2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

கலவரப்படுத்தும் கலவரங்கள்

Johnsan Bastiampillai   / 2023 ஜூன் 21 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

 

 

 

கறுப்பு ஜூலை நாற்பதாண்டுகளின் பின்னர் - 05

 

தமிழர்களின் மீது 1983இல் நடந்தேறிய இனவன்முறை, இலங்கை இனமுரண்பாட்டின் வரலாற்றில் முக்கியமானதொரு புள்ளி. 

இன்றுவரை அந்நிகழ்வு கலவரம் என்றே அழைக்கப்பட்டு வருகிறது. ஆங்கிலத்தில் அது 1983 riots, Anti-Tamil riots, ethnic riots  என்றவாறான பெயர்களால் அழைக்கப்பட்டு வருகிறது. ஆய்வாளர்கள், வரலாற்றாசியர்கள், ஊடகத்துறையினர் என அனைவரும் இதை ஒரு கலவரம் என்றே அழைக்கிறார்கள். தமிழில் கூட, ‘83 கலவரம்’, ‘ஆடிக்கலவரம்’, ‘ஜூலைக் கலவரம்’ என்றே சொல்லப்படுகிறது. இது உண்மையில் தவறானது. 

1983இல் நடைபெற்றது தற்செயலான நிகழ்வு அல்ல. எழுந்தமானமாக மக்கள் கலவரத்தில் ஈடுபட்ட நிகழ்வல்ல. மாறாக, அது மிகவும் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஒன்று. அது குறித்த விரிவான விடயங்களை இத்தொடரில் இனிவரும் பகுதிகளில் நோக்கலாம். 

கலவரம் என்கிற போது, திட்டமிடப்படாத, மக்களின் தன்னெழுச்சியான, அரசின் வகிபாகம் இல்லாத செயல் என்று பொருள் தரும். இந்தக் கதையாடலையே ஜே.ஆரும் அரசில் இருந்த மற்றையோரும் சிங்களக் கடும்போக்காளர்களும் விரும்பினர். ஏனெனில், இது அரசின் பொறுப்புக்கூற வேண்டிய தன்மையைக் குறைக்கிறது. அரசு, மக்கள் மீது பழியைப் போட்டு, தனது கைகளைக் கழுவிக் கொள்ள இது வாய்ப்பானது. துரதிர்ஷ்டவசமாக இந்தத் தீயநோக்கத்துக்கு நாம் பலியானோம்; இன்னும் பலியாகின்றோம். 

இதை உண்மையில் ஆங்கிலத்தில் Anti-Tamil pogrom  என்று அழைப்பதே சரியானது. இச்சொல்லாடலே இந்நிகழ்வுக்கான சரியான பொருளைத் தரவல்லது. Pogrom என்பது ஓர் இனக்குழு மீதான திட்டமிட்ட வன்முறையும் படுகொலைகளையும் குறிக்கும். வரலாற்றின் வழி நின்று நிகழ்வுகளைக் குறிக்கும் போது, நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லிலும் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு இது நல்லதொரு சான்று. 

இலங்கையின், 1983 ஜூலை வன்செயலுக்கு முன்னர், அதற்கொரு நீண்ட வரலாறு உண்டு. குறிப்பாக 19ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் நடைபெற்ற நிகழ்வுகள், இலங்கையின் இருபதாம் நூற்றாண்டும் குறிப்பான இனத்துவ உறவுகளின் எதிர்காலமும் எப்படி இருக்கப் போகின்றது என்பதைக் காட்டி நின்றன. 

குறிப்பாக, இக்காலப்பகுதியில் இடம்பெற்ற கலவரங்கள் முக்கியமானவை. ஆனால், இவை கவனம் பெறவில்லை. 1815இல் கண்டி இராச்சியத்தின் வீழ்ச்சியோடு இலங்கை முழுமையாகப் பிரித்தானியாவின் கட்டுப்பாட்டுக்குள் போன பின்னர், 1818 ஊவா-வெல்லச கலகமும் 1848இல் இடம்பெற்ற மாத்தளைக் கலகமும் வரலாற்றில் முக்கிய இடம்பெற்றுள்ளன. இவை இரண்டும் கிளர்ச்சிகளாகவும் எழுச்சிகளாகவும் கொள்ளப்படுகின்றன. 

ஆனால், 19ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதிகளில் இடம்பெற்ற கலவரங்கள் குறித்துக் கவனம் கொள்ளப்படவில்லை. 1883இல் கொச்சிக்கடையில் இடம்பெற்ற பௌத்த-கத்தோலிக்க முரண்பாட்டின் விளைவான கலவரம் குறித்த சில குறிப்புகளுக்கு வெளியே, இலங்கையின் கலவரங்கள் குறித்த விரிவான குறிப்புகளோ, ஆய்வுகளோ இல்லை. 

1983 வன்செயல்களுக்கு ஒரு தொடக்கமும் தொடர்ச்சியும் இருக்கிறது. 1815இல் கண்டியின் வீழ்ச்சியின் எதிர்வினையாக பிரித்தானிய கொலனியாதிக்கத்துக்கு எதிராக 1818, 1848ஆம் ஆண்டுகளில் கிளர்ச்சிகள் இடம்பெற்றிருந்த நிலையில், 1915இல் முல்லிம்களுக்கு எதிரான கலவரம் எவ்வாறு சாத்தியமானது? பிரித்தானியரை எதிர்க்கும் மனநிலை இல்லாமலாகி, இலங்கையருக்கு உள்ளேயே முரண்படும் நிலை எவ்வாறு ஏற்பட்டது? இவை, இன்றுவரை இலங்கையின் இனமுரண்பாட்டை நோக்குவோர் ஆழமாகப் பார்க்கத் தவறியவையாகும்.

1818, 1848 கிளர்ச்சிகள் இன்றும் இலங்கை வரலாற்றின் தேசப்பற்றின் உச்ச நிகழ்ச்சிகளாகக் கொண்டாடப்படுகின்றன. சிங்கள-பௌத்த உணர்வைத் தூண்டும் விதமாகவே, இந்தக் கிளர்ச்சிகள் பற்றிய கதைகள் தொடர்ந்து சொல்லப்படுகின்றன.

1818ஆம் ஆண்டு கிளர்ச்சியை ஆழ்ந்து நோக்கினால், அது மக்களின் முழுமையான ஆதரவுடன் நடைபெற்ற கிளர்ச்சியல்ல. மாறாக, 1815 கண்டிய மன்னனைக் காட்டிக்கொடுத்து, பிரத்தானிய கொலனியாதிக்கவாதிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம், கண்டியின் ஆட்சியைக் கைப்பற்ற எண்ணியிருந்த பிரதானிகளின் எதிர்பார்ப்பில், கண்டிய உடன்படிக்கை மண்ணை போட்டது.

அந்தப் பிரதானிகளது செல்வாக்கு, மெதுமெதுவாக பிரித்தானியர் ஆட்சியில் தளரத் தொடங்கியது. பல பிரித்தானிய நடைமுறைகள் வர்க்க ரீதியாகவும் சாதிய ரீதியாகவும் வழக்கில் இருந்தவற்றை மாற்றத் தொடங்கியது. இதனால் ஒரு சமூக மாற்றம் ஏற்படத் தொடங்கியது. இது பிரதானிகளுக்கு உவப்பானதாக இருக்கவில்லை. 

அவர்கள் தங்களுக்கு கீழே உள்ள மக்களைத் திரட்டியே, இந்தக் கிளர்ச்சியை நடத்தினர். அதேவேளை, இந்தக் கலவரத்துக்கு உடனடிக் காரணமாகவும் மக்களைத் திரட்ட வாய்ப்பாகவும் அமைந்த நிகழ்வொன்று முக்கியமானது. 

1817 செப்டெம்பரில் பிரித்தானியர், ஹாஜி மரிக்கார் ட்ரவலா என்ற இஸ்லாமியரை வெலச பகுதிக்கு பிரதம அதிகாரியாக (முகாந்திரம்) நியமித்தனர். இப்பதவி கண்டிய பிரதானிகளுக்கு வழங்கப்படுவது. இந்நிலையில், இப்பதவியை ஓர் இஸ்லாமியருக்கு பிரித்தானியர் வழங்கி, பௌத்தத்தையும் சிங்களவர்களையும் அவமதித்து விட்டார்கள் என்ற கருத்து மக்களிடையே பரப்பப்பட்டு, இதன்வழியும் கிளர்ச்சிக்கு ஆதரவு திரட்டப்பட்டது. 

இந்தச் செய்தி முக்கியமானது. கண்டிய பிரதானிகளே இலங்கை முழுமையாக பிரித்தானியர் ஆட்சிக்கு உட்பட்ட பின்னர், தம்நலனுக்காக இனத்துவ வேறுபாடுகளைத் தோற்றுவித்தார்கள். இந்த விதைதான் 1983இல் விருட்சமாகி நின்றது. 

அதைப்போலவே, 1848ஆம் ஆண்டு கிளர்ச்சியானது, விவசாயிகளின் கிளர்ச்சியாக இருந்த போதும், இதில் நடைபெற்ற இரண்டு விடயங்கள் முக்கியமானவை. 

முதலாவது, 26 ஜூலை 1848இல் தம்புள்ள விகாரையில் தலைமைப் பிக்குவால், கொங்கலகொட பண்டா மன்னராக முடிசூடப்பட்டார். அப்போது அங்கு கூடியிருந்த மக்களிடம் பண்டா, “உண்மையான பௌத்தனாக என்னுடன் நிற்கப் போகிறீர்களா, அல்லது கிறிஸ்தவ பிரித்தானியர்களுடன் நிற்கப் போகிறீர்களா” என்று கேட்டதாகக் குறிப்புகள் உண்டு. 

இரண்டாவது, கிளர்ச்சி தோல்வியடைந்து பண்டா ஒளிந்திருந்த போது, அவனைத் தேடிக் கண்டுபிடித்தவர்கள் பிரித்தானியரிடம் கடமையாற்றிய மலாயப் படையணியாகும். எனவே சிங்களத் தேசியவாத எழுத்துகள், 1848 கிளர்ச்சிக்கு எதிராக, முஸ்லிம்கள் வேலை செய்தார்கள் என்றவொரு கதையாடலையும் பரப்பி வந்திருக்கின்றன. 

இதன் பின்னர், 1850களுக்குப் பிறகு 1915 வரை நடைபெற்ற கலவரங்கள் குறித்து இலங்கை வரலாறு கவனம் கொள்ளாதது தற்செயலானதல்ல. 

1866ஆம் ஆண்டு இலங்கையில் தானியக் கலவரம் ஒன்று நிகழ்ந்தது. இது குறித்து மிகவும் குறைவான தகவல்களே கிடைக்கின்றன. அரிசிப் பற்றாக்குறையின் காரணமாக இந்தக் கலவரம் நிகழ்ந்தது. அக்காலப்பகுதியில் இலங்கைக்குத் தேவையான அரிசி தென்னிந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. 1866ஆம் ஆண்டு விளைச்சல் பாதிப்படைந்ததால் அரிசியின் விலை பலமடங்கு அதிகரித்தது. 

இந்நிலையில் 1866 ஒக்டோபர் 23ஆம் திகதி, கொழும்பின் செட்டியார் தெருவில் இருந்த அரிசிக் கடைகள் தாக்கப்பட்டன. இந்தக் கடைகள் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களுக்குச் சொந்தமானவை. அவர்களே இந்தியாவில் இருந்து அரிசியை இறக்குமதி செய்து, மொத்த விற்பனையில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் திட்டமிட்டு விலையை ஏற்றுகிறார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு, செட்டியார் தெருவில் இருந்த கடைகள் சூறையாடப்பட்டன. கடைகளில் இருந்த ஏனைய பொருட்களான பணம், நகை உள்ளிட்ட அனைத்தும் களவாடப்பட்டன. 

இதன் தொடர்ச்சியாக, அப்பகுதியில் இருந்த முஸ்லிம்களின் கடைகளும் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டன. சிங்களவர்கள் ஊர்ப் பகுதிகளில் இருந்தும் வந்து கொள்ளையிட்டனர். மறுநாள், நாட்டுக்கோட்டைச் செட்டியார்களும் முஸ்லிம்களும் இணைந்து, இதற்கு எதிர்வினையாற்றத் தொடங்கினார்கள். இதனால் கலவரம் கொழும்பில் கட்டுக்குள் வந்தது. 

ஆனால், சில நாள்களின் பின்னர், கடுவெல பகுதியில் முஸ்லிம்களின் அரிசிக் கடைகள், சிங்களவர்களால் சூறையாடப்பட்டன. இந்தக் கலவரம் இலங்கை வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்களில் ஒன்றாகும்.

1870இல் மருதானையில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஒரு கலவரம் இடம்பெற்றது. காதல் விவகாரம் கலவரமாகி, 1867இல் மருதானையில் உருவாக்கப்பட்ட பொலிஸ் தலைமை அலுவலகம், முஸ்லிம்களால் தாக்கப்படுமளவுக்கு நிலைமை மோசமடைந்தது. 

இதற்குக் காரணமான தனிநபர்களில் ஒருவர் சிங்களவர்; கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தவர். மற்றையவர் முஸ்லிமாக மதம் மாறிய தமிழர். இந்தக் கலவரத்தின் தொடர்ச்சியாகவே, இலங்கையில் 1870இல் குற்றப்புலனாய்வுப் பிரிவு உருவாக்கப்பட்டது. 

இதற்கு அடுத்தாக, 1883இல் மட்டக்களப்பில் ஒரு கலவரம் நடைபெற்றது. அங்குள்ள மீனவ சமூகத்துக்கும் கள்ளிறக்கும் சமூகத்துக்கும் இடையிலான சாதிச் சண்டை கலவரமானது. இதையும் இதே ஆண்டு நிகழ்ந்த கொச்சிக்கடைக் கலவரத்தையும் அடுத்த வாரம் நோக்குவோம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X