2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கல்வி ஒருவருக்கு இல்லையெனில்...

Princiya Dixci   / 2021 ஜூலை 03 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்.பட்.மண்டூர் - 14 சக்தி மகாவித்தியாலய மாணவி அ.டிசா தெரிவிக்கையில் “சூம் தொழில் நுட்பத்தின் மூலம் எமது கற்றல் நடவடிக்கைகள் தொடர்கின்றன. ஆனால் எமக்கு இப்பகுதியில் கவறேஜ் இல்லாமலுள்ளது. இதனால் எமது அலைபேசி மூலமான கற்றல் தெளிவில்லாமல் உள்ளது” என்கிறார்.

“நான் 9 ஆம் ஆண்டில் கல்வி கற்கின்றேன். சூம், வட்ஸ்அப் ஆகியவற்றின் மூலம் வகுப்புகள் நடைபெறுகின்றன. ஆனாலும் ஆசிரியர்கள் அனும்பும் நோட்ஸை பார்ப்பதற்குக்கூட அலைபேசிகளுக்கு முறையாக கவறேஜ் கிடைப்பதில்லை”  என  ந.சுகேஷன் கூறுகின்றார்.

“எமது கிராமத்தில் கல்வியில் ஆற்றலுள்ள மாணவர்கள் உள்ளார்கள். ஆனால், கவறேஜ் இல்லாததால் பாடங்கள் சரியாக விளங்குவதில்லை. ஆசிரியர்கள் அனுப்பும் பாடவிதானங்கள்கூட கிடைப்பது கடினமாகவுள்ளது. இதற்கு அரசாங்கம் எமது பகுதியில் அலைபேசிகளுக்கு, கவேறேஜ் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தம்பலவத்தை கிராமத்தைச் சேர்ந்த மாணவனான எஸ்.தீபன் தெரிவிக்கின்றார்.

இவை தற்கால கொரோனா சூழலில், ‘சூம்’ மூலம் தமது கல்வியைத் தொடர முடியாமல் தவிக்கும் மாணவர்களின் எண்ணக் குமுறல்களாகும்.

 ‘கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை’ அழிவில்லாத சிறந்த செல்வம் என்பது, கல்விச் செல்வமே; மற்றைய பொன், பொருள், மண் என்னும் செல்வங்கள் ஒருவனுக்குச் சிறந்த செல்வம் ஆகாது எனப் பொருள் படுகின்றது.

இவ்வாறான கல்வியை, மாணவர்களுக்கு சிறு பராயத்திலிருந்து பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்கத் தவறவிடுவோமாக இருந்தால் அது நாம் ஒவ்வொருவரும் சமூத்திற்குச் செய்யும் பாரிய துரோகம் ஆகும்.

ஆனாலும் தற்போதைய காலகட்டத்தில் கொவிட் -19 உலகையே உலுக்கிக் கொண்டிருக்கின்ற இந்நிலையில் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளும் வெகுவாகப் பாதிப்படைந்துள்ளமை ம(றை)றுத்துவிட முடியாத ஒன்றாகும்.

எனினும் கல்விச் சமூகத்தின் ஆலோசனைக்கமைவாக ஆசிரியர்கள், வீடுகளிலிருந்தவாறே தத்தமது மாணாக்கர்களை வழிப்படுத்தி வருவதையும் அவதானிக்க முடிகின்றது. இவ்வாறு எச்சந்தர்ப்பத்திலும், தமது மாணாக்கர்கள் கல்வியில் பின்தள்ளப்படக் கூடாது என்பதற்காக ஆசிரியர்கள் செயற்படும் விதம் வரவேற்றத்தக்கதோடு பாராட்டத்தக்கதாகும்.

எனினும் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பெரு நிலப்பரப்புக்குட்பட்ட போரதீவுப்பற்றுப் பிரதேசத்தின் எல்லைப்புறங்களிலுள்ள கிராமங்களில் சாதாரண அலைபேசி அழைப்புகளைக்கூட விளங்கிக் கொள்ள முடியாத நிலையில் ‘சூம்’ செயலி மூலமான கற்றலை எவ்வாறு மேற்கொண்டு செல்வது என அப்பகுதி மாணவர்களும், பெற்றோரும் அங்கலாய்க்கின்றனர்.

தற்காலத்தில் சூம் மூலமான கற்றலால் பெரிதும் பாதிக்கப்படுவது அப்பகுதி மாணவர்களேதான். இவ்வாறான நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, அப்பகுதி மாணவர்களின் தற்கால கற்றலை முன்கொண்டு செல்வதற்கு கல்விச் சமூகம், துறைசார்ந்த அதிகாரிகள் அனைவரும் அலைபேசி வலையமைப்புகளை உடன் தொடர்பு கொண்டு கவறேஜ் வசதிவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க அல்லது விஸ்தரிக்க, முன்வரவேண்டும் என அப்பகுதி மாணவர்களும் பெற்றோரும் எதிர்பார்க்கின்றனர்.

“எனக்கு 2 பெண்பிள்ளைகள். பாடசாலையில் கல்வி கற்கின்றார்கள்; எனது கணவரும் சுகவீனமுற்றிருக்கின்றார். எமது பிள்ளைகளை தற்காலத்துக்கு ஏற்ற வகையில் கற்பதற்கு ஏற்ற வகையில் அலைபேசி இல்லை. எமக்கு உதவுவதற்கு யாருமில்லை; யாராவது மனமிரங்கி எமக்கு உதவிடுமாறு வேண்டுகின்றேன்” என போரதீவுப் பற்றுப் பிரதேசத்தின் சங்கர்புரம் கிராமத்தைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் தெரிவிக்கின்றார்.

“பெற்றோர் கூலிவேலை செய்து தமது பிள்ளைகளைக் கற்பித்து வரும் இந்நிலையில், குடும்பத்திலுள்ள அனைத்து பிள்ளைகளுக்கும் தலா ஒவ்வொரு திறன்பேசிகளை வாங்கிக் கொடுப்பதற்குரிய வசதிவாய்ப்புகள் இல்லை. அவர்களின் வாழ்க்கைச் செலவை கொண்டு செல்லமுடியாத இச்சூழலில் திறன்பேசிகள் வாங்குவதென்பது முடியாத விடயமாகும். இதனால் இக்காலப்பகுதியில் எமது பகுதி மாணவர்களின் கல்வி நிலைமை பெரிதும் பாதிப்படைகின்ற இந்நிலையில், தொழில் நுட்ப ரீதியில் சூம், வட்ஸ்அப் ஊடாக பிள்ளைகளைக் கற்பிக்கலாம் என நினைத்தால் அதுவும் முடியாமலுள்ளது. எனவே எமது பிள்ளைகளின் எதிர்காலம் கருதி தற்கால கொரோனா சூழலையும் கருத்திற் கொண்டு அபேசிகளுக்குரிய கவறேஜ் வசதிகள், அல்லது வேறு தொழில் நுட்பங்கள் ஊடாகவேனும் கல்வியைத் தொடர அதிகாரிகள் முன்வர வேண்டும்” எனத் தெரிவிக்கின்றார் மண்டூர் பகுதியிலுள்ள சமூகசேவகரான ப.கோணேஸ்வரன்.

“தற்போதைய கொவிட்- 19 காலத்தில் பாடசாலைகள் அனைத்தும்  மூடப்பட்டு கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் நலிவுற்ற நிலையில் காணப்படுகின்றன. இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி சூம் வகுப்புக்கள் ஆசிரியர்களால் நடைபெற்று வருகின்றன. அது வரவேற்கத்தக்க விடமாகும். ஆனாலும் பின்தங்கிய பல பகுதிகளில் வாழும் மாணவர்களின் கல்வி அபிவிருத்தி தொடர்பில் இந்த சூம் வகுப்புகள் மூலம், முழுமையாக கிடைக்கின்றதா என்பது கேள்விக்குரிய விடயமாக இருக்கின்றது.

ஏனைய பகுதிகளைவிட குறிப்பாக போரதீவுப்பற்றுப்  பிரதேசத்திலுள்ள றாணமடு, சங்கர்புரம், கணேசபுரம், சின்னவத்தை, காக்காச்சிவட்டை, பலாச்சோலை, பாலையடிவட்டை,  கண்ணபுரம், தும்பங்கேணி, நவகிரிநகர், செல்லாபுரம், சுரவணையடியூற்று, தம்பலவத்தை, வேத்துச்சேனை, இளைஞர் விவசாயத்திட்டம், களுமுந்தன்வெளி உள்ளிட்ட பல கிராமங்களில் இவ்வாறு முறையாக அலைபேசிகளின் மூலம் உரையாடுவதற்கு கவறேஜ் கிடைக்காத நிலையில் எவ்வாறு சூம் செயலி மூலம் மாணவர்கள் கல்வி கற்பது? 

மாறாக, இந்த எல்லைப் புறக்கிராமங்களில் மிகவும் திறமையான மாணவர்கள் உள்ளார்கள் கடந்தமுறை கல்விப் பொதுத்தர சாதாரண தரப் பரீட்சையில் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்ற மாணவர்களும் கல்வி பொதுத்தர உயர் தரத்தில் சித்தி பெற்று மருத்துவக் கல்லுரிக்குச் சென்ற மாணவர்களும் அப்பகுதியில் உள்ளார்கள். அவ்வாறான மாணவர்களின் கல்வி தற்போது சீரின்மையாகக் காணப்படுகின்றது.

இருந்த போதிலும் இதனைத் திறம்படக் கொண்டு செல்வதாயின் இதனை சில மாற்றங்களோடு சில வேறுபட்ட முறைகளிலும் நடத்திச் செல்லலாம். தனவந்தர்கள், செல்வந்தர்கள் வறுமை நிலையிலுள்ள கல்வி கற்கும் பிள்ளைகளையுடைய குடும்பங்களுக்கு ஒரு திறன்பேசியை வாங்கிக் கொடுக்கலாம். பொதுவான கணினி வள நிலையங்களை உருவாக்கி அதிலே மாணவர்களை சிறு சிறு குழுக்களாக உருவாக்கி, அதனூடாக மாணவர்களின் கற்றலை மேற்கொண்டு செல்லலாம், அதுபோல் பாட விதாங்கள், கற்பித்தல் விடயங்களை போட்டோ பிரதிகள் எடுத்து மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம் மாணவர்களின் கற்றலை முன்கொண்டு செல்லலாம். மாணவர்களிடத்தில் நேரில் சென்று கற்றல் விளக்கங்களை வழங்கலாம். இவ்வாறு செய்தால் தடைப்பட்டிருக்கின்ற கல்வியை ஒரளவுக்கேனும் முன்கொண்டு செல்லலாம். எனவே, இவ்விடங்களைக் கருத்திற் கொண்டு சம்மந்தப்பட்வர்கள் பின்தங்கிய பகுதிகளிலுள்ள மாணவர்களின் நலன் கருத்தி செயற்பட முன்வர வேண்டும்” என பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர் மூத்தையா விமலநாதன் தெரிவிக்கின்றார்.

முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளரின் கருத்து இவ்வாறு அமைந்தாலும், ஏனைய மாவட்டங்களில், நனசல, கணினி வள நிலையம், போன்ற பல வசதி வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள போதிலும், இவ்வாறு மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள மாணவர்கள் மீதும் துறைசார்ந்தவர்கள் கரிசனை கொண்டு ஆங்காங்து இணையத்தள வசதிகளுடன் கூடிய கணினி வள நிலையங்கள் உள்ளிட்ட பல வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் பட்சத்தில் அதனூடகாவேனும் தற்காலத்தில் எதிர்கொண்டுள்ள கொரோனா அச்சத்தின் மத்தியில் மாணவர்கள் தமது கற்றலைத் தொடர முடியும்.

போரதீவுப்பற்றுப் பிரதேசத்தின் எல்லைப் புறங்களிலுள்ள மாணவர்களும், ஏனைய பகுதி மாணவர்களைப்போல் தங்கு தடையின்றி தற்காலத்திற்கு ஏற்ற வகையில் தொழில்நுட்ப ரீதியில் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு உந்துசக்தியளிக்க, அங்குள்ள தடைக்கற்களை தகர்த்தெறிய அனைவரும் முன்வர வேண்டும் என்பதுவே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .