிலையில், இதில் முதலாவது சந்தேகநபராக, அந்தப் பிள்ளையின் தந்தை அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
அதாவது, அச்சிறுமி 10 வயதாக இருக்கும் போது, அவளது தாய் பிரசவத்துக்காக வைத்தியசாலைக்குச் சென்ற வேளை, அச்சிறுமியின் தந்தை, தனது மகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியுள்ளான். இது குறித்து, அந்த குழந்தை தனது தாயிடம் அறிவித்ததா? தாய்க்கு இது தெரிந்தும், அந்தத் தாய் மூடி மறைத்துவிட்டாளோ என்பதை நாமறியோம். ஆனால், பத்து வயதில் கருகிய இவள் தொடர்ச்சியாக, 13 வயது வரை பலரால், பல பொழுதுகள் சீரழிக்கப்பட்டுள்ளாள். ஒரு வேளை, இந்தச் சிறுமியும் இதற்கு அடிமையாகியிருக்கலாம். தனக்கு ஒரு பிரச்சினை என்றால், பெற்றவர்களிடேமே எந்தவொரு பிள்ளையும் முதலில் கூறும். ஆனால் ,பெற்றவர்களே தன் வாழ்க்கையில் விளையாடி விட்டதால், அவர்களிடம் கூறி என்ன பயன் என நினைத்து, காமுகர்களின் பசிக்கு இரையாகி வந்திருக்கலாம்.
இவ்வாறான சம்பவங்கள் எல்லாம், மிகமிக அண்மைக் காலமாகத்தான் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியுள்ளன. இதற்கான அடிப்படை சம்பவம், 15 வயது சிறுமியொருவர் இணையத்தளம் ஊடாகப் பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்யப்பட்ட சம்பவம், ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டு, பல முக்கிய புள்ளிகள் கைதுசெய்யப்பட்ட பின்னரே, பல சிறுமியர்கள் பெற்றவர்களாலும், உடன் பிறப்புகளாலும், பாதுகாவலர்களாலும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவங்கள் வெளியே வரத் தொடங்கியுள்ளன.
எனவே, தெரிந்தவரை ஓரிரண்டு சம்பவங்கள். தெரியாமல் இன்னும் எத்தனை மொட்டுகள் பூவாக மலரும் முன்னே கிள்ளி எரியப்பட்டுள்ளனவோ தெரியவில்லை. இவ்வாறான சம்பவங்களில் நூறில் இரண்டு சதவீதம் மாத்திரமே பகிரங்கப்படுத்தப்படுவதாகவும் ஏனையவை குடும்ப கௌரவம் உள்ளிட்ட இன்னோரன்ன காரணங்களால் மூடி மறைக்கப்படுவதாக, பால் நிலை சமத்துவம் மற்றும் முரண்பாட்டு நிபுணர் வீரசிங்கம் தெரிவித்தார்.
இத்தகைய அவலங்களுக்கு அறிந்தோ அறியாமலோ, அனைவரும் காரணமாகி விடுகின்றனர். அதாவது, இப்போதைய தவறான உணவுப் பழக்கவழக்கங்களால் 10 வயது சிறுமி கூட, 15 வயது சிறுமியைப் போன்ற உடல்வாகுத் தோற்றத்துடன் காணப்படுகின்றாள். அது மாத்திரமின்றி, கலாசாரம் என்ற பெயரில் சிறுமியாக இருந்தாலும் அவள் பெண், பாதுகாக்க வேண்டியவள் என்பதை மறந்து, நவநாகரிக ஆடைகள் என்ற பெயரில் ஆங்காங்கே அங்கங்களை காட்டும் ஆடைகளை, தனது பிள்ளைகளுக்கு அணிவித்து அழகு பார்க்கின்றார்கள். இது, இரை கிடைக்காதா என ஏங்கும் கழுகுகளுக்கு, எவ்வளவு வாய்ப்பாகப் போய்விடும் என்பதை எல்லாம் நடந்து முடிந்த பின்பே யோசிப்போம்.
இந்த 21ஆம் நூற்றாண்டிலும் சிறுமிகளைப் பொத்திப் பாதுகாத்து வைத்துத் தான் வளர்க்க வேண்டுமா? என ஆவேசப்படுபவர்களும் இருக்கிறார்கள். சேலை முள் மீது விழுந்தாலும் முள் சேலை மீது விழுந்தாலும் சேதம் என்னவோ சேலைக்கு தான் என்பதை உணர்ந்தால் சரி!
சிறுமியர் மட்டும் தானா, பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்றனர் எனக் கேட்டால், இல்லை! இன்று ஆண்பிள்ளைகள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி வருகின்றமை இலங்கையில் அதிகரித்து வருகின்றது.
குறிப்பாக, அடைக்கலம் கொடுப்பவர்களே ஆண்குழந்தைகளைப் பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றனர்.
இவ்வாறு, சிறுவயதில் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் சிறுவர்கள், தமது விடலைப் பருவத்தில் தாம் அனுபவித்த துன்பங்களை விடப் பல மடங்கு துன்பங்களை அதிலும் பாலியல் ரீதியான துன்பங்களை, பலருக்கு ஏற்படுத்துகின்றமை தெரியவந்துள்ளது.
எனவே, இவ்வாறான சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்களைக் கட்டுப்படுத்துவதற்கு, சிறுமிகளை இது தொடர்பில் தெளிவுபடுத்த, சிறுவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த மாணவர்களுக்கு பாலியல் கல்வியின் அவசியம் தற்போது உணரப்பட்டாலும், அதனை கற்பிப்பவர் யாரென்ற கேள்வி எழுகின்றது.
ஆனால், பாலியல் கல்வி என்பது, இப்போதைய சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் மிக மிக அத்தியாவசியமாக அமையும் அதேவேளை, இவ்வாறான குற்றங்களுக்கு எதிரான தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். அத்துடன், அது நடைமுறைப்படுத்தப்படவும் வேண்டும். இதன்மூலம் பல மொட்டுகள் கருக்கப்படாமல் பாதுகாக்கப்படுவது உறுதி.
27 minute ago
43 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
43 minute ago
56 minute ago
1 hours ago