2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கோஷத்தை விழுங்கிய “டித்வா”

Janu   / 2025 டிசெம்பர் 18 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

முருகானந்தம் தவம்

மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டுமென்ற வலியுறுத்தல்கள் அதிகரித்துவந்த நிலையில் அதற்கான தயார்படுத்தல்கள் இடம்பெறுவதாக அரசாங்கமும் சாட்டுப்போக்குகளைக்  கூறி தாமதித்து வந்த நிலையில் அண்மையில் இலங்கையை புரட்டிப்போட்ட ''டித்வா '' புயல் , வெள்ள இயற்கைப் பேரழிவு ''மாகாணசபைகளுக்கான தேர்தல்''கோஷத்தையும் மூழ்கடித்துகாணாமல் போகச்செய்திருந்தது. இவ்வாறாக   ரணகளத்தில்  ஒரு கிளு கிளுப்பாக மாகாண சபைத்தேர்தலுக்காக  வடக்கிலுள்ள தமிழ் அரசியல் தரப்புக்களின் கூட்டணி ஒன்று உருவாகியுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியும்  ஜனநாயகத் தமிழ்த் தேசியக்கூட்டணியுமே மாகாணசபைத்தேர்தலை எதிர்கொள்வதற்காக மீண்டும் கூட்டணி அமைத்துள்ளன. இக்கூட்டணிக்கான  சந்திப்பில் முக்கியமாக இரண்டு பிரதான விடயங்கள் பற்றியேஅதிகம் பேசப்பட்டுள்ளது. முதலாவது மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாமல் பிற்போடப்படும் சூழ்நிலையில்அத்தேர்தலை விரைவாக நடத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பது. இரண்டாவது  தமிழ் மக்களுக்கான நீதியான - நியாயமான அரசியல் தீர்வு சம்பந்தமாக ஒருமித்த நிலைப்பாட்டை வெளிக்கொணர்ந்து தொடர்ச்சியான சந்திப்புக்களை நடத்துவது.

இவ்வாறான நிலையில் பொலிஸ், காணி அதிகாரங்களைத் தவிர ஏனைய அதிகாரங்களை பெயரளவில் கொண்டிருக்கும் மாகாண சபைகளுக்கான தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்பதில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் காட்டி வரும் தீவிரம் தற்போது தமிழ் தேசிய கட்சிகளுக்கு இம்மாகாணங்களில் இருக்கும் கொஞ்ச நஞ்ச உரித்தையும் மக்கள் செல்வாக்கையும் முற்றாக துடைத்தழித்துவிடும் நிலைமையை ஏற்படுத்தும் என்பதனை உணராதவர்களாகவே தமிழ் தேசிய கட்சிகள் நடந்துகொள்கின்றனர் என்பதையே வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் தேசியக்கட்சிகளின்  ''தலைக்கன அரசியல்'' வெளிப்படுத்தி நிற்கின்றது.

நாட்டிலுள்ள 9 மாகாணசபைகளுக்குமான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டியுள்ள நிலையில் வடக்கு,கிழக்கு மாகாணசபைகளுக்கான தேர்தல்தொடர்பிலும் இங்குள்ள கள நிலைவரம் தொடர்பிலும் பார்த்தால் சில வேளைகளில் தேர்தல் நடத்தப்பட்டால் தமிழ் தேசியக்கட்சிகளுக்கு ”நல்ல செய்தி” கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்றே கூறவேண்டியுள்ளது . இதற்கு வேறுயாரும் காரணம் அல்ல. தமிழ் தேசியக்கட்சிகளே காரணம் என்பதனையும் அடித்துக்கூற வேண்டியுள்ள நிலைமையே இவ்விரு மாகாணங்களிலும் உள்ளது. அதிலும் கிழக்கு மாகாணத்தை விடவும் வடக்கு மாகாணத்தில் தமிழ் தேசியக்கட்சிகளின் நிலைமை படு மோசமாகவே உள்ளது.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரையில் இலங்கைத்தமிழரசுக்கட்சி பலமான நிலையில் உள்ளது. அதேவேளை கருணாஅம்மான், பிள்ளையான் தலைமையிலான கிழக்கை மையமாகக்கொண்ட கட்சிகள் மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதால் அவர்களினால் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு பெரிய பின்னடைவுகள் ஏற்பட வாய்ப்பில்லை .

இது அண்மைய பாராளுமன்றத்தேர்தலிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.அத்துடன் தமிழ் வாக்குகள் பிரிவதற்கான வாய்ப்புக்களும் தமிழ் தேசியக் கட்சிகளுக்கிடையிலான தலைக்கன அரசியல் போட்டிகளும் அங்கு கிடையாது. கிழக்கைப்பொறுத்தவரையில் கிழக்கின் ஆட்சியை கைப்பற்றுவதில் தமிழ்,முஸ்லிம் கட்சிகளுக்கிடையிலான போட்டி மட்டுமே இருக்கும். இறுதியாக நடந்த கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் கூட தமிழ் தேசியக்கூட்டமைப்பு அதிக ஆசனங்களைக் கைப்பற்றிய நிலையில் அக்கட்சியின் விட்டுக்கொடுப்புடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைத்ததே வரலாறு.

ஆனால் வடக்கு மாகாணத்தின் நிலைமை முற்றிலும் மாறுபட்டது. இங்கு தமிழ் தேசியக் கட்சிகளுக்கு முஸ்லிம், சிங்களக்கட்சிகள் எதுவுமே போட்டியில்லை. போட்டியென்பதே தமிழ் தேசியக்கட்சிகளுக்கிடையில்தான். இந்தப்போட்டியினால்தான் வடக்கு மாகாண ஆட்சியை இந்த தமிழ் தேசியக்கட்சிகள் பறிகொடுக்கும் நிலைமையும் ஏற்பட்டு வருகின்றது.

38 ஆசனங்களைக் கொண்ட வடக்கு மாகாண சபையில் பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றும் கட்சியே ஆட்சியமைக்க முடியும்.ஆனால் தமிழ் தேசியக்கட்சிகள் என்ற பெயரில் உள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு எனப் பிரிந்து கிடப்பதுடன் நீயா நானா போட்டியுடன் தலைக்கன அரசியலில் ஈடுபடுவதுடன் ”விட்டுக்கொடுப்பு – ஒற்றுமை”என்றால் கிலோ என்ன விலை எனக்கேட்கும் நிலையில் இக்கட்சிகள் இருப்பதே வடக்கு மாகாணம் இவர்களிடமிருந்து பறிபோவதற்கு காரணமாக அமையவுள்ளது.

 ஏற்கனவே நடந்து முடித்த பாராளுமன்ற, உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் வடக்கு மாகாணத்தில் பெருவெற்றிபெற்றுள்ள   தற்போதைய அரசான தேசிய மக்கள் சக்தி  வடக்கிலுள்ள தமிழ் தேசியக்கட்சிகளின் இந்த தலைக்கன, ஒற்றுமையில்லாத, விட்டுக்கொடுப்பில்லாத அரசியலை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி வடக்கு மாகாணசபையையும் முதலமைச்சர் பதவியையும் கைப்பற்ற மிகத்தீவிரமாக, அதேவேளை மிகவும் ரகசியமான தயார்படுத்தல்களை ஏற்கனவே தொடங்கிவிட்டது. மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தினால் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதனைக்கூட தேசியமக்கள்சக்தி தீர்மானித்துவிட்டது. இதற்கு அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார ”தற்போதுள்ள ஆட்சிக்காலத்தை விடவும் , இன்னும் மேலதிகமாக ஐந்து வருடங்களுக்கு – நாமே அரசியல் அதிகாரத்துடன் தொடர்ச்சியாக இருக்கப் போகின்றோம். அதுமட்டுமல்ல , எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலிலும் கூட வடக்கு – கிழக்கு உட்பட நாமே அதிகாரத்தைக் கைப்பற்றுவோம் இதை எழுதிவைத்துக் கொள்ளுங்கள்” என விடுத்துள்ள சவால் உதாரணமாகவுள்ளது.

எனவே வடக்கு மாகாணத்தையும் வடக்கு மாகாண சபையையும் தமிழ் தேசியக்கட்சிகள் தக்க வைக்க வேண்டும் என்றால், பாதுகாக்க வேண்டும் என்றால் தமது ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என்றால் நிச்சயம் தமிழ் தேசியக்கட்சிகள் ஒன்றிணைத்தால் மட்டுமே அது சாத்தியம். வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடக்கும்போது தமிழ் தேசியக்கட்சிகள் தனித்தனியாக முதலமைச்சர் வேட்பாளர்களை அறிவித்து போட்டியிட்டால் வடக்கு மாகாணசபை தேசிய மக்கள் சக்தியிடம் பறிபோவதை யாராலும் தடுக்க முடியாது.எனவே ஓரணியாக ஒரு பொது வேட்பாளராக ஏதோவொரு கட்சியிலிருந்து ஒருவரை நியமித்து போட்டியிட்டால் மட்டுமே வடக்கு மாகாணத்தை தமிழ் தேசியக்கட்சிகள் தக்க வைக்க முடியும்.

இல்லாது விட்டால் மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துமாறு போராடி அத்தேர்தல் நடத்தப்பட்டதன் மூலம் வடக்கு மாகாணத்தை சிங்களக்கட்சி ஒன்றிடம் பறிகொடுக்க வேண்டிவரும் அதாவது பொல்லுக்கொடுத்து அடிவாங்கும் நிலைமை ஏற்படும்.இதன்மூலம் இலங்கையில் தமிழர்களுக்கான அதிகாரம் கோரும் போராட்டமும் தமிழ் தேசியக்கட்சிகளின் இருப்பும் இல்லாதொழிக்கப்படும் ,நாட்டில் தமிழ் மக்களுக்கு எந்தவொரு இனரீதியான பிரச்சினைகளும் இல்லை என்ற நிலை தோற்றுவிக்கப்பட்டு தமிழ் மக்களின் 5 தசாப்த போராட்டத்துக்கு முடிவுரை எழுதப்படும் , இந்த நிலையை ஏற்படுத்தியவர்களாக தற்போதைய தமிழ் தேசியக்கட்சிகளும் அதன் தலைக்கன தலைவர்களும் வரலாற்றில் பதியப்படுவர்.

எனவே இந்த சந்தர்ப்பத்திலும் ஒன்றுபடாது தனித்தனியாக போட்டியிட்டு தோல்வியடைந்த பின்னர் தமிழ் மக்கள் சிங்களக் கட்சிக்கு வாக்களித்து விட்டார்கள், தமிழ் மக்களிடம் தமிழ்தேசிய உணர்வு இல்லை. வடக்கு தமிழர்களை நினைத்து வெட்கப்படுகின்றோம், வேதனைப்படுகின்றோம்.தமிழ் இளைஞர்கள் வழிதவறி சிங்களக் கட்சியின் பின்னால் செல்கின்றார்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைக்க எந்தவொரு தமிழ் தேசியக்கட்சிகளுக்கும் தமிழ் தேசிய அரசியல் தலைவர்களுக்கும் உரிமை கிடையாது.

எனவே தமிழ் தேசியத்தின் இருப்பை பாதுகாக்கவேனும், வடக்கு, கிழக்கைத் தக்க வைக்கவேனும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் தமது தலைக்கனம், மேதாவித்தனம், ஒற்றுமையின்மை, விடாப்பிடியைக் கைவிட்டு மாகாணசபைகளுக்கான தேர்தலில் ஓரணியில் திரள வேண்டும்.அது முடியாது என்றால் மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துமாறு அரசுக்கு அழுத்தம் கொடுப்பதை கை விடுவதே நல்லது.

18.12.2025


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X